நற்காதல் நெய்திடவா – 9 (1)

“நம்ம வங்கிச் சட்டத்தில் அதுக்கு இடமிருக்கா மேனேஜர்?” என்ற வேதாவின் கேள்வி வெற்றியை சிரிப்பில் சிதற வைத்தது.

“என்ன கேள்வி இது வேதா? நாம கல்யாணம் பண்ணிக்க வங்கிச் சட்டத்தில் இடமிருக்காவா?” சிரிப்புடன் அவளின் கேள்வியை அவளிடமே திருப்பிக் கேட்டான் வெற்றி.

“ம்ம். ஆமா, இருக்கா, இல்லையா? அதைச் சொல்லுங்க. ஏன்னா, வானமாமலை சட்டத்தில் காதல் திருமணத்திற்கு இடமில்லை வெற்றி சார். அட்லீஸ்ட், வங்கிச் சட்டத்திலயாவது இடமிருந்தா, எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும். எல்லா இடத்துலயும் என்னால போராட முடியாது, பாருங்க” சிரிப்புடன் பேசத் தொடங்கியவளின் குரல் தீவிரத்திற்கு மாறியிருந்தது.

“வானமாமலை என் அப்பா” என்று அவள் சொல்ல, “புரிஞ்சுது வேதா” என்ற வெற்றி, “வங்கிச் சட்டம் வெற்றிகரமா, வெற்றிக்கு சாதகமா இருக்கு. வெற்றி வேதமாகலாம். அதை யாராலையும் தடுக்க முடியாது.” ஆழ்ந்த குரலில், அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.

வேதா புன்னகைக்க, வெற்றியும் புன்னகைத்தான்.

பிரபுவை தவிர மற்ற அனைவரும் ஒதுங்கிப் போய் அமர்ந்து விட்டார்கள்.

தனியாக நின்று பேசிக் கொண்டிருந்த வெற்றியையும், வேதாவையும், என் வேலை புகைப்படம் எடுப்பதே என்று அவனது கேமராவில் அவர்களின் ஒவ்வொரு உணர்வுகளையும் துல்லியமாக அடக்கிக் கொண்டிருந்தான் பிரபு.

“டேய், எதுக்கு டா இதெல்லாம் ஃபோட்டோ எடுக்கற? சும்மா இருக்க மாட்டியா நீ?” என்று வெற்றி அவனைத் திட்ட, “இந்த மாதிரி ப்ரஸியஸ் மொமெண்ட்ஸை எல்லாம் மிஸ்ஸாகாம கேப்சர் பண்ணிக் கொடுக்க, கூடவே ஒரு போட்டோகிராபர் இருக்கேன்னு சந்தோஷப்படுடா மச்சான்” என்று வெற்றியிடம் சொல்லி, வேதாவைப் பார்த்துச் சிரித்தான் பிரபு.

“இவங்களுக்கு எல்லாம் நம்ம விஷயம் தெரியுமா?” வேதா வெற்றியிடம் கிசுகிசுக்க, “ம்ம். தெரியும்” என்று தலையசைத்தான் அவன்.

“என்னது? அப்போ எனக்கு மட்டும்தான் தெரியாதா? மேனேஜர், நீங்க முதல்ல என்கிட்ட தானே சொல்லணும்?” அவள் கோபத்துடன் கேட்க,

“காதலை முதல்ல உன்கிட்டதான் சொன்னேன். சொல்றேன். இனியும் சொல்வேன்.” வெற்றி சொல்ல, விழி விரித்தாள் வேதா.

“ஆனா, நான் காதலிப்பதை அவங்ககிட்ட சொன்னேன். வேதாவை காதலிக்கிறேன்னு அவங்ககிட்ட சொன்னேன். அவங்க மட்டுமில்ல. இன்னும் நிறையப் பேருக்கு என் காதல் தெரியும்” அவன் சொல்ல, அவள் விழிகளில் மெல்லிய அதிர்ச்சி.

“வேற யாருக்குத் தெரியும்? நம்ம பேங்க்….” அவள் கேள்வியை முடிக்கும் முன்பே அவளை மெல்ல இழுத்து பின்னோக்கி நகர்ந்து, சாலையை விட்டு ஒதுங்கி வந்திருந்தான் வெற்றி. அவள் முடிக்காமல் விட்ட கேள்விக்குப் பதிலும் சொன்னான்.

“வண்ணதாசன், குமரகுருபரன், யாத்ரி கார்த்திக், மனுஷ்ய புத்திரன்..” என்று நவீன கவிஞர்களின் பெயர்களை அவன் அடுக்கிக் கொண்டே போக, சத்தமாகச் சிரித்து விட்டாள் வேதா.

“அவங்களுக்கு உங்க காதல் தெரிஞ்சு என்ன ஆகப் போகுது?”

“என் காதலுக்குப் பெரிய மனசு பண்ணி கவிதை கடன் கொடுப்பாங்க இல்ல? என் காதல் பெண்ணுக்கு நானும் கவிதை சொல்வேன் இல்ல?”

“முதல்ல காதலை சொல்லுங்க வெற்றி சார்”

“பாய்ண்ட் வேதா. நானும் சொல்லணும்னுதான் நினைக்கிறேன். ஆனா, கவிதைக்குக் கவிதை சொல்றது ரொம்பச் சிரமம்தான், இல்லையா?. கவிதைக்குக் காதலை சொல்றது அதை விடச் சிரமம்” அவளைக் கவிதை என்று சுட்டிக் காட்டி, அவன் உதடுகளில் குறுநகை இழையோட பேச, “ஆனாலும், இது ரொம்ப ஓவர் தெரியுமா?” என்று உதடு சுளித்தாள் அவள்.

“ஓவர் எல்லாம் இல்லையே வேதவர்ஷினி. வர்ஷினி, உன் பேர்லேயே மழை இருக்கு. உலகின் சிறந்த கவிதை எதுவா இருக்கும்? நிச்சயமா மழையும், காதலுமாதான் இருக்கும். இல்லனா, காதலுக்காக ஒரு காதலன் பாடின மழைக் கவிதையா இருக்கும். இப்போ என் மழைப் பெண்ணுக்கு நான் எப்படிக் காதல் கவிதை படிக்க?” சுட்டு விரலால் அவளின் நெற்றி தொட்டு, அவளின் கன்னம் கொஞ்சிய முடிகளை விலக்கி அவள் கண்களைப் பார்த்துக் கேள்விக் கேட்டான் வெற்றி. தன் உடலில் ஓடிய மெல்லிய சிலிர்ப்பை மறைக்க முடியாமல் அவன் கண்களைப் பார்த்தாள் வேதா.

“கவிதை படிக்கிறவருக்குப் பேச சொல்லியா தரணும்?” என்று அவள் பொய்யாகச் சலித்துக் கொள்ள, சிரித்தான் வெற்றி.

“இதுவரை நான் காதல் பேசினது இல்ல வேதா. இனிதான் கத்துக்கணும். நீ கேட்டது போல, காதலை சொல்வதை விட, அதைச் செயலில் காட்டுவது ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன்” அவன் கண் சிமிட்டி சொல்ல, “ஆத்தி.. யாத்தாடி.. நான் இல்ல” என்று பலத்த மறுப்புடன் பின் வாங்கினாள் வேதா. பலமாகச் சிரித்தான் வெற்றி.

“எப்பா டேய், வங்கி மேலதிகாரிகளே, நேரமாச்சு வீட்டுக்கு போவோமா?” பிரதீப் கத்த, இருவரும் சட்டென விலகி நின்றார்கள்.

நண்பர்கள் அவர்களைப் பார்த்து சிரிக்க, இருவர் முகத்திலும் வெட்க சூரியன் உதித்தான்.

வேதா, வெற்றியின் வண்டியில் ஏற, மற்றவர்கள் அவரவர் வாகனத்தில் பயணித்தார்கள்.

பத்து நிமிட பயணத் தூரத்தில் இருந்த சிறிய உணவகத்தில் தரமான, சுவையான மதிய உணவை முடித்து விட்டு, அடுத்து எங்கே செல்வது என்று அவர்கள் விவாதிக்க, வானம் மயங்கத் தொடங்கியது.

வெண் மேகங்கள் காணாமல் போய், கருமேகங்கள் சூழத் தொடங்கியது.

“ஹேய், மழை வர்ற மாதிரி இருக்கு. நாம வீட்டுக்கு கிளம்பலாம்.” என்று அவசரமாகச் சொன்ன மோனிகா, “நாம இப்படி அடிக்கடி மீட் பண்ணணும் கைஸ். ஐ அம் என்ஜாயிங் அவர் டைம். இன்னைக்கு நாள் செம்மயா போச்சு. தாங்க்ஸ் கேர்ள்ஸ்” என்று மகிழ்வுடன் சொல்ல,

“கண்டிப்பா மீட் பண்றோம். ஒவ்வொரு வாரமும் மீட் பண்றோம். இப்பதான் காதல் பயிர் வளர்க்க இன்னொரு ஜோடி சேர்ந்திருக்காங்களே. மேன்மை பொருந்திய மேலாளரும், அவரது…” கௌசல்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனது அடைமொழியைக் கேட்டு அதிர்ந்து, “இப்போ என்ன சொன்னீங்க நீங்க?” என்று கத்தினான் வெற்றி.

“அச்சோ..” என்று நாக்கை கடித்தார் கௌசல்யா. அவரின் பார்வை வேதாவின் மேல் இருக்க, வெற்றியும் அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“ஐயோ, சார். நான் எதுவும் சொல்லல. நான் வைக்கல அந்தப் பேர்” தவளை தன் வாயாலேயே கெட்டது.

“இல்ல, சார். அது..” என்று அவள் திணற, வெற்றி முறைத்தான்.

“ஆமா, நான்தான் அப்படிச் சொன்னேன். உங்களை அப்படித்தான் கூப்பிடுவேன்” என்று அவள் உண்மையை ஒப்புக் கொள்ள, கோபப்பட நினைத்தாலும் வெற்றியால் முடியவில்லை.

அவள் முகம் பார்க்க, அந்தக் கண்களில் தெரிந்த குறும்பும், மிரட்சியும் அவனுக்குச் சிரிப்பைதான் தந்தது.

“ஓகே. சீ யூ கைஸ்” என்று மற்றவர்கள் கிளம்ப, “ஒழுங்கா, வீடு வந்து சேரு” என்று வேதாவைப் பார்த்து வாயசைத்து மிரட்டி விட்டுப் போனார் காந்திமதி.

“உன்னைச் சின்னப் பொண்ணுன்னு நினைச்சு.. நான் பொறுமையா பேசினா.. எனக்கு என்ன பேர் வச்சிருக்க நீ?” அவன் பொய்க் கோபத்துடன் கேட்க, “என்னது சின்னப் பொண்ணா?” என்று அவனை முறைத்து, “ஆமா, வெற்றி சார், நான் ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன். எனக்கு எஜுகேஷன் லோன் எப்ப தருவீங்க? கல்யாணத்துக்கு முன்னாடியா? கல்யாணத்துக்கு அப்புறமா?” என்று விழிகளை விரித்துக் குறும்பாகக் கேட்டவளை ரசனையுடன் பார்த்தான் வெற்றி. சட்டெனத் தலையைப் பின்னுக்கு இழுத்துச் சத்தமாகச் சிரித்தான்.

சாலையில் விரையும் மனிதர்கள் அவர்களைத் திரும்பிப் பார்க்க, “அச்சோ, ஏன் இப்படிச் சிரிக்கறீங்க?” என்று ஒற்றை விரலால் அவன் மார்பில் குத்திக் கேட்டாள் வேதா.

“எஜுகேஷன் லோன்? ம்ம். படிக்கணும்தான் வேதா. கண்டிப்பா படிக்கணும். ஆனா, இப்போ வேணாம்” என்றவனின் பூடகப் பேச்சில் அவளுக்குப் புன்னகையும், வெட்கமும் சேர்ந்தே வர, தலையைத் திருப்பி மறைத்தாள் அதை.

அவளை மேலும் சீண்டாமல், வெற்றி தன் இரு சக்கர வாகனத்தை ஆக்கிரமித்தான். அவனோடு பயணித்த வேதாவின் மனதை வெற்றியே ஆக்கிரமித்து இருந்தான்.

அவள் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களைப் போல இப்போதும் ஒரு முடிவை தன்னிச்சையாக, அவளின் விருப்பம் போல எடுத்து விட்டிருந்தாள்.

அதை எப்படி நடத்தி முடிக்கப் போகிறாள் என்பதை நினைக்கையில் அவளுக்கு மலைப்பாக இருந்தது. காதலும், கல்யாணமும் மற்றவை போல் அல்லவே. இவை அவளின் வாழ்க்கை முடிவு. வாழ்க்கைக்குமான முடிவு.

இந்த முறை அவளின் அழுகையும், உண்ணா விரதமும் கூட வானமாமலையிடம் வேலை செய்வது கடினமே என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், காதலில் விழுந்திருக்கிறாள். ஹம்ம், யாரை விட்டது இந்தக் காதல்?

ஏதேதோ எண்ணங்கள் அவளைக் குழப்ப, மழை அவர்களை நனைத்தது.

அதுவரை ஒரு சிறிய இடைவெளி விட்டு அமர்ந்திருந்த வேதா, “அச்சோ மழை தூறுது” என்று அவன் புறம் சரிந்து, மழையை மீறி குரல் உயர்த்திக் கத்த, அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. இயல்பான வேகத்தில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

வேதா சில நொடிகளில் சிந்தனைகள் தொலைத்து, மழையை அனுபவிக்கத் தொடங்கினாள். மெலிதான தூறலை முகம் உயர்த்தி ஸ்பரிசித்தாள். மென்மையாய் முத்தமிட்ட மழைத் துளிகளை அவள் ரசித்துச் சிரிக்க, “இங்க பாருங்க. மழை, மழையை ரசிக்குது.” என்றான் வெற்றி.

“வர்ஷினி” என்று அவன் அழைக்க, “நீங்க கூப்பிடுற மாதிரியே இல்ல” என்றாள் வேதா. சிரித்தான் வெற்றி.

“தேவதர்ஷினி” என்றான். இப்போது அவள் சிரித்தாள்.

இருபது நிமிடங்களில் அவளின் வீட்டை அடைந்திருந்தனர்.

அவன் வண்டியில் இருந்து வேக வேகமாக இறங்கி உள்ளே ஓடிய வேதா, “உள்ள வாங்க” என்று வெற்றியை அழைத்தாள்.

சிறிய தயக்கம் அவனிடம். மழை இப்போது வலுக்கத் தொடங்க, “பிளீஸ், உள்ள வாங்க” என்று அவனை வற்புறுத்தினாள். அங்கே கௌசல்யாவின் இரு சக்கர வாகனம் நிற்பதை பார்த்து விட்டு உள்ளே வந்தான் வெற்றி.

அவர்கள் வேதாவின் வீடிருந்த தளம் சென்று, அவள் வீட்டின் முன்பிருந்த வராண்டா பகுதியில் நின்றார்கள்.

“வீட்டுக்குள்ள வாங்க”

வராண்டா சுவர் கம்பியில் சாய்ந்து நின்றிருந்த வெற்றி, “இன்னொரு நாள் வர்றேன் வேதா. நாட் டுடே” என்று அழுத்தமாய் மறுத்தான்.

“உங்க மேல மழைச் சாரல் படுது. நனையறீங்களே” தன் முகத்தில் தெறித்த சாரல் துளிகளைத் துடைத்தபடி அவள் சொல்ல, புன்னகைத்தான் வெற்றி.

“குடையாவது கொண்டு வரவா?” அவள் கேட்க, “பாரேன். மழையே மழைக்குக் குடை பிடிக்கச் சொல்லுது” மீண்டும் அவளின் பேரை வைத்துச் செல்லமாய்ச் சீண்டினான்.

“அச்சோ..” என்று அவள் வெட்கப்பட, கவிதை பேசினான்.

“யார் குடை பிடிப்பது.. மழைக்கும்.. காதலுக்கும்.. நனை” என்று அவன் குமரகுருபரனின் கவிதையைச் சொல்ல, மழையை மீறி அவளை நனைத்தது அவன் காதல்.

“வெற்றி..” என்ற அவளின் அழைப்பில் குளிர்ந்து முழுவதுமாக நனைந்தான் கவிதைக்காரன்.

“எம்மாடி, இப்பதான் பேரையே சொல்லி இருக்க. இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு” என்று அவன் அங்கலாய்க்க, கண்களை உருட்டி முறைத்தாள் வேதா.

அவளைத் தனக்குப் பக்கத்தில் இழுத்து நிறுத்தினான் வெற்றி. அவள் கண்களை நேருக்கு நேராக ஊடுருவி அவன் பார்க்க, “இதெல்லாம் தப்பு…” என்று தடுமாறினாள் வேதா.

அவளைப் போலவே ரகசிய குரலில், “எதெல்லாம் தப்பு?” என்று கள்ளச் சிரிப்புடன் கேள்விக் கேட்டான்.

“உங்க இந்தக் காதல் பார்வை, பேச்சு, இந்த… இந்த நெருக்கம்… பிளீஸ், கீப் டிஸ்டன்ஸ்” அவன் மார்பில் ஒற்றை விரல் வைத்து தள்ளி அவள் சொல்ல, அந்த ஒற்றை விரலை மடக்கி மொத்தமாக அவள் கைப் பற்றினான் வெற்றி.

“நமக்கு நடுவுல ஒரு பாலம் போடுற அளவுக்கு இடம் இருக்கு. பதறாத” நமுட்டு சிரிப்புடன் சொன்னான்.

உதடு கடித்து அவனை முறைக்க முயன்றாள்.

“காதலில் என்ன தப்பு, சரி எல்லாம்? காதலே சரிதான்.” கேள்வியும் பதிலுமாக அவன் சொல்ல, “அப்போ கள்ளக் காதல்?” என்று சிரியாமல் சந்தேகம் கேட்டாள் வேதா.

“ச்சீ.. என்ன சொன்ன நீ?” சத்தமாகச் சிரித்து அவளின் கன்னம் பிடிக்கப் போனான் வெற்றி. அவனிடம் இருந்து தன் கையை உதறி, தப்பித்து வீட்டுக்குள் ஓடினாள் வேதா.

“வெயிட் பண்ணுங்க. காஃபி கொண்டு வர்றேன்” என்று அவள் சொல்ல, தலையசைத்தான்.

அவர்களின் வருகையை அறிந்து கௌசல்யா, காந்திமதி இருவரும் வெளியில் வந்து வெற்றியிடம் பேசி விட்டுச் சென்றார்கள்.

error: Content is protected !!
Scroll to Top