பார்கவி நேராகச் சென்று அம்மாவிடம் நின்றாள்.
“இப்படிக் கேட்டா நான் என்ன பாரும்மா சொல்லுவேன். உங்கப்பா எங்க கல்யாணத்துக்கு முன்னுக்க என்னைய கோவில்ல வச்சு பார்ப்பார்.” என்று சொல்லும் போதே அவர் முகம் வெட்கத்தின் சாயல் பூச, “ம்ம்மா” என்றாள் சிரிப்புடன். பெற்றோரின் கல்யாண கதையைப் பல முறை கேட்டிருந்தாலும், அவர்கள் சொல்லும் ஒவ்வொரு முறையும் அவளுக்குச் சுவாரசியம் குறைவதில்லை.
“சிரிக்காத கழுத. என்னைக் கேட்டா கோவிலுக்குப் போங்கன்னுதான் சொல்லுவேன். நீ போய்ப் பிரியா பொண்ணு கிட்ட கேளு. நாளைக்குப் பத்திரிக்கை வைக்க அப்பாவும், நானும் மண்ணடி வரைக்கும் போறோம். நாங்க வர சாயந்தரம் ஆகிடும்.”
“நான் மதியம் போல வீட்டுக்கு வந்துடுவேன்ம்மா” என்றாள்.
“ம்ம்” என்றவர், மகளையே பார்த்தார்.
“கல்யாணத்துக்கு இன்னும் 20 நாள்தானே பாப்பா இருக்கு. நீயும், மாப்ளயும் கொஞ்சம் பேசி புரிஞ்சுக்கப் பாருங்க. வேற என்ன சொல்ல.. கவனம்” என்றார் திரும்பவும். அந்தக் குரலில் இருந்த பயம், கண்டிப்பு, கவலை எல்லாம் அவளுக்குப் புரிந்தது. மெதுவாகத் தலையசைத்தாள்.
மறுநாள் காலையிலேயே அவளை அழைத்து விட்டான் பாரிவேந்தன்.
“நீங்க வாங்க, நான் ரெடியாகிட்டு இருக்கேன்” என்றாள்.
“சேலை கட்டிட்டு போ பாப்பா” என்று காவேரி அறிவுறுத்த, மஞ்சளும், பச்சையும் கலந்த சில்க் காட்டன் புடைவை அணிந்து, கூந்தலை தளர பின்னினாள். எளிமையான, திருத்தமான ஒப்பனையுடன், அளவான அணிகலன்களுடன் தயாராகி நின்றிருந்தாள்.
அவளின் பெற்றோரும் பத்திரிக்கை வைக்கக் கிளம்பியிருந்தார்கள். பாரிவேந்தன் வந்ததும், அவர்களிடம் சொல்லி விட்டே அவளை வெளியில் அழைத்துச் சென்றான்.
இருவருக்கும் காரில் தனிமை கிடைத்ததும் அவள் புறமாக நன்றாகத் திரும்பி அமர்ந்து நீண்டதொரு சீட்டி அடித்தான்.
சட்டென அவள் முகத்தில் செம்மை படர்ந்தது.
“எதுக்கு விசில் அடிக்கறீங்க?”
கண்களால் அவளை விழுங்கி, “ரொம்ப ரொம்ப அழகாருக்கக் கவி” என்றான்.
“எங்கம்மா உன் போட்டோ பார்த்த நாள்ல இருந்து என்னா அழகு இந்தப் பொண்ணுன்னு சொல்லிட்டே இருக்காங்க. எங்கம்மாவ விடு, என்னையும் இந்த அழகுதான் அடிச்சு வீழ்த்துச்சு” என்று மயங்குவது போலச் செய்கை செய்தான்.
மெலிதாகச் சிரித்து, “எங்க வீட்டு வாசல்லயே உட்கார்ந்து பேசுற ஐடியாவா உங்களுக்கு?” என்று கேட்டாள்.
“பாரேன், பார்கவி என்னோட வெளில வர ஆர்வமா இருக்காங்க” என்று புன்சிரிப்புடன் சொன்னவன், காரில் இசையை ஒலிக்க விட்டு நகர்த்தினான்.
“மால், ஷாப்பிங்” வேண்டாம் என்று விட்டாள்.
கடற்கரை இந்த வெயிலில் சென்றால் நன்றாக இருக்காது என அதையும் தவிர்த்தார்கள்.
“ஒன்னு பண்ணலாம், எங்க அக்கா வீட்டுக்குப் போகலாம்” என்றான். எங்காவது தனிமையான இடத்தையே அவன் தேர்ந்தெடுப்பான் என்று அவள் நினைத்திருக்க, அக்கா வீடு என்று அவன் சொன்னது அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
“என் பெரிய பெரியம்மா பொண்ணு. அக்காவும் உன்னைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா. அங்கேயே போகலாம்” என்று அரை மணி நேர பயணத் தூரத்தில் இருந்த அக்கா வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
பெரிய அபார்ட்மெண்ட் வளாகம் அது. அங்கே வரிசையாக எட்டு பெரிய பெரிய கட்டிடங்கள் இருந்தன. அந்த வளாகத்தில் எல்லா வசதிகளும் இருந்தது.
அவனது அக்கா பதிமூன்றாம் தளத்தில் இருந்த மூன்று படுக்கை அறை கொண்ட பிளாட்டுக்கு சொந்தக்காரர்.
அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார்கள். இனிமையாகப் பேசினார்கள். அவளின் தயக்கம் எல்லாம் தகர்ந்திட, அங்கே அவளால் இயல்பாக இருக்க முடிந்தது.
அவனது அக்கா வங்கியில் பணிபுரிகிறார், மாமா அவர்களைப் போலவே ஐடி நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார்.
அவர்களுக்கு இரண்டு வயது பெண் குழந்தை சாத்வீகா இருந்தாள். பார்த்த கொஞ்ச நேரத்தில் அவளுடன் ஒட்டிக் கொண்டாள் பார்கவி.
“சாவி பாப்பா கம்ப்யூட்டர் காட்டவா உங்களுக்கு?”
“சாவி பாப்பா வீட்ல ரோஸ் இருக்கே”
“சாவி பாப்பா டீ குடிக்கக் கூடாது. சாவி பாப்பா பிஸ்கி சாப்பிட கூடாது. நீ சாப்பிடு” என்று பார்கவி நீட்டிய குக்கீஸை தேநீரில் தொட்டு அவளுக்கு ஊட்டி விட்டாள் குழந்தை.
“சாத்வி பாப்பா சோ ஸ்வீட்” குழந்தையை வாரி அணைத்து அவளது உப்பிய பட்டுக் கன்னங்களில் அழுத்தமாக முத்தமிட்டாள் பார்கவி.
“எனக்குச் சாவி” என்று அவள் கன்னம் திருப்பிக் காண்பிக்க, அம்மாவை பார்த்து பார்வையால் அனுமதி பெற்று அவள் கன்னத்தில் இதழ் ஒற்றினாள் குழந்தை. பார்கவி கண்ணை மூடி சிரித்தாள்.
“கிஸ் கொடுத்தியா சாத்வி பாப்பா? எனக்கு வரவே இல்ல” என்று உதடு பிதுக்கி சோகமாகச் சொன்னவள், “இன்னும் ஒன்னு?” என்று கண்ணைச் சுருக்கினாள் கெஞ்சலாக.
அவளுக்குப் பாவம் பார்த்து, ஓரக் கண்ணால் அவளைப் பார்த்து, மீண்டும் முத்தமிட்டாள் குழந்தை.
“பார்வையைப் பாரு” நெற்றியில் முட்டி, மூக்கோடு மூக்கு உரசி, பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டாள். குழந்தை கூச்சத்தில் நெளிந்து கிளுக்கி சிரிக்க அந்தச் சிரிப்பு அவளையும் தொற்றியது.
அவள் சிரித்துக் கொண்டே திரும்ப, அவளை விட்டுத் தூரமாக அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த பாரிவேந்தன் பார்வை அவள் மேல் அழுத்தமாகப் படிந்திருந்தது.
ரசனையும், உரிமையுமாக அவளைப் பார்த்திருந்தான். முதல் முறையாக அந்தப் பார்வை பார்கவியிடம் சின்னப் பாதிப்பை ஏற்படுத்தியது.
என்னவென்று அவன் புருவங்களை உயர்த்திக் கண்ணால் வினவ, அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் பட்டென்று திரும்பி விட்டாள்.
அவனது மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தவன் சத்தமாகச் சிரித்தது அவள் செவியில் விழுந்தது.
அந்நேரம் பார்த்து அவளுக்கு அலுவகத்தில் இருந்து அவசர வேலையென அழைப்பு வந்தது.
“ப்ராஜெக்ட்ல இஸ்யூனு கால் பண்ணாங்க. உடனே கால்ல கனெக்ட்டாகச் சொல்லியிருக்காங்க. நான் வீட்டுக்கு போகணும்” அதைச் சொல்லும் போதே அவன் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாதே என்ற பதட்டம் அவள் குரலில் இருந்தது.
“ஹே ஈஸி கவி. நானும் இதே லைன்லதானே இருக்கேன்? எனக்குப் புரியாதா? வா போகலாம்” என்று சாதாரணமாகச் சொன்னான்.
அவனது அக்காவும், மாமாவும் கண்டிப்பா இன்னொன்று நாள் வர வேண்டும் என்று வற்புறுத்தி சொல்லி அவளை அனுப்பி வைத்தார்கள்.
“சாவி பாப்பா பை” என்று குழந்தை கைக் காட்ட, “சாத்வி பாப்பாவை பார்க்க கண்டிப்பா நான் வர்றேன்” என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு விடை பெற்றாள்.
அவர்கள் காரில் பயணிக்கையில், “இன்னைக்குச் சாத்வி பாப்பாக்கு அடிச்சது ஜாக்பாட்” என்று பொறுமினான் அவன்.
எதுக்கு என்ற கேள்விக்கு அவசியமின்றி அவன் சொன்னது அவளுக்குப் புரிந்தது.
அவள் வீடு வருவதற்குள் அவளது குழுவினர் அவளைப் பலமுறை அழைத்து விட்டார்கள்.
ஆக வீட்டை அடைந்ததும் வேகமாகக் கீழிறங்கினாள். அவளோடு வீட்டுக்குள் வந்தவன், “லஞ்ச் என்ன பண்ணுவ கவி? நான் வாங்கிட்டு வந்து தரவா?” என்று கேட்டான்.
அந்த அக்கறை பிடிக்க, “இல்ல வேணாம். நான் கால் பண்ணா சரளா அக்கா வந்துடுவாங்க. அவங்க செஞ்சு தருவாங்க. நானே கூட ஏதாவது சிம்பிளா செஞ்சுப்பேன்” என்று சொன்னாள்.
“ஓகே. சுயரா? ஒர்க்ல பிஸியாகிட்டு சாப்பிட இருந்துட மாட்டியே?”
“மாட்டேன்” என்றாள். முதல் முறையாக அவனைப் பார்த்து மலர்ந்து புன்னகைத்தாள். அவள் தலையை இட வலமாக அசைத்துப் பதில் சொல்ல, காதில் இருந்த நீண்ட கம்மல் மல்லிகை பூவோடு சேர்ந்தாடியது.
அவன் கண்களில் ரசனை கூட அவளை நெருங்கினான்.
“அப்போ நான் போகவா?”
“ம்ம்” என்று நகரப் போனவளின் கரம் பிடித்து நிறுத்தினான். அவள் கண்களில் அப்பட்டமான தயக்கம் இருந்தது.
மெல்ல நெருங்கி அவளை அணைத்துக் கொண்டான். அவளோ அவனை அணைக்கவும் இல்லை. விலக்கவும் இல்லை.
“எனக்கு ஒர்க் இருக்கு” என்று அவள் மெதுவாகச் சொல்ல, “ம்ம்” என்று இறுக அணைத்தான்.
மெல்ல அவனை விலக்கினாள்.
“ப்ச்” என்று கோபமாகச் சலித்தான்.
“ஜஸ்ட் அ ஹக் தானே கவி? இதுவும் கூடாதா?” என்று அவன் கோபமாகக் கேட்க, அசையாமல் நின்றாள். அதை அவனுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு அவன் கரம் முன்னேற அவள் திணறினாள்.
“பிளீஸ்.. வேணாம்..” அவள் முடிப்பதற்குள் கன்னத்தில் முத்தமிட்டு இதழை நெருங்கியிருந்தான். அவளின் வெற்றிடையில் ஊர்ந்து, மேலேறியது அவன் கரம்.
மறுகணம் அவள் கரங்கள் தானாக அவனைத் தள்ளி விட்டிருந்தன. மோகம் அப்பிய அவன் கண்களில் கோபம் அப்பியது.
“ஹேய்..” என்றான் பல்லைக் கடித்து.
“ரொம்பப் பண்ற நீ..”
“சா…ரி” என்று அவள்தான் தவறு செய்தது போலத் திக்கினாள்.
“என்னடி உன் பிரச்னை? நாளைக்குக் கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படித்தான் தள்ளி விடுவியா?” என்று கத்தினான்.
“கத்தாதீங்க..”
“கத்தாம கொஞ்சுவாங்களா?. ம்ம், அதுக்கும் நீ விட மாட்டியே” என்றான் நக்கலாக.
“உனக்கு என்ன பிரச்னைன்னு எனக்குச் சத்தியமா புரியல பார்கவி. உன் எக்ஸ் அப்படி என்ன பண்ணான் உன்னை? ம்ம்?” என்று புருவம் உயர்த்தினான். அவன் கண்களில் கடினமும் கூர்மையும் கூடிட, அவள் இறுகி நின்றாள்.
“உங்ககிட்ட உண்மையைச் சொன்னதே தப்புன்னு என்னை ஃபீல் பண்ண வைக்கறீங்க பாரி. நான் அவரை…”
“ஓஹோ.. அவராம்ல.. அவர்.. வாரே வா..” அந்தக் கேலி அவளைச் சீண்டினாலும் இறுகிய உடல் மொழியுடன் பல்லைக் கடித்து நின்றாள் பார்கவி.
“ஒன்னு என் இடத்துல அவன் இருந்திருக்கணும். இல்ல, என்னால அவன் இடத்தைப் பிடிக்க முடியாம இருக்கணும். என்ன நான் சொல்றது சரியா?” என்று அவளை நெருக்கமாக இழுத்துக் கேட்டான். சட்டென்று முகம் சுளித்து விட்டாள்.
“எப்படி, இப்படிப் பேசுறீங்க நீங்க? இப்பவே இப்படிப் பேசினீங்கன்னா..”
“எப்படிப் பேசறேன்? அவனோட நீ இப்படி நின்னியான்னு கேட்கறேன்” அவளை இழுத்து இறுக அணைத்து கேட்டான்.
“என்ன தெரியணும் உங்களுக்கு?”
“என் கேள்விக்குப் பதில்..” என்றான் கடுமையாக.
“நீங்க உங்க ஆளோட என்ன செஞ்சீங்க சொல்லுங்க” கோபத்திலும் வேகத்திலும் கேட்டு விட்டு, அதைக் கேட்டிருக்க வேண்டாம் என்று வருந்தினாள்.
“பார்கவி…டோண்ட்..” என்றான் மிரட்டலாக.
“நீங்க செஞ்சத விடக் கூடக் குறைய ஏதாவது செஞ்சுருப்போம். அவ்ளோதானே” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் சீற்றத்துடன் அவளைத் தள்ளி விட்டிருந்தான். அவள் சோஃபாவில் இடித்து நிற்கவும், ஒரே எட்டில் அவளை நெருங்கியிருந்தான். அவள் பேசியது அவளுக்கே பிடிக்கவில்லை. அந்த நொடி தன்னைத்தானே நொந்து வெறுத்தாள் அவள்.
அவன் வந்த வேகமும், நின்ற தோரணையும் அவளுள் எச்சரிக்கை மணியை அதிர விட்டது. எங்கே அடித்து விடுவானோ என்று அவள் நினைத்த கணம், அவன் பின்னகர்ந்து நின்றான்.
அன்றைய நாளின் இதம் அக்கணம் மொத்தமாய்த் தொலைந்து போனதை உணர்ந்தாள் அவள்.
“பாரி, நீங்க இப்படித்தான் என்கிட்ட பேசுவீங்கன்னா, இப்படித்தான் நடந்துப்பீங்கன்னா..”
“எதுவும் சொல்லாத” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தான்.
“இல்ல, நீங்க யோசிக்கிறது நல்லது.” என்று முடித்து விட்டாள். மறுகணம் அவனோடு சேர்ந்து அவளது மனஅமைதியும் வெளியேறி இருந்தது.
கணினி திரையை வெறித்திருந்த அவள் கண்களில் கலக்கம் சூழ்ந்திருந்தது.