மலர் பாதம் பணிந்து.. எபிலாக்

மலர் பாதம் பணிந்து – எபிலாக் 

குழந்தைகள் பிறந்து ஆறு மாத காலம் முடிவடைந்திருக்க, அன்று தான் தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு வந்திருந்தாள் தேன்மலர். 

“ஒரே ஊர் தான அத்த. மலர் இங்கேயே இருக்கட்டும். நீங்க வந்து பார்த்துட்டு போங்க” என்று அமுதன் கூறியதற்கு மங்கை ஒப்புக் கொள்ளவே இல்லை. 

“ரெட்டப் பிள்ள மாப்பிள்ளை. நான் என் மகளையும்,

பேரனுங்களையும் பக்கத்துல வச்சு கவனமா பாத்துப்பேன்” என்று பிடிவாதமாகக் கூறி இருந்தார். 

இரண்டரை ஆண்டு காலமாக மகள் கருவுற வேண்டும் என்று அவர் வைத்த வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் எல்லோருக்கும் தெரியும் என்பதால், அவரது விருப்பத்திற்கு யாரும் தடை விதிக்கவில்லை.  

அமுதனின் மூத்த சகோதரிகளும் அத்தையின் வீட்டிற்கே சென்று தம்பி மகன்களை பார்த்து விட்டு சென்றிருந்தனர். யோகவள்ளியும் வந்திருந்தார். தேவை இல்லாமல் ஒரு வார்த்தை பேசவில்லை. தாய் வீட்டாரின் ஒதுக்கம் தற்காலிகமாக அவரை மௌனியாக்கி இருந்தது. மௌனமாக வந்தவர் குழந்தைகளை பார்த்ததும் மௌனமாகவே கிளம்பி இருந்தார்.

தாயின் சீராட்டலிலும், அண்ணன் அண்ணியின் அன்பான கவனிப்பிலும், குழந்தைகளுடன் ஆறு மாத காலம் மலருக்கு இனிமையாகவே சென்றது. 

இன்று தான் எல்லோரும் அவர்களது குல தெய்வக் கோவில் சென்று வந்திருந்தனர். 

குழந்தைகள் இருவரும் தாய் மாமன் திவாகரனின் மடியில் அமர வைக்கப் பட்டு மொட்டை அடித்து, காது குத்தி இருந்தனர். 

அதனுடன் அவர்களுக்கு பெயர் சூட்டும் வைபவம் இனிதே நடைபெற்றிருந்தது. 

மகன்களுக்கு தேனமுதன், உதயகீதன் என்று பெயர் சூட்டி இருந்தனர் மலரும் அவளது மலர்தாசனும்! 

இரவு உணவிற்கு பின்னர் பேரன்களை பிரிய முடியாமல் கண்ணீருடன் மங்கை அமர்ந்திருக்க, “இங்கேயே கூட இரேன் மங்க” என்றார் இன்பசேகரன் தங்கையிடம். 

“இல்லண்ணே. நான் நாளைக்கு திருச்செந்தூர் போகலாம்னு இருக்கேன். தேனுக்கு குழந்தை நல்லபடியா பிறந்துட்டா திருச்செந்தூர் முருகனுக்கு மொட்டை அடிக்கிறதா வேண்டி இருந்தேன். அதனால நாளைக்கு போய் தான் ஆகணும்” என்று கூற, 

“திரும்பவும் ஆரம்பிச்சிட்டியாமா” என்று அன்னையை முறைத்தாள் மலர். 

“வேண்டிகிட்டா அதை நிறைவேத்திடனும் தேனு. முறைக்காதடி. நான் மட்டும் என்ன தனியாவா போறேன்? திவா தான காரோட்ட போறான். கவியும், கோகுலும் கூட தான் வர்றாங்க” என்று மகளை சமாதானம் செய்தார் மங்கை. 

“நீ பிள்ளைகளை நல்லா பாத்துக்க. நான் திருச்செந்தூர் போயிட்டு ரெண்டு நாள்ல திரும்பி வந்துடுவேன். வந்ததும் எங்கண்ணன் சொன்ன மாதிரி இங்கேயே இருந்திடுவேன்” என்றதும் எல்லோரும் புன்னகைத்தனர். 

ஒரு வழியாக திவாகரன் குடும்பம் விடை பெற, 

ஹாலில் குழந்தைகளுடன் இருந்தனர் பெண்கள் மூவரும். 

வெளித் தோட்டத்தில் அமர்ந்து இன்பசேகரனும் அமுதனும் தொழில் ரீதியான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். 

தேனமுதன் தாயிடம் பசியாறி விட்டு உறங்காமல், அத்தை மடியில் கொட்ட கொட்ட விழித்தபடி படுத்திருந்தான்.  

உதயகீதன் பசியில் சிணுங்க, “நீங்க போய் உதய்க்கு ஃபீட் பண்ணுங்க அண்ணி. அமுதனை நான் பாத்துக்கிறேன்” அமுதனின் கன்னத்தை வருடி கொஞ்சியவாறே கூறினாள் கிருஷ்ணரூபி. 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ரூபி. நாளைக்கு உனக்கு எக்ஸாம் இருக்குல்ல. போய் படி. நான் குழந்தையை பாத்துக்கிறேன்” என்றார் வசுந்தலா. 

அன்னையின் பேச்சிறகு கிருஷ்ணா பதிலேதும் சொல்லவில்லை. 

மௌனமாக அவரை ஒரு பார்வை பார்த்தவள், குழந்தை ஈரம் செய்திருந்த துணியை கழற்றி அவனை சுத்தம் செய்து வேறு ஒரு துணியை மாற்றினாள். 

தன்னை புறக்கணிக்கும் மகளின் செயல் வசுந்தலாவை காயம் செய்தாலும், நாளை தேர்வினை வைத்துக் கொண்டு இப்போது குழந்தையை கவனிப்பவளை அதட்டாமல் இருக்க முடியவில்லை. 

மருத்துவம் படிக்கிறாளே! படிப்பில் கவனம் அவசியம் என்பதால் “போ ரூபி. போய் படி” என்று அழுத்திச் சொன்னார் வசுந்தலா. 

“என் எக்ஸாம்க்கு எப்பப் படிக்கணும்னு எனக்குத் தெரியும்” அவரை விட அழுத்தமாக பதில் கூறினாள் கிருஷ்ணா! 

அவரிடம் மட்டும் இப்போதெல்லாம் கிருஷ்ணாவின் பேச்சு அழுத்தமாக வெளிவருகிறது! அவள் அதை தடுக்க முயன்றாலும் முடியவில்லை. 

வசுந்தலா முகம் அமைதியடைந்து விட, தேன்மலர் அதிருப்தியுடன் கிருஷ்ணாவை பார்த்தாள். 

அப்பார்வையில் ‘என்ன விதமான மனக்கசப்பு இருந்தாலும், தவறுணர்ந்து மனம் மாறி இருக்கும் உன் அன்னையிடம் இப்படி பேசக்கூடாது’ எனும் கண்டிப்பு தெரிய, “சாரி அண்ணி..” என்றவள், 

“கொஞ்ச நேரம். அண்ணி உதயனுக்கு பீட் பண்ணிட்டு வந்ததும் நான் போய் படிக்கிறேன்” என்றாள் வசுந்தலாவிடம். 

அவரும் மௌனமாக தலை அசைத்தார். இருவருக்குள்ளும் ஒரு சமூகமான நிலை இன்றளவும் வரவில்லை. வருத்தமாக இருந்தாலும் எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருந்தது! 

************************ 

இரவு உறங்கும் நேரம் ஆளுக்கொரு மகன்களை தூக்கிக் கொண்டு அறைக்கு வந்தனர் அமுதனும் மலரும். 

நேரம் பதினொன்றை எட்டியிருக்க, இரு பிள்ளைச் செல்வங்களும் உறங்காமல் உடலைப் புரட்டி, தவழ முயற்சி செய்து கொண்டிருந்தனர். 

“தூங்குங்களேன்டா.. தினமும் ஒரு மணிக்கு தான் தூங்குறானுங்க..” என்றான் அமுதன் அயர்வுடன். 

“நீங்க தூங்குங்க கீதன். நான் பாத்துக்கிறேன்” என்று மலர் கூற, மனைவியை மட்டும் விழிக்க வைத்து விட்டு அவனெங்கே உறங்குவான்? 

ஒரு மணி வரையிலும் மகன்களுடன் விளையாடிக் கொண்டு விழித்திருந்தனர். 

நேரம் இரண்டைத் தொட்டதும் தான் இரட்டையர்கள் கண்ணசந்தனர். 

அதுவும் மீண்டும் அன்னையிடம் பசியாறிய பின்பே உறங்கினர். 

“என் மலரைப் போட்டு படுத்துறானுங்க ரெண்டு பேரும்..” என்ற அமுதன் உறங்கும் மகன்களைக் கண்டு முறைப்புடன் சொல்ல, மகன்களை முறைத்த கணவனை முறைத்தாள் மலர்! 

“முறைக்காத மலர். அவனுங்களும் தூங்குறதில்ல. உன்னையும் தூங்க விடுறதில்ல” என்றவன், அவளின் பசி உணர்ந்து கீழே சென்று பாலினை சூடாக்கி எடுத்து வந்தான்.

மீண்டும் இரவில் பசியில் விழிக்கும் குழந்தைகளுக்கு பசியாற்றுவாள் தேன்மலர். எனவே, இரண்டு மணி ஆனாலும் பாலினை குடித்து விட்டு உறங்குவதை வழமையாக்கி இருந்தாள். 

பாலினை குடித்ததும் உறங்க ஆயத்தமாகிய மனைவியை உறங்க விடாமல் எழுந்து அமர வைத்தான் அமுதன். 

“தூக்கம் வருது கீதன்..” என்றவளிடம், ““ஒரு அஞ்சு நிமிஷம் மலர். அப்புறம் தூங்குவியாம்” என்ற கணவனை முறைத்தாள் தேன்மலர். 

மனைவியின் முறைப்பை கண்டு கொள்ளாமல் அவளை சோஃபாவில் அமர வைத்தவன், கீழே அமர்ந்து அவள் பாதங்களை தன் மடியில் ஏந்தினான். 

“என்ன பண்றீங்க நீங்க..? முதல்ல காலை விடுங்க கீதன்?” என்றவளை, புன்னகையோடு நிமிர்ந்து பார்த்தவன், “ஷ்ஷ்.. ரெண்டு நிமிஷம் சும்மா இரு மலர்..” என்றவன், அவள் பாதங்களுக்கு மென் அச்சாரங்களிட்டு,

அச்சாரமிட்ட கையோடு டீப்பா மீது சிறிய நீள அளவில் இருந்த பெட்டியை எடுத்து அதிலிருந்த தங்கக் கொலுசினை அவள் பாதங்களுக்கு அணிவித்து விட்டான். 

அவன் அச்சாரமிட்டதும் “கீதன் என்ன பண்றீங்க?” என்று பொறுமையில்லாத கோபத்தில் சிணுங்கியவள், அவன் தங்க கொலுசுகளை அணிவித்ததும் வாயடைத்துப் போனாள்! 

“பிடிச்சிருக்கா மலர்?” என்றவனின் கேள்வியில் தன்னிலை அடைந்தவள், கணவன் அணிவித்த கொலுசினை பார்வையிட்டாள். 

தங்க முத்துக்கள் நிறைந்த தங்கக் கொலுசு! அவன் அணிவித்து விட்டான் என்பதற்காகவே அதனை நிரம்பப் பிடித்திருந்தது! 

“எதுக்கு கொலுசு?” என்றவளின் கேள்வியில் சிரித்தவன், மீண்டும் முத்தங்களால் மலரின் பாதங்களைப் பணிந்து விட்டு, இன்னொரு சிறு பெட்டியினை எடுத்து அதிலிருந்து செயினை அவரின் கழுத்திற்கு அணிவித்து விட்டு, மறக்காமல் அங்கும் முத்தமொன்றை வைத்தான். 

அமுதன் முத்தத்தில் சிலிர்த்தவள் மீண்டும் கேள்வியாக அவனைப் பார்க்க, “என் மலருக்கு வாங்கிக் கொடுக்கணும்னு தோணுச்சு. ஏன் எதுக்குன்ற கேள்விக்கு எல்லாம் என் கிட்ட பதில் இல்ல மலர்” என்றவனை நேசம் பெருகும் விழிகளோடு ஏறிட்டவள், கழுத்தில் கிடந்த செயினையும் அதிலிருந்த மலர் வடிவ டாலரையும் பார்த்தாள். 

“அழகா இருக்கு. நீங்க கொடுத்ததுனால இன்னும் பிடிச்சிருக்கு” என்றவள், பாதங்களை அசைத்து தங்க முத்துக்கள் எழுப்பிய ஒலியில் அழகாய் புன்னகைத்து “இந்தக் கொலுசு அதை விட பிடிச்சிருக்கு” என்றாள் அழகான புன்னகையுடன். 

மலரின் புன்னகை மலர்தாசனின் மனதை நிறைக்க, “சரி வா தூங்கலாம்..” என்று எழுந்து கொண்டவனை, இப்போது இவள் சோஃபாவில் அமர வைக்க, “என்ன மலர்?” என்றான் அமுதன். 

“ஒரு நிமிஷம் இருங்க வரேன்” என்றவள், தன் கபோர்டினைத் திறந்து சுடிதார்களுக்கு இடையே மறைத்து வைத்திருந்த ஒரு சின்ன பெட்டியை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். 

“என்னதிது மலர்?” என்று கேட்டவன், அவள் கண் அசைவில் அதனை வாங்கி திறக்க யத்தனிக்க, அவன் கையை பற்றி தடுத்தவள், அவனையே ஒரு நொடி விடாமல் பார்த்தாள். 

“ஹே மலர்.. பாக்ஸை கைல குடுத்துட்டு திறக்க விடாம கையப் பிடிச்சா எப்படி?” என்று கேட்ட கணவனின் கண்களை ஆழ்ந்து நோக்கி, 

“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் கீதன்!” என்றாள் தேன்மலர் உள்ளார்ந்த குரலில். 

தங்களுக்குத் திருமணமான நாளில் இருந்தே இதை அவள் அடிக்கடி கூறுகிறாள் என்றாலும் இன்றதை சொல்லிய போது அவள் கண்களை எட்டிய புன்னகையும் முகத்தில் இருந்த நிறைவும் அவனை பிரமித்து சிந்திக்க வைத்தது. 

மலரின் வார்த்தைகளில் பொதிந்திருந்த நேசம், அமுதனை கட்டிப்போட்டாலும், அவள் சொன்னதற்கு வழக்கம் போல் “அதான் எனக்கு தெரியுமே மலர்..” என்றவனின் பதிலை ஏற்க முடியாது எனும் வகையில் தேன்மலர் இல்லை எனும் விதமாக தலையசைக்க, மனைவி குழப்பத்தோடு ஏறிட்டான் அமுதகீதன். 

“உங்களுக்கு தெரியாது கீதன்..” என்றவளின் வார்த்தைகளில் மேலும் குழம்பியவனை 

பெட்டியை திறந்து பார்க்கச் சொல்லி கண்ணசைத்தாள் தேன்மலர். 

“என்ன நீ? தெரியாதுன்னு சொல்…” என்றவனின் வார்த்தைகள் அந்தப் பெட்டிக்குள் இருந்த தங்கச் சங்கிலியை கண்டு அப்படியே நின்றுவிட்டது. 

‘அ’ எனும் ஆதி தமிழ் எழுத்தை டாலராகக் கொண்ட அச்செயின் சிறு வயதில் அமுதன் கழுத்தில் அணிந்திருந்தது! 

அவனுக்காக அவர்களின் தாத்தா கைலாசநாதர் வாங்கித் தந்திருந்தது. சிறு வயதில் எங்கோ அதனைத் தொலைத்திருந்தான். 

அதற்காக அன்னையிடம் அடி வாங்கியதும், ப்ரியத்துடன் தாத்தா கொடுத்ததை தொலைத்து விட்டோமே என்றவன் வருந்தியதும் இப்போதும் மாறாத பசுமையாக நினைவிலாடியது! 

ஆனால், இதெப்படி மலரிடம்? 

நம்ப முடியாத திகைப்பும் கேள்வியுமாக மனைவியைப் பார்த்தவன், “இது.. என்னோடது தான். உன் கிட்ட எப்படி மலர் வந்தது? தாத்தா எனக்காக கொடுத்தது இது!” என்றான் படபடப்புடன் வரிசையாக.

“ஹ்ம்ம்.. தாத்தா உங்களுக்கு கொடுத்தது தான். தெரியும்” என்றவள் அவன் கேள்விகளுக்கு பதில் கூறத் துவங்கினாள். 

“தாத்தா இருக்கும் போது அவரோட நம்ம எல்லாரும் ஒரு நாள் குல தெய்வ கோவில் போயிருக்கப்ப அங்க இருக்க குளத்துல நீங்க, ரஞ்சி எல்லாம் குளிச்சிட்டு வந்தீங்க. அப்போ கோவில் பக்கத்துல இருக்க மண்டபத்துல ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு நீங்க போனதும் நாங்க எல்லாம் குளிச்சிட்டு அந்த மண்டபத்துக்கு தான் போனோம். அப்ப தான் இது என் கைக்கு கிடைச்சது. எடுத்ததும் உங்க கிட்ட கொடுக்கணும்னு நினைச்சேன். கொடுக்க முயற்சி பண்ணேன் கூட. ஆனா நான் உங்க கிட்ட வரும் போதெல்லாம் ஐயா திரும்பி அழுத்தமா பார்த்து ஒரு முறை முறைப்பீங்க. அன்னைக்கு இருந்த மலருக்கு இப்ப இருக்கிற மாதிரி தைரியம் இல்ல. அதனால, உங்க பார்வைக்கு பயந்து ஓடி அம்மா கிட்ட போய்ட்டேன். இல்லேன்னா அன்னைக்கே உங்க சட்டையை பிடிச்சு ‘என்னடா முறைப்புன்னு..!’ கேட்டிருப்பேன்” என்றாள் இப்போதும் முறைப்புடன். 

அவள் சொல்பவையை எல்லாம் நியாபக அடுக்கின் ஏதோ ஒரு படியில் நினைவிற்கு வர, கண்கள் விரிய மலரையே பார்த்திருந்தான் அமுதகீதன்.

“அப்புறம் ஊருக்கு வந்ததும் கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா, கொடுக்க மனசே இல்ல. என்னமோ இந்தச் செயின் என் கூடவே இருக்கட்டும்னு தோணுச்சு. இந்தச் செயின கொடுத்துட்டா நீங்க என் கூட இல்லாத மாதிரி ஆகிடுமோன்னு தோணுச்சு” என்றவள், “ஏன்னா.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் கீதன்!!!” என்றாள் அதிர்வில் விரிந்த கணவனின் விழிகளை பார்த்துக் கொண்டே!! 

“மலர்….” கரகரத்த குரலில் மனைவியை அழைத்தவனின் உடல் உணர்ச்சியில் உச்சத்தில் நடுங்கியது! 

உறங்கும் மகன்களை ஒரு பார்வை பார்த்த தேன்மலர் கணவனின் மடியில் அமர்ந்து அவனின் முகத்தை தன் கையில் ஏந்தி, அடர்ந்த மீசையில் முத்தம் வைத்து, உதடுகளிலும் ஆழமாக முத்தம் வைத்து மீண்டும் பேசத் தொடங்கினாள். 

“சின்ன வயசுலயே உங்க மேல அளவு கடந்த காதல் கீதல்னு எல்லாம் உளற மாட்டேன். அமுதன் அத்தான்னா பிடிக்கும்! அமைதியா, அழுத்தமா நீங்க இருக்கிற விதம், பொறுப்பா இருக்க குணம், பார்வைலயே விஷயத்தை புரிய வைக்கிற பாங்கு, எல்லாத்துக்கும் மேல கிருஷ்ணாவை தோள்ல தூக்கி வச்சிட்டு இருக்கும் போது அப்படி ஒரு சிரிப்போட மின்னுற உங்க மீசை முளைச்ச முகம் இதெல்லாம் எனக்குப் பிடிக்கும். ஆனா, வெளிய சொல்ல முடிஞ்சதில்லை. சொல்லி இருந்தா விளைவுகள் மோசமாகி இருக்கும்” என்றவளை அடுத்து ஒரு வார்த்தை பேச விடாமல் இழுத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் அமுதகீதன். 

‘நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு ஏதோ காரணம் இருக்குன்னு சொன்னியே.. என்ன காரணம் மலர்?’ என்று அடிக்கடி அவன் கேட்டதற்கு சிரிப்புடன் பதில் கூறாமல் கடந்து விடுபவளின் மௌனம் எதனால் என்று இன்று விளங்கியது! 

தேன்மலருக்கு அமுதனைப் பிடிக்கும்! திருமணமானதில் இருந்து அல்ல! திருமணமாவதற்கு முன்பே பிடிக்கும்! 

அவனுக்கு மீசை அரும்பிய நாட்களில் இருந்தே தேன்மலருக்கு அமுதனை பிடிக்கும்! 

பார்க்கும் விசேஷங்களில் எல்லாம் அவனுக்கடுத்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து பிறந்த கிருஷ்ணாவை தாயை விட அதிகமாக அரவணைத்து ஒரு நொடியும் கீழே விடாமல் கையில் தூக்கி வைத்து தாங்கிய அமுதனை தேன்மலருக்கு நிறையவே பிடிக்கும்! 

அமுதனை தேன்மலருக்கு பிடிக்கும்! 

“எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் கீதன்…..!!” 

இந்த வரிக்கான முழு அர்த்தம் விளங்கியதில் முழுமையடைந்தான் அமுதன்! 

கண்கள் கசிய மனைவியின் முகமெங்கும் முத்தமிட்டவன், “மலர்.. மலர்” என்று நம்ப முடியாத திகைப்புடன் மலர் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தான். 

“அப்புறம் ஏன் மலர் என் கிட்ட வந்து சொல்லவே இல்ல?” என்று கேட்க, முத்தமிட்டவனின் முகத்தை தன்னில் இருந்து தள்ளி வைத்து அவனை முறைத்தவள் “இவரு கண்ணாலேயே எங்களை தள்ளி வைப்பாராம். நாங்க பிடிச்சிருக்குன்னு வந்து சொல்லணுமாம்” என்றாள் கடுப்பாக. 

“அந்த கடலை மிட்டாய தட்டி விட்ட சம்பவத்துக்கு அப்புறமே எனக்கு அமுதன் அத்தானை பிடிக்காம போச்சு. அப்புறம் காலப் போக்கில நீங்க ஒதுங்கியே இருந்ததும் நானும் ஒதுங்கி இருந்து அப்படியே விட்டுட்டேன். ஆனா.. உங்களுக்கு என்னைப் பிடிக்கும்னு நான் எதிர் பார்க்கவே இல்ல. இளவழகன் மாமா வீடு பால் காய்ச்சுற விசேஷத்துக்கு அப்புறம் உங்க மாற்றம் எல்லாம் மறுபடியும் உங்களை பிடிக்க வச்சிடுமோன்னு பயந்தேன். அதனால தான் நீங்க நெருங்கி வராதீங்கன்னு முகத்தில அடிச்ச மாதிரி சொல்லிட்டேன். ஆனா, நீங்க உங்க மோரிஸ் கேரேஜ்ல என் மடியில மல்லிப்பூ வச்சு உங்க விருப்பத்தை சொன்ன நிமிஷம்..” என்றவள் இப்போது சிரிப்புடன் கணவனை இறுக்கமாய் கட்டிக்கொண்டாள். 

“அமுதன் கிட்ட அன்னைக்கு மொத்தமா விழுந்துட்டா மலர். உங்களை இப்படி கட்டிக்கணும்னு கூட தோணுச்சு. ரொம்ப அரும்பாடு பட்டு என் உணர்ச்சியை கட்டுப் படுத்திக்கிட்டேன்” என்றவளை தானும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டான் அமுதகீதன். 

“ஆனாலும், நமக்குள்ள சரியா வராதுன்னு ரொம்ப ஸ்ட்ராங்கா நம்பினேன் தெரியுமா. அதனால தான் பொண்ணு கேட்டு வந்தப்ப நமக்குள்ள ஒரு பந்தம் ஒத்து வராதுன்னு சொன்னேன். ஆனா, அன்னிக்கு நீங்க என் கண்ணைப் பாத்து ‘என் மூச்சு நிக்கிற வரைக்கும் என் மனசு இந்த மலருக்காக மட்டும் தான் துடிக்கும்’னு சொன்னதும் இன்னும் உங்களுக்காக விழுந்துட்டா இந்த மலர்” என்றதும் அமுதன் முகமெல்லாம் புன்னகை!! 

“நீங்க சொன்னதே மண்டைக்குள்ள ஓடிட்டு இருந்தது. அதைக் கடந்து வெளிய வர முடியும்னு தோணல. ஒரு காலத்துல நமக்குப் பிடிச்ச அமுதன் தானே. அவருக்கும் இப்ப நம்மள பிடிக்குது தானே.. எதுவும் தப்பா போகாதுன்னு மனசை சமாதானப் படுத்தி உங்க மேல இருக்க நம்பிக்கைலயும், மறுபடியும் உங்களை பிடிச்சதாலயும் தான் அன்னைக்கு ஓகே சொன்னேன்!!” என்றாள் நீண்ட விளக்கமாக! 

அமுதனைப் பிடித்த கதையை பற்றி மலர் சொல்லி முடிக்க, மலர்தாசன் மலர் மேல் பித்தாகிப் போனான். 

முன்பிருந்தே மலருக்கு தன்னைப் பிடிக்கும் எனும் விஷயம் பேருவகையைக் கொடுத்தது. 

தன் செயல்களால் இடைப்பட்ட சில வருடங்களாக அவள் மனதில் தன் மேல் உள்ள பிடித்தம் பின்னால் சென்றிருக்க, மீண்டும் தன்னை பிடித்துப் போய் தன் கை சேர்ந்தவளின் நேசத்தில் தள்ளாடாமல் நிறைந்தான் அமுதன். 

மீண்டும் அவனது உதடுகள் வேகத்துடன் மலர் முகமெங்கும் முத்த ஊர்வலம் போனது. அவனின் வேகம் மோகம் கூட்ட, மலரின் கைகள் கணவனின் மார்பு ரோமங்களை பிடித்து சுருட்டியது. 

அவள் எண்ணம் புரிந்து மலரை மஞ்சத்தில் கிடத்தினான் அமுதன். உதடுகள் மனைவியின் கழுத்தடியில் இளைப்பாற, மலரின் கரங்கள் அமுதனை நெருக்கத்தில் இழுத்தது. 

குழந்தைகள் அயர்ந்து உறங்குவதை உறுதி செய்து கொண்டு, புதிதாய் பிறந்த பிடித்தத்துடன் கலைந்து கூடினர்! கூடிக் களைத்தனர்! 

இருவர் உச்சரித்த மலர்கீத மந்திரம் இருவரையும் மயக்கியது. தங்கக் கொலுசின் சங்கீதமும் கூடலின் பின்னணி இசையாகியது! 

மலரை மார்பில் தாங்கி அமுதன் உறங்கி இருக்க, ஐந்தரை மணிக்கெல்லாம் மகன்களின் சிணுங்கல் அவர்களை விழிக்கச் செய்தது. 

பிரிய மறுத்த இமைகளை முயன்று பிரித்த அமுதன் பசியில் சிணுங்கும் குழந்தைகளை தொட்டிலில் இருந்து எடுத்து மனைவியிடம் கொடுத்தான். 

பிள்ளைகள் பசியாறியதும் மீண்டும் அமுதன் மார்பில் முகம் புதைத்து அவனை கட்டிக் கொண்டு உறங்கிப் போனாள் தேன்மலர். 

அமுதனுக்கு உறக்கம் வரவில்லை. உதட்டில் உறைந்த புன்னகையுடன்

உறங்கும் மலரின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். 

இரவு அவள் சொன்னவை அனைத்தும் இப்போதும் மெய் சிலிர்க்க வைக்க, அழுத்தமாக அவள் இதழில் முத்தம் வைத்தான். 

“தூங்கணும் கீதன்..” என்று உறக்கத்தில் மேலும் அவனோடு ஒன்றினாள் தேன்மலர்.

“தூங்கு மலர்” என்றவன் அவளின் தலை கோதிக் கொடுக்க, மீண்டும் ஆழ்ந்து உறங்கிப் போனாள் தேன்மலர். உறங்கும் அவளை பார்த்துக் கொண்டே தானும் கண்ணயர்ந்தான் அமுதகீதன்! 

என்றென்றும் தித்திக்கும் தேனமுதாக விளங்கும் அவர்களின் நேசப் பிடித்தம்! 

அமுதகீதனால் தேன்மலர் மலர்ந்து மணம் வீசியது! 

அமுதம் நிறைவுடன் மலர் பாதம் பணிந்து சரணடைந்திருந்தது! 

                *****சுபம்***** 

error: Content is protected !!
Scroll to Top