“நம்ம அம்மாப்பா மாறவே மாட்டாங்க இல்லக்கா?” பெற்றோரை பார்த்தபடி ரோஜா கேட்க,
“ஊர்ல இருக்க முக்கால்வாசி பேரண்ட்ஸ் இப்படித்தான் இருப்பாங்க ரோஜா. இந்தச் சண்டையும், சமாதானமும்தான் அவங்க வாழ்க்கை. ஒரு வகையில இதுதான் அவங்களை உயிர்ப்போடு வச்சிருக்கு” என்றாள் நித்யா சிரிப்புடன்.
“நீயும், நானும் நம்ம வீட்ல சண்டை போடாம இருக்கமா? இல்லை சமாதானமாகாம இருக்கோமா சொல்லு? உன் செஃப் உனக்காக நேரம் ஒதுக்கலைன்னா உனக்குக் கோபம் வரும் தானே? சண்டை போடுவ தானே? அதைத்தான் பல வருஷமா அம்மா பண்றாங்க” நித்யா கேட்க, ரோஜாவின் தலை தானாக ஆடியது.
“ம்ம்.” என்ற ரோஜா, “அப்பா கூட அம்மா சண்டை போட்டாலே நான் அவங்க பின்னாடியே திரிவேன் கா. நீயும் வீட்ல இல்லாம, அம்மாவை நான்தான் பார்த்துக்கணும்னு நினைச்சு, அம்மா கூடவே எல்லாம் தூங்கியிருக்கேன். இப்போ நினைச்சு பார்த்தா எம்பேரஸிங்கா இருக்கு நித்திக்கா” என்று அவள் சங்கடத்துடன் சொல்ல, “விடு ரோஜா” என்றாள் நித்யா.
“அப்பாகிட்ட இருந்து அம்மாவை காப்பாத்த நினைச்சுருக்கேன். நான் சரியான மக்கு”
“அப்படியில்ல மக்கு. நம்ம அப்பா நல்லவர், அதுனால ஃபீல் பண்ற. மத்தபடி நீ பண்ணதை தப்பு சொல்ல மாட்டேன் நான். ஏன்னா கல்யாணத்துக்கு முன்னாடி நானும் இதையே பண்ணியிருக்கேன். கல்யாணம் நம்ம வாழ்கையில் நிறைய மாற்றங்களை மட்டுமில்ல, இது போல வாழ்க்கை பாடங்களையும் கத்துக் கொடுக்குது ரோஸ் குட்டி.”
“உண்மைதான் கா. ஆனா, அம்மாவும் இப்போ முன்ன மாதிரி இல்லக்கா. அவங்ககிட்ட நிறைய மாற்றங்கள். அவங்களை இப்போ சோகமாவே பார்க்கறதில்ல நான். அப்பா கூடச் சண்டை போட்டா கூட உடனே சிரிச்சு பேசிடுறாங்க.”
“இதுநாள் வரைக்கும் அவங்க நித்யகல்யாணி, ரோஜாவோட அம்மாப்பா. அவங்க உலகம் நம்ம சுத்தி மட்டும்தான் சுழன்றிருக்கும் ரோஜா. அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வர்றது இல்ல. நம்மளை கவனிக்கல, இதானே எப்பவும் அம்மாவோட கம்பிளைண்ட்ஸ்? ம்ம்? இப்பத்தான் அதுக்கு அவசியமே இல்லையே. நம்ம ரெண்டு பேரையும் நல்லபடியா கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க. பொண்ணுங்க வாழ்க்கை செட்டில்ட். சோ, அம்மாவோட பெரிய கவலை அதுலயே காணாம போய்டுச்சு. அதான் இப்போ ஹேப்பியா இருக்காங்க”
“புரியுதுக்கா”
“ரொம்ப வருஷம் கழிச்சு பொண்ணுங்க, அவங்க படிப்பு, கல்யாணம் இந்தக் கவலையெல்லாம் இல்லாம ஃப்ரீயா இருக்காங்க ரோஜா. திரும்பவும் அவங்க வாழ்க்கையின் தொடக்கத்துக்கு வந்திருக்காங்க. இது அவங்களுக்குச் செகண்ட் இன்னிங்ஸ். அவங்களை இப்படிச் சந்தோஷமா பார்க்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு ரோஸ் குட்டி”
“எனக்கும் க்கா, இந்தச் செஃப்கிட்ட பேசி, அம்மாப்பாவை ஒரு அஞ்சு நாளைக்கு எங்கயாவது அனுப்பி வைப்போம்” என்றாள் ரோஜா. நித்யா புன்னகையுடன் தலையாட்டினாள்.
பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான்.
எவ்வளவு வயதானாலும் மகள்களாகவே இருக்கிறார்கள் அவர்கள்.
“என்ன நாம இவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கோம் ரோஸ் குட்டி? பேச்சை மாத்து.” என்ற நித்யா, “அப்பா உனக்கு வீடு வாங்கித் தர்றேன் சொன்னார் இல்ல? என்ன முடிவெடுத்துருக்க?” என்று கேட்டாள்.
“அம்மா என்கிட்ட போன வாரம்தான் சொன்னாங்கக்கா. செஃப் இன்னும் பதிலே சொல்லல. அவரை மீறி எதுவும் செய்ய எனக்கும் விருப்பமில்லன்னு நான்தான் உன்கிட்ட சொன்னேனேக்கா. ஆனா, அப்பாவை நினைச்சாலும் வருத்தமா இருக்கு”
“ம்ம், நீயும், உன் வீட்டுக்காரரும் முதல்ல போய் வீட்டை பாருங்க ரோஜா. வீட்டை பார்த்தா டிசைட் பண்றது ஈஸியா இருக்கும் இல்ல?”
“சரிக்கா.”
“வீடு இன்னும் முழுசா கட்டி முடிக்கல ரோஜா. எப்படியும் ஒரு ஆறேழு மாசம் ஆகும்னு சொன்னாங்க. நீங்க போய்ப் பார்த்திட்டு உங்க விருப்பத்தைச் சொன்னா, அதுக்கேத்த மாதிரி கட்டித் தருவாங்க. வீட்டு இன்ட்டீரியர் எல்லாம் நீயே டிசைன் பண்ணிக்கலாம்” நித்யா சொல்ல,
“என்ன இன்ட்டீரியர் டிசைன்? வீடா, ஆபீஸா?” என்று கேட்டபடி அவர்களிடம் வந்தார் சுகந்தி.
“அது வீடு அத்த..” என்று ஆரம்பித்த நித்யா, தங்கையின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து அமைதியானாள்.
“என்ன வீடு?” சுகந்தி கேட்க,
“அப்பா எங்களுக்கு வீடு வாங்கித் தர்றேன் சொன்னார் அத்த. அதைப் பத்திதான் பேசிட்டு இருந்தோம்” ரோஜா சொல்லவும் சுகந்தி அவளையே அசையாமல் பார்த்தார்.
ரோஜாவின் பெற்றோர் இது குறித்து அவர்களிடம் தெரிவித்திருந்தார்கள்.
அந்தச் செய்தி அப்போது அத்தனை அதிர்ச்சியைச் சுகந்திக்கு தந்திருக்கவில்லை.
ஆனால், இப்பொழுது மருமகள் சொல்லக் கேட்கும் போது மகனின் பிரிவு உறுதியாகி விட்ட உணர்வு.
மகனும், மருமகளும் சொந்த வீட்டிற்குச் சென்றால் தங்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள் என்ற நிஜம் அவரை வலிக்க அறைந்தது.
மனதின் உணர்வுகளை முகத்தில் காட்டி விடாமல் இருக்க மிகுந்த பிரயத்தனப்பட்டார் அவர்.
ரோஜா அவரையே விழியெடுக்காது பார்த்திருந்தாள்.
எப்போதும் உச்சரிக்கப்படாத வார்த்தைகளுக்குத் தானே அதிக மதிப்பு. மாமியாரின் வெளிறிய முகம் அவளை வெகுவாகப் பாதித்தது.
“நாங்க இன்னும் எதுவும் முடிவு பண்ணல அத்த.” என்றாள் வேகமாக.
“அப்பாம்மா ஆசையா கொடுக்கிறதை வேணாம்னு சொல்லாம வாங்கிக்கோ ரோஜா. அவங்க மனசு கஷ்டப்படப் போகுது. சீக்கிரமா ஒரு முடிவை எடுங்க”
என்ற சுகந்தி புன்னகைத்து அவளின் தோளை தட்டி விட்டு கடந்து போனார்.
அவர் சொன்ன வார்த்தைகளில் ஒளிந்திருந்த அர்த்தங்களைத் தேடினாள் ரோஜா.
அப்போது மகள்களுக்குப் பழச்சாறு, காஃபி எடுத்து வந்து கொடுத்தார் சித்ரா.
“அரை மணி நேரத்துல சாப்பிடலாம். அதுவரைக்கும் இது பசி தாங்கும். குடிங்க” என்று விட்டுப் போனார் அவர்.
ரோஜா காஃபி குடித்தபடி கணவனைத் தேடினாள். அந்த ஹாலின் மற்றொரு மூலையில் கையில் மித்ரனை தூக்கி சுமந்தபடி நின்று வெண்பா, வினோத்துடன் பேசிக் கொண்டிருந்தான் அவன்.
சுகந்தி அவர்களை நெருங்கி ஏதோ சொல்ல, வெண்பா, வினோத் இருவரும் வெளியே சென்றார்கள்.
இளமாறன் அப்படியே நிற்க அவனிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார் சுகந்தி.
தங்களின் திருமணத்திற்குப் பின்னர், இளமாறனை முதல் முறையாக அவனது அம்மாவுடன் தனியாகப் பேசி பார்க்கிறாள் ரோஜா.
ரோஜா முகம் அனிச்சையாக மலர்ந்தது.
மித்ரனின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு அவனைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார் சுகந்தி.
குழந்தையின் சிரிப்பு அவரையும் தொற்றிக் கொள்ள, சிரிப்போடு மகனிடம் பேசி மீண்டும் தன் கையில் இருந்த குழந்தையின் கன்னத்தில், நெற்றியில் முத்தமிட்டார்.
ஏனோ ரோஜாவின் கண்களுக்கு மட்டும் சுகந்தி அந்த முத்தங்களைத் தன் மூத்த மகனுக்குத் தந்ததாகவே பட்டது.
அவர் ஏதோ கேட்க, இளமாறன் இயந்திரத்தனமாகப் பதிலளித்துக் கொண்டிருந்தான். ஆனால், சுகந்தி தன் கவனம் மொத்தத்தையும் மகன் மேல் குவித்து அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அந்தக் கண்கள், அவரின் முகம், அதில் தெரிந்த பாசத்தின் ஏக்கமும், வாஞ்சையும், புயலாக அவளைத் தீண்டிச் சென்றது.
மித்ரன் அங்கிருந்தே அவர்களைப் பார்த்து விட்டு, “அம்மா” என்று கத்தி கை நீட்டினான்.
இளமாறன் அவனை வாங்கிக் கொள்ளவும் அமைதியானான் அவன். சுகந்தி மகனிடம் தலையசைத்து வீட்டினுள் சென்றார்.
மித்ரனை வீட்டின் பின் பக்கத்திற்குத் தூக்கிச் சென்ற கணவனையே பார்த்தபடி ரோஜா நிற்க, “ரோஸ் குட்டி, என்னை ஜட்ஜ் பண்ணக் கூடாது சொல்லிட்டு, அதை நீயே செய்ற போல?” என்று கேட்டாள் நித்யா.
அவளை அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்து, “ச்சே, இல்லக்கா” என்றாள் ரோஜா.
“உன் செஃப்க்கு என்ன கோபம்னு முதல்ல கண்டுபிடி. எல்லாத்துக்கும் ஒதுங்கிப் போகணும்னு அவசியம் இல்ல ரோஜா. சிலதில் தலையிடலாம். தப்பில்ல”
“ம்ம்”
“வேடிக்கை பார்க்குறது எல்லா நேரமும் வேலைக்காகாது”
“….”
“உங்க அத்த மேல உனக்கும் கோபமா என்ன?”
“கோபம்னு இல்ல. எனக்கு அதை எப்படிச் சொல்லன்னு தெரியலக்கா.” என்றாள் ரோஜா.
“என்னை யாராவது ரொம்ப ஹர்ட் பண்ணா நீ என்னக்கா பண்ணுவா?” அவள் கேட்க,
“யார், எவர்னு பார்க்காம அடி வெளுத்துடுவேன்” என்றாள் நித்யா.
சிரித்தாள் ரோஜா.
“உண்மையைச் சொல்லணும்னா நானும் அதான் பண்றேன் கா. அத்தை, மாமா, கஸ்தூரி பாட்டி இவங்க பண்ணது எதையும் நான் ஜட்ஜ் பண்ண விரும்பல. ஆனா, இன்னைக்கு நான் நேசிக்கிற என் ஹஸ்பண்டை இவங்க ஒரு காலத்தில் ஏதோ விதத்தில் ஹர்ட் பண்ணாங்க. இப்பவும் பண்றாங்கன்னு நினைக்கும் போது, என்னை அறியாமயே அவங்க மேல ஒருவித வெறுப்பு வந்திடுது கா. நான் வேணும்னு அதைச் செய்யல. ஆனா, சட்டுனு அதை மாத்திக்கவும் முடியல”
“எனக்குப் புரியுது ரோஜா. ஆனா நீயொரு விஷயத்தை மறக்காத. முப்பது வருஷத்துக்கு முன்னாடி அவங்க சின்ன வயசில் நடந்ததுக்குச் சரியான காரணங்களோ, நம்மைச் சமாதானப்படுத்தும் நியாயங்களோ இல்லாம இருக்கலாம். ஆனா, இன்னைக்கு அவங்க மனசு மாறி இருக்கு. அவங்க மாறியிருக்காங்க. நீ அதை மட்டும்தான் பார்க்கணும்”
“ம்ம்” என்றாள் ரோஜா ஆழ்ந்த யோசனையுடன்.
“தான் பெத்த பிள்ளையை எப்படித் தனியா விட்டு தவிக்க விடலாம்? பிள்ளையை விடப் படிப்பு முக்கியமா? இந்தப் பிள்ளையைப் பார்க்காம எப்படி இன்னொரு பிள்ளை பெத்துக்கலாம்னு நமக்கு ஆயிரம் எப்படித் தோணலாம். ஆனா, அது அவங்க வாழ்க்கை ரோஜா. அந்த முடிவுகளை எந்தச் சூழ்நிலையில் எடுத்தாங்க, எதுக்காக எடுத்தாங்க, எவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தாங்கன்னு நமக்குத் தெரியாத போது, ஈஸியா அந்த முடிவுகளைக் கேள்வி கேட்க கூடாதுல்ல? சரி, அவங்க மேல தப்பே இருந்தாலும், நம்ம கோபத்தால நடந்ததை மாற்றிட முடியுமா ரோஜா? இல்லை தானே?”
“…..”
“யார் தவறுக்கும் நாம நீதிபதியாகக் கூடாது ரோஜா. நம்ம வீட்ல நடந்த எத்தனையோ சண்டையில் நாம அப்பாவை குற்றவாளியாக்கினது கிடையாது தானே? அதே பார்வையில் இதையும் பாரேன்.”
“நம்ம அப்பாவை பத்தி பேசாத நித்திக்கா.”
“சரி ரோஸ் குட்டி. நம்ம அப்பா பெஸ்ட்தான்” என்று ரோஜாவின் கன்னம் தட்டிச் சொன்னாள் நித்யா.
“ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்கும் ரோஜா. அப்படிப் பார்க்கும் போது உன் செஃப் ரியாக்க்ஷன் வேணும்னா நியாயமா இருக்கலாம். ஆனா, அது அவங்க அம்மாக்கு அநியாயமா மாறிடாம பார்த்துக்கோ” நித்யா அந்த வார்த்தைகளைச் சொல்லவும், ரோஜா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள்.
“எல்லாத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கும் ரோஜா. பல கோணங்கள் இருக்கலாம்.”
“ஆனா, நிச்சயமா ஒரே நியாயம் இருக்க முடியாது. அதானேக்கா?”
“நிச்சயமா ரோஜா. சுகந்தி அத்தை நியாயம், உனக்கு அநியாயமா கூடப் படலாம். ஒரு காலத்துல அம்மா, அப்பா சண்டையை நாம பார்த்த விதமே வேற. ஆனா, இன்னைக்கு நியாயமான பார்வையோட அதை அணுகறோம் இல்லையா?”
“ம்ம். புரியுதுக்கா. இதையும் நான் அப்படியே டீல் பண்ண டிரை பண்றேன்” ரோஜாவுக்குத் தெளிவு வந்திருந்தாலும், தயக்கம் விலகவில்லை. நித்யாவிடம் பேசிய பிறகு பல நாட்களாக அவள் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் சற்றே விலகியது போல உணர்ந்தாள் ரோஜா.
அந்நேரம் இளமாறன், சசிகுமார் இருவரும் அங்கு வர, நால்வரும் ஒன்றாக உணவருந்த சென்றார்கள்.