நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 17 (1)

உயர் ரத்த அழுத்தத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்டுதான் மருத்துவமனைக்கே வந்திருந்தார் உண்ணாமலை. குறிஞ்சியைக் கண்டதும் கன்னா பின்னாவென்று கோபம் வர, அதைக் கட்டுப்படுத்தியபடி மூச்சு வாங்க அமர்ந்திருந்தார். குறிஞ்சிக்கு அவரின் கோபம் புரியாமல் இல்லை. அது நியாயமானதும் கூட. ஆதலால் மௌனமானாள். ஆனால் அவரை அப்படியே விட்டுவிட்டும் சொல்லவில்லை அவள். அவர் மருத்துவரை சந்திக்கும் போது அவருடனிருந்தாள். ஶ்ரீகாந்த்தும் அவருடனிருக்க, அவன் குறிஞ்சியைக் கண்டு புன்னகைத்தோடு சரி. அதன் பிறகு அம்மாவின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தினான்.

மருத்துவர், “கவனம் கவனம்” என்று சொல்ல சொல்ல உண்ணாமலையின் கண்கள் மகனை கடுமையாகக் குற்றம் சாட்டின.

வீட்டில் இருந்து கிளம்பும் போதே, “நீ தேவையில்லாம டென்ஷனாகி உடம்பை கெடுத்துட்டு என்னைய குத்தம் சொல்லாதம்மா. என்னைக் கில்ட் ட்ரிப் பண்ணாத” என்றிருந்தான். இப்போதும் அவன் பார்வை அதையே சொன்னது.

எல்லாம் முடிந்து மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை வாங்கிக் கொண்டு அவர்கள் வெளியே வர, அங்கே தயா காத்திருக்க, குறிஞ்சி வந்து சேர்ந்தாள்.

“என்ன ஶ்ரீ இங்க? யாருக்கு முடியல?” என்று கேட்டு, “அத்த எப்டி இருக்கீங்க? உடம்புக்கு என்ன?” என்று இயல்பாக நலம் விசாரித்தான் தயாபரன்.

“எல்லாம் உங்களாலதேன். ஆனா ஒன்னுமே தெரியாத மாதிரி எப்படித்தேன் உன்னால விசாரிக்க முடியுதோ எனக்குத் தெரியல” என்று அங்கலாய்த்தார் உண்ணாமலை.

“அம்மா..”

“நீ பேசாத. எல்லாம் உன்னால, யாரை எங்க வைக்கணும்னு உனக்குத் தெரியல. நீ எடத்த கொடுத்தா இவங்க ஏறி உன் தலை மேல உக்காரதான் செய்வாங்க. ஊருக்குள்ள ஒருத்தன் இவங்க வீட்ல பொண்ணு எடுப்பானா?”

“அத்த..” என்று தயாவும், “பேசாம வந்து கார்ல ஏறும்மா” என்று ஶ்ரீகாந்த்தும் அதட்ட, அவரோ பேசி தீர்க்கும் முனைப்பில் இருந்தார்.

“இம்புட்டுக் கோபம் வர்றவன், எதுக்கு என் பையனை தூண்டி விட்டு வேடிக்கை பாக்குற? உன் தலை சுமையை இறக்கி வைக்க என் புள்ளைதான் கிடைச்சானா?”

“எங்க அக்கா, எனக்கு என்னைக்குமே சுமை கிடையாது அத்த. அவளைச் சுமையா நினைக்கிற யாருக்கும்…”

“நீயும் வார்த்தையை விடாத தயா” ஶ்ரீகாந்த் அதட்ட, கணவனின் கையை அழுத்தினாள் குறிஞ்சி.

“நாலு வயசு பொம்பளை புள்ளையோட வீட்டுக்கு வர்றவ சுமை இல்லாம வேற என்னவாம்? நாளைக்கு அதுக்கு நூறு பவன் போட்டு என் பிள்ளை கட்டிக் கொடுக்கணுமோ? ஊரான் வீட்டு பிள்ளைக்கு என் பிள்ளை பொறுப்பேற்கணுமோ?” உண்ணாமலை உள்ள குமுறலை கொட்டிட, “எங்கக்கா மகளுக்கு நீங்க.. யாரும் பொறுப்பேற்கே வேணாம். அவளைக் காலம் முழுக்க வச்சு காப்பாத்த என்னால முடியும். நூறு என்ன இருநூறு பவன் கூடப் போட்டு என்னால அவளைக் கட்டிக் கொடுக்க முடியும். அந்தக் கவலையே உங்களுக்கு வேணாம். நீங்க உங்க பிள்ளையைப் பத்தி மட்டும் கவலைப்படுங்க” என்று விட்டான் தயா.

“என்னடா பேசுற தயா நீ?” அதிர்வுடன் ஶ்ரீகாந்த் கேட்க, தயாவின் கண்கள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது. அங்கே ஆளில்லை. ஆனாலும் பொது இடம் என்பதால் அவன் உடலே இறுகியது. பொது இடங்களில் இப்படியான பேச்சு, பார்வைகள், எத்தனை பட்டாலும் அவனுக்குப் பழகவே பழகாது போல.

“என்னப்பா ஶ்ரீகாந்த், அதான் உன் பிரெண்ட்டே சொல்லிட்டான்ல? அப்புறமென்ன வா போவோம்” என்று மகனை விரட்டினார் உண்ணாமலை.

“பெரியம்மா, பிளீஸ் ரோஜாவை நாங்க வளர்த்துக்கிறோம். நீங்க துர்காவை மட்டும்..” குறிஞ்சி சொல்லி முடிக்கும் முன், “ஏய்” என்று அவளின் கைப் பிடித்திழுத்து அவளின் பேச்சை நிறுத்தியிருந்தான் தயா.

“இதே ரோசத்தோட இருந்துடுப்பா ராசா. என் புள்ள பக்கமே திரும்பாம இருந்தீங்கன்னா உங்களுக்குப் புண்ணியமா போகும்” என்று கையெடுத்து குடும்பிட்டார்.

முகம் அவமானத்தில் சிறுத்து கருத்துக் கண்களில் கோபச் சாயம் பூசி நின்றிருந்த தயா, “சாரி ஶ்ரீ. உடம்பு முடியாம ஹாஸ்பிடல் வந்தவங்க ஹெல்த் எங்களால கெட வேணாம். நாங்க கிளம்பறோம்.” என்று வெடுக்கென்று மனைவியின் கைப் பிடித்துத் தன் வண்டியை நோக்கி இழுத்தான்.

“தயா” என்றழைத்து அவனை நிறுத்தி, அம்மாவை பார்த்து, “நீங்க ரெண்டு பேரும் சம்மதிச்சாலும், சம்மதிக்கலன்னாலும் என் கல்யாணம் கண்டிப்பா துர்காவோட நடக்கும். எனக்குத் துர்கா சம்மதம் மட்டும் போதும். அப்புறம் பட்டு ரோஜா என் பொண்ணாதான் வளர்வா. நீங்க வீணா வம்பு பண்ணாம என் விருப்பத்துக்கு இறங்கி வந்தா நல்லது. இல்லையா ரொம்ப நல்லதுன்னு நான் என் வழியைப் பார்த்துக்குவேன்” என்று அதிரடியாக அறிவித்தான்.

அவன் முன்னிருந்த இருவருமே கடுங்கோபத்துடன் நின்றிருந்தார்கள். உண்ணாமலையின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு அவருக்கு வேகமாகத் தண்ணீரை எடுத்து நீட்டினாள் குறிஞ்சி. அவளை முறைத்தாலும் மறுக்காமல் வாங்கி அருந்தினார் அவர்.

“எப்படிப் பேசுற ஶ்ரீ, பெத்தவளுக்குப் பெருமையா இருக்குப்பா” அவர் கசப்புடன் கூற, தயா மனைவியுடன் அங்கிருந்து நகர்ந்திருந்தான். நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் என்ற திடத்துடன் அம்மாவை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றி வீடு நோக்கி விரைந்தான் ஶ்ரீகாந்த்.

சிதம்பரம் மாலை நேர ஓய்விற்காக அப்போதுதான் வீடு வந்தார். கணவரைக் கண்டதும் புகார் பட்டியலை படிக்கத் தொடங்கினார் உண்ணாமலை.

“உங்க புள்ள மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கான்னு கேளுங்க. நா அம்புட்டு சொல்லியும் இன்னைக்கு ஹாஸ்பிடல்ல வச்சு அந்தத் தயா பையன் முன்னாடி உங்க அக்காவைதான் கட்டிப்பேன்னு அடிச்சு சொல்றானுங்க. நீங்க சம்மதிக்கலன்னாலும் எனக்குக் கவலையில்ல என் வழியை நான் பார்த்துப்பேன்னு என்னையும் சேர்த்துச் சொல்றான். நீங்களே என்னானு கேளுங்க. ஒத்த ஆம்பள புள்ளைய பெத்து பேரும் பெருமையுமா வளர்த்துட்டு.. இப்படிப் போய்ப் பொண்ணெடுத்தா நல்லாவா இருக்கும்? இவனுக்கு என்னங்க கொற? ராசாவாட்டாம் இருந்துட்டு போயும் போயும்.. ச்சே, எவன் கிட்டயோ கல்யாணத்துக்கு முன்னாடியே புள்ளைய வாங்கிட்டு வந்தவள..” என்று புலம்பியவரை, “அ…ம்மா” அடிக்குரலில் சீறி வாய் மூடச் செய்திருந்தான் ஶ்ரீகாந்த்.

“பார்த்தீங்களாங்க. உங்க முன்னாடியே என்னைய மரியாதை இல்லாம எப்படிக் கத்துறான்னு..”

“உண்ணாமல பொறுமையா பேசணும்மா, ஹாஸ்பிடல் போனீங்களே. டாக்டர் என்ன சொன்னாரு?” என்று நழுவாத நிதானத்துடன் கேட்டார்.

“புதுசா என்னா சொல்ல போறாரு. சீக்கிரம் போய்ச் சேர்ந்துடுவேன்னுதான்”

“அம்மாக்கு ஒன்னுமில்லன்னு சொன்னாருப்பா டாக்டர். பிபிய மட்டும் பொறுப்பா பார்த்துக்கிட்டா போதும், பேரன் பேத்தி கல்யாணத்தைப் பார்த்துடுவீங்கன்னு சொன்னார்” என்றான்.

“எப்படா அப்படிச் சொன்னாரு?” என்று மகனிடம் பாய்ந்தார்.

“பேரன் பேத்தியாம் எங்க.. போற போக்கை பார்த்தா யார் வீட்டு பிள்ளையையோ..”

“உண்ணாமல வார்த்தைய விடக் கூடாது”

“பின்ன என்னங்க? நான் அம்புட்டு சொல்லியும் என்னா பேச்சுப் பேசுறான். அப்போ என் பேச்சுக்கு என்ன மரியாதை? நீங்க இருக்கத் தைரியத்துலதான் இவன் இப்படி ஆடுறான். ஒழுங்கா சொல்லி வைங்க. நான் இதுக்கும் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டான். அந்தத் துர்கா என்னைக்கும் என் வீட்டு மருமகளா ஆகவே முடியாது. இவன் என்னைய மீறி ஏதாவது பண்ணிட்டு வந்தான்..”

“ஆசீர்வாதம் பண்ணி வீட்டுக்குள்ள அழைச்சுக்குவியா ம்மா” ஶ்ரீகாந்த் சிரிக்காமல் கேட்க, சிதம்பரம் சிரித்து விட்டார்.

“அப்பாவும் மகனும் நல்லா சிரிங்க. நாளைக்கு நம்மள பார்த்து ஊரே சிரிக்கப் போகுது.” என்று கத்தினார்.

“அன்னைக்கு அந்தத் தயா பையன் கல்யாணத்துல இவன் பொடி வச்சு பேசும் போதே என்னமோ இருக்குன்னு சந்தேகப்பட்டேன். அதே போலப் பூதம் வந்துடுச்சு. அவளுக்குப் பிரச்சனைம்மா, நீ நினைச்சா சரி பண்ணிடலாம்னு சொல்லி சொல்லி நமக்குப் பிரச்சனை பண்ணிட்டான் பாருங்க” என்று பொறுமினார்.

“இப்போ என்னதான்ம்மா உன் பிரச்சினை?” அப்பாவும் மகனும் ஒன்று போலக் கேட்க, உண்ணாமலை மூச்சு வாங்க அவர்களை முறைத்தார்.

“ஊரு மெச்சின பொண்ணை நம்ம வீட்டு மருமகளா கொண்டு வரணும்னு நான் விருப்பப்படுறேன். உங்க புள்ளை கைக் காட்டுற அந்தத் துர்கா, அவளைத்தான் ஊரே அவலா போட்டு மெல்லுது. அவ நம்ம குடும்பத்துக்குச் சரிப்பட மாட்டா” என்றார்.

“ஊரை பார்த்திட்டு உன் பிள்ளையை விட்டுறாத உண்ணாமல”

“நீங்க அவனுக்குக் கொம்பு சீவி விடாதீங்க, சொல்லிட்டேன்” என்று கணவரை எச்சரித்தார்.

அப்பாவை புன்னகையுடன் பார்த்தவன், “பிளீஸ்ம்மா. ஒரு தடவை துர்காவை வந்து பாரும்மா. அவகிட்ட பேசும்மா, உனக்கு அவளைக் கண்டிப்பா பிடிக்கும். ரோஜா குட்டிய கொஞ்சாம உன்னால இருக்க முடியாது பாரு. நீ ம்ம்ம்னு ஒரு வார்த்தை சொல்லும்மா. நாம நாளைக்கே அவங்க வீட்டுக்குப் போகலாம்” என்று ஆசைக் காட்டி பரபரத்தான்.

“என்னம்மா, நம்ம ஜோசியர்கிட்ட பேசவா? நல்ல நாள் பார்க்க சொல்லவா?” சிதம்பரம் கேட்க, “நடக்காத காரியத்துக்கு எதுக்கு நல்ல நாள் பார்க்கணும்?” என்று அச்சாணியமாகக் கேட்டு அவர்களை அவமதித்தார்.

“நல்ல நாள்ல அம்மாக்கு நம்பிக்கை இல்ல போலப்பா, நாம நடக்கற காரியத்தைப் பார்ப்போம்” என்று அதிகம் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான் ஶ்ரீகாந்த். அம்மா, மகன் இருவரும் இடையில் சிக்கிக் கொண்டார் சிதம்பரம்.

தயா, குறிஞ்சி வீடு வர இருவரின் அம்மாக்களும் கூடத்தில் ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நேரம் உணவகத்தில் மதிய உணவு முடிந்திருக்கும், அதனால் வீடு வந்திருக்கிறார்கள் என்று கணித்த குறிஞ்சி, “சாப்டீங்களாத்தே, டீ போடவாம்மா?” என்று கேட்டாள்.

“மொத நீங்க ரெண்டு பேரும் கை கால் கழுவிட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றார் அலமேலு.

ரோஜா கிண்டர்கார்டனில் இருப்பதால் மதியம் வரைதான் பள்ளி நேரம். தயா, பழனியப்பன் இருவரில் யாரேனும் ஒருவர் அவளை மதியம் வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். படித்துக் களைத்த சோர்வில் மதிய உணவு உண்டதும் உறங்கிவிடும் பட்டு ரோஜா. அவளுக்குக் கூடத்தில் படுக்கை விரித்திருக்க, கால்களைக் குறுக்கி படுத்திருந்த குழந்தையின் அருகில் சென்று கால் நீட்டி படுத்து விட்டான் தயாபரன்.

“தயா, தம்பி என்னப்பா வந்ததும் படுத்துட்ட? சாப்பிடலயா?” நாச்சம்மை கேட்க, “ம்ம்ம்” என்ற ஒலி மட்டுமே பதிலாக வந்தது.

“தம்பி, எந்திரிப்பா. அம்மா சாப்பாடு எடுத்து வைக்கறேன். சாப்பிட்டு படுப்ப” என்றார் அக்கறையாக.

“வேணாம்மா”

“வேணாம்னா என்னப்பா அர்த்தம்? வயித்துக்குச் சாப்பிட வேணாமா? ஏற்கனவே நேரமாச்சு இதுல..” அவர் கரிசனத்துடன் சொல்லும் போதே பட்டென்று எழுந்து விட்டான்.

“நான் கடைக்குப் போயிட்டு அப்பாவ அனுப்பி விடுறேன்” கலைந்திருந்த தலையைக் கையால் சரி செய்தவாறு சொன்னான்.

“அப்பா வர்றது இருக்கட்டும். உன் மொகமே சரியில்லயே, என்னா நடந்துச்சு? குறிஞ்சி, என்னம்மா? உன் கூட எதுவும் சண்டை போட்டானா?” என்று வந்து நின்ற மருமகளிடம் கேட்டார்.

“ஆமா, எனக்கு வேற வேலையில்ல பாருங்க. பொது எடத்துல வச்சு உங்க மருமக கூடச் சண்டை போடுற அளவுக்குத் தரம் இறங்கிடுவேன்னு நினைச்சீங்களோ? மகன் மேல அம்புட்டு நம்பிக்கை இல்லம்மா? நீங்க என்னைக்கு எங்கள, உங்க பிள்ளைங்கள நம்பினீங்க. அக்கா காணோம்னதும் அந்தாள் கிட்ட போய் இருப்பான்னுதானே சந்தேகப்பட்டீங்க? பெத்த நீங்களே அப்படிப் பேசும் போது ஊர்ல இருக்கவங்க அக்காவை எப்படி நல்லவிதமா பார்ப்பாங்க? பேசுவாங்க?” என்று காட்டமாகக் கேட்டான்.

“அது அன்னைக்கு இருந்த பதட்டத்துல ஏதோ தெரியாம கேட்டுட்டேன்ப்பா. நான் என்னைக்கு உங்கள நம்பாம இருந்தேன்னு இப்படிப் பழி சொல் சொல்ற நீ?” என்று கண்ணைக் கசக்கினார்.

“என்னப்பா நடந்துச்சு, உனக்கெதுக்கு எம் மேல இம்புட்டு கோபம்?” என்று கேட்டார்.

அலமேலு அமைதியாக அமர்ந்திருக்க, குறிஞ்சிக்கு அவர்கள் நடுவே செல்லவே தயக்கமாக இருந்தது.

“இன்னும் என்னம்மா நடக்கணும்? நான் அத்தனை சொல்லியும் கேட்காம அத்தையை வர சொன்னது நீங்க, வந்து என்ன பண்ணிட்டு போனாங்க? அக்காவ கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியாம்மா நீ? அந்தப் பொறுக்கி எங்களுக்குக் கல்யாணமான மறுநாளே அக்கா கிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்துருக்கான். குறிஞ்சி பார்த்து கத்தினதால நான் போனேன்..”

“ஐயோ என் பொண்ணு…”

“இப்படிப் புலம்பி புலம்பியே ஊருக்கு நீயே கொட்டடிச்சு பரப்பி விட்டுரும்மா. போகட்டும், இதுவும் ஶ்ரீகாந்த் அம்மா காதுக்குப் போகட்டும். அப்போதான் பூரிச்சு போய் உடனே பூ, பழத் தட்டோட உன் பொண்ணை, பொண்ணு பார்க்க வருவாங்க” என்றான் கோபமாக.

“ஆத்தாடி..” நாச்சம்மை நெஞ்சில் கை வைத்து அதிர, “பேசாம இருங்க தயா” என்று அவனை அடக்க முற்பட்டாள் குறிஞ்சி.

“என்னை எதுக்கு அடக்கற? அந்த அத்தை அம்புட்டுப் பேசினாங்களே, அப்போ ஏதாவது பேச முடிஞ்சதா உன்னால? ரோஜாவை நாங்க வளர்த்துக்கிறோம்னு கெஞ்சிட்டுதானே நின்ன?” என்று அவளிடமும் காய்ந்தான். எந்தப் பக்கம் போனாலும் வழியில்லாத வேதனை அவனுக்கு. அக்காவிற்கு வேறு வரன் பார்க்கலாம் என்று ஶ்ரீகாந்த்தை உதறிச் செல்லவும் அவனால் முடியவில்லை. நண்பனுக்கு வாய் வார்த்தையாக என்றாலும் வாக்கு கொடுத்திருக்கிறானே‌. ஆதலால் அதை மீற முடியாமல் நின்றான். அக்காவின் மனத்திலும் ஶ்ரீகாந்த் இடம் பிடித்து விட்டதை அறிந்த பிறகு வேறெதையும் சிந்திக்கக் கூட முடியாமல் சிக்கிக் கொண்டான். எல்லாக் கோபமும் சேர்ந்து அழுத்த அம்மாவிடம் வெளிப்படுத்தி விட்டான்.

அவரோ சேலைத் தலைப்பால் வாய் பொத்தி அழ, அவருக்கு அலமேலு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அறைக்குள் விட்டு வந்து, ஶ்ரீகாந்த், உண்ணாமலையைச் சந்தித்ததையும், அங்கு நடந்ததையும் அவர்களுக்குச் சொன்னாள் குறிஞ்சி.

error: Content is protected !!
Scroll to Top