நற்காதல் நெய்திடவா – 8 (3)

வேதா தன் வேலைகள் அனைத்தும் முடித்து, வெற்றியின் பார்வைக்கு வைத்து விட்டு அவனது அறையை விட்டு வெளியில் வர, வங்கியினுள் பதறிக் கொண்டிருந்தார் வாடிக்கையாளர் ஒருவர்.

“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சார் உங்ககிட்ட காசு வாங்கிட்டு போனேன். அஞ்சாயிரம் ரூபா கம்மியா இருக்கு சார்” அந்தப் பெண் பதறிக் கொண்டிருந்தார். எங்கே தன்னை நம்பாமல் போய் விடுவார்களோ என்ற பதட்டமும், பயமும் அவர் குரலில் அதிகமாகத் தொனித்தது.

“கேஷ் மெஷின் எண்ணி தானே பணத்தைக் கொடுக்குது மா? அதுக்கும் மேல நீங்களும் எண்ணி பார்த்திருப்பீங்க தானே? அப்புறம் எப்படிப் பணம் குறையும்?” வேதாவை தாண்டிக் கொண்டு முன்னே வந்து நின்று கேட்டான் வெற்றி.

“இல்ல சார். நான் எண்ணிப் பார்க்காம, அப்படியே காசை வாங்கி ஹேண்ட் பேகில் வச்சுட்டு வீட்டுக்குப் போய்ட்டேன். அங்க போய் எண்ணிப் பார்த்தா கம்மியா இருக்கு சார்” அந்தப் பெண்மணி பாவமாகச் சொல்ல, மொத்த பணியாளர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

வங்கியின் அன்றைய பணப் பரிவர்த்தனை கணக்கும், கையிருப்பும் மிகச் சரியாக இருந்தது வெற்றி வேந்தனை குழப்பியது. சற்று நேரத்திற்கு முன்புதான் அனைத்தும் சரி பார்த்துக் கணினியில் ஏற்றி, கோப்பில் கையெழுத்து இட்டிருந்தான். இப்போது இப்படி ஒருவர் வந்து நின்றால் என்ன செய்வான்?

கேஷியர்‌ நிர்மல் வீட்டுக்கு செல்ல கிளம்பி நின்றிருந்தவர் முன்னே வந்தார்.

“நீங்க கடைசியா வந்தவங்க தானே மா? நான் உங்களுக்குச் சரியா தானே பணம் கொடுத்தேன்? எனக்கு நல்லா ஞாபகம் இருக்கே?” என்று சொன்னவர், “பேங்க் நேரம் முடிச்சு வந்துட்டு.. இப்போ காசு கம்மியா இருக்குனு வேற கம்ப்ளைன்ட் பண்றீங்க” என்று அவர் குரலை உயர்த்த, “நிர்மல்” என்று அவரைக் கண்டிப்புடன் அழைத்த வெற்றி நிலைமையைத் தன் கையில் எடுத்தான்.

என்ன நடந்திருக்கும் என்று ஆராயத் தொடங்கினார்கள். வங்கியின் சிசிடிவி பதிவை பார்த்து விடலாம் என்பது வரை நிலைமையின் தீவிரம் செல்ல, “பேங்க் டைம் முடிஞ்சதுக்கு அப்புறம் கஸ்டமர் உள்ள விடக் கூடாதுன்னா இந்தச் செக்யூரிட்டிக்கு எங்கே புரியுது? கடைசியில் என் மண்டைதான் உருளுது” என்று கேஷியர் நிர்மல் கோபமாகப் புலம்ப, வேதா அவரைப் படக்கென்று திரும்பிப் பார்த்தாள்.

அவள் தானே அனுமதித்தது. எல்லாம் தன்னால்தான் என்று விளங்க, வெற்றியின் முன் சென்று நின்றாள். அவளை நன்றாகத் தாளித்து விட்டான் அவன்.

அனைவரின் முன்பும் அவன் பேசி விட, வேதா மௌனமாய் நின்றாள்.

அப்படியொன்றும் அவன் கத்தவில்லை. ஆனாலும், அவளுக்கு அதை ஏற்பது கடினமாகதான் இருந்தது.

அவளுக்கு என்று எந்தச் சலுகையும் வழங்காமல் வேலையில் அவன் காட்டிய கெடுபிடி அவன் மேல் மரியாதையைக் கூட்டியது.

அவளுக்கு வெற்றியை பிடித்தது. பிரியம் என்று வந்து விட்டால் பிடித்ததிற்கான காரணங்களை அதுவே சேர்த்துக் கொள்ளும் தானே!

வெற்றி, நிர்மலுடன் சிசிடிவி அறையை நோக்கி நடக்க, வங்கியின் தொலைபேசி அலறியது.

அடுத்த நிமிடம், “சார் இங்க ஒரு கஸ்டமருக்கு அஞ்சாயிரம் கூடக் கொடுத்திருக்காம் சார். இப்போ கொண்டு வந்து தர்றாங்களாம்” ஶ்ரீனிவாஸ் சொல்ல, அனைவரின் முகத்திலும் நிம்மதி பரவியது.

அவர்கள் விசாரிக்க அது அந்தக் கல்லூரி மாணவி. அவளே பணத்தைக் கொண்டு வந்தும் கொடுத்தாள்.

ஒருவருக்குக் கூடுதலாக, ஒருவருக்குக் குறைத்துப் பணத்தைக் கொடுத்திருந்தார் நிர்மல். இருவரின் படிவத்தையும் ஒன்றாக வாங்கி, தொகையை மாற்றிக் கொடுத்திருந்தார். சிறிய தொகை, சிறிய மாற்றம் என்பதால் தப்பித்தார்கள்.

பணம் என்று வரும் போது தொகை சிறியதாக இருந்தாலும், பிரச்சனை பெரிதாகி இருக்கும். வெற்றி சூழ்நிலையைச் சரியாகக் கையாண்டிருப்பான்தான். ஆனாலும், கவனக் குறைவுகளை அவனால் அப்படியே விட முடியாது. அவன் பதவி அதைச் செய்யவும் விடாது. அதனால், கண்டித்தான் வெற்றி.

ஒரு பெருமூச்சுடன் அனைவரும் கிளம்ப, வெற்றி புன்னகை முகத்துடன் நிர்மலை கடிந்து கொண்டான். ஆனால், வேதாவிடம் பேசும் போது கோபமாக இருந்தான்.

“சில ரூல்ஸ் ஃபாலோ பண்றதுக்குச் சரியான காரணம் இருக்கும் வேதா மேடம். பேங்க் டைம்னு ஒரு ஃபிக்ஸ்ட் டைம் எதுக்காக வச்சுருக்காங்க? நீங்களே சொல்லுங்க?. உங்களால இன்னைக்கு எல்லோரும் லேட்டா கிளம்பறாங்க. நிர்மலுக்கு அவசரம்னுதான் இன்னைக்குச் சீக்கிரம் வேலை முடிச்சு கிளம்ப இருந்தான். இப்போ என்னாச்சு பாருங்க. எட்டு மணிக்கு வீட்டுக்கு போற மாதிரி ஆகிடுச்சு. இனிமே இது போல ஆகாம பார்த்துக்கோங்க” அவன் கத்தவில்லை, திட்டவில்லை, குரலை உயர்த்தவில்லை. ஆனாலும், அவன் பேச்சு அவளைப் பாதித்தது. நல்ல விதமாக.

வெற்றிக்கு வீடு திரும்பிய பின்னும் வேதாவின் முகமே மனதில் மோதியது. அந்தக் கண்கள் இன்று அவனைப் பார்த்த பார்வையில் இருந்த வேறுபாட்டை அவன் நன்றாக உணர்ந்து கொண்டான். ஆனால், அவனால் நம்பத்தான் முடியவில்லை. அப்படியே நம்பினாலும், சில நாட்களில் எப்படி இந்த மாற்றம் என்று சிந்தித்து, நிந்தித்துக் கொண்டான் அவன்.

அவனுக்குத்தான் தெரியவில்லை வேதாவிற்கு அவன் மேல் ஏற்கனவே ஈர்ப்பு இருந்ததை. பல முறை அவனைப் பார்த்திருக்கிறாள். வங்கி சட்டம் குறித்து யோசித்தும் இருக்கிறாள். ஆனால், அந்தப் பார்வை மாற்றம் இப்போதுதான் சற்றே எல்லைகளைக் கடந்திருந்தது.

மறுநாள் அரசு விடுமுறையாக இருக்க, இன்றைக்கு அவளைக் கடிந்து கொண்டிருக்க வேண்டாமோ என்று நினைத்து, பின் மறுத்து நெற்றியில் அறைந்து கொண்டான் வெற்றி.

இந்த வார இறுதியிலும் வேதா கடுப்பாகதான் சுற்றப் போகிறாள் என்று உணர்ந்தவனால் எதுவும் செய்ய முடியாத நிலைதான்.

“என்னம்மா கண்ணு, நீ ஊருக்கு போகல?” அன்றிரவு வேதாவிடம் கௌசல்யா கேட்க, “இல்ல கா. அப்பத்தாக்கு உடம்பு முடியலை. அண்ணா வீட்ல இருந்து நேரா விருதுநகர் போய்ட்டாங்க எல்லோரும். அண்ணியை அவங்க அம்மா வீட்ல விட்டுட்டு போய் இருக்காங்க. என்னை விருதுநகர் வரச் சொன்னாங்க. எனக்குத்தான் போக மூட் இல்ல. நாளைக்கு எங்க அண்ணியை மட்டும் போய்ப் பார்க்கணும்” என்று சொன்னாள் வேதா.

“எனக்கு எங்க அத்தை வீடே பிடிக்காது” என்று புலம்பிக் கொண்டே அவள் சோஃபாவில் விழ, “அப்போ நாளைக்கு அங்க போகாத. சண்டே சாயங்காலம் போய் எட்டி பார்த்துட்டு ஓடி வந்துடு.” என்றாள் காந்திமதி.

“ஓகே டன் கா” சிரித்துச் சொன்னாள் வேதா.

“சரி நாளைக்கு எங்களுக்கும் லீவ்தான். வெளில எங்கயாவது போவோமா?” என்று கௌசல்யா கேட்க, முந்தைய வார நினைவில் தடுமாறினாள் வேதா.

“மால், மூவி, லஞ்ச்? என்ன சொல்ற?” கேட்ட கௌசல்யாவின் முகத்தையே பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.

மறுநாள் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு படத்திற்குப் போனார்கள். ரெட்ஹில்ஸ் கேலக்ஸி மாலில் இருந்த திரையரங்கத்தில் காலை காட்சி காண சென்றார்கள்.

அவர்கள் செல்லும் போது திரையங்கில் விளம்பரம் போட தொடங்க, இருட்டில் இருக்கைகளைத் தேடி சென்று அமர்ந்தார்கள்.

“வேதா, வேதா வெயிட். நீ இங்கேயே உட்காரு” அவளை இரண்டாம் இருக்கையில் அமர வைத்து விட்டு அவர்கள் உள்ளே செல்ல, அவர்களுக்கு இருக்கைகள் போதவில்லை. அந்த வரிசையில் ஏற்கனவே ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். அவளுக்கு அடுத்த இருக்கை மட்டும் காலியாக இருந்தது. அந்த வரிசையின் கடைசியில் யாரோ எழுந்து கொள்ள, ஒவ்வொருவராக இடம் மாறி அமர, இப்போது இருக்கைகள் சரியாக இருந்தது.

அவள் அப்படியே அமர்ந்திருக்க, எழுந்த உருவம் சுற்றி வந்து அவளுக்குப் பக்கத்து இருக்கையை ஆக்கிரமித்தது.

“ஹாய், தேவதர்ஷினி” என்ற குரலில் தூக்கி வாரிப் போட இருளில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் வேதா.

திரையில் இருந்து கசிந்த வெளிச்சம் வெற்றியின் முகத்தில் பளிச்சென்று விழுந்தது.

“வெற்றி சார்.. நீங்க..?”

அவள் அதிர்ந்து பார்க்க, “வெற்றி, வேதா. சார் இல்ல. இப்போ படத்தைப் பாரு” என்றான் வெற்றி.

அவள் அப்படியே அவனைப் பார்த்து அமர்ந்திருக்க, அவளின் முகம் பற்றித் திரையை நோக்கி அவள் கண்களைத் திருப்பினான்.

அவளோ, திரும்பி தன் அக்காக்களை முறைத்தாள்.

“எனக்கும் இது சர்ப்ரைஸ்தான். அவங்க அஞ்சு பேரும் சேர்ந்து பிளான் பண்ணி இருக்காங்க” வெற்றி அவள் புறமாகச் சாய்ந்து முணுமுணுத்தான்.

“ஓ, ஓகே” என்றாள். அவள் முன்புறம் சாய்ந்து பார்க்க, “ஹாய் வேதா” என்று கோரஸ் பாடினார்கள் மோனிகா, பிரதீப் மற்றும் பிரபு.

சிரிப்புடன், “ஹாய், ஹாய்” என்றாள் வேதா.

“அண்ட் ஹியர் வீ மீட் அகைன்” என்று ரசனையுடன் சொன்ன வெற்றியை அவளால் முறைக்கக் கூட முடியவில்லை. ஆனால், அவளையும் மீறி இதழ்கள் பிரிந்து புன்னகைத்தது.

வெற்றி எந்தவிதத்திலும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.

இருவரும் இயல்பாகப் படம் பார்த்தார்கள். நல்லவேளை படத்தில் அதிகக் காதல் காட்சிகள் இல்லை என்று வேதா ஆசுவாசப்பட்டுக் கொண்டாள். அவன் சாதாரணமாக இருக்க, அவளுக்குத்தான் இருப்பு கொள்ளவில்லை. ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சாமர்த்தியமாக மறைத்தாள் வேதா.

திரைப்படம் முடிந்து அங்கேயே மதிய உணவை முடித்து, வெளியில் வந்தார்கள்.

“ஒரு குட்டி ட்ரைவ்?” மோனிகா கேட்க மொத்த பேரும் ஆமோதித்தார்கள். வேதா மட்டும் தனியாக எப்படி மறுப்பு சொல்ல முடியும்?

இன்று அவரவர் இரு சக்கர வாகனத்தில் வந்திருந்தார்கள். வேதாவை லாவகமாக வெற்றியின் பக்கம் தள்ளி விட்டு அவரவர் வாகனங்களில் வேகமெடுத்திருந்தார்கள்‌.

“வீட்டுக்கு போகணுமா வேதா?” வெற்றி கேட்க அவளுக்குச் சங்கடமாகிப் போனது.

“இல்ல, இல்ல. வாங்க, டிரைவ் போகலாம். உங்க ஃப்ரெண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க இல்ல?” என்று அவனது வண்டியில் ஏறினாள்.

மீண்டும் ஒரு நீண்ட பயணம். இம்முறை செங்குன்றம், புழல் ஏரி என உலா போனார்கள்.

கடந்த முறை போலவே வழியில் நிறுத்தி ஆளில்லா நெடுஞ்சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்கள்.

அங்கும் மோனிகா, பிரதீப் இருவரும் புகைப்படம் எடுக்கத் தொடங்க, “டேய், போதும் டா. அடங்குங்க டா” என்று அவர்களைப் பார்த்துக் கத்தினான் பிரபு.

அவனைக் கண்டு கொள்ளாமல் சாலை ஓரத்தில் போக்குவரத்து குறைவாக இருந்த பொழுதை பயன்படுத்தி, அங்குப் பாடலை ஒலிக்க விட்டு, பிரபுவை வெறுப்பேற்ற நடமாடினார்கள்.

அதையும் ரசித்து, பதிவு செய்தபடியே திட்டினான் பிரபு.

“ஏய் நாமளும் போவோம். வா” என்று கௌசல்யா, காந்திமதி இருவரும் அவர்களை நோக்கி ஓட, வேதா மட்டுமே அங்கு நின்றிருந்தாள்.

“பட்டுக்கோட்டை அம்மாளு

உள்ளுக்குள்ளே என்னாளு” துள்ளலான பாடல் ஒலிக்க, வேதா சற்றும் எதிர்பாராத ஒன்று அங்கே நிகழ்ந்தது.

வெற்றி இயல்பாக அந்தக் கூட்டத்தில் இணைந்து ஆடினான். கண்களை அவனை விட்டு அகற்ற முடியாமல் பார்த்தாள் வேதா. வெறும் அரை நிமிட நடனம்தான். ஆனாலும், அத்தனை ஈர்த்தது அவளை.

அந்தக் கணத்தை, அவனை, இயல்பான அவனின் செயலை அத்தனை பிடித்தது. சட்டென எழுந்து ஓடினாள் வேதா.

தனது அலைபேசியை உயர்த்திப் பிடித்திருந்தான் வெற்றி. அனைவரும் குழுவாக நின்று அதில், “செல்ஃபி” எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவசரமாக ஓடிப் போய் அவர்களோடு நின்ற வேதாவின் கண்கள் வெற்றியின் முகத்தில் நிலைத்திருக்க, கேமரா அதைக் கிளிக்கியது.

மற்றவர்கள் கலைந்து நகர்ந்து செல்ல, வேதாவின் பக்கம் திரும்பினான் வெற்றி.

“இப்போ சொல்லு, கல்யாணம் பண்ணிக்கலாமா வேதா?” அவன் மென்மையாகக் கேட்க, “நம்ம வங்கிச் சட்டத்தில் அதுக்கு இடமிருக்கா மேனேஜர்?” என்று அவனிடம் எதிர்கேள்வி கேட்டாள் வேதவர்ஷினி.

error: Content is protected !!
Scroll to Top