“ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்.” தேநீர் கடையில் இருந்து கசிந்த பாடல் வெற்றியின் செவியை நிறைத்து இதயத்தில் ஒலித்தது.
மனதில் பாடலை மெல்ல முணுமுணுத்தபடி, எதிரே நடந்து வந்த தன் காதல் தேவதையைக் கண்ணிமைக்காமல் பார்த்தான். அவன் அணிந்திருந்த கருப்புக் கண்ணாடி அவனது காதல் பார்வையைக் கனகச்சிதமாக அவளிடம் இருந்து மறைத்திருந்தது.
அந்த வார இறுதி விடுமுறையைக் கழிக்க ஊருக்குச் செல்கிறேன் என்று சொன்னவள், இங்கே எப்படி வந்தாள் என்ற ஆச்சரியம் அவனுக்குப் பின்னே போய் விட, வேதா மட்டுமே விழிகளில் விழுந்தாள்.
“வேதா, அது உன் மேன்மை பொருந்திய மேலாளர் தானே?” கௌசல்யா சத்தமாகக் கேட்க, “எக்கா, சத்தமா சொல்லாதீங்க. அவருக்குக் கேட்கப் போகுது கா” கௌசல்யாவை பல்லைக் கடித்துக் கடிந்துக் கொண்டாள் வேதா.
“ஓ, நீ அவருக்குப் பேர் வச்சுருக்கறது சாருக்கு தெரியாதா?” கௌசல்யா அவளைச் சிக்க வைக்கும் சிரிப்புடன் கேட்க, கண்களை உருட்டினாள் வேதா.
“நீங்களே போய் அவர்கிட்ட போட்டு கொடுத்திடுவீங்க போலக் கா” கடுப்புடன் சொன்னாள். “ச்சே, ச்சே அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் டா” என்று சிரிப்புடன் கௌசல்யா சொல்ல, இருவரும் முன்னோக்கி நடந்தனர்.
வேதா ஊருக்குச் செல்வதாக இருந்ததால் வெற்றி வங்கிப் பொறுப்பை, வேதாவிற்கு அடுத்தப் பதவியில் இருந்த ஶ்ரீனிவாஸிடம் கொடுத்து விட்டு விடுமுறையைக் கழிக்க வெளியில் வந்திருந்தான்.
அவன் கண்களில் இருந்த கண்ணாடியை கழற்ற, அவன் பார்வையைக் கவனித்து விட்டு புன்னகைத்தாள் வேதா.
“மார்னிங் சார்” என்றாள் சகஜமாக. மெலிதான புன்னகையுடன் தலையசைத்தான் வெற்றி.
“ஹலோ சார்..” கௌசல்யா, காந்திமதி இருவரும் அவனிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்க, அவர்களை விட்டு நகர்ந்து உள்ளே போனாள் வேதா.
அந்தச் சிறிய உணவு விடுதியின் இருக்கைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப் பட்டிருக்க, அதன் வாயிலில் இருந்த தேநீர் கடையின் முன் சென்று நின்றாள் அவள்.
இளையராஜாவும், எஸ்பிபியும் இடைவெளி விடாமல் இசைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இளங்காலை பொழுதில் இசை செவியை நிறைப்பதே அவளுக்கு ஏகாந்த உணர்வை தந்தது.
அங்கிருந்த மர பெஞ்சில் அமர்ந்து, “எனக்கு ஸ்ட்ராங்கா, சீனி கம்மியா ஒரு காபி ண்ணா.” கடையில் பாலை நுரைக்க ஆற்றிக் கொண்டிருந்த மாஸ்டரிடம் சொன்னாள்.
“ரெண்டு காஃபியா போடுங்க. மேடம் சொன்னது போல” அவனுக்கான ஆர்டரை சொல்லி விட்டு, அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான் வெற்றி.
வேதா இயல்பாகப் பாடலை ரசித்தபடி, பெஞ்சில் விரல்களால் தாளமிட்டாள்.
“இவங்க போடுற பாட்டு கலெக்சன் எல்லாம் வேற லெவல்ல இருக்கு இல்லக்கா?. அதுவும் முழுக்க முழுக்க எஸ்பிபி பாட்டு கேட்க, செம்ம ஃபீலா இருக்கு. என்னமோ அவரே எதிர்ல நின்னு பாடுற போல ஒரு பிரம்மை” அவளுக்கு எதிரே வந்து அமர்ந்த காந்திமதியை பார்த்துச் சொன்னாள் வேதா.
“இந்தக் காத்துல கண்டிப்பா எஸ்பிபியின் குரல் கலந்திருக்கும் வேதா. அதுனால கூட உங்களுக்கு அப்படியொரு பிரம்மை வந்திருக்கும்” சொன்ன வெற்றியை புருவங்களை நெரித்து அவன் பேச்சின் பொருள் விளங்கா பார்வை பார்த்தாள் வேதா.
அவள் கண்களைப் பார்த்து மெல்ல பின்னே சாய்ந்தான் வெற்றி. அவன் கை நீட்டி தூரத்தில் இருந்த மரங்கள் அடர்ந்த வீட்டை சுட்டிக் காட்டினான்.
“அது எஸ்பிபியின் பண்ணை வீடு வேதா.” என்றான்.
மெல்ல அவன் பக்கமாகச் சாய்ந்து தலையை நீட்டி முன்னே எட்டிப் பார்த்தாள் வேதா. எந்தவித ஆடம்பரமும் இன்றி, மரங்கள் சூழ்ந்த, அந்த அமைதியான பகுதியில் அமைந்திருந்த வீட்டை, தோட்டத்தைப் பிரமிப்புடன் பார்த்தாள். அத்தனை பெரிய ஜாம்பவானின் பண்ணை வீடு அது என்பதற்கான எந்தத் தடயங்களும் அங்கில்லை. அவரைப் போலவே எளிமையாக, அழகாக இருந்தது வீடு.
“நாம உள்ள போகலாமா சார்?” ஆவலாக அவள் கேட்க, “இப்போ யாரையும் அலவ் பண்றது இல்ல வேதா.” அவளின் ஆசையை நிறைவேற்ற முடியாத வருத்தத்தில் சொன்னான் வெற்றி.
“ம்ம். வெளில இருந்து பார்த்ததே போதும்.” அவள் சொல்ல, “காஃபி சாப்பிட்டு, பக்கத்தில் போய்ப் பார்க்கலாம்” என்றான் வெற்றி. புன்னகையுடன் சரியென்றாள் வேதா.
அவர்கள் இருவரும் இயல்பாகப் பேசுவதைப் பார்த்து, “என்ன நடக்குது இங்க?” என்று கௌசல்யாவிடம் கிசுகிசுத்தாள் காந்திமதி.
“ஹேய், ரெண்டு பேரும் ஒன்னா வேலைப் பார்க்கிறாங்க. இதெல்லாம் நார்மல் பா” என்றாள் கௌசல்யா.
“டேய், வெற்றி வேந்தா. எங்கடா போன?” உணவு விடுதியில் இருந்து வெற்றியின் பெயரை யாரோ ஏலம் போட, அனைவரின் பார்வையும் அங்கே சென்றது.
அவனைத் தேடியபடி ஒரு ஆணும், இளம் பெண்ணும் திருமணக் கோலத்தில் வெளியில் வந்தார்கள். அவர்களின் பின்னேயே கேமராவை கைகளில் ஏந்தியபடி ஒருவன் வந்தான்.
“திருட்டுக் கல்யாணமா சார்?” கௌசல்யா ரகசியம் போல வெற்றியிடம் கேட்டாள். வெற்றி வெடித்துச் சிரித்தான்.
அந்தச் சத்தத்தில் திரும்பி அவனைப் பார்த்து விட்டு, அவர்களை நோக்கி வந்தார்கள் அவனின் நண்பர்கள்.
வேதாவின் பார்வை அவர்களின் மேல்தான் இருந்தது. பட்டுச்சேலை, நகை, பூ, மிதமான அலங்காரம் என அத்தனை அழகாக இருந்தாள் அந்தப் பெண். அவளின் கைப் பிடித்து நடந்து வந்தவன் பட்டு வேட்டி சட்டையில் இருந்தான். பட்டுக்கே உரிய ப்ரத்தியேக அழகில் பளபளத்தார்கள் அவர்கள்.
“ஃப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் எடுக்கப் போறோம் மா. அதுக்காக வெளில வந்தோம்.” வெற்றி சொல்ல, “ஓகே ஓகே சார். நல்ல ஜோடிதான். அழகா இருக்காங்க” அவர்கள் மேலிருந்து பார்வையை நகர்த்தாமல் சொன்னாள் கௌசல்யா.
“இந்தாங்க மா, உங்க காஃபி..” இருவருக்குமான காஃபியை அவர்களின் முன்பிருந்த சிறிய ஸ்டூலில் வைத்தார் ஹோட்டல் பணியாளர்.
“தாங்க்ஸ் ண்ணா” தனக்கான காபியை கையில் எடுத்துக் கொண்டு எழுந்து விட்டாள் வேதா. அவளுக்குப் பசித்தது.
அங்கே சூடாக உளுந்தவடை தயாராகிக் கொண்டிருக்க, சுடசுட உளுந்தவடை, தேங்காய் சட்னி ஒரு காகித தட்டில் வாங்கிச் சென்று கௌசல்யாவின் அருகில் அமர்ந்தாள். அவர்களுக்கும் தேநீர் வந்திருக்க அதை அருந்தி கொண்டிருந்தார்கள்.
இங்கே இதற்கிடையில் வெற்றியை அங்கிருந்து சற்றுத் தூரமாகத் தள்ளிக் கொண்டு போய் இருந்தார்கள் அவன் நண்பர்கள்.
பத்தடி இடைவெளிதான் அவர்களுக்கு இடையே இருந்தது. வெற்றியின் கண்கள் வேதாவை தொட்டு தொட்டு அந்தத் தூரத்தை குறைத்துக் கொண்டிருந்தது.
காஃபி ஒரு மிடறும், சட்னி தொட்டு வடையும் விழுங்கிக் கொண்டிருந்தவளை விழுங்கியது அவன் விழிகள்.
அவன் கையில் இருந்த காஃபி அவள் அளவுக்கு ருசிக்கவில்லை அவனுக்கு.
“வெற்றி, மச்சா. அது உன்னோட அசிஸ்டன்ட் மேனேஜர் தானே?” வேதாவை பார்த்தபடி கேட்ட நண்பனின் தோளில் கைப் போட்டு, “இல்ல. என்னோட வருங்காலம்..” கண் சிமிட்டி பதில் சொன்னான் வெற்றி.
“அடப்பாவி டேய், சொல்லவேயில்ல மச்சா. எங்களுக்கு இன்ட்ரோ கொடுடா” மணமகன் கோலத்தில் இருந்த பிரதீப் கேட்க,
“என்னடா சொல்லி வச்சுட்டு ஒரே மாதிரி ட்ரெஸ் பண்றீங்களா?” என்று கிண்டலாகக் கேட்டாள் மணமகளாக நின்ற மோனிகா.
வெற்றி அப்போதுதான் அந்த ஒற்றுமையைக் கவனித்தான். இருவரும் கருப்பு ஜீன்ஸ், இளநீல நிற சட்டையில் இருந்தார்கள்.
அவனைப் போலவே சட்டையின் கையை மடித்து விட்டு அமர்ந்திருந்தாள் வேதவர்ஷினி. கைகளை வீசி காற்றில் அபிநயித்துக் கதைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளோடு சேர்ந்து அசைந்தாடி கொண்டிருந்தது அவளின் காதில் தொங்கிய நீண்ட தோடு. கூந்தல் அதன் இஷ்டத்திற்குப் பறந்து கொண்டிருந்தது. அது எதுவுமே அவளது அழகை குறைத்துக் காட்டவில்லை.
சேலையில் பார்க்கும் போது வேறொரு பெண்ணாகத் தெரியும் வேதா, இன்று அவளின் வயதிற்கு உரிய தோற்றத்தில் சின்னப் பெண்ணாகத் தெரிந்தாள். எதுவும் அவனது பார்வையை மாற்றவில்லை. அவளை ரசித்துப் படம் பிடித்தது வெற்றியின் விழிகள்.
“டேய், உன்னைதான் டா. இப்படி எங்களைக் கூட வச்சுட்டு அப்பட்டமா சைட்டடிச்சுட்டு இருக்க.” மோனிகா அவனைக் கேலி செய்ய, “வாங்க டா, வெற்றி சார்பில் ஒரு ஹாய் சொல்லிட்டு வருவோம். அவனோட வருங்காலத்து கிட்ட” கேமராவை சுமந்திருந்த பிரபு சொல்ல, “டேய் பேசாம இருங்க டா. அவளுக்கு எதுவும் தெரியாது.” என்றான் வெற்றி.
“என்னது தெரியாதா? அப்போ வருங்காலம்னு சொன்ன?”
“சொன்னேன். ஆனா..” என்று இழுத்து, “அப்புறமா இதைப் பத்தி பேசுவோம். இப்போ அவ கிளம்புறா அவளைக் கவனிப்போம்” என்று அவன் முன்னே நடக்க, அவனைப் பின் தொடர்ந்தனர் அவனின் நண்பர்கள்.
பெண்கள் மூவரும் காஃபி, வடை சாப்பிட்டு கடையை விட்டு கிளம்ப யத்தனித்தனர். வெற்றியிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, அவனைத் திரும்பிப் பார்த்தாள் வேதா. அந்நேரம் அவனே அவர்களை நோக்கி வந்தான்.
“ஹாய், நான் மோனிகா. வெற்றி ப்ரெண்ட்” வேதாவிடம் முந்திக் கொண்டு தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டாள் மோனிகா.
மோனிகா, வேதாவின் கையைப் பற்றிக் குலுக்க, “வேதவர்ஷினி” என்றாள் அவள். அப்படியே ஒவ்வொருவராகத் தங்களை மற்றவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
“அப்புறம், இந்தப் பக்கம் என்ன வேலையா வந்தீங்க? ரொம்பத் தூரமா?” அவர்களிடம் மோனிகா விசாரித்தாள்.
வேதா திரும்பி கௌசல்யாவை பார்க்க, “சும்மா ஒரு டிரைவ் வந்தோம். வேதா ரொம்ப அப்செட்டா இருந்தா. அதான் அவளைச் சரி பண்ண ஒரு லாங் ட்ரைவ் போகலாம்னு கிளம்பி வந்தோம்” கௌசல்யா பதில் சொல்ல, வெற்றியின் பார்வை வேதாவின் மீதே நிலைத்திருந்தது.
“எதற்கு அப்செட்?” என்று யோசித்தான் அவன்.
“முன்தினம் இவனிடம்தான் வாங்கிக் கட்டினேன். போதாதற்குத் திட்டமிட்டபடி ஊருக்கு வேறு செல்ல முடியவில்லை” என்று மனதிற்குள் புலம்பினாள் வேதா.
“லாங் ட்ரைவ் மாதிரி வண்டியிலயே ஆந்திரா பக்கம் வரை போய் எட்டிப் பார்த்துட்டு, கொஞ்சம் இயற்கையை ரசிச்சுட்டு, மதியம் காரசாரமா ஒரு ஆந்திரா மீல்ஸ் சாப்பிட்டு ஈவ்னிங் வீடு திரும்புற பிளான்” அவர்களின் கேள்விக்கு விரிவான விளக்கம் கொடுத்தாள் காந்திமதி.
“சூப்பர் போங்க. நாங்களும் அந்தப் பக்கம்தான் போறோம்” உற்சாகமாகச் சொன்னான் பிரபு.
“அப்படியா?” ஆச்சரியப்பட்டாள் காந்திமதி.
“ஆமாங்க. அங்க நாகலாபுரம் தாண்டி கோனே ஃபால்ஸ் போற வழியில சூரியகாந்தி பூத்தோட்டம் இருக்கும் இல்ல? அங்கதான் போறோம். போட்டோஸ் எடுக்க. சம்மங்கி, சாமந்தி, மல்லிப்பூ, ரோஜான்னு நிறையப் பூந்தோட்டங்கள் இருக்கும் இல்ல அங்க. அது ஃபோட்டோ எடுக்கச் செம்ம லொகேஷன். பின்னாடி மலை வேற இருக்கும்” ஆர்வ மிகுதியில் துள்ளியது மோனிகாவின் குரல்.
“நீங்க சொல்றதுலயே தெரியுது. அந்த இடம் அழகா இருக்கும்னு. நாங்களும் போய்ப் பார்க்கறோம்.” என்ற வேதா, “உங்க போட்டோஸ் ரொம்ப அழகா வரும். தென் கங்கிராட்ஸ் ஃபார் யுவர் மேரேஜ்” என்றாள் புன்னகைத்து.
“தேங்க்யூ வேதா” என்றாள் மோனிகா.
“அப்போ நாங்க போய்ட்டு வர்றோம். சீ யூ” என்ற வேதாவின் பார்வை வெற்றியின் பக்கம் திரும்பியது.
“வர்றோம் சார்” என்று அவள் சொல்ல,
“என்ன இவ்வளவு சீக்கிரம் பை சொல்றீங்க? உங்களை அப்படியெல்லாம் விட முடியாது. எங்க கல்யாணத்துக்குக் கூப்பிடுவேன். கண்டிப்பா வரணும். என்ன?” மோனிகா சொல்ல, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தாள் வேதா.
அந்தப் பக்கம் கௌசல்யா, காந்திமதி இருவரும் பிரபு, பிரதீப் இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தனர்.
“எங்க மேரேஜிக்கு இன்வைட் பண்ணா வர மாட்டீங்களா வேதா?” மோனிகா மீண்டும் அழுத்தி கேட்க, சம்பிரதாயத்திற்கு என்று, “வர்றேங்க” என்று பதில் சொன்னாள் வேதா.
“மோனி, இவங்க ஸ்கூட்டியில் வந்திருக்காங்க. நம்ம போட்டோ ஷூட்டுக்கு வாங்கிப்போமா?” அவளின் வருங்காலக் கணவன் பிரதீப் கேட்க, “நல்ல ஐடியா பிரதீப். இடையில நிறுத்தி ஃபோட்டோ எடுக்கவும் வசதியா இருக்கும்” என்று உடனடியாகப் பச்சைக் கொடி காட்டினாள் மோனிகா.
கௌசல்யாவால் சட்டென அவர்களின் வேண்டுகோளை மறுக்க முடியவில்லை.