வெற்றியை கண்ணிமைக்காமல் பார்த்தாள் வேதா. அவன் சொன்னது அவள் மனத்தில் மெல்ல மெல்ல இறங்க, அவளுக்கு அதைக் குறித்துச் சந்தேகம் கேட்க கூடப் பயமாக இருந்தது.
அவள் இதைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனது அன்பின் வெளிப்பாடு அதிர்ச்சியைத் தரும் என்பதே அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
ஒருவேளை விளையாட்டுக்கு சொல்கிறானோ என்று நினைத்து விடாத அளவுக்கு வெற்றியின் விழிகளில் இருந்தது அவளுக்கான பதில்.
அவன் கண்களில் காதலும், கனிவும் நிறைந்திருக்க, அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள் வேதா. இந்த உணர்வு அவளுக்குப் புதிது. ஒருவித மெல்லிய படபடப்பு. கைகள் வியர்த்து, கால்கள் வலுவிழந்து, இதயம் எகிறி துடிக்க அவளால் சாதாரணமாக நிற்க முடியவில்லை.
“வேதா” வெற்றி அவளின் கைப் பிடித்தான்.
“உங்க கல்யாணத்துக்கு நான் ஏன் சம்மதம் சொல்லணும்?” என்று கேட்க நினைத்தாள். ஏனோ அது அபத்தமாகத் தோன்றும் என்று அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை அவள்.
அவள் மனத்தைத் துல்லியமாக அறிந்தது போல, “பிளீஸ், நீ மனசுல நினைக்கிற கேள்வியைக் கேட்டுடாத” என்றான் வெற்றி.
இப்போது அவள் கண்களில் கனல். ஆனால், அவன் கண்களின் காதலை அது குறைக்கவேயில்லை. இது எப்போது நடந்தது? எப்படி நடந்தது? இவன் மனத்தை உடைக்காமல் என்னால் என் மனத்தைச் சொல்ல முடியுமா?
இவன் கேள்வியை நான் பரிசீலிக்க வேண்டுமா? வெற்றியுடன் கல்யாணம் என்றால் அது அவளின் வேலை, வாழ்க்கை, உறவுகள் என அனைத்தையும் பாதிக்கும் அல்லவா? அவள் மனது நொடியில் அனைத்தையும் யோசிக்க, “வேதா” அவள் கையை அழுத்தமாய்ப் பிடித்து அழைத்தான் வெற்றி.
இருவருக்கும் இடையே இடைவெளி குறைந்திருந்தது. அவர்களுக்குப் பின்னே சூரியனும், சூரியகாந்தி பூக்களும் சூழ்ந்திருக்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றிருந்தார்கள்.
வெற்றி கேள்விக் கேட்டதுமே அவர்களின் அருகில் கேமராவை இயக்கி ஓடி வந்து விட்டான் பிரபு. வேதாவின் முகத்தில் வெளிப்பட்ட ஒவ்வொரு உணர்வுகளையும் அவனது புகைப்படக் கருவி கச்சிதமான புகைப்படங்களாக எடுத்துக் கொண்டிருந்தது.
ஒரு பெரிய சூரியகாந்தி பூவை வேதாவின் கையில் கொடுத்திருந்தான் வெற்றி. அவள் இருந்த அதிர்ச்சியில் அப்படியே அதைப் பிடித்து, அவனை ஏறிட்டு பார்த்திருந்தாள் வேதா.
அவர்களின் உடையும் ஒன்று போல இருந்தது. வெற்றியின் கண்களில் காதலும், ஆர்வமும் கொப்பளிக்க, வேதாவின் கண்களில் அதிர்ச்சி மட்டுமே.
அவர்கள் நின்ற விதமும், பின்னணியும், அவர்களின் பொருத்தமும் பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது. கவிதையாய் இருந்த அந்தக் காட்சியை மற்றவர்கள் ஆச்சரியமாகப் பார்க்க, பிரபு அதை நினைவிற்காக நிழல் படமாக்கி இருந்தான்.
“போகலாமா?” என்று பிரதீப் குரல் கொடுக்க, சட்டென அனைவரும் கலைந்தார்கள்.
“சார்.. ஏன் அப்படிச் சொன்னீங்க?” அதிர்ச்சி விலகி, கேள்வி கேட்டாள் வேதா.
“காதல் தானே அற்பமானது. அப்போ கல்யாணம் ஓகே தானே வேதா?” அவன் கேட்க, “கல்யாணம் நமக்குள்ள.. எப்படி?” அவளுக்கு எதுவுமே புரியவில்லை.
அவள் இருந்த மனநிலையில் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லி விடுவோமோ என்று பயந்தாள் அவள்.
“சாரி வேதா. நான் இப்படிப் பட்டுனு போட்டு உடைச்சுருக்கக் கூடாது. ரொம்ப நாளாவே மனசுல இருந்தது, இன்னைக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவும், சொல்லிட்டேன்”
“ரொம்ப நாளாவா?” அவனது கையை விலக்கி, அவனை விட்டு மெல்ல பின்னகர்ந்து கேட்டாள்.
“ம்ம். நாள் இல்ல, மாசங்கள் சொல்லலாம்” புன்னகையுடன் சொன்னான்.
“என்னது?” அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
“ம்ம். அன்னைக்குப் புக் கொடுத்தேனே? அப்பவே” தேன் சிட்டை போல வாயை திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள். அவனிடம் மேலே பேசவே அவளுக்குப் பயமாக இருந்தது. கேள்விகள் கேட்டுத் தெளிவு பெற அதை விடப் பயமாக இருந்தது.
அவன் சொல்லப் போகும் பதில்களை அவள் விரும்பப் போவதில்லை என்பது உறுதியாகப் புரிய, பட்டெனத் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
“வேதா, என்னைப் பாரு” வெற்றி அவளின் முன்னே வந்து நின்றான்.
“எப்படிச் சார்?” அவளுக்கு மீண்டும் மீண்டும் அதே கேள்விதான் கேட்க முடிந்தது.
“எப்படினு எனக்கும் தெரியல வேதா. உன்னை ரொம்பப் பிடிக்குது. பார்க்க, பேச, ரசிக்க, உன்னோடு நடக்க, சிரிக்க ரொம்பப் பிடிக்குது. அதை அப்படியே பிடிச்சு வச்சுக்க நினைக்கிறேன் நான். ஒருத்தரை வெறுக்கதான் காரணம் தேடணும். விரும்ப ஒரு பார்வை போதும் தானே? இதோ இந்தச் சூரியகாந்தி பூவை பார்த்ததும் உனக்குப் பிடிச்சது போல, உன்னை எனக்கும் பிடிச்சதுன்னு சொன்னா நீ நம்பணும் வேதா”
அதற்கு மேல் அவளால் நிற்க முடியவில்லை. அவர்களின் நண்பர்கள் அனைவரும் சாலைக்குச் சென்றிருக்க, அவர்களை நோக்கி நடந்தாள் வேதா. அவளைத் தன் வேக நடையால் தொடர்ந்தான் வெற்றி.
இருவரும் சாலையைத் தொட்ட நேரம் நண்பர்கள் ஐவரும் இரண்டு வண்டிகளில் பறந்திருந்தார்கள்.
“எங்களை ஃபாலோ பண்ணுங்க” பிரபு வண்டியோட்ட அவன் பின்னால் அமர்ந்திருந்த கௌசல்யா, காந்திமதி இருவரும் கத்தினார்கள்.
வெற்றியோடு தனித்து விடப்பட்ட வேதா முதல் முறையாக அவனோடு பயணிக்கத் தயங்கினாள். அவனது கேள்வி மட்டுமே அதற்குக் காரணம். பதில் கொடுக்க வேண்டிய நெருக்கடி அவளைச் சோதித்தது.
“எப்பவும் போல நார்மலா இரு வேதா. நான் கேட்டதை மறந்துடு சொல்லல நான். ஆனா, இப்படி மிரண்டு விழிக்காத.” விலுக்கென்று அவனைத் திரும்பி முறைத்தாள் வேதா. அவளின் கண்களைப் பார்த்தபடியே காரில் ஏறி அமர்ந்தான் வெற்றி.
“எனக்கு வீட்ல மாப்பிள்ளை பார்க்கிறாங்க சார்” வெடுக்கெனப் பதில் சொன்னாள்.
“ரொம்ப நல்லதா போச்சு. மாமனார் கிட்டயே மனு கொடுத்து பேசிடுவோம் அப்போ” என்றான். அந்த அதிரடியில் மலைத்து போனாள்.
அவள் வெற்றியின் மேல் தனக்குக் காதல் என்று வீட்டில் போய் நின்றாள் வானமாமலை வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார் என்பது நிச்சயம்.
அவர்கள் வீட்டைப் பொறுத்தவரை காதல் எல்லாம் சினிமாவில் வருவது. அவ்வளவுதான்.
விஜய் அத்தை மகளை விரும்பியதால் தப்பித்தான். இல்லையேல் அவர்களை வெற்றிகரமாகப் பிரித்து வைத்து தண்டித்திருப்பார்கள் அவள் குடும்பத்தினர்.
“நீ ஏற்கனவே அப்செட்டா இருந்த. இதுல நான் வேற.. சாரி வேதா.” வெற்றி காரை நகர்த்தியபடி கரிசனத்துடன் சொன்னான். கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள் வேதவர்ஷினி.
இருபது நிமிடங்களில் நண்பர்கள் இருந்த உணவு விடுதியை சென்றடைந்தார்கள்.
அவர்கள் ஐவரும் ஒரு மேஜையை ஆக்கிரமித்து இருக்க, இவர்கள் இருவரும் வேறு வழியின்றித் தனியாக அமர வேண்டியிருந்தது.
வெற்றி அவளுக்கு வேண்டியதை, விரும்பியதை கேட்டு, அவளுக்காகக் கொண்டு வரச் சொன்னான்.
அவளுக்கிருந்த பதட்டத்தில் அந்தக் காரசார ஆந்திர உணவை அளவில்லாமல் உண்டாள் வேதா.
வெற்றி அலட்டிக் கொள்ளவில்லை. அவள் புறமாக உணவை நகர்த்தி வைத்துக் கொண்டேயிருந்தான்.
வேதா அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. இயல்பாக இருக்கவும் இல்லை.
அவர்கள் உணவு முடித்து மீண்டும் புகைப்படம் எடுக்கச் செல்ல, அவளுக்கு அப்படியே சென்னையை நோக்கி ஓடி விட வேண்டும் போலிருந்தது.
அந்த நாள் எப்போதடா முடியும் என்ற அவஸ்தையுடன் போராடத் தொடங்கினாள்.