“ம்ம் ஆச்சு! மனோ…” மீண்டும் இழுத்தாள். அவள் தயங்கக் காரணம் இருந்தது. அவள் கூற இருக்கும் விடயத்தைக் கூறியபின் இவன் தொனி இப்படி இருக்காதே!
“என்ன டீ இவ்வளவு தயக்கம்? என்னத்த இழுத்து வச்சிருக்க இந்த தரம்? திரும்பவும் யாரோடயாவது சண்டையா?”
“ம்ம்ம்… அது வந்து… அவன் தான்… அத விடுங்கப்பா, நான் பார்த்துக்கிறேன்! இது வேற! நீங்க இப்போ ஃப்ரீயா?” முன்பே கேட்டுக் கொள்வது அவசியம், இல்லை அதற்கும் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டுமே!
மடிக்கணினியை மூடிவிட்டு அலுவலத்திலிருந்து வெளியே காற்றோட்டமான இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டே, “உனக்கு இல்லாத நேரமா? சொல்லு டீ பட்டு” என்றான் கொஞ்சலாய்.
பட்டெல்லாம் பட்டென்று பறந்து போகுமே இப்பொழுது! “வந்து, டாக்டர் கால் பண்ணியிருந்தார் மனோ…”
அழுத்தி தலை கோதி கோபத்தை மட்டுப்படுத்தி, “ப்ச்! எனக்கு வேலை இருக்கு விழி. சட்டுன்னு சொல்லிட்டு வை!” அடக்கிக் கொண்டாலும் எரிச்சல் எட்டிப் பார்த்தது. ஏனோ அவன் பேச்சை அலர்விழி எடுத்தாலே இவனுக்கு எள்ளும் கொள்ளும் வெடிக்கும்!
எதிர்பார்த்த பதிலே தான். இருந்தும் குரல் விழுந்து போனது. “என்ன மனோ?”
“சரி சரி… சொல்லு. அவனுக்கு என்னவாம் இந்த தரம்?”
“இந்த சனிக்கிழமை அவர் ஃப்ரீயாம்… நயாகரா ஃபால்ஸ் போகலாமான்னு கேக்கறார்?”
“ஓ…”
“என்ன மனோ… ஓ-ன்னு சொன்னா என்ன அர்த்தம்?”
“ஒரு அர்த்தமும் இல்ல. நீ மேல சொல்லு,” பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினான்.
“பஸ்லயான்னு கேட்டேன். அவர், கார்ல போயிட்டு வந்திடலாம்ன்னு சொல்றார்”
“லூசா டி நீ? அவன் கேட்டான்னு வந்து என்ட்ட கேக்கிற பாரு உன்ன சொல்லணும்! அங்க இருந்து நயாகரா ஏழெட்டு மணி நேரத்துக்கு மேல ஆகும்! உனக்கு சிட்டிக்குள்ள அரை மணி நேரம் ஓட்டி தான் பழக்கம். ஃப்ரீவே-ல லாங் ட்ரைவிங் எல்லாம் சரி வராது. நான் இல்லாம வேண்டாம்.”
“என்ன மனோவா? மண்ணாங்கட்டி மனோ! ஆஃபீஸ்ல இருந்து லேட்டா வர அன்னைக்கு யாரையும் எதிர்பார்க்க கூடாதுன்னு தானே கார் வாங்கினோம்? இவன கூட்டிட்டு தினம் ஒரு இடத்துக்கு ஊர்வலம் போக இல்லியே?”
“என்ன பேச்சிது? சொந்தக்காரங்க ஊர்ல இருந்து வந்தா எல்லாரும் செய்யறது தானே? அவருக்கு யார் இருக்கா இங்க? ஏதோ சொந்தக்கார பொண்ணுன்ற உரிமையில தானே கேக்கறார். ஏன்தான் அவர் பேர கேட்டாலே உங்களுக்கு எரியுதோ?”
“முடிச்சாச்சா… ஃபோன வைக்கவா?”
“என்ன மனோ? எதுவும் சொல்லாம வச்சா என்ன அர்த்தம்? என்னால ட்ரைவ் பண்ண முடியும் மனோ…”
“உன்னால என்ன தான் முடியாது? எல்லாம் தான் முடியும்! ஆனா என்னால உயிறை இங்க வச்சுக்கிட்டு இருக்க முடியாதே! உனக்கு கார் ஓட்ட சொல்லி கொடுத்து கார் வாங்கிக் கொடுத்தது தப்போன்னு ஃபீல் பண்ண வைக்கிற!”
“அதுக்கு தான் நீங்களும் வாங்கன்னு…”
“ஃபோன வை டி!”
“மனோ… ஏன் பா கோபம்?”
“நீ இப்பிடி ரெண்டு வாரத்துக்கு ஒரு தரம் அவன் கூட வெளில போறதே எனக்குப் பிடிக்கல. அதுவும் நீ போகணும்ன்னு என் கிட்ட ஆசையா கேட்ட இடத்துக்கு அவன் கூடப் போறது எனக்குச் சுத்தமாப் பிடிக்கல!”
“அவரே வாய் திறந்து கேக்கறார் மனோ. என்ன பண்ணட்டும்? அப்புறம் அடிக்கடி எங்க போனோம்? ஒரு தரம் சிக்ஸ் ஃப்ளேக்ஸ்-ல(six flags adventure) ரைட்ஸ்… அதுவும் பாயலும் லீ-யும் போகவே கூடப் போனோம். அடுத்த தரம் பம்ப்கின் பேச்(pumpkin patch), ஆப்பிள் பிக்கிங்(apple picking) பாயல் கூடப் போய் பூசணிக்காயும், ஆப்பிளும் கொண்டு வந்தோம். அதுல செஞ்ச ஆப்பிள் பை, பம்ப்கின் கீர் எல்லாம் நல்லா தானே சாப்டீங்க! அப்போ ஒண்ணும் சொல்லக் காணம். இப்போ வந்துட்டார் சண்டைக்கு! என்னமோ தினமும் அவரோட சுத்தற மாதிரி சொல்றீங்க?”
“நீ சுத்து சுத்தாத… எனக்கு அது பத்தி கவல இல்ல. அத வார நாள்ல வச்சுகிட்டா நான் ஏன் கேக்கப் போறேன்? வீக் எண்ட்ஸ் நம்ம டைம். ஒரு வீக் எண்ட் போச்சுன்னா அடுத்த வாரம் முடியற வரை உன்னப் பார்க்க முடியாது! அது தான் எரிச்சல் வருது. போன வாரமும் வெளில போயிட்ட! நெக்ஸ்ட் வீக் எண்ட் எனக்கு வர முடியாது. இந்த வாரமும் நீ கிளம்பிட்டா, இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு தான் பாப்போம். உனக்கு அத பத்தி எல்லாம் அக்கறை இல்லியே…”
“அக்கறை இல்லன்னு சொல்லாதீங்க! ஃபேமிலி மனோ… நல்ல மனுஷன். தேவை இல்லாம ரெண்டு வார்த்தை அதிகம் பேச மாட்டார். எவ்வளவு பெரிய டாக்டர் தெரியுமா? கொஞ்சம் கூட பந்தா இல்ல. பழகறதுக்கும் அவ்வளவு இயல்பா…”
அவள் பேசிக் கொண்டே போக… இந்த பேச்சு போகும் திசையும் பிடிக்கவில்லை. அவனைப் பற்றிய பேச்சும் பிடிக்கவில்லை.
“சரி சரி… அவன் புராணம் அப்புறம் பேசலாம். எனக்கு வேல இருக்கு. கார் வேண்டாம். ஃப்ளைட் புக் பண்றேன். பஃபலோ ஏர்போட்ல(Buffalo Airport) இருந்து போகிறதுக்கு கார் ரென்டல்(car rental) பார்த்து வைக்கிறேன்… எடுத்துட்டு போ. திரும்பி வரும் போது அங்கேயே கார ரிட்டர்ன் பண்ணிடு.”
“நீங்க வரலியா மனோ?”
“நான் ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி பேசாம ஃபோன வச்சிடு விழி…”
“நீங்களும் வாங்க மனோ… அந்த தண்ணி கொட்டும் போது அத உங்க கூட நின்னு, உங்க கைய பிடிச்சுகிட்டே ரசிக்கணும் மனோ. வாங்க மனோ… ப்ளீஸ்.”
“பா…ய் விழி.”
அவனுக்கு அப்படி என்னதான் மருத்துவன் மேல் கோபமோ? அலர்விழிக்கு புரியவே இல்லை. அந்த டெரரியம் படுக்கையறையில் தொங்க விட்டிருக்க மனோவிற்கு பற்றிக் கொண்டு வந்தது. “இது படுக்கையறை… இதுல நீயும் நானும் சம்பந்தப் பட்டது மட்டும் இருந்தாப் போதும்,” என்று எரிந்து விழுந்தான். மனோவிற்கு பொறாமையா? அதுவும் இல்லை. ஏனோ பிடித்தமில்லை. அவ்வளவு தான்!
சனிக்கிழமை, மனோ அவர்களோடு வருவான் என்று எதிர்பார்த்தாள். மின்னஞ்சலில் விமான பயணச் சீட்டு மட்டும் வந்தது. “ரிட்டர்ன் டிக்கெட் இல்லியே மனோ? அனுப்ப மறந்துட்டீங்களா? இல்ல நான் எடுக்கவா?” கைப்பேசியில் பேசி நின்றவளுக்குப் போக மனமே இல்லை. திருமணம் முடியவும் சில இடங்களுக்கு மனோவோடு செல்ல வேண்டும் என்பது அவளின் ஆசை! நயாகரா நீர்வீழ்ச்சியும் அதில் அடக்கம்! கொட்டும் பேரருவிச் சாரலை மனோ கைபிடித்து ரசிக்க ஆசை. இன்று அவன் இல்லாமல், மருத்துவனோடு போக மனமில்லை.
‘அந்த லூசு டாக்டருக்கும் மண்டையில சொன்னா ஏற மாட்டேங்குது… என் ஆசை வருங்கால புருஷனுக்கும் என் மனசு புரிய மாட்டேங்குது’ என்பது இருதலைக் கொள்ளியின் புலம்பலாய் போனது.
“போக டிக்கெட் அனுப்பின எனக்கு ரிட்டர்ன் டிக்கெட் போடத் தெரியாதா? நீ கிளம்பு டீல் பார்த்து வாங்கி அனுப்பறேன். பாஸ்போர்ட் எடுத்து வச்சுக்கோ. என் கூட முன்ன வீடு ஷேர் பண்ணின இலக்கியா தெரியுமில்ல… அவ ஏர்போர்ட்ல உன்னை மீட் பண்ணுவா. அவளும் கூட வருவா” என்று முடித்துக் கொண்டான்.
விமானம் ஏறியதுமே இவள் உறங்கிவிட, விமானம் தரையிறங்கிய பின்தான் கண் விழித்தாள். எபி கூறியது போலவே இலக்கியா வந்திருந்தாள். அதனால் அவளே அவர்களை அழைத்துக் கொண்டு சுற்றிக் காட்டினாள்.
அலர்விழி எதிர்பார்த்ததை விட நீர்வீழ்ச்சி மனதைக் கொள்ளைக் கொண்டது. மூவரும் சுற்றித் திரிந்தனர். இலக்கியாவிற்கு மருத்துவனிடம் பேச அதிகம் இருந்தது. தற்போது நடந்து கொண்டிருக்கும் அறுவை சிகிச்சை பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட, அவனும் சலிக்காமல் பதில் கொடுத்தான்.
“சேர்ந்து இருக்க ரெண்டு மூளையோட ப்ளட் வெசல்ஸ், நெர்வ்ஸ் வரைக்கும் கவர் ஆகற மாதிரி முழு மூளையோட மாடல் ரெடி பண்ணி, எந்த எடத்துல எப்பிடி மூளையப் பிரிக்கணும்ன்னு பார்த்து, அத பிரிக்கும் போது எந்தப் பக்க மூளைக்கு என்ன பாதிப்பு ஏற்படும்ன்னு முன்னமே ஸ்டடி பண்ணி, அத எப்படி ஹாண்டில் பண்ணனும், அப்பிடின்னு நிறைய இருக்கு. இவ்வளவு தூரம் பார்த்து, யோசிச்சு வச்சிருந்தாலும் எப்போ என்ன வேணும்னாலும் ஆகலாம்! ஒவ்வொரு செட் ஆஃப் ஆப்பரேஷனுக்கும் வேற வேற டாக்டர்ஸ் இன்வால்வ் ஆவாங்க. எக்கசக்க காம்ளிகேஷன் இருக்கு இதுல… எப்படி மெடிசின்ல இவ்வளவு இன்ட்ரெஸ்ட் உங்களுக்கு?”
“அக்காவும் டாக்டர் தான், விஸ்கான்சின்ல ரிஹேபிலிடேஷன் யுனிட்ல டாக்டரா இருக்கா. வீட்டுல அம்மா அப்பா அண்ணா எல்லாருமே டாக்டர்ஸ். எனக்கும் இஷ்டம் தான்… ஆனா எல்லாரும் விழுந்த அதே குட்டை வேண்டாமேன்னு வேற குட்டையத் தேடி வந்துட்டேன்,” இனிமையாய் பேசி சிரித்தவளோடு பேச நன்றாகவே இருக்க அவனும் விரும்பியே பேசினான்.
பேசிக் கொண்டிருந்தவன் கண்கள் மட்டும் அலர்விழியை வட்டமடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள இவள் எப்பொழுதும் போல் நிகழ்வுகளைக் கைப்பேசிக்குள் அடக்கிக் கொண்டும், எபிக்கு அனுப்பிக் கொண்டுமிருந்தாள்.
நீர் வீழ்ச்சிக்கடியில் படகுப் பயணம், பாஸ்டனில் மனோவோடு இருந்ததை நினைவூட்ட, தன்னைத் தனித்து விட்டவன் மேல் காரணமே இல்லாமல் கோபம் வந்தது. படகு நீர்வீழ்ச்சி அருகில் சென்று திரும்பியது. படகு ஏறும் முன்னமே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நீல நிற ப்ளாஸ்டிக் ரெயின் கோட், அவர்களை நனைந்து விடாமல் காப்பாற்றியது.
“அருவியில் நனையலாம்” என்றாள் இலக்கியா. ஆனால் நம் ஊர் அருவி போல் வீழ்ச்சிக்கு அடியில் அல்ல, நீர்வீழ்ச்சியின் மிக அருகில் கட்டி விட்டிருந்த மேடையில் நின்று கொண்டு சாரலில் நனைய முடிந்தது. மஞ்சள் நிற பிளாஸ்டிக் கோட்டை தலையிலிருந்து இறக்கி விட, சில்லென்ற நீர் தலையோடு முகத்தை ஈரப் படுத்த, மீண்டும் மனோ தான் அவள் எண்ணத்தில். ‘வந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்.’ மனதின் ஓரத்தில் பெருமூச்சு வந்தமர்ந்தது. ‘சேர்ந்து நனைஞ்சிருக்கலாம். ப்ச்!’
“அலர்விழி, ஃபோட்டோ எடுக்கவா?” என்றவன் சத்தம் அவளை மீண்டும் நயாகராவிற்கு கொண்டு வர, “யெஸ் பாஸ்” என்று மீண்டும் சாரலில் நனைய ஆரம்பித்தவளை கண்ணெடுக்காமல் கைப்பேசி மூலம் பார்த்துக் கொண்டே நிகழ்வுகளைப் படம் பிடித்தான் மருத்துவன்.
“அங்க நில்லு… இப்படி நில்லு… போதுமா… இந்த போட்டோ பிடிச்சிருக்கா” என்று பெண்கள் இருவரின் ஆசை தீரும் வரை புகைப்படம் எடுத்தான்.
அடுத்திருந்த மெழுகு அருங்காட்சியகம் உள்ளே செல்லு முன்னே, “என்னால சத்தியமா முடியாது. அஞ்சாவது தடவ இதப் பார்க்கிற அளவு இதுல ஒரு மண்ணும் இல்ல… நீங்க ரெண்டு பேரும் போங்க. நான் வெளியில இருக்கேன். நீங்க முடிச்சதும் கிளம்பலாம்” என்று கழண்டு கொண்டாள் இலக்கியா.
வெளிநாட்டில் இருந்தால், புதிதாய் வரும் தோழர்களோடும், சொந்தங்களோடும் மீண்டும் மீண்டும் அதே இடத்தைச் சுற்றுவது ஒரு இம்சை தான் போலும் என்று நினைத்தாலும், அலர்விழி வாய் திறக்கவில்லை.
கடைசியாக பிரவீன் எதிர்பார்த்த தனிமை கிடைத்தது. அவளுக்கு எப்படியோ, அவளோடிருந்த ஒவ்வொரு நிமிடங்களையும் முழு மனதோடு அவன் ரசித்து அனுபவித்தான்.
“டிக்கெட்டுக்கு நிறைய செலவாகி இருக்குமே அலர்விழி… நானே புக் பண்ணி இருப்பேன் நீ கேக்கல. உனக்கு வேற செலவுக்கு இடிக்குமே, எவ்வளவுன்னு சொன்னன்னா…”
“ப்ச் டாக்! போன ரெண்டு தரமும் நீங்க தான் செலவு பண்ணினீங்க. நான் ஏதாவது சொன்னேனா? பேசாம வாங்க” என்றாள். அவள் செலவை எல்லாம் மனோவே பார்க்க, கத்தரிக்காய் விலை கூட அவள் அறியவில்லையே!
அவள் உரிமையாய் கடிந்து கொண்டது கூட பிரவீனுக்குப் பிடித்தது. அவள் சிரிப்பும், பேச்சும், உரிமைத் திட்டல்களும் அவனை உருக்கியது. அலர்விழி அவன் ஆழ் மனதில் பதிந்து போனாள். இனி அவளை அவனை விட்டுப் பிரிப்பதெல்லாம் கூடாத காரியம் என்றே தோன்றியது அவனுக்கு. பிரிக்க வேண்டி வரும் என்று நினைத்தானில்லை, அவளை மட்டுமே தன் நெஞ்சம் முழுவதும் ஏந்தி நின்றவன்!
“இலக்கியாவுக்கு உங்கள முன்னமே தெரியுமாம். நீங்க பெரிய டாக்டர் இல்லையா? அது தான்! அவங்க வீட்டுல உங்க பேச்சு அடிப்படும் போல. நேர்ல பார்க்கவும் அவங்களுக்கு தலையும் புரியல, காலும் புரியல… ஏதோ சூப்பர் ஹீரோவ பார்க்குற மாதிரி உங்களப் பார்க்கறாங்க.”
அலட்டலே இல்லாமல் புன்னகைத்தான். “சரி நீ சொல்லு, நீ என்னை பத்தி என்ன நினைக்கிற அலர்விழி?”
“உங்களால மட்டும் தான் என் முழுப் பேரும் எனக்கு மறக்காம இருக்குன்னு நினைக்கிறேன் மருத்துவரே…” என்ற புன்முறுவலில் மயங்கித்தான் போனான்.
“அளவா பேசினாலும் அறிவாப் பேசறீங்க… உங்க கூட இருந்தா ஒரு அறிவாளி கூடவே சுத்தற எஃபெக்ட்,” என்று அவனைப் பற்றிய தன் எண்ணத்தைக் கூறினாள்.
“அவ்வளவு தானா?”
“ஹ ஹ ஹா… பொழுது போகலியா? இந்த மெழுகு ஆட்கள பாக்காம என் வாயக் கிளறிகிட்டு?”
“உன் கூட பேசிட்டே இருந்தா பொழுது பத்த மாட்டேங்குது அலர்விழி!” அவளைப் பற்றிப் புகழும் பொழுதாவது கொஞ்சம் மயக்கம் கலந்த குரலில் பேசக் கூடாதா? பேசினான் இல்லை. அதே நட்பின் குரல் தான்!
“பார்ரா… என் அறுவைய கூட ரசிக்க ஒரு ஆள்! நகுக்கு அப்புறம் நீங்க தான் என் பேச்ச ரசிக்கிற ஜீவன்”
“வீட்டுல எல்லாரும் எப்பிடி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க! உங்களப் பத்தி நிறைய விசாரிப்பாங்க! அப்புறம், எப்பவும் போல பேசும் போதெல்லாம் வேலைய மாத்திகிட்டு ஊர் பக்கம் வர சொல்றாங்க”
“ஆமா, எப்போ அங்க வர அலர்விழி?”
“வரேன்… கூடிய சீக்கிரம் வந்து தானே ஆகணும்,” அவள் புன்னகைக்க…
“கல்யாணம் அப்புறம்… என்ன முடிவெடுத்திருக்க? இங்கேயா அங்கயா?”
“புருஷன் எங்கேயோ அங்க தான்.” அந்த பதிலில் உச்சி குளிர்ந்து போனான்.
இந்த நிமிடமேனும் அவன் பிடித்தம் கூறி இருக்கலாம், மனதை உணர்த்தியிருக்கலாம். பலரின் வேதனைகளைத் தவிர்த்திருக்கலாம்!