அப்பாவை பார்க்க வருவதாகச் சொல்லியிருந்ததால் அன்றிரவு வேலை முடித்து நேராகத் தாத்தா வீடு சென்றான் இளமாறன். அவன் வண்டியை நிறுத்தும் போதே பேச்சும், சிரிப்புச் சத்தமும் அவன் காதில் விழ, மனதில் சூழ்ந்த வெறுமையை விலக்கி விட்டு உள்ளே சென்றான் அவன்.
அவன் ஹாலிற்குள் நுழையும் போதே, “மாறா..” என்றழைத்தார் சுகந்தி.
மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை உண்டு கொண்டிருந்தனர்.
“ஹாய், அண்ணா” வெண்பா, வினோத் இருவரும் ஒன்று போலச் சொல்ல, சங்கரன் எழுந்து மகனிடம் வந்தார்.
அவன் தோளில் கைப் போட்டு, “வா மாறா, சாப்பிடலாம்” என்றார்.
“நீங்க சாப்பிடுங்கப்பா. நான் அப்புறமா சாப்பிடுறேன்” என்றவன், தாத்தா, அம்மம்மாவைப் பார்த்து முறுவலித்தான்.
தன் கையில் இருந்த பையைத் தங்கையை நோக்கி அவன் நீட்ட, வெண்பாவின் முகத்தில் இனிப்புக் கடையைப் பார்த்த சிறுமியின் பாவனை.
“ஆஹா, ஸ்வீட்ஸ் தானே? தேங்க்ஸ் மாறாண்ணா” எச்சில் கையை அங்கிருந்த டிஸ்யூவில் துடைத்து விட்டு வாங்கிக் கொண்டாள்.
“முதல்ல டின்னரை முடி. அப்புறம் ஸ்வீட் சாப்பிடுவ” சுகந்தி மகளை அதட்ட, “போங்கம்மா” என்று தன் வேலையில் கவனம் பதித்தாள் அவள்.
இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகளில் டர்கிஷ் இனிப்புகளான பக்லவா (Baklava) மற்றும் ரேவனீ (Revani) இருந்தது.
ரவையில் செய்யப்படும் கேக்கான ரேவனீயில் இருந்து ஒரு துண்டெடுத்து தன் தட்டில் வைத்து, அவசரமாகப் பிட்டு வாயில் இட்டாள்.
“ஹ்ம்ம் டேஸ்ட்டிண்ணா. அப்படியே டர்கிலச் சாப்பிடுற மாதிரி இருக்கு” கை வீசி அபிநயத்துடன் அவள் சொல்ல, அமைதியாய்ப் பார்த்திருந்தான் இளமாறன்.
“இந்தா வினோத் நீயும் எடுத்துக்கோ. அப்பா உங்களுக்கு? அம்மா? தாத்தா” ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டே அவர்களுக்குப் பரிமாறினாள் வெண்பா.
“எனக்கு இந்த டர்கிஸ் டிலைட் ஒரு நாள் செஞ்சு குடுண்ணா” என்ற வினோத்தின் முன் பரிசு காகிதம் சுற்றப்பட்டிருந்த சிறிய பெட்டியை நீட்டினான் இளமாறன்.
“ஹேய் வெண்பா, இங்க பாரு. அண்ணா எனக்கும் ஏதோ வாங்கிட்டு வந்திருக்காங்க. என்ன சர்ப்ரைஸ்ண்ணா?” அவன் குரலில் மகிழ்ச்சி துள்ளலும், எதிர்பார்ப்பும் நிறைந்து வழிய, குறுநகையுடன் தன் கையைக் கண் காட்டினான் இளமாறன்.
“கிஃப்ட் சைஸ் பார்த்தா தெரியலை? பல்லி மிட்டாயா இருக்கும்டா வினோத்.” வெண்பா கிண்டலாகச் சொல்ல, அதற்கு அனைவரும் சிரிக்க, “பொறாமை பிடிச்சவளே, அண்ணா என்ன வாங்கிக் கொடுத்தாலும் எனக்கு ஓகேதான்” என்றபடி இளமாறனின் கையில் இருந்ததை எடுத்தான்.
அதை அவன் தயக்கத்துடன் பார்க்க, “ம்ம், பிரி” என்றான் மாறன்.
வினோத் பிரிக்க உள்ளே ராயல் என்ஃபீல்டு வண்டியின் புத்தம் புதிய சாவி இருந்தது.
அதைக் கண்டதும் சந்தோஷமும், தயக்கமும் போட்டிப் போட, “அண்ணா…” என்றான் வினோத்.
“லேட்டஸ்ட் மாடல் வண்டி உன் பேர்ல புக் பண்ணியிருக்கேன். நாளைக்குப் பெசன்ட் நகர் ஷோரூம் போய் வண்டியை டெலிவரி வாங்கிக்கோ. அட்வான்ஸ் பர்த்டே விஷ்ஷஸ் வினோத்”
“தேங்க்ஸ்ண்ணா. இட்ஸ் ரியலி அ லவ்லி சர்ப்ரைஸ்” சாவியைக் கையில் வருடியபடி சொன்னான் வினோத்.
“அவனுக்கு மட்டும் காஸ்ட்லி கிஃப்ட். எனக்கு வெறும் ஸ்வீட்டாண்ணா?” என்று வெண்பா தொடங்க, “அவனுக்கு எதுக்கு இப்போ இவ்வளவு விலை கூடின வண்டி வாங்கிக் கொடுக்குற நீ? அவன்கிட்டதான் ஏற்கனவே ஒரு வண்டி இருக்குல்ல?” என்று மகளை முந்திக் கொண்டு கத்தினார் சுகந்தி.
“வினோத்க்கு வாங்கிக் கொடுத்ததே அதிகம் சொல்லிட்டு இருக்கேன். இதுல எனக்கு ஏன் வாங்கலன்னு நீயும் கேட்கற?” என்று திரும்பி மகளிடம் காய்ந்தார் அவர்.
“உன் பிசினஸ்ல பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன். சரத் பார்ட்னர்ஷிப்பில் இருந்து விலகிட்டானாமே? காசை இப்படிக் கணக்கு பார்க்காம செலவு பண்ணா, அப்புறம் எப்படி…”
மேலே அவரைப் பேச விடாமல், “ம்மா, பிளீஸ்” என்றான் வினோத்.
ஆனாலும், தொடர்ந்து, “இதெல்லாம் எதுக்கு மாறா?” என்று சுகந்தி கேட்க, “வினோத் பொறந்த நாள் வருதா? எப்போடா வெண்பா? எனக்கு மறந்தே போச்சு. நாமளும் ஏதாவது வாங்கிக் கொடுப்போம். உனக்கு என்ன வேணும் சொல்லு தங்கம்” என்று கணவரிடம் கேட்பது போலச் சட்டெனக் கஸ்தூரி இடைபுகுந்து பேச்சை மாற்றினார்.
“எனக்கு ஒன்னும் வேணாம் பாட்டி. உங்க ஆசிர்வாதம் போதும்” என்றான் அவன் சிரிப்புடன்.
“ஆசிர்வாதமா? கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்றான் போலக் கஸ்தூரி” கேலியாகச் சொன்னார் சுவாமிநாதன்.
“ஐயோ தாத்தா. ஏன்? நான் நிம்மதியா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா? இதோ இவளுக்குக் கால் கட்டு போடுங்க முதல்ல” என்று வெண்பாவை கைக் காட்டி கத்தினான் அவன்.
“நீ தான் தம்பி ஆசிர்வாதம் கேட்ட, நான் இல்ல” என்று வெண்பா சிரிக்க, “பேசாம இருங்க ரெண்டு பேரும்” என்று கத்திய சுகந்தியின் கண்கள் மூத்த மகனின் மேல் நிலைத்தது.
அவர் பார்வையை உணர்ந்து, “நாளைக்கு எனக்கு முக்கியமான வேலையிருக்கு. நான் கிளம்பறேன்” என்று எழுந்து கொண்டான் இளமாறன்.
“இதென்ன பழக்கம் வீட்டுக்கு வந்துட்டு, பத்து நிமிசம் கூட இருக்காம ஓடுறது. சாப்பிட்டு போ மாறா” அவர் சொல்ல, அம்மம்மா பேரனை கெஞ்சலாகப் பார்த்தார்.
“பசியில்ல அம்மம்மா, நான் வர்றேன்” என்று வாயிலை நோக்கி நகர்ந்தான் அவன். தம்பி, தங்கை இருவரையும் பார்த்துக் கை அசைத்தவன், தாத்தாவிடம் ஒரு தலையசைப்பில் விடை பெற்றுக் கொண்டான்.
“வர்றேன்ப்பா” என்று அவன் அப்பாவிடம் சொல்ல, “மாறா, வெயிட் பண்ணு. அப்பா வர்றேன்” சுகந்தி அப்படியே மகனை முறைத்துக் கொண்டிருக்க, சங்கரன் எழுந்துச் சென்று கை கழுவி வந்தார். மாறன் அதற்குள் வெளியே சென்று தன் வண்டி முன் நின்றிருந்தான்.
“என்கிட்ட பேச மாட்டான். என் கூடச் சாப்பிட மாட்டான். என்னைப் பிடிக்காது. அப்புறம் எதுக்கு என்னைப் பார்க்க வரணும்?” உள்ளே சுகந்தி கத்தியது வாசல் வரை கேட்டது.
“அவன் எல்லோரையும் பார்க்க வந்தான். தனியா உன்னைப் பார்க்க வரல” என்ற கஸ்தூரி, “அவன் வர்ற வரைக்கும் உங்களால பொறுக்க முடியல. மணி எட்டு கூட ஆகல, அதுக்குள்ள சாப்பிட உட்கார்ந்துட்டீங்க. அவனை எப்பவும் கண்டுக்காம தனியாவே விட்டுட்டு, அவன் மட்டும் உங்களை அனுசரிச்சு நடக்கணும்னு நீங்கல்லாம் நினைக்கிறது தப்பு சுகந்தி. நீங்க எல்லாம் பெரிய ஆளுங்களா இருக்கலாம். அதுக்காக அவன் குறைஞ்சு போய்ட மாட்டான்.” என்று ஆதங்கத்துடன் கோபமாக அவர் சொல்ல, “பாட்டி, நீங்களும், தாத்தாவும் சாப்பிடுற நேரமாச்சுன்னுதான் நாங்க சாப்பிட உட்கார்ந்தோம்” என்றாள் வெண்பா, சமாதானமாக.
“என் பேரன் என்னைக்கும் தனிதான்” என்று புலம்பலாக முணுமுணுத்தவரை முறைத்தார் சுவாமிநாதன்.
“உனக்கு எத்தனை தரம் சொல்றது? ஒருத்தர் சாப்பிடும் போது இது போலப் பேசாதன்னு, நம்ம பிள்ளைங்க சாப்பிட்டதைத் தப்புன்னு பேசுற நீ..”
“நம்ம பேரன் வர்ற வரைக்கும் காத்திருக்கலைன்னுதான் பேசுறேன். இதோ இப்போ சாப்பிடாமலே போய்ட்டான் இல்ல?” கஸ்தூரி கண்ணைக் கசக்க, “நான் இங்க இருக்கும் போது அவன் என்னைக்குச் சாப்பிட்டான்?” என்று கத்தினார் சுகந்தி.
இளமாறன் தன் தோளில் கைப் போட்டு நின்ற அப்பாவை குற்ற உணர்வுடன் நிமிர்ந்து பார்த்தான்.
“சாரிப்பா. நான் சாப்பாட்டை என்னைக்கும் அவமதிக்கறவன் கிடையாது. என் கோபத்தை ஒரு நாளும் அதுல காட்ட மாட்டேன்”
“எனக்குத் தெரியும் மாறா”
“இன்னைக்கு ஹோட்டல்ல ஒரு விஐபி பார்ட்டிப்பா. மினிஸ்டர் பையன் அவரோட ஃப்ரெண்ட்ஸிக்கு ட்ரீட் கொடுக்கறேன்னு லாஸ்ட் மினிட் பிளான்ப்பா. நானும் கிச்சனுக்குள்ள நின்னதால சரியான நேரத்துக்கு அவங்க கேட்ட புஃட் கொடுத்து சமாளிச்சோம். ரொட்டி, நாண், பட்டர் சிக்கன், சைனீஸ், மெக்சிகன், பீட்ஸா, டர்கிஷ்னு எல்லாத்தையும் கேட்டாங்க. அத்தனையும் டேஸ்ட் சரியா இருக்கானு பார்த்தது என்னவோ போல இருக்குப்பா. உண்மையா எனக்கு இப்போ எதுவும் சாப்பிடுற மூடில்லப்பா. அதான் டின்னர் வேணாம்னு சொன்னேன்” மகன் நீண்ட விளக்கத்தைக் கொடுக்கவும், அவன் தோளில் தட்டிக் கொடுத்தார் சங்கரன்.
“வீட்டுக்கு போயிட்டு ஜூஸ், சூப் ஏதாவது சாப்பிட்டு படு.” என்றார் அக்கறையுடன்.
“ம்ம்” என்றவன், “ஏதோ பேசணும்னு வரச் சொன்னீங்கப்பா” என்று கேட்க, சங்கரன் வெகுவாகத் தயங்கினார்.
“சொல்லுங்கப்பா”
“அது மாறா, உனக்குப் பொண்ணு பார்த்திட்டு இருக்கோம். அதான் உன்கிட்ட சொல்லிடலாம்னு, உன் விருப்பம் என்னனு…”
“முதல்ல வெண்பாக்கு பாருங்கப்பா”
“நீ இருக்கும் போது எப்படி மாறா?”
“இட்ஸ் ஓகேப்பா”
“அண்ணன் நீ இருக்கும் போது தங்கச்சிக்கு பேசினா, நாலு பேரு..”
“நீங்க இன்னும் எந்தக் காலத்துல இருக்கீங்கப்பா. இப்போல்லாம் எல்லோருக்கும் அவங்கவங்க வேலையைப் பார்க்கவே சரியா இருக்கு. அடுத்தவன் கதை கேட்கிற ஆர்வம் எல்லாம் காணாம போயாச்சு. நீங்க வெண்பாக்கு மாப்பிள்ளை பாருங்க. எனக்குக் கல்யாணத்துல ஆர்வமும் இல்ல. கல்யாணம் பண்ற ஐடியாவும் இல்ல” என்றான் தீர்க்கமான முடிவுடன்.
மகனை அதிர்ச்சியுடன் பார்த்து அசையாமல் நின்றார் சங்கரன்.
“நான் வர்றேன்ப்பா” என்றவன் அவரது பதிலுக்காகக் காத்திருக்காமல், வண்டியில் ஏறிய வேகத்தில் வாயிலை கடந்திருந்தான். ஓர் ஆயாச பெருமூச்சுடன் அப்படியே நின்றிருந்தார் சங்கரன். அவர் வாழ்க்கையில் எத்தனையோ சாதித்து விட்டப் போதும், மகனை தொலைத்து விட்டது வெறுமையாய் உணர வைத்தது.
வாழ்க்கை கடிகாரத்தில் 30 வருடங்கள் பின்னோக்கி சென்று அனைத்தையும் மாற்ற விரும்பினார் அவர். ஆனால், முடியாதே!
மனதில் ஓடிய பல்வேறு சிந்தனைகளில் சாலையில் கவனம் செலுத்த முடியாது திணறினான் இளமாறன். இந்த மனநிலையில் சாலையில் இறங்கியதே தவறு என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான் அவன்.
மூத்த மகன் இருக்கையில் எப்படி மகளுக்கு மணமுடிக்க என்று யோசிக்கும் பெற்றோரை நினைக்கையில் அவன் உதடுகள் விரக்தியான சிரிப்பில் வளைந்தது.
அன்று காலை ரோஜா கத்தியது நினைவில் வர, புலன்களைக் கூர்மையாக்கி சாலையில் கவனம் பதித்தான் அவன்.