இப்பொழுது செந்தாமரை மலர்கள் மிதந்து கொண்டிருந்த பெரிய குளக்கரையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
வெற்றி அவளை நெருங்கி, அவள் முகத்துக்கு நேராகக் குனிந்து, “நான் என்ன கேட்டுட்டேன் இப்போ? ஏன் இப்படி இருக்க? நார்மலா இரு. நான் என்னமோ இப்பவே உன் விருப்பம் இல்லாம, உனக்குத் தாலிக் கட்டப் போற மாதிரி நடந்துக்கற நீ.” என்றான். அவன் முகத்தில் இருந்த மென்மை குரலில் இல்லை.
“என்னது?” என்று அதிர்ச்சியுடன் பின்னோக்கி நகர்ந்து கேட்டாள். எட்டி அவளைப் பிடித்து நிறுத்தினான் வெற்றி.
“வேதா…” அவன் கோபமாக விளிக்க,
“இல்ல சார்” என்று உளறி எச்சில் கூட்டி விழுங்கி, விழித்தாள் வேதா.
“ஓகே. நீ வீட்டுக்குக் கிளம்பு. நான் சொன்னதை இப்போதைக்கு மறந்துடு” ஒரு முடிவுடன் சொன்னான் வெற்றி.
“ஓகே” என்றவளை, விசித்திரமாகப் பார்த்தான் அவன்.
“வா, போகலாம்” என்று கைப் பிடித்து இழுத்தவனை மிரட்சியுடன் பார்த்தாள்.
“நான் கௌசல்யா கா கூடப் போய்க்கிறேன்.”
“ஓகே.” அவள் பேச்சிற்கு வளைந்தவனை அவளால் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை.
அடுத்து நடந்த எதுவும் அவள் மனதில் பதியவில்லை.
கௌசல்யா, காந்திமதி உடன் மீண்டும் வீடு நோக்கி மொட்டை வெயிலில் ஒரு பயணம்.
மனம் முழுக்க வெற்றி வலம் வர, சிந்தனையில் சிதறிக் கொண்டிருந்தாள் அவள்.
அவர்கள் மதியம் போல வீட்டை அடைந்தார்கள். வேதா தன் அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றி உறங்கி விட்டாள்.
மாலை நெருங்கும் வேளையில் அவளது அலைபேசி அடித்து அவளை எழுப்பி விட்டது.
“அம்மா சொல்லுங்க மா” தூக்கக் கலக்கத்துடன் பேசினாள்.
“தூங்கறியா வேதா? அம்மா அப்புறமா பேசவா?” அவர் அக்கறையுடன் கேட்க, “இல்ல மா. எழுந்துட்டேன். சொல்லுங்க” என்றாள். படுக்கையில் நன்றாக எழுந்து அமர்ந்தாள்.
“உங்க அண்ணிக்கு உடம்பு முடியல வேதா”
“ம்ம். சொன்னீங்களே மா. காலையில அண்ணா கிட்ட கேட்டேன். அவன் ஒன்னும் சொல்லல. அண்ணி எப்படி இருக்காங்க. என்ன அவங்களுக்கு?” என்று விசாரித்தாள்.
“அவளுக்கு மிஸ்கேரேஜ் ஆகிடுச்சு வேதா.”
“ஐயோ, அண்ணி ப்ரெக்னன்ட்டா இருந்தாங்களா? நீங்க சொல்லவே இல்ல மா. எப்படி மா ஆச்சு?”
“ப்ச், எங்களுக்கே உங்கண்ணன் சொல்லல. உங்கத்தை யார்கிட்டேயும் சொல்ல வேணாம் சொல்லி இருக்கா. அதைக் கேட்டு சொல்லாம விட்டுட்டான். இப்போ கரு கலைஞ்சு ஓவர் ப்ளீடாகி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ற அளவுக்கு வரவும், நமக்குச் சொல்றான். இவனை என்ன சொல்றது சொல்லு? கடுசா ஒரு வார்த்தை கூடச் சொல்ல முடியல” என்று கலங்கிய குரலில் பேசினார் ஜெயலட்சுமி.
“அண்ணிக்கு எத்தனை மாசம் மா?”
என்று அவள் கேட்க,
“7 வாரம் வேதா. ரெண்டு மாச கணக்கு. உங்கண்ணி ஒரே அழுகை. உங்கண்ணன் மூஞ்சியைப் பார்க்க முடியல.” மூக்கை உறிஞ்சி கொண்டு சொன்னார் அவர்.
அண்ணனுக்காக வருந்தியது அவள் மனது.
“நான் அண்ணிகிட்ட பேசவா மா?”
“பெரிய மனுஷி, நீ என்ன ஆறுதல் சொல்ல முடியும்? நீ ஒன்னும் பேச வேணாம். உங்கண்ணன்கிட்ட எப்பவும் போலப் பேசு. எதுவும் கேட்டுக்காத. சரியா?”
“ம்ம், சரி மா” என்றாள் வேதா. இந்த விஷயங்கள் எல்லாம் எப்படி விசாரித்து, ஆறுதல் சொல்ல வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை. அதனால், அம்மா சொன்னதும் சரியென்று ஒத்துக் கொண்டாள் அவள்.
“நாங்க இன்னும் ஒரு வாரம் இங்கதான் இருப்போம். நீ உடம்பை பார்த்துக்கோ”
“சரிம்மா” என்று அழைப்பை துண்டித்தவள் மனது கேளாமல் அன்றிரவே அண்ணிக்கு அழைத்துப் பேசினாள். ஆறுதல் சொல்ல தெரியாத காரணத்தினால் அன்பின் வார்த்தைகளில் அக்கறையைக் கடத்தினாள்.
அன்று அதிகாலையில் சென்று வந்த இடங்களைப் பற்றி உற்சாகத்துடன் அண்ணனிடம் பகிர்ந்து கொண்டவள், மறந்தும் வெற்றியின் விருப்பத்தைச் சொல்லவில்லை. ஆனால், வெற்றியை பார்த்ததைச் சொன்னாள். அவர்களோடு பயணித்ததைச் சொன்னாள்.
உறவுகளிடத்து உண்மையைப் பேசுவதே எப்போதும் உகந்தது என்பது அவளது எண்ணம். அதையே பின்பற்றினாள் வேதா.
சற்று நேரம் ஓய்வாக அமர்ந்திருந்து விட்டு, முகம் கழுவி அறையை விட்டு வெளியே போனாள்.
“வாம்மா வேதா” என்றழைத்த கௌசல்யா அவளிடம் எதுவும் கேட்கவில்லை.
“சாப்பிடு வேதா. நீ நல்லா தூங்கிட்டு இருந்த, அதான் சாப்பிட எழுப்பல” காந்திமதி சொல்ல, புன்னகையுடன் சமையலறை நோக்கி நடந்தாள்.
தட்டில் உணவை பரிமாறிக் கொண்டு சோஃபாவில் சென்று அமர்ந்தாள். உணவை விட அதிகமாக வெற்றியின் நினைவுகளை, அவனோடு பேசிய, சிரித்த கணங்களை மென்றாள்.
அவனைத் தவிர்க்கவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல், தடுமாறியது அவள் மனது.
அவனுக்கு என்ன பதில் சொல்ல என்பதை விட, கல்யாணமா? இப்போதா? என்றே யோசித்தாள் அவள்.
வெற்றிக்கும், அவளுக்கும் இடையே ஓடிய மெல்லிய ஈர்ப்பை, அன்று நடந்த நிகழ்வை எல்லாம் பார்த்திருந்தாலும் அவளிடம் எந்தக் கேள்விகளும் கேட்கவில்லை கௌசல்யா மற்றும் காந்திமதி.
அந்த விடுமுறையை அவன் நினைவிலேயே கழித்து விட்டுத் திங்கள் அன்று வங்கிக்கு சென்றாள் வேதா.
வெற்றிவேந்தன் அங்கு மாண்புமிகு மேனேஜராக மட்டுமே நடந்து கொண்டான். வேதாவை பார்த்த கண்களில் எந்த உணர்வும் இல்லை.
மிக இயல்பாக எப்போதும் போல அவளுக்குக் காலை வாழ்த்துச் சொன்னான். அவளை வேலை பார்க்க வைத்தான். வேலை சொன்னான், வாங்கினான்.
வேதாவிற்குதான் குழப்பமாக இருந்தது. ஆனாலும், இப்போது கொஞ்சம் அவனைப் பிடிக்கவே செய்தது. கல்யாணத்திற்குக் கேட்டு, வேலை நேரத்தில் கள்ளப் பார்வை பார்த்து சீண்டாதது அவனது கண்ணியத்தைக் காட்டியது.
அவளையும் மீறி வினோதமாக,
“என்னிடம் கேள்வி கேளேன். என்னைப் பாரேன்” என்று அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவளின் ஆழ் மனம் சொல்ல, அதிர்ந்தாள் வேதா.
திங்கள், செவ்வாய், புதன் என்று நாட்கள் ஓட அவர்களிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.
அவன் மேனேஜர், அவள் அசிஸ்டன்ட் மேனேஜர். அவர்கள் விரும்பினாலும், அதில் இருந்து இருவரும் விலகவில்லை.
வெள்ளி அன்று பொதுவாகவே வங்கியில் அதிகப் பணிகள் இருக்கும். பெரும்பான்மையாக அது வார இறுதி வேலை நாள் என்பதால் வங்கியில் பணம் செலுத்த, பெற எனப் பெரிய கூட்டம் அலை மோதும்.
அன்றைக்கும் அப்படியொரு கூட்டம் வங்கியை நிறைத்திருந்தது.
வாடிக்கையாளர் முகம், கணினித் திரை இரண்டைத் தவிர எதையும் பார்க்க முடியாத அளவுக்கு வேலையில் மூழ்கி இருந்தாள் வேதா. மதிய உணவு கூடப் பத்து நிமிடங்களுக்குக் குறைவான நேரத்தில், என்ன உண்டோம் என்ற கவனம் இல்லாமல் அள்ளி விழுங்கி விட்டு இருக்கைக்குத் திரும்பி இருந்தாள்.
வங்கி வேலை நேரம் முடிய அரை மணி நேரம் இருக்கும் போதே புதிய வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் அவர்கள். ஏற்கனவே வங்கியில் இருக்கும் வாடிக்கையாளர்களைக் கவனித்து அனுப்பவே நேரம் சரியாக இருக்கும் என்பதுதான் காரணம்.
அன்று ஒரு கல்லூரி மாணவி வாயிலில் நின்று காவலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, வேதா கணினியில் இருந்து பார்வையை உயர்த்தி, “என்னாச்சு? என்ன சத்தம்?” என்று கேட்க, “மேடம், இந்தப் பொண்ணு எமர்ஜென்ஸிக்குப் பணம் வேணும். என்னை உள்ள விடுங்கன்னு ஆர்கியூ பண்றாங்க மேடம். பேங்க் டைம் முடிஞ்சது சொன்னா கேட்க மாட்டேங்கறாங்க” என்று அவர் புகார் சொன்ன இடைவெளியை பயன்படுத்தி வங்கிக்குள் நுழைந்திருந்தாள் அந்தப் பெண். அவளுக்குப் பின்னே இன்னொரு பெண்மணியும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
“காலேஜ் ஃபீஸ் கட்ட நாளைக்கு லாஸ்ட் டேட் மேம். வீட்ல இன்னைக்குதான் காசு போட்டாங்க. உங்க ஏடிஎம் வொர்க் ஆகல. அதான் கேஷ் எடுக்க உள்ள வரலாம்னா, விட மாட்டேங்கறார் இந்தச் செக்யூரிட்டி” அந்தப் பெண் படபடத்துப் புகார் செய்ய,
“ஏடிஎம் நெட்வொர்க் இஸ்யூவா இருக்கும். கொஞ்ச நேரத்துல சரியாகிடும். நீங்க கேஷ் ஏடிஎம்ல எடுங்க” இயந்திர குரலில் வேதா சொல்ல, “பிளீஸ் மேம். நாளைக்கு ஃபீஸ் கட்ட கேஷ் வேணும். இந்த ஒரு டைம் கொடுங்க” என்று கண்ணைச் சுருக்கி அந்தப் பெண் பாவமாகக் கேட்க, தன் கருணையைக் காண்பித்தாள் வேதா.
மாலை முடிந்து இரவு நெருங்க, அவரவர் அலுவலை முடித்துக் கிளம்பத் தயாரானார்கள் பணியாளர்கள்.