ஒருபக்கம் உண்ணாமலை பேச்சு குறித்த வருத்தம், மறுபக்கம் ஶ்ரீகாந்த்தின் மீதான எதிர்பார்ப்பு பொய்க்காத நம்பிக்கை, அதை விட மகளின் வாழ்வு குறித்த பயம் என மனம் அனைத்துக்கும் நடுவில் ஊசலாட உட்கார்ந்திருந்தார் நாச்சம்மை. மகளின் வாழ்வு இனி விடிந்திடும் என அவர் நினைத்திருக்க, அந்த மாலையைப் போலவே அவள் வாழ்விலும் அஸ்தமனத்தின் சாயல் தெரிய அலமலந்து போனது அன்னை மனம்.
“ஶ்ரீகாந்த் தம்பி செய்தி சொல்ற வரைக்கும் பொறுமையா இருப்போம் அத்தாச்சி. நம்ம துர்காக்கும் மனசு மாறச் சமயம் கொடுக்கணும்ல? இந்தத் தாமதம் கூட நல்லதுக்குன்னு நினைச்சுப்போம். அவங்களும் மனசாரச் சம்மதிச்சு நம்ம பிள்ளைய மருமகளாக்கிட்டாதேன் நாளைக்கு நம்ம துர்கா அங்க நல்லாருப்பா. அதுனால நீங்க வெசனப்படாதீங்க அத்தாச்சி. அதததுக்குக் காலம் வரும் போது தானா கூடி வரும்” என்று வார்த்தைகளால் அவரைத் தேற்றினார் அலமேலு.
அறைக்குள் அனைத்தையும் கேட்டபடி அமர்ந்திருந்தான் தயா. அவனிடம் வந்த குறிஞ்சி, “நீங்களும்தானே அன்னைக்குச் சென்னையில வச்சு துர்காவ சந்தேகப்பட்டீங்க? ஒருவேளை அங்க போய் இருப்பாளோன்னு பயந்து வண்டியை சென்னைக்கு விடல நீங்க? என்னமோ நீங்க மட்டும் ரொம்ப உத்தமர் போல அத்தையை அப்படித் திட்டுறீங்க? நியாயமா பார்த்தா உங்களைத்தான் நீங்க முதல்ல திட்டிக்கணும் தயாபரன்” என்று மனத்தில் இருந்ததைக் கொட்டினாள்.
“என் பேர் சொன்ன, பல்லை தட்டிடுவேன் ராஸ்கல்”
“அப்படியே பயந்துட்டேன்.” என்று பயந்தது போலப் பாவனைச் செய்தவள், “ம்ம்ம்ம், எனக்குப் பசிக்குது. எழுந்து வாங்க” என்றாள். அவனை அசட்டையாகக் கையாள அவளால் மட்டுமே முடியும் என மீண்டும் நிரூபித்தாள்.
பசியை மீறிய உணர்வுகள் அவனை ஆக்கிரமித்திருந்தன. உணவுண்ண வந்தான். சோறு, பொரியல், கூட்டு என அதீதமாக அளவில்லாமல் உண்டு, அனைத்தையும் காலி செய்தே எழுந்தான்.
அவனைக் கண்டு குறிஞ்சிக்குதான் தொண்டை வரை உணவு உண்டது போல மலைப்பாக இருந்தது.
அம்மாவை பேசியது மனம் பொறுக்காமல் அவனே அவர்களுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்து, வெள்ளை கொடியை அசைத்து விட்டு கடைக்குச் சென்றான்.
மகன் சென்றதும் சிறு குரலில் நாச்சம்மை அழுது புலம்பத் தொடங்கினார். அங்குப் படுத்திருந்த பேத்தியை பார்க்க பார்க்க அவரது அழுகையின் அளவு கூடியது.
“தாய், தகப்பன்” என்ற அழகிய, பாதுகாப்பான கூட்டிற்குள் வாழும், இயல்பான வாழ்வு தன் பேத்திக்கு கிடைக்காமலேயே போய் விடுவோமோ என்ற அச்சமும், ஆற்றாமையும் அவர் நெஞ்சை அறுத்தது.
அந்நேரம் பள்ளி முடித்து வீடு திரும்பிய துர்காவின் காதில் அவள் புலம்பல் விழவும், “என்னம்மா ஆச்சு?” என்று அம்மாவின் கலங்கிய கண்ணீர் முகத்தைக் கண்டு கலங்கினாள் மகள்.
“ஒன்னுமில்ல துர்கா, ஒன்னுமில்ல” என்று எவ்வளவு நேரம் சமாளிக்க முடியும்? சற்றைக்கெல்லாம் உளறி விட்டார்.
துர்கா, “ரோஜாவ என்கிட்டருந்து யாரையும் பிரிக்க விட மாட்டேன்னு நீ என்கிட்ட சத்தியம் பண்ண இல்ல குறிஞ்சி? இப்போ நீயே அவங்ககிட்ட போய் அப்படிச் சொல்லியிருக்கேன்னா என்ன அர்த்தம்? என்னைப் பத்தி கொஞ்சம் கூட நினைக்கவே மாட்டியா நீ? என் பொண்ணு இல்லாம எனக்கொரு வாழ்க்கை வருதுன்னா.. அப்படியொரு வாழ்க்கையே எனக்கு வேணாம். எனக்கு யாரும் வேணாம். நானும் என் பொண்ணும் எங்கயாவது போயிடுறோம். நீங்க எல்லாம் அப்போவாவது நிம்மதியா இருங்க” என்றாள் அழுகையுடன்.
“நீ இல்லாம நாங்க நிம்மதியா இருந்துடுவோமா துர்கா? இந்த ரோஜா குட்டி இல்லாம..”
“இப்போ நான் இருக்கதால மட்டும் என்ன நிம்மதி வாழுது இங்க? நிம்மதி, நெதம் அழுகையிலதானே கரையுது?” என்று அழுத்தமாகக் கேட்டாள். நாச்சம்மை அதற்கும் அழ, அந்தச் சத்தத்தில் ரோஜா எழுந்து விட்டாள்.
“ஶ்ரீகாந்த் தம்பி செய்தி சொல்ற வரைக்கும்..” என்று அலமேலு ஆரம்பிக்க, ஶ்ரீகாந்த்தின் பெயரைக் கேட்டதும், கண்ணைக் கசக்கி, “ம்மா, ஶ்ரீக்கா. ஶ்ரீக்கா” என்று கண்ணைக் கசக்கியது பட்டு ரோஜா.
அங்கோ ஶ்ரீகாந்த் கண் மண் தெரியாத கோபத்துடன் தயாபரனை அழைத்தான்.
“என்ன ஶ்ரீ சொல்ற? யார் போன் பண்ணாங்க சொல்ற? எங்க அத்தையா? யாரு கற்பகம் அத்தையா? உங்க அம்மாவுக்கா?” என்று குழப்பத்துடன் கேட்டான் தயா.
“ஆமா”
“எதுக்கு?”
“வேற எதுக்கு? துர்கா பத்தி சொல்லத்தான்”
“என்ன சொன்னாங்க?” விரலில் பிடிப்பட்ட பட்டாம்பூச்சியின் சிறகு போல அவனது கழுத்து நரம்பு துடிக்கக் கேட்டான் தயா.
“என்ன சொன்னாங்கன்னு கேட்டா அம்மா வாயே தொறக்க மாட்டேங்கறாங்க. அவங்க போன் பேசிட்டு வச்சு ஒரு மணி நேரமாச்சு. அம்மா என்கிட்ட ஒத்த வார்த்தை பேசாம சுத்துறாங்க. என்ன செய்யக் காத்திருக்காங்கன்னு புரியாம எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும் போலருக்கு. தயா, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டியே?”
“தப்பா நினைப்பேன்னு தெரிஞ்சா கேட்காத”
“ப்ச், தயா. துர்கா கைப் பிடிச்சுட்டு போராடிக்கறேனே பிளீஸ்”
“இதுக்கு மேல போராட எங்கக்கா மனசுல தெம்பில்ல ஶ்ரீ.” என்று முடித்து விட்டான். அவன் மனம் சோர்ந்து சுணங்கி போனது.
“என்னப்பா தயா?” பழனியப்பன் கேட்கவும், தந்தையிடம் மறைக்கத் தோன்றாமல் மடமடவென்று மனத்தில் இருந்ததைக் கொட்டினான்.
“எம்புட்டு கெட்ட புத்தி இருந்தா என் பொண்ணைப் பத்தி தப்பா பேசியிருப்பாங்க. நீ கிளம்புப்பா தயா, நேரா அவங்க வீட்டுக்கு போய் நறுக்குன்னு கேட்டுட்டு வந்துடுவோம்” என்றார்.
“அவங்க மகன் விரலை உடைச்சதுக்குப் பதிலா கையையே உடைச்சு விட்டிருக்கணும்ப்பா” என்று ஆத்திரத்துடன் சொன்னவன், அடுத்த நொடியே அமைதியாகி, “அத்தை வீட்டுக்குலாம் போக வேணாம்ப்பா. அப்படி நாம போய் நின்னா ஓவரா ஆடுவாங்க. நீங்க அப்படியொன்னும் அவங்க முன்னாடி இறங்கி போக வேணாம்ப்பா. சொத்துல பங்கு வேணும், நான் பொறந்த வீடு இதுன்னு நாளைக்குப் பம்மிக்கிட்டு பங்கு கேட்டு வருவாங்க இல்ல? அவங்கள அப்போ பார்த்துக்கலாம்” என்றான். தனயன் சொல்லை தட்டாமல் கேட்டுக் கொண்டார் தந்தை.
துர்கா திரும்பவும் நத்தையாக ஓட்டுக்குள் சுருங்கினாள். குறிஞ்சி எவ்வளவு முயற்சித்தும் அவளை மீட்க முடியவில்லை.
“அக்கா” என்று இருளில் அவள் பக்கத்தில் சென்று தயாபரன் அமர, தம்பியை நிமிர்ந்து நோக்கியவள், “எனக்கு என்னடா தயா கொற? நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்டா. என்னை இப்படியே இருக்க விடேன்.” என்றாள். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. இருவருக்கும் அந்த அமைதியே ஆறுதலாக இருந்தது.