“நீங்க வெற்றியோட கார்ல வாங்க. நாங்க உங்க வண்டியை யூஸ் பண்ணிக்கிறோம். பிளீஸ்” கௌசல்யாவின் கைப் பிடித்துக் கெஞ்சலாக அவள் கேட்க, வேதாவை பார்த்து விட்டு சம்மதித்தாள் கௌசல்யா.
“தேங்க்யூ கேர்ள்ஸ்” என்று குதித்துக் கத்திய மோனிகா, “நீங்க வெற்றி கூடப் போங்க” என்றபடி அவர்களிடம் வண்டிச் சாவிக்காகக் கை நீட்டினாள்.
கௌசல்யாவின் வண்டியில் மோனிகா, பிரதீப் இருவரும் பயணிக்க, காந்திமதியின் வண்டியில், அவள் வண்டியை இயக்க, பின்னே அமர்ந்து பிரபு புகைப்படங்கள் எடுப்பது என முடிவானது.
வேதாவிற்கு இதிலெல்லாம் பெரிதாக விருப்பம் கிடையாது. அது குறித்த விமர்சனமும் கிடையாது. அதனால் நடப்பதை அமைதியாக வேடிக்கைப் பார்த்தாள் அவள்.
அந்தக் காலை வேளையை நண்பர்கள் அவனுக்குச் சாதகமாக மாற்றியிருக்க வெற்றியும் கைக் கட்டி நின்று நடப்பதை கவனித்தான்.
அவனுக்கு அருகில் வந்த மோனிகா, “ஜஸ்ட் டேக் திஸ் சான்ஸ் டா” என்று அக்கறையுடன் சொல்லி விட்டுப் போனாள்.
வேதா வேறு வழியின்றி அவனிடம் வந்தாள். மற்ற நால்வரும் இரண்டு வண்டிகளில் பறந்திருக்க, வேதா, கௌசல்யா இருவரும் வெற்றியிடம் வந்தார்கள்.
“என் ஃப்ரெண்ட்ஸ் உங்களை டிஸ்டர்ப் பண்ணலையே?” என்று அவன் கேட்க, “எவ்ளோ சீக்கிரம் கேட்டுட்டீங்க சார்?” என்று அவனுக்கு நக்கலாகப் பதில் சொன்னாள் வேதா.
“அதானே, வண்டியை வாங்கிட்டு அவங்க எப்பவோ போயாச்சு. இப்போ கேட்கிறீங்க மேனஜர் சார்?” கௌசல்யாவும் அதையே சொல்ல, “சாரி” சிரிப்புடன் மன்னிப்பு கேட்டான் வெற்றி.
“இட்ஸ் ஓகே சார்” என்றாள் வேதா.
“வாங்க. நாமளும் போகலாம்” அவன் சொல்ல மூவரும் காரை நோக்கி நடந்தார்கள்.
“வேதா, நான் பின்னாடி உட்காருறேன். எனக்குத் தூக்கமா வருது.” சொன்ன கௌசல்யா, பின் கதவை திறந்து ஏறிக் கொண்டாள்.
வேதவர்ஷினி முன் பக்க இருக்கையில் அமர்ந்தாள்.
வெற்றிக்கு அதுவொரு நல்ல வாய்ப்பு. ஆனாலும், அவளிடம் எதுவும் பேசவோ, பகிரவோ அவனுக்குத் தோன்றவில்லை. அவளின் அண்மையே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.
இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா எனக் குடும்பமே அவர்களுக்காக இசைக்க இனிமையாய் ஒரு நீண்ட பயணம். அவர்களுக்கு நடுவில் இருந்த அமைதி கூட அமைதியாக இருந்தது.
கௌசல்யா கார் நகர்ந்த சில நிமிடங்களில் இருக்கையில் சாய்ந்து உறங்கி விட்டிருந்தாள். வேதா திறந்திருந்த கார் கண்ணாடி வழியே விரைந்து மறையும் உலகை வெரித்திருந்தாள்.
விவசாய நிலங்களும், வயலும், மரங்களும் என வித்தியாசமானதொரு சென்னையை அங்கே காண முடிந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. விழிகளில் பசுமையை நிறைத்தாள். அவள் ரசிக்கும் இடங்களில் காரின் வேகத்தைக் குறைத்தான் வெற்றி.
ஒரு மணி நேர பயணத்திற்குப் பின் அவர்களுக்கு முன்னே சென்ற நண்பர்களைச் சாலை ஓரத்தில் பார்த்து நிறுத்தினார்கள்.
சில, பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர்.
இருபது நிமிடங்கள் கழித்துச் சென்னை எல்லையைக் கடந்து ஆந்திராவின் உள்ளே நுழைந்திருந்தார்கள்.
அதற்கு மேல் விழிகளைப் பிரித்து வைக்க முடியாமல் அசதியில், முகத்தில் மோதிய காற்றில் சொக்கி உறங்கி விட்டாள் வேதா.
“வேதா” அவளின் தோளை தொட்டு வெற்றி எழுப்பவும்தான் கண் விழித்தாள் அவள்.
“ஆங், என்ன சார்?” அரண்டு, மிரண்டு கேள்வி கேட்டாள். தூக்க கலக்கத்தில் இருந்தவளுக்கு அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும் ஒரு படப்படப்பு. அவன் தலைக்குப் பின்னே சூரியன் ஒளி வட்டமிட, கந்தர்வனாய்த் தெரிந்தான் அவள் கண்ணுக்கு.
இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தலையைப் பின்னுக்கு இழுத்துக் கண்ணைச் சிமிட்டி சிமிட்டி அவனைப் பார்த்தாள் அவள்.
“ரிலாக்ஸ் வேதா. அவங்க ஃபோட்டோ ஷூட் எடுக்க வேண்டிய இடம் வந்திடுச்சு. அதான் எழுப்பினேன்” அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான் வெற்றி.
“ஓகே. ஓகே” என்ற வேதா நிமிர்ந்து அமர, அவளிடம் தண்ணீர் பாட்டிலை கொடுத்து விட்டு தள்ளிப் போய் நின்றான் அவன். வேதா கீழிறங்கி முகம் கழுவி தெளிவான பின்பு, பின்னிருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த கௌசல்யாவை எழுப்பினாள்.
மூவரும் முன்னே செல்ல, அவர்களின் கண்களை நிறைத்தது அந்தக் காட்சி.
கரும் பூதமாய் மல்லாந்து படுத்திருந்தது நீண்ட மலைத் தொடர். அதன் முன்னே பரந்து விரிந்திருந்தது பச்சைப் பசேல் நிலப்பரப்பு. அந்தப் பச்சைப் பரப்பில் குட்டி குட்டியாய் ஆயிரம் மஞ்சள் சூரியன்கள், சூரிய காந்திப் பூக்களாக மலர்ந்திருந்தது.
“வாவ்” என்ற வேதாவின் கண்களில் தெரிந்த வெளிச்சத்தில் நிலவின் குளிர்.
அங்கிருந்த மலர்களைக் காட்டிலும் அவனை அதிகமாய் ஈர்த்தது வேதாவின் முகம். கௌசல்யா அவர்கள் இருவரையும் சந்தேகமாகப் பார்த்து அங்கிருந்து நகர்ந்தாள்.
அங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தவர்களோடு போய்ச் சேர்ந்துக் கொண்டாள் அவள்.
“வாங்க வேதா” காரை பூட்டி விட்டு வேதாவிடம் திரும்பினான் வெற்றி.
“இந்த இடத்துக்குச் சொந்தக்காரங்க எதுவும் சொல்ல மாட்டாங்களா சார்?” வேதா சந்தேகம் கேட்க, “அவங்ககிட்ட பேசி பெர்மிஷன் வாங்கி இருக்கோம் வேதா. இந்தப் பக்கம் எப்பவாவது நாங்க வர்றது உண்டு. இந்தச் சீசனில் பூ இருக்கும்னு தெரியும். சோ, பெர்மிஷன் கேட்டு வாங்கினோம். இதுக்குப் பே பண்ணியிருக்கோம். அவங்க வேணாம்தான் சொன்னாங்க. இருந்தாலும் நாங்க பே பண்ணிட்டோம்.”
“ம்ம். சூப்பர் பிளேஸ் அண்ட் சூப்பர் ஐடியா” என்று சிலாகித்தாள் வேதா.
சாலையில் இருந்து கீழிறங்க வெற்றி அவளுக்குக் கைக் கொடுக்க, தயக்கத்துடன் அவன் கைப் பற்றிக் கீழிறங்கினாள்.
அவளைப் பொறுத்தவரைதான் வேலை செய்யும் வங்கியில் அவன் உயர் அதிகாரி. அதனால் அவனிடம் நெருங்கி பேச, பழக அவளுக்கு நிறையத் தயக்கங்கள் இருந்தது.
அவனிடம் அவ்வப்போது இயல்பாகப் பேசுவதும், நெருங்குவதும், பின்னர் வங்கிப் பணி நாள் தொடங்கியதும், தோழமை தொலைந்து அலுவல் ரீதியான உறவுக்குச் செல்வதுமாக இருந்தார்கள் அவர்கள்.
“ஹேய் வேகமா வாங்க பா. இங்க ஹெல்ப் தேவைப்படுது” என்று அவர்களைப் பார்த்து கத்தினாள் மோனிகா.
இருவரும் விரைந்து நடந்து அவர்கள் இருந்த இடத்தை அடைந்தனர்.
“ஃபோட்டோ ஷூட்” எடுப்பதற்கான அத்தனை ஆயத்தங்களையும் அங்கு ஏற்கனவே செய்து முடித்திருந்தான் பிரபு. சில புகைப்படங்களும் எடுத்து முடித்திருந்தார்கள்.
“வேதா, நீங்க இந்த வீக்எண்ட் ஊருக்கு போறேன் சொன்னீங்க?” வெற்றி கேட்க, “போகல சார்” என்றதோடு முடித்துக் கொண்டாள் வேதா.
அவர்களை நெருங்கிய பிரபு அவர்களுக்கு ஆளுக்கொரு வேலையைப் பணித்தான்.
அங்கே இருவர் ஜோடியாகப் புகைப்படம் எடுக்க நால்வர் உதவினார்கள்.
அவர்களுக்குப் பின்னே சூரியன் மெல்ல மேலே வந்து கொண்டிருந்தான்.
சூரிய ஒளி அவர்கள் மேல் விழ, குட்டி குட்டி சூரியகாந்தி பூ சூரியன்கள் மத்தியில் நின்று அவர்கள் சிரிக்க, அவர்கள் முகத்தில் இருந்த சிரிப்பில் கோடி சூரியனின் ஒளி தெரிந்தது.
அவளையும் அறியாமல், “வாவ்” என்று வியந்தாள் வேதா.
மோனிகா, பிரதீப் இருவரையும் கிளிக் செய்து கொண்டே இருந்தான் பிரபு. அவன் சொன்னபடி அவர்கள் இடம் மாறி, திரும்பி, சாய்ந்து, அணைத்து எனப் பலவித போஸ்களில் நிற்க, அத்தனையும் அவன் கேமராவில் புகைப்படமாகி இருந்தது.
“ஓகே டன்” என்று முடிவாகப் பிரபு குரல் கொடுக்க, வெளியில் வந்தார்கள். அவர்கள் புகைப்படத்தைச் சரி பார்த்து முடிக்கவும், காலை உணவு உண்ண செல்லலாம் என்றாள் கௌசல்யா.
அப்போது முன் காலை பொழுதாகி இருக்க, “எஸ். போகலாம். பசிக்குது” என்று ஆளுக்கொரு பதிலை சொன்னார்கள். அனைவரின் குரலிலும் பசியிருந்தது.
“ஓகே. கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு க்ரூப் ஃபோட்டோ” பிரபு சொல்ல, நிமிடத்தில் கூடி ஒன்றாக நின்றார்கள். முதலில் சில படங்களைப் பிரபு எடுத்தான். பிறகு நேரம் செட் செய்து விட்டு வந்து அவர்களோடு நின்று அவனும் குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
“தேங்க்யூ கைஸ். எங்க போட்டோ ஷூட்டுக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ்” என்று கத்தினாள் மோனிகா.
“அட இதிலென்ன இருக்கு?”
“இதெல்லாம் ஒரு ஹெல்ப்பா? இந்த இடத்துக்கு வந்ததுல எங்களுக்கு ரொம்ப ஹேப்பி” என்று கௌசல்யா, காந்திமதி சொல்ல, வேதா மௌனமாய் நின்றாள்.
“ஓகே. லெட்ஸ் பேக் அப். சாப்பிட்டு வந்து மிச்ச போட்டோஸ் எடுப்போம்” பிரபு கத்த, அவனது உபகரணங்களை எடுக்க அனைவரும் உதவினார்கள்.
வேதா சோம்பலாக, அமைதியாக இருக்க, “வேதா, என்னாச்சு? உடம்பு சரியில்லயா?” என்று கேட்டான் வெற்றி.
“அச்சோ இல்ல சார். ஐ அம் ஃபைன். சும்மா இவங்க பேசுறதை பார்த்திட்டு அமைதியா இருந்தேன். அவ்ளோதான்” புன்னகைத்து சொன்னாள். அந்தப் புன்னகை அவன் முகத்திலும் எதிரொலித்தது.
அவர்களுக்கு எதிர்ப்புறம், “ஆமா. ஒரு விஷயம் சொல்லுங்க. உங்களோடது லவ் மேரேஜா? அரேஞ்ச்டு மேரேஜா?” என்று மோனிகாவிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தாள் காந்திமதி.
“லவ்வோ லவ்வு. எங்க கூடக் காலேஜ் படிக்கும் போதிருந்து இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. வீட்ல போராடி இப்போதான் சம்மதம் வாங்கி இருக்காங்க” பிரபு சொல்ல, பிரதீப், மோனிகா முகத்தில் வெட்க பூரிப்பில் மிளிர்ந்தது புன்னகை.
“அப்படியா? எப்படி? உங்க காதல் கதையைக் கொஞ்சம் சொல்லுங்க, கேட்போம்” கௌசல்யா ஆர்வத்துடன் கேட்டாள்.
“என்ன சொல்ல?” என்று மோனிகா தயங்க, “அட, உங்களுக்குக் காதல் வந்த கதையும், காரணமும் சொல்லுங்க” என்றாள் காந்திமதி.
“காதல் என்பது மிக அற்பமானது,
அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பக்காரணங்களே போதும்” என்று ஜெயகாந்தனின் வரிகளைச் சத்தமாகச் சொன்னாள் வேதா. அதைக் கேட்டதும் அத்தனை பேரும் வெடித்துச் சிரித்தார்கள்.
“மச்சா, பாவம் நீ” என்று தூரத்தில் இருந்து வெற்றியை பார்த்து வாயசைத்துச் சொன்னான் பிரதீப்.
வெற்றி திரும்பி வேதாவை பார்க்க, சங்கடத்துடன் நாக்கை கடித்துக் கண்ணை மூடித் திறந்தாள் அவள்.
“சாரி” என்றாள் அவனைப் பார்த்து.
“இட்ஸ் ஓகே” என்ற வெற்றி, அங்கிருந்த டிரைபாடை (Tripod) எடுத்தான்.
“வேதா சொன்ன மாதிரி அற்ப காரணம்தான். எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சது. அப்படியே காதலில் விழுந்துட்டோம்” பிரதீப்பின் கைக் கோர்த்து அணைத்து நின்று சொன்னாள் மோனிகா.
“சூப்பர்” என்ற கௌசல்யா, அவளை விட்டு சில அடிகள் தள்ளி நின்று கேமராவை அதற்குரிய பையில் பத்திரப்படுத்திக் கொண்டிருந்த பிரபுவிடம், “உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க போட்டோகிராபர் சார்” என்றாள்.
“என் மேல எந்தப் பொண்ணுக்கும் லவ் வரல மா” என்று சோகம் போலச் சொன்னான் அவன்.
“அச்சோ. சோகம் போங்க. சரி விடுங்க. உங்க கல்யாண ஃபோட்டோ ஷூட் எப்போ?” என்று கௌசல்யா கேட்க, “கல்யாணமா?” என்றவன், “உங்களுக்கு எப்போ கல்யாணம்?” என்று விளையாட்டு போலக் கேள்வியைத் திருப்பி அவளிடமே கேட்டான்.
“ஆமா, உங்களுக்கு எப்போ கல்யாணம்?”
அவள் சிரித்தபடி மீண்டும் அதே கேள்வியை அவனிடம் கேட்டாள்.
பிரபு நன்றாகத் திரும்பி அவனுக்கு அடுத்து நின்று எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த காந்திமதியிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான்.
“உங்களுக்கு எப்போ கல்யாணம்?” நொடியில் அதுவொரு விளையாட்டு போலாகி இருந்தது. காந்திமதி பிரபுவை பார்த்து சிரித்து விட்டு, தலையைத் திருப்பினாள். கொஞ்சம் தள்ளி அவளுக்கு அடுத்து நின்றிருந்த வேதாவிடம் அந்தக் கேள்வியைக் கடத்தினாள் அவள்.
“ஆமா, உங்களுக்கு எப்போ கல்யாணம்?”
அடுத்த நொடி வேதா சிரித்துக் கொண்டே வெற்றியின் பக்கம் திரும்பி, எந்தவித முன் யோசனைகளும் இல்லாமல், எல்லோரையும் போலக் கேட்டாள்.
“ஆமா, உங்களுக்கு எப்போ கல்யாணம்?”
“நீ சம்மதம் சொன்னதும் வேதவர்ஷினி.” அவள் கண்களை ஊடுருவி, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான் வெற்றி வேந்தன்.
அந்தப் பதிலில் வேதாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, உறைந்து நின்றாள் அவள்.