என் ஜீவனில் உறைந்திடு – 24 (1)

அன்று காலையிலேயே சங்கரனுக்கு மருத்துவமனையில் முக்கிய வேலையிருந்தது. காரில் இருந்து இறங்கி மருத்துவமனைக்குள் காலடி எடுத்து வைத்தவரின் கவனம் எல்லாம் மனைவி முந்தைய இரவு பேசியதிலேயே உழன்றது.

மகனை முன்னிட்டு மீண்டும் மனைவியின் கண்ணீரை காண்பது அவரைப் பெரும் குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கியது.

அம்மா, மகனுக்கு இடையில் பாலமாகப் பல முறை முயன்றிருக்கிறார் அவர்.

அவர்களுக்கு இடையில் இருந்த அகலம் அதிகம் என்பதினால் ஆரம்பிக்கும் முன்னே அவரின் முயற்சி படுதோல்வியில் முடிந்து விடும்.

நேற்றைய தினம் மருமகளும் கண்ணீருடன் அவரின் அறையில் இருந்து வெளியேறியது அவருக்கு உறுத்தலை தந்தது. மேலும் எதையேனும் பேசி அவளைத் தொல்லைச் செய்யக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அவளைப் போக விட்டார் அவர். கணவன் குறித்து அவள் கேட்டதை ஜீரணிக்க அவகாசம் கொடுத்து அவளை மீண்டும் சந்திக்க விரும்பினார். ஆனால், ரோஜா வீடு சென்று விட்டாள் என்று அறிந்ததும் மனம் நொந்து போனார்.

அதனாலேயே மனைவியிடம் நடந்தவை அனைத்தையும் பகிர்ந்து கொண்டார் அவர்.

“நீங்க ரோஜாகிட்ட சொல்லிட்டீங்களா? அன்னைக்கு அவங்க நம்ம வீட்டுக்கு வந்தப்போ நானே சொல்லியிருப்பேன். ஆனா, சரி, விடுங்க. ரோஜா என்ன சொன்னா?” சுகந்தி கலவர குரலில் கேட்டார்.

“ரோஜா ஒன்னும் சொல்லல. சட்டுனு கண்ணு கலங்கி போச்சு அவளுக்கு. சாரி மாமான்னு சொல்லிட்டு எழுந்து போய்ட்டா. நான் தான்மா சாரி சொல்லணும்னு மனசுல நினைச்சுக்கிட்டேன்.” அவர் சொன்னதும் சுகந்தி கண்களை மூடி படுக்கையில் சாய்ந்தார்.

“நான் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் பத்தி பேசிட்டு, உடனே இதைச் சொல்லவும் ரோஜா ரொம்ப அப்சட்டான மாதிரி தெரிஞ்சது சுகந்தி. என் தப்புதான். நான் ரெண்டையும் ஒரே நேரம் சொல்லியிருக்கக் கூடாது. நாம பண்ண தப்பை சரி பண்ண ஹாஸ்பிட்டல்ல அவளைச் சேர்க்குற மாதிரி தோனியிருக்க…” கணவர் சொல்லி முடிக்கும் முன்பே, “ஐயோ” என்றார் சுகந்தி.

உடனே சுதாரித்து, “ரோஜா அப்படியெல்லாம் யோசிக்க மாட்டாங்க.” என்று அவருக்கு அவரே சமாதானமும் சொல்லிக் கொண்டார்.

மனைவியின் தோளை ஆதரவாக அழுத்திக் கொடுத்தார் சங்கரன்.

“மாறன் வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் நிச்சயமா ரோஜா சரின்னு சொல்ல மாட்டாங்க. அவங்க முடிவை நாம மதிக்கணும். நம்ம ஹாஸ்பிட்டல் என்னைக்கு இருந்தாலும் நம்ம மூனு பிள்ளைகளுக்குதான். மாறன் பங்கு அவனுக்காகக் காத்துட்டு pதான் இருக்கும். இன்னைக்கு அவனுக்கு வேண்டாம்னா, நாளைக்கு அவனோட பிள்ளைகளுக்குச் செஞ்சுட்டு போறோம். நம்ம பேரப் பிள்ளைகளுக்குச் செய்யறதை அவன் தடுக்க முடியாது.” தீர்க்கமாகச் சொன்னார் சுகந்தி.

“எனக்கு என் பையனோட மனசு புரியுதுங்க. நாம நெருங்க நெருங்க அவன் ரொம்ப விலகிப் போறான். நாம அவனை நெருக்காம விட்டா அவனே நெருங்கி வருவான்னு தோனுது. எனக்கு அவனோட மனநிம்மதிதான் முக்கியம். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் அவன் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கறோம். அதை நாமளே கெடுத்து விட வேண்டாம். பிளீஸ்” என்ற மனைவியின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொண்டார் அவர்.

சுகந்தி பழைய நினைவுகளில் மூழ்கி, அழுது, கரைந்து வெகு தாமதமாக உறங்கிட, மனைவிக்கு ஓய்வை தந்து விட்டு அவர் விரைவாக வேலைக்கு வந்திருந்தார்.

இன்று ரோஜாவிடம் சமாதானம் பேசிட வேண்டும் என்று கேன்டீன் நோக்கி நடந்தார்.

சிவஹரி காலையிலேயே மகள் வீடு சென்றதினால் இயல்பை விடத் தாமதமாகதான் அன்று மருத்துவமனை வந்தார்.

ஏனோ மகளின் சிரித்த முகமே அவரின் மனதில் வலம் வந்தது.

அவள் மனம் வருந்தும்படி மாமனார் அப்படியென்ன பேசியிருப்பார் என்று யோசித்தவருக்கு விசித்திரமாக மாப்பிள்ளையின் நினைவு வரவில்லை. அவரை மகளும், மனைவியுமே மொத்தமாக ஆக்கிரமித்திருந்தார்கள்‌.

அவருக்கு வருடக்கணக்கில் மனைவியுடன் எத்தனையோ மனஸ்தாபங்கள் வந்திருக்கிறது. ஆனால், முன்பு போல மனைவி பதறுவதை அவரால் வேடிக்கைப் பார்க்க முடியவில்லை.

அதிலும் மகளின் பொருட்டு எனும் போது மனைவியின் வருத்தத்தை உதாசீனப்படுத்த முடியவில்லை.

மதியம் வீடு சென்றதும் மனைவியிடம் விசாரித்தறிய வேண்டும் என்று யோசித்துக் கொண்டே அவர் கேன்டீனில் நுழைய, கும்பிட போன தெய்வமாகக் குறுக்கே வந்து நின்றார் சங்கரன்.

“இப்பத்தான் வர்றீங்களா சம்பந்தி?”

“வாங்க, டாக்டர்.”

இருவரும் ஒரே நேரத்தில் பேசினார்கள். சங்கரன் புன்னகைக்க, சிவஹரி, “ரோஜாவை பார்க்க வந்தீங்களா?” என்று கேட்டார்.

“ஆமா. அப்படியே உங்களையும் பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன்” என்றார் சங்கரன்.

“சொல்லுங்க”

“இல்ல, இப்போ வேணாம். உங்களுக்கு வேலை இருக்கும். நாம மதியம் போலக் கொஞ்சம் ஃபிரீயானதும் பேசுவோம்” என்றார் சங்கரன்.

இருவரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றார்கள்.

மகளின் துணையின்றிச் சிவஹரிக்கு ஆயிரம் வேலைகள் இருந்தாலும், அவர் மனது மகளையே தேடிக் கொண்டிருந்தது.

மதிய உணவு வேளை நெருங்க, சங்கரனிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அறைக்குள் நுழைந்ததும், “சொல்லுங்க டாக்டர்” என்றார் அவர்.

அவரை உட்காரச் சொல்லி இருக்கையைக் கைக் காட்டிய சங்கரன், சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பேசினார்.

“நேத்து ரோஜா வருத்தப்படுற மாதிரி பேசிட்டேன் நான். அதான் காலைல அவளைப் பார்க்கலாம்னு தேடினேன். போன்ல பேசியிருக்கலாமேன்னு நீங்க கேட்கலாம். ரோஜா நான் பேசினதுல நேத்து மதியமே வீட்டுக்குப் போய்ட்டான்னு தெரிஞ்சுக்கிட்டேன். அதான் போன் பண்ணி அவளை டிஸ்டர்ப் பண்ணல” சங்கரன் சொல்ல, சிவஹரி அவரைக் கேள்வியாகப் பார்த்தார்.

“நம்ம ஹாஸ்பிட்டல் ஃபோர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்ல ரோஜாவை சேர்க்க ஆசைப்பட்டோம் நாங்க. மாறனையும் கேட்டுட்டுதான் இருக்கோம். அவன் முடியாது சொல்லவும், ரோஜாவை கேட்டோம்.”

“அப்படீங்களா டாக்டர். ரொம்ப நல்லது. ஆனா, மாப்பிள்ளை என்ன காரணம் சொல்றார்?.”

“மாறனுக்கு ஹாஸ்பிட்டல் மேல பெருசா இன்ட்ரெஸ்ட் கிடையாது. அதான் முடியாது சொல்லிட்டான். சரி, எங்க மருமகளையாவது உள்ளக் கொண்டு வரலாம்னு நாங்க நினைச்சோம்.” என்று சங்கரன் சொல்ல,

“எனக்கு உங்க ஆசையும், மனசும் புரியுது. ஆனா, மாப்பிள்ளை முடிவை நான் மதிக்கிறேன்.” என்றார் சிவஹரி.

“இல்ல, ரோஜா மட்டுமாவது..”

“இல்ல டாக்டர். எங்களுக்கு எங்க மக சந்தோஷமா அவ புகுந்த வீட்டு சொந்தங்களோட வாழ்ந்தா போதும். சொத்து எல்லாம் வேணாம்.” பல வருட பழக்கத்தின் காரணமாகச் சிவஹரி குரலில் பணிவிருந்தாலும், மகள் விஷயத்தில் உறுதியாகப் பதிலளித்தவரை, பதிலின்றிப் பார்த்தார் சங்கரன்.

அவரிடம் சொத்தும், சொந்தங்களும் அறவே வேண்டாம் என மகன் முடிவெடுத்து விட்டான் என்று எவ்வாறு சொல்வார் அவர்?

சுகந்தி காத்திருந்த கடைசிக் கர்ப்பிணி பெண்ணுக்கும் மருத்துவ ஆலோசனை கொடுத்து முடித்து அறையில் இருந்து வெளியில் வந்தார். அவரின் கால்கள் நேராகக் கேன்டீன் நோக்கி சென்றது.

“ரோஜா, எங்க?” அங்கிருந்த ஊழியரிடம் விசாரித்தவரின் கண்கள் ரோஜாவை தேடியது.

“ரோஜாம்மா இன்னைக்கு வேலைக்கு வரலைங்க டாக்டர். ஐயாதான் இருந்தார். அவரும் சீஃப் டாக்டரை பார்க்கப் போய் இருக்கார்” என்ற தகவலை பெற்றுக் கொண்டு கணவரின் அறையை நோக்கி நடந்தார் அவர்.

அறைக் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றார். அங்கே சிவஹரியை எதிர்பார்த்துச் சென்றிருந்தாலும், என்ன பேசுவது என்று தெரியாமல் அவர் விழிக்க, “உட்கார் சுகந்தி. என்ன விஷயம்?” என்று சங்கரன் மனைவியை இயல்பாக்க முயன்றார்.

error: Content is protected !!
Scroll to Top