மலர் பாதம் பணிந்து..46

மலர் பாதம் பணிந்து – 46

(நிறைவுப் பகுதி) 

ஐந்து மாதங்கள் கடந்திருந்தன.

அன்றைய தினம் அமுதன் சேலத்தில் உள்ள தங்களின் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு வந்திருந்தான். 

இரண்டாவதாக தொடங்கிய ரிசார்ட் அமோகமான வரவேற்பை எட்டி இருந்தது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஏற்காடு சென்று வருபவன், மற்ற தினங்களில் கடலை மிட்டாய் தொழிற்சாலைக்கு வருவதை வழமையாக்கி இருந்தான். 

அவனது வருகையினால் இன்பசேகரன், இளவழகன் இருவரும் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ள முடிந்தது. 

ரஞ்சிதனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்க, இளவழகன் பேத்தியுடன் நேரத்தை செலவு செய்ய எண்ணி தொழிற்சாலைக்கு வருவதை குறைத்திருந்தார். 

அண்ணனிடமும் இது குறித்து பேசி இருந்தார். 

“நீ அப்பப்ப வந்தா போதும் இளவழகா. நானும் அமுதனும் பார்த்துக்கிறோம். அமுதனுக்கும் ரிசார்ட் வேலை எல்லாம் முடிஞ்சது. அதனால, அவனும் ஃப்ரீ தான்” என்றிருந்தார் இன்பசேகரன். 

தனது அலுவலக அறையில் இருந்தபடி அன்று வந்திருந்த வெளிநாட்டு ஆர்டர் லிஸ்ட்’களை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் அமுதன். 

அப்போது அவனது அறைக்கதவு தட்டப்பட, காகிதங்களில் இருந்து பார்வையை அகற்றாமல் “உள்ள வாங்க” என்று குரல் கொடுத்தான். 

உள்ளே நுழைந்த மேனேஜர் “சார்.. மேடம் வந்திருக்காங்க” என்றதும் புருவம் சுருங்க தலையை உயர்த்தி அவரைப் பார்த்த அமுதன், “எந்த மேடம்..?” என்றான் கேள்வியாக.

“சார்.. உங்க மிசஸ் தான்” என்று மேனேஜர் சொன்னதும் பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான் அமுதன். 

“மலரா? இங்கயா?” திகைப்புடன் வந்தது அவன் கேள்வி. 

“எஸ் சார்!!” என்று மேனேஜர் கூறியதும், ஆர்டர் லிஸ்ட்’டை அப்படியே வைத்து விட்டு, “எங்க?” என்றபடி அறையை விட்டு வெளியேறினான். 

“புரொடக்ஷன் ஏரியால தான் இருக்காங்க சார்” என்று மேனேஜர் பதில் கூறியதும், அமுதனின் பாதங்கள் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யும் இடத்திற்கு வேகமெடுத்தன. 

அவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைய போகிறது! இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனையோ முறை அழைத்தும் இங்கே மட்டும் வருவதற்கு அமுதனின் மலர் ஒப்புக் கொண்டதே இல்லை! 

இரண்டாவது ரிசார்ட் திறப்பு விழாவின் போது அவளது மனதில் உள்ள கடந்த கால குறைகள் எல்லாம் அமுதனால், அவன் காட்டிய காதலால் நிறைகளாக மாறி இருந்தாலும் இந்த கடலை மிட்டாய் விரதத்தை கை விடவில்லை தேன்மலர். 

“ஏதோ அறியாத வயசுல பேசிட்டேன்னு அதை மறக்க மாட்டியா மலர்? இன்னமும் ஒரு கடலை மிட்டாய் கூட சாப்பிட மாட்டேன்னு பிடிவாதம் பண்ணா என்ன அர்த்தம்?” எவ்வளவோ அமுதன் கெஞ்சியும் மலர் மனம் வீம்பினை விடவில்லை. 

“எதை வேணாலும் மறந்திடுவேன். ஆனா, இந்தக் கடலை மிட்டாய தட்டி விட்டதை மறக்க மாட்டேன் மிஸ்டர்.மலர்தாசன். போங்க போங்க. உங்க கடலை மிட்டாய நீங்களே வச்சுக்கங்க. எனக்கது வேண்டவே வேண்டாம்” என்றிருந்தாள் மிடுக்காக! 

அவள் மறுத்த போதிலும் தினமும் ஒரு பெட்டி கடலை மிட்டாயை வீட்டிற்கு எடுத்து வருவான் அமுதகீதன். 

“நான் தான் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டேன்ல. அப்புறம் எதுக்கு தினம் ஒரு பாக்ஸ் எடுத்துட்டு வர்றீங்க?” மலர் முறைப்புடன் கேட்டதற்கு, “நீ சாப்பிடலென்னாலும் உனக்கது பிடிக்கும் தான. நான் தினம் எடுத்துட்டு வரேன். உனக்கு என்னைக்கு தோணுதோ அன்னைக்கு சாப்பிடு” என்றான் அமுதனும் முறைப்புடன். 

அவனுக்கு இந்த விஷயத்தில் மனைவி மலை இறங்காதது பெரிய மனக்குறையாகவே இருந்தது. 

“மீச முளைச்ச காலத்துல தெரியாம நான் பேசின பேச்சு என் மலருக்குள்ள ரோஷத்தை முளைக்க வைக்கும்னு கனவா கண்டேன்? தெரியாம பேசினேன்னு விடாம இப்ப நம்மள வச்சு செய்றா!!” அவ்வப்போது அவனது புலம்பல்கள் மெய்யான வருத்தத்துடன் வெளிவரும். 

ஆனாலும், மலர் மனம் இறங்கவில்லை. 

அப்படிப்பட்ட தன் மனைவி இன்று அவளாகவே தொழிற்சாலைக்கு வந்திருப்பது அவனுக்கு திகைப்பை கொடுக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம். 

வேக வேகமாக புரொடக்ஷன் ஏரியாவிற்கு வந்தவன் கண்டது மனைவி அந்த சூடான கடலை மிட்டாய் உற்பத்தி செய்யும் இடத்தில் நின்றிருந்ததை! 

கண்கள் விரிய “மலர்..” என்றபடி மனைவியை நெருங்க, மலரோ “சீக்கிரம் கட் பண்ணி கொடுங்கண்ணா” என்றாள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தவரிடம்.

முதலாளியின் மனைவி என்றதும் பணிவாக “இதோ மேடம். ரெண்டு நிமிஷம்..” என்று கூறிய பணியாள், சரியான பதத்தில் சூடாகக் காய்ச்சிய வெல்லப் பாகில், தோல் நீக்கிய வருத்த கடலை பருப்பினை சேர்த்து அதனை நன்றாக கிளறி, பாகுடன் பருப்பு சேர்ந்து கலந்ததும், அதனை பெரிய உருண்டையாக திரட்டி, அரிசி மாவு தூவி வைக்கப் பட்டிருந்த பெரிய ‘சில்வர் ட்ரே’யினில் மாற்றி, உருளையை வைத்து சரி சமமாக அதனை பரப்பிக் கொண்டிருந்தார். 

நாவில் எச்சில் ஊற, தேன்மலர் ஆவலும் ஆசையுமாக அதனைப் பார்த்திருந்தாள். 

கணவன் வந்தது உணர்ந்தாலும் அவன் புறம் பார்வையை திருப்பாமல், கடலை மிட்டாய் மீதே பதிந்திருந்தது அவள் பார்வைக் குவியம்! 

“மலர்..” என்று மேலும் மனைவியை நெருங்கி நின்றவன், “நீ சாப்பிடுவேன்னு சொல்லி இருந்தா நானே வீட்டுக்கு கொண்டு வந்து இருப்பேன் தான..” என்றான் குறையாக. 

அவனை ஒரு பார்வை பார்த்தவள் மீண்டும் கடலை மிட்டாயிடம் பார்வையை பதித்தாள்.

பெரிய கட்டர்’ வைத்து ட்ரேயினில் பரப்பிய கடலை மிட்டாயை சதுர வடிவில் கட்டம் கட்டமாக வெட்டிய பணியாள் “ரெடி மேடம்..” என்றதும், “சீக்கிரம் கொடுங்க கொடுங்க..” என்று இரண்டு துண்டுகளை வாங்கிய வேகத்தில் வாயில் போட்டாள் தேன்மலர். 

நீண்ட நெடிய ஆண்டுகள் கழித்து சாப்பிட்டாலும் கடலை மிட்டாயின் தித்திப்பு குறையவே இல்லை! 

கண்கள் மூடி அதன் சுவையை உள்வாங்கியவள், “சூப்பரா இருக்கு” என்றாள் அந்தப் பணியாளிடம். 

தாத்தா காலத்தில் இருந்து இங்கே தயாரிக்கப் படும் கடலை மிட்டாயின் சுவை மாறவே இல்லை என்று நெகிழ்வாக எண்ணிக் கொண்டவள், இன்னும் நான்கைந்து துண்டுகளை ஒரு சிறு பாக்ஸில் வாங்கிக் கொண்டு திரும்பினாள். 

இமையாடாமல் அமுதனின் பார்வை மலரின் மீதே படிந்திருந்தது. 

“உங்க ரூம் எங்க?” என்று சிறு முறைப்புடன் கணவனிடம் கேட்டாள் தேன்மலர். 

“வா மலர்..” என்றபடி அவளின் கைப் பற்றிக் கொண்டு தனது அறைக்கு அழைத்து வந்தான் அமுதகீதன். 

அவனது இருக்கையிலேயே அமர வைக்க, மறுக்காமல் அமர்ந்தவள், அடுத்த கடலை மிட்டாயை வாய்க்குக் கொடுத்தாள். 

மனைவி சாப்பிடும் அழகையே ரசித்தவன் கண்கள் சொல்லொண்ணா உணர்ச்சியை பொழிந்தது! 

“இன்னைக்கு ஆபீஸ் போகலையா நீ? இந்த நேரம் இங்க வந்திருக்க” என்றான் உண்ணும் அவளின் உதட்டில் பார்வையை பதித்தபடி. 

“போகல” என்றவளிடம், “காலைலயும் நான் கிளம்பும் போது நீ நல்லா தூங்கிட்டு இருந்த. என்னாச்சு மலர். எதுவும் உடம்பு சரியில்லையா” என்றான் அமுதன். 

மலர் பதில் கூறாமல் அடுத்த கடலை மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டாள். அவள் உண்ணும் வேகமே அவளுக்கு கடலை மிட்டாய் எந்த அளவிற்கு பிடிக்கும் என்பதை பறைசாற்ற உள்ளம் கனிய அவளையே பார்த்தான். 

“இவ்வளவு நாள் நான் கெஞ்சியும் ஒரு பீஸ் கூட சாப்பிடாத என்னோட மலருக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? தானா வந்து சாப்பிட்டு இருக்கா? இந்த விஷயத்துல என் மேல இருக்க கடுப்பு போயிடுச்சா?” உணர்ச்சிகரமான குரலில் கேட்டான் அமுதன். 

கணவன் கேட்டதும் முறைப்புடன் அவனை ஏறிட்டவள், இன்னொரு கடலை மிட்டாயை வாயில் போட்டு மென்று கொண்டே “நான் ஒன்னும் உங்க மேல இருக்க கோபம் போனதால இங்க வரல. தப்புக் கணக்கு போடாதீங்க மிஸ்டர்.மலர்தாசன்!!” என்றாள் மலர் பொய் கோபத்துடன். 

“ஓகே. ஓகே. அப்புறம் வேற என்ன காரணம் மலர்?” 

கடலை மிட்டாயை மென்றபடி கண்ணில் சிரிப்புடன் கணவனைப் பார்த்தாள் தேன்மலர்.

“என்ன மலர்?” என்றவனின் வாயிலும் ஒரு கடலை மிட்டாயை திணித்தவள், “எனக்கு இன்னும் இந்த விஷயத்துல உங்க மேல கடுப்பு குறையல தான். சாப்பிடவே கூடாதுனு வீம்போட தான் இருக்கணும்னு நினைச்சேன். ஆனா, பாருங்க.. என் வீம்புனால எனக்குள்ள இருக்க நம்ம குழந்தைக்கு ஏன் கடலை மிட்டாய கொடுக்காம இருக்கணும். அதான் விஷயம் தெரிஞ்சதும் முதல் ஸ்வீட் கடலை மிட்டாய் தான் சாப்பிடனும்னு நம்ம ஃபேக்டரிக்கே கிளம்பி வந்துட்டேன்” என்றாள் புன்னகைக் குரலில்! 

விசேஷமான விஷயத்தை, விசேஷ முறையில் மனைவி சொல்லியிருக்க, அமுதனின் கண்கள் ஆனந்த அதிர்வில் விரிந்தன. 

“மலர்…” என்றான் திகைத்து மகிழ்வாய். 

மனைவி சொல்லிய சந்தோஷ செய்தியில் மென்று கொண்டிருந்த மிட்டாயின் தித்திப்பு அகமெங்கும் பரவியது. 

“அப்பா ஆகப் போறீங்க கீதன் அத்தான்..!” மலர் தன் வயிற்றில் உள்ளங்கை வைத்து உள்ளார்ந்த நேசத்துடன் கூறிய விஷயமும் விதமும் அமுதனை நிறைத்தது. 

மௌனமாக அவளை அணைத்துக் கொண்டவன் “அம்மா ஆகப் போறா என்னோட மலர்” என்றான் உவகையுடன்! 

கிருஷ்ணாவிடம் அன்று பேசிய பிறகு இருவருமே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு குழந்தை வேண்டாம் எனும் முடிவை கை விட்டிருந்தனர். 

அதன் பின் வந்த ஒவ்வொரு மாதத்திலும் குழந்தைக்காக தேன்மலரின் எதிர்பார்ப்பு கூடிப் போனது. 

அவளோடு சேர்த்து கிருஷ்ணாவிற்கும்! 

ஆனால், அன்று அண்ணா அண்ணியிடம் மனம் விட்டு பேசிய பிறகு குழந்தை விஷயம் குறித்து கிருஷ்ணா எதையும் அவர்களிடம் கேட்கவில்லை. 

அவர்கள் முடிவு மாறியதே போதும்! அந்த முடிவில் மாற்றம் இருக்காது எனும் நம்பிக்கை அவளுள். 

முதல் மூன்று மாதங்கள் மலருக்கு மாதவிடாய் வந்திருக்க, சோர்ந்து போனாள். அமுதன் தான் அவளைத் தேற்றி இருந்தான். 

அடுத்த வந்த மாதம் நாள் தள்ளிப் போயிருக்க, மலர் அதனை கவனிக்கவில்லை. இந்த மாதத்திலும் இருபது நாட்கள் கடந்து சென்றிருந்ததன. 

இன்று காலை அவளால் உறக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளவே முடியவில்லை. அமுதனும் மனைவி அசந்து உறங்குகிறாள் என்று அவளை தொந்தரவு செய்யாமல் கிளம்பி இருந்தான். 

எழுந்ததும் மலருக்கு தலை சுற்றியது. காஃபி குடிக்க முடியாமல் உம்மட்டல் ஏற்பட்டது.   

கிருஷ்ணாவிற்கு அன்று செமஸ்டர் தேர்வு என்பதால் பரபரப்புடன் கிளம்பிக் கொண்டிருந்தாள். 

அவளுக்கான உணவை வசுந்தலா எடுத்து வைக்க, “சாப்பாடு வேண்டாம். லேட் ஆச்சு” என்றபடி தன் அண்ணியைப் போல் ஆசையுடன் நீளமாக வளர்த்த கூந்தலை பின்னலிட்டுக் கொண்டிருந்தாள். 

“சாப்பிடாம எப்படி கிருஷ்ணா எக்ஸாம் எழுதுவ” என்று மலர் கடிந்ததும், “டைம் ஆச்சு அண்ணி” என்று முகத்தை சுருக்கினாள் கிருஷ்ணா.

“சாப்பிட்டு தான் போகணும் கிருஷ்ணா. நான் பின்னி விடறேன். நீ சாப்பிடு” என்று மலர் அழுத்தமாக கூறியதும், அன்னை எடுத்து வைத்த உணவினை சோபாவின் கீழ் அமர்ந்து மடமடவென உண்டாள் கிருஷ்ணா. 

சோஃபாவில் அமர்ந்தபடி தேன்மலர் அவளுக்கான பின்னலை பின்னி முடித்திருந்தாள். 

“நீயும் சாப்பிடு தேனு” என்று வசுந்தலா கூறியதற்கு “வேண்டாம் அத்த. எனக்கு உடம்பு முடியாத மாதிரி இருக்கு. நான் இன்னைக்கு ஆபீஸ் போகல. ரெஸ்ட் எடுக்குறேன்” என்ற அண்ணியை இப்போது கிருஷ்ணா முறைத்தாள்.

“என்னை சாப்பிட சொல்லிட்டு நீங்க சாப்பிடாம இருப்பீங்களா. நீங்களும் சாப்பிடுங்க அண்ணி” என்றாள் கண்டிப்புடன். 

அவள் கண்டிப்பில் சிரித்த மலர் “என்னால சாப்பிட முடியல கிருஷ்ணா. இப்பதான் காஃபியையே குடிக்க முடியாம குடிச்சேன்” என்றவள், “நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வந்து சாப்பிடுறேன். நீ இப்ப போய் ஒழுங்கா எக்ஸாம் எழுதிட்டு வா” என அவளை கல்லூரிக்கு அனுப்பி வைத்தாள். 

மலரால் காலை உணவும் அதிகமாக உண்ண முடியவில்லை. அளவாக தான் உண்டாள். மதிய உணவும் மலருக்கு இறங்கவில்லை. சோர்வாக உணர்ந்தவள் அப்போது தான் நாள் கணக்கினை கவனித்தாள். 

உடனே அறைக்கு வந்து கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவியை கையில் எடுத்தாள். 

மனம் படபடவென அடித்துக் கொள்ள, ஒற்றைக் கையால் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டு குளியலறை சென்று பரிசோதித்தாள். 

இரட்டைக் கோடுகள் அவளது தாய்மையை ஊர்ஜிதப் படுத்தியது! 

மகிழ்ச்சி மனம் நிறைக்க, வேக வேகமாக கிளம்பி வந்தவள் சேதுவிடம் “நம்ம ஃபபேக்ட்ரிக்கு போகணும் ண்ணா” என்றாள். 

சேதுவே அவளை ஆச்சர்யமாக பார்த்தார். இதுவரை அங்கே மட்டும் அவள் செல்லாமல் இருக்கும் விஷயம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று! 

காரணங்களை யாரும் ஆராயவில்லை. ஒரு முறை கிருஷ்ணா கேட்டதற்கு மட்டும் “உங்க அண்ணன் செஞ்ச வேலை அப்படி..” என்று நடந்ததை அவளிடம் கூறி இருந்தாள். 

“மோசம் ண்ணா நீ!” கிருஷ்ணாவும் அண்ணனை முறைத்து திட்டி இருந்தாள். 

இத்தனை நாட்களும் மன பிணக்கினால் கடலை மிட்டாய் உண்ணாமல், அதை செய்யும் இடத்திற்கும் வராமல் இருந்தவளால் இன்று அப்படி இருக்க முடியவில்லை. 

தாய்மை அடையப் போகும் விஷயத்தை கணவனிடம் விசேஷமான முறையில் தெரியப் படுத்த மனம் விழைந்தது. அது தான் அவளது ஆசையும்! ஆகையால் தான் கணவன் தினம் ஒரு பெட்டி கடலை மிட்டாய்களை கொண்டு வந்து கொடுத்த போதும் உண்ணாமல் இருந்தாள். 

கிருஷ்ணாவிற்காக தங்களின் குழந்தை வரவினை தாமதப் படுத்தலாம் என்று சொன்ன போது தனக்காக அதை ஒப்புக் கொண்ட கணவன் மேல் இன்றளவும் அவளின் நேசம் கூடித் தான் இருக்கிறது. 

தான் கேட்டுக் கொண்டதற்காக அவன் ஒப்புக் கொண்டாலும், தன் தாய்மை தள்ளி வைக்கப் பட்டிருந்தாலும், அவனது தந்தை நிலையும் தள்ளிப் போனது நிஜம் அல்லவா? 

எனவே தான், தங்களின் குழந்தை வரவை உறுதி செய்யும் நாளன்று தன் கடலை மிட்டாய் விரதத்தை கை விடலாம் என்று எண்ணி இருந்தாள் தேன்மலர். 

அதைப் போலவே இன்று அந்த விரதத்தை கை விட்டவள், “கீதன் அத்தான்..” என்று அழைத்து அவன் அப்பாவாகப் போகும் விஷயத்தை சொல்லியது இன்னும் அமுதனை நிறைத்தது. 

சந்தோஷ மிகுதியில் தானே ஒரு கடலை மிட்டாயினை எடுத்து அவளுக்கு ஊட்டி விட, மறுக்காமல் வாங்கிக் கொண்டவள் அந்த டப்பாவில் இருந்த மிட்டாய்கள் தீர்ந்து விட்டதைக் கண்டு “எல்லாம் காலி. எனக்கு இன்னும் வேணும்” என்றாள் மலர். 

அவள் உண்ணாத போதே தினம் ஒரு பெட்டியை கொண்டு வந்தவனுக்கு.. மனைவி வாய் விட்டே கேட்டதும் சொல்லவா வேண்டும்? 

அப்போதே மேனேஜரை அழைத்து சுடச் சுடச் கடலை மிட்டாயை மீண்டும் செய்யச் சொல்லியவன், “எல்லாருக்கும் இன்னைக்கு ரெண்டு பாக்ஸ் ஃப்ரீயா சப்ளை பண்ணுங்க குமார்” என்றவன், வீட்டிற்கு நான்கு பெரிய பெட்டிகளை பேக் செய்யச் சொன்னான்! 

தந்தையாகப் போகிறவனிடம் துள்ளல்! அத்துள்ளல் அவனது செயலிலும் வெளிப்பட்டது. 

இல்லம் வந்ததும் எல்லோருக்கும் விஷயம் பகிரப் பட, இன்பசேகரன் தம்பதியினருக்கு இன்பம் தாளவில்லை! 

மூன்று ஆண்டுகள் பேரப் பிள்ளைக்காக காத்திருந்தவர்களின் காத்திருப்பு, மருமகள் தாய்மை அடைந்ததை கேட்டு பூர்த்தி அடைந்தது. 

தேர்வு முடித்து வந்த கிருஷ்ணாவிடம் “அத்தையாகப் போற கிருஷ்ணா” என்று சொன்ன நொடி அண்ணியை கட்டிக் கொண்டு அழுதே விட்டாள் கிருஷ்ணரூபி. 

அவளின் அழுகை பெரியவர்களுக்கு திகைப்பை கொடுத்தது. 

நல்ல செய்தி சொல்லியதற்கு எதற்கிந்த அழுகை என்பது போல் பார்த்திருந்தனர். 

அவர்களுக்கு நிகழ்ந்தவை தெரியாதே. 

வசந்தலா சற்று குரலை உயர்த்தி “நல்ல விஷயத்துக்கு ஏன் ரூபி இப்படி அழற. முதல்ல போய் குளிச்சிட்டு வா. தேனுவை விடு. இவ்வளவு இறுக்கமா கட்டிப் பிடிக்காத அவளை. மாசமா இருக்கா அவ” என்று சொல்லியதை காதில் வாங்கவில்லை கிருஷ்ணா. 

அண்ணியையும் அன்னைக்குள் இருந்த குழந்தையையும் இறுக கட்டிக் கொள்பவள் போல் மேலும் இறுக்கமாய் கட்டிக்கொண்டு “அண்ணி அம்மா ஆகப் போறாங்க. அண்ணா அப்பா ஆகப் போறாங்க” என்றாள் சந்தோஷ அழுகையுடன். 

“அவளை விடு ரூபி” என்று வசுந்தலா மீண்டும் அதட்ட, “முடியாது. நான் இறுக்கமா கட்டிப் பிடிக்கிறதால என் அண்ணிக்கும், என் செல்லத் தங்கத்துக்கும் ஒன்னும் ஆகாது” என்றாள் வசுந்தலாவிடம் அழுத்தமான குரலில். 

வசுந்தலா அமைதியாகி விட, “விடு வசு” என்று இன்பசேகரன் கூறியதும் வசுந்தலா முகம் அமைதியடைந்து விட்டது. 

மருமகளின் தாய்மையை கொண்டாடும் மகளின் அன்பு அவரை பிரம்மிக்க வைத்தது! 

மங்கையிடமும் அழைத்து விஷயத்தை சொல்ல, அவரின் மகிழ்வை பற்றி சொல்லவும் வேண்டுமா? 

வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காதது ஒன்று தான் பாக்கி! 

மகளை காண மகன் மருமகளுடன் கிளம்பி வந்திருந்தார். கவியும் தேன்மலரிடம் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, திவா அமுதனை அணைத்து வாழ்த்தினான். 

“ஹாஸ்பிடல் போய் செக் அப் பண்ணிட்டு வந்துடுங்க தேனு” என்று கவி சொல்லியதும் மனைவியை அழைத்துக்கொண்டு அன்று மாலையே மருத்துவமனை சென்றான் அமுதகீதன். 

அறுபது நாட்கள் ஆகி இருக்க, மருத்துவர் ஸ்கேன் செய்து விடலாம் என்று கூறியதும் சரி என்றனர். 

ஸ்கேன் செய்கையில் இரட்டை குழந்தைகளின் இதயத் துடிப்பு அவர்களின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கியது.  

இல்லம் வந்து இரட்டை குழந்தைகள் என்று சொன்னதும் மீண்டும் ஒரு சந்தோஷ வெள்ளம் பரவியது! 

***************************  

தேன்மலரின் வளைகாப்பு தினம்.. 

கர்ப்ப காலத்திற்கே உரிய காலை சோர்வு தேன்மலரை எழுந்து கொள்ள விடவில்லை. 

நேற்றைய இரவிலும் பெரிய வயிற்றுடன் உறங்க முடியாமல் எழுவதும் அமர்வதுமாக இருந்தவளுக்கு மூன்று மணிக்கு மேல் தான் உறங்க முடிந்தது. அதுவும் ஒருக்களித்து படுத்திருந்தாள். 

மலர் சிரமப் படுவதை கண்டு அமுதன் தவித்துப் போனான். 

இரவெல்லாம் அவனும் உறங்காமல் அவளை தாங்கி இருந்தான். அமர்ந்தவாக்கில் தன் மேல் மனைவியை சாய்த்துக் கொண்டு சிறிது நேரம் அவளை உறங்க வைத்தான். 

பின் மீண்டும் அவள் அசைந்ததும் இரு தலையணைகளை கட்டிலின் விளிம்பில் வைத்து அதன் மேல் மனைவியை சாய்ந்து கொள்ளச் செய்து உறங்கச் சொன்னான். 

சிறிது நேரம் உறங்கியவளுக்கு இடுப்பு வழி எடுத்தது. கால்களும் வீங்கி இருந்தன. 

அன்னை சொன்னதை நினைவில் வைத்து சுடு நீரில் மனைவியின் கால்களை வைத்து நன்றாக பிடித்து விட்டான்.

இப்படியாக நேற்றைய இரவு உறக்கம் மூன்று மணிக்கு மேல் தான் அவர்களை அண்டியது. 

இரட்டை குழந்தை என்று கேள்விப்பட்ட நொடி எத்தனைக்கு எத்தனை மகிழ்வாக இருந்ததோ இப்போது அத்தனைக்கு அத்தனை பயமாகவும் அச்சமாகவும் இருந்தது. 

மாதங்கள் கூடக் கூட, மலருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகளும், உறங்க முடியாமல் அவள் சிரமப் படுவதும், உண்ட உணவு சில நேரங்களில் வாந்தி எடுப்பதும் என மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிய மனைவியின் நிலை அமுதனுக்கு அளவு கடந்த பயத்தை கொடுத்திருந்தது.

இரட்டைக் குழந்தைகளைத் தாங்கும் தலைவியை அன்பும் அக்கறையுமாக தலைவன் தாங்கினாலும், அவள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், உடல் ரீதியான மாற்றங்களையும் இவன் சுமக்கவியலாதே! 

விடிந்தால் வளைகாப்பு. இரவெல்லாம் மனைவி உறங்க முடியாமல் அவஸ்தை கொண்டதை கண்டு, “பேசாம வளைகாப்ப ஒன்பதாவது மாசம் வைக்கலாமா மலர்..” என்று கேட்டான் அமுதன். 

“வேண்டாம் கீதன். நாளைக்கு எல்லாருக்கும் அழைப்பு சொல்லியாச்சு. மேனேஜ் பண்ணிக்கலாம்” என்று மறுத்திருந்தாள் மலர். 

ஆனால், இப்போது எழுந்து கொள்ள முடியாமல் இருவருமே ஆழ்ந்த உறக்கத்தில்! 

வசுந்தலா வந்து அழைத்ததும் தான் எழுந்தனர். புடவையை கட்ட முடியாமல் தேன்மலர் சிரமப்பட, “நான் போய் அம்மாவையோ அத்தையையோ வர சொல்றேன்” என்று கீழே சென்றான் அமுதன். 

அவன் சென்ற சிறிது நேரத்தில் கவியும் கிருஷ்ணாவும் வந்திருந்தனர். 

“அத்தைங்க ரெண்டு பேரும் வேலைல இருக்காங்க மலர். அதான் நாங்க வந்தோம்” என்ற கவி, மலருக்கு புடவையை கட்ட உதவி செய்ய, கிருஷ்ணா அவளுக்கு கொண்டு வந்த பழச்சாறினை கொடுத்தாள். 

“ரொம்ப டயர்டா இருக்கீங்க அண்ணி நைட் எல்லாம் சரியா தூங்கலையா? கால் வீக்கம் எப்படி இருக்கு..?” என்றாள் கிருஷ்ணா கவலையுடன். 

முழு மருத்துவராக ஆகவில்லை என்றாலும் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் இருந்தவள், தனது கல்லூரியில் பணி புரியும் மூத்த மகப்பேறு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று அதன்படி அண்ணியை கவனித்துக் கொள்ள தவறவில்லை. 

அவள் கொடுத்த பழச்சாறினை அருந்தியபடி “மூணு மணிக்கு மேல தான் நானும் உங்க அண்ணாவும் தூங்குனோம் கிருஷ்ணா” என்றாள் மலர் சோர்வுடன். 

“அடுத்த த்ரீ மந்த்ஸ் ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் அண்ணி. நான் விசாரிச்ச கைனக் ட்வின் பேபீஸ்னால ப்ரீ டெர்ம்ல கூட பிறக்கலாம்னு சொன்னாங்க” என்றவள் குரலில் சிறு பயம் எட்டிப் பார்த்தது. 

“டாக்டர் மேடம் நீங்களே இப்படி பயந்தா நாங்க எங்க போறது?” குறும்பாக கேட்டபடி கவி தேன்மலருக்கு புடவையை கட்டி முடித்திருந்தாள்.  

“நான் ஒன்னும் முழுசா டாக்டர் ஆகல கவிக்கா. இப்பதான் செகண்ட் இயர் படிக்கிறேன்” என்று கிருஷ்ணா முகத்தை சுருக்க, “சரி சரி. பயப்படாத. அதெல்லாம் ஒன்னும் ஆகாது” என்று தைரியம் கூறிய கவி இருவரையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தாள். 

வளைகாப்பு நிகழ்வு இனிதே நடந்தேறியது.

அன்றைய இரவும் மலரும் அமுதனும் உறங்கவில்லை. அடுத்த இரண்டு மாதங்களும் இது போன்ற சிரமத்துடனே கழிந்தது. 

ஒன்பதாம் மாதம் பிறந்த பத்தாவது தினமே அதிகாலை வேளை மலருக்கு பிரசவ வலி ஏற்பட, எல்லோரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்! 

பத்து மணி நேர பிரசவ வலியின் போராட்டத்திற்கு பின்பு அவர்களது இளவரசர்கள் தாயின் கருவறையில் இருந்து ஒவ்வொருவராக விடுதலை பெற்று உலகிற்கு வந்தனர். 

இரு குழந்தைகளும் சுகப் பிரசவத்தில் ஆரோக்கியத்துடன் பிறந்திருக்க, மலர் தான் வாடிப் போனாள். 

மலர் வாடியதில் அமுதம் வதங்கிப் போனது! 

“நார்மல் டெலிவரி தான. கொஞ்ச நாள்ல சரி ஆகிடுவேன் கீதன்” பிரசவத்தின் களைப்பு விலகாத குரலில் கலங்கி நின்ற கணவனைத் தேற்றினாள் தேன்மலர். 

சுத்தம் செய்து கொண்டு வரப் பட்ட குழந்தைகளை தொட்டியில் கிடத்தி விட்டுச் சென்றனர் செவிலிப் பெண்கள்.

கிருஷ்ணா ஒவ்வொரு குழந்தைகளையும் லாகவமாக தூக்கி மடியில் வைத்து கண்ணீருடன் கொஞ்சினாள்.  

“மை பாய்ஸ்…ரெண்டு பேரும் எப்பவும் அத்தையோட கட்சி தான். ஓகே!” என்று அவர்களுடன் டீல் பேச, அத்தை மடி மெத்தையடி என்பது போல் இருவரும் அவளது மடியை அலங்கரித்து அழகாக துயில் கொண்டிருந்தனர். 

அடுத்தடுத்து வசுந்தலா, இன்பசேகரன்,மங்கை, கவி, திவா, என எல்லோரின் கைகளுக்கும் சென்று வந்த குழந்தைகள், இறுதியாக மலரின் அருகே கிடத்தப்பட்டனர்.  

கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்து எல்லோரும் வெளியே சென்று விட, கணவனின் சாயலில் இருந்த

குழந்தைகளை ஆசையும் ஆவலுமாகப் பார்த்தாள் மலர்.  

அமுதனோ சிரிப்பும் முறைப்புமாக மகன்களை பார்த்து “என் மலரை ரொம்ப படுத்திட்டீங்கடா ரெண்டு பேரும்” அவர்கள் மீது செல்லக் குற்றம் சாட்டினான்! 

“என்ன படுத்தினாங்க ரெண்டு பேரும்? பிரசவ காலத்துல அதெல்லாம் சகஜம் தான். அதுக்காக என் பசங்கள குறை சொல்லுவீங்களா நீங்க?

என் பசங்களை ஏதாவது சொன்னீங்க.. என்னோட மலர்தாசன்னு எல்லாம் பாக்க மாட்டேன். அடி பின்னிடுவேன்!!” என்று மலர் கணவனை மிரட்டினாள். 

“பிறந்ததும் என் மலர் கிட்ட திட்டு வாங்க வைக்கிறீங்கடா ரெண்டு பேரும்…” அதற்கும் மகன்களையே அவன் குற்றம் சாட்ட, மலர் கணவனை முறைத்தாள். 

“என்ன முறைப்பு? ரெண்டு பசங்க வந்துட்டாலும் என் மலர் தான் எனக்கு என்னைக்கும் முதல் பிரதானம்! உன்னை மாறி கட்சி மாற மாட்டேன்!” என்றான் அவனும் காதல் முறைப்புடன்!  

“ஆமா… நான் என் பசங்க கட்சிக்கு தான் மாறிட்டேன். இப்போ என்ன?” என்று மலர் முறைத்தாள்! 

“மாறிக்கோ. நானும் உன் பின்னாடியே வந்து உங்களோட கூட்டணி வச்சிக்கிறேன்” என்று குறும்பாக கண் சிமிட்டி புன்னகைத்தான் அமுதன்!

குழந்தைகளின் தலையை வருடிக் கொடுத்தபடி மலர் முகத்தை திருப்பிக் கொள்ள, “மலரில்லாம அமுதம் இல்ல. இந்த அமுதம் எப்பவோ மலரோட பாதத்தை பணிஞ்சு சரணடைஞ்சாச்சு!” என்றான் நேசம் மிகுந்த குரலில். 

“பாதம் பணிஞ்சாராம்! சரணடைஞ்சாராம்! உங்கப்பா என்னென்ன கதை சொல்றாரு பாருங்கடா..” மகன்களிடம் சொல்லி மலர் சிரிக்க, தற்போது அமுதன் அவளை முறைத்தான். 

குழந்தைகளின் வரவினால் ஏற்பட்ட செல்ல ஊடல்கள் கூட அமுதும் தேனுமாகத் இனித்தது மலர் கீதனுக்கு!! 

error: Content is protected !!
Scroll to Top