நற்காதல் நெய்திடவா – 6 (2)

அவன் உள்ளே நுழைந்ததும், “என்னப்பா, வெளில போறேன் சொன்ன? அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்ட?” என்று அப்பா கேட்க, அவர் முன் சென்று அமர்ந்தான் வெற்றி.

“ரேவதி, வெற்றி வீடு வந்தாச்சு. எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சமா டீ கொடேன்” உள்ளே பார்த்து குரல் கொடுத்தார் சுந்தரம்.

“என்னடா செய்தி? இப்படி என் முன்னாடி வந்து உட்கார்ந்திருக்க? உங்கம்மாவுக்குத் தெரியாம என்கிட்ட எதுவும் சொல்லணுமா?” மகனிடம் ரகசிய குரலில் ரகசியம் பேசினார்.

“இதென்ன வெட்கமா டா?” பதில் சொல்லாமல் சிரித்த மகனின் முதுகில் அடித்துக் கேட்டார் அவர்.

“எனக்குப் பொண்ணு பார்த்திட்டு இருந்தீங்க இல்லப்பா?” அவன் கேட்க, மகனை சந்தேகமாகப் பார்த்தபடி, “ஆமா” என்றார் அவர்.

“அது.. பொண்ணு பார்க்க வேணாம்னு சொல்ல வந்தேன் ப்பா” நொடியில் திகைத்து, “ஏன் டா?” என்று கத்தினார். பின் மகனின் முகம் பார்த்து சுதாரித்து, “ஏய் வெற்றி, நான் நினைக்கிறது சரியா சொல்லு? அதானா?” உற்சாகத்துடன் அவர் கேட்க, “அப்பா” என்று அவரை அடக்கினான் மகன்.

வெற்றியின் பார்வை வீட்டினுள் சென்று மீள, “சவுண்ட்டை குறைச்சுட்டேன்” என்று சத்தத்தைக் குறைத்து சொன்னார் சுந்தரம்.

“உங்களோட..” என்று சலித்த வெற்றி, தாமதிக்காமல் அவன் மனதை வெளிப்படுத்தினான்.

“எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு பா. இன்னும் அந்தப் பொண்ணுகிட்ட நான் இதைச் சொல்லல.”

“ஏன் டா சொல்லல, யாருடா அது?”

“யாருனு இன்னொரு நாள் சொல்றேன் பா. முதல்ல நான் சொல்றதை கேளுங்க”

“அப்போ அந்தப் பொண்ணுக்கு எதுவும் தெரியாதா வெற்றி?”

ஆவலாக அவர் கேட்க, முறைத்தான் மகன்.

“சரி, சரி. நீயே சொல்லு”

“நீங்க எனக்குப் பொண்ணு பார்க்க வேணாம். நான் பார்த்த பொண்ணுக்கு என்னைப் பிடிக்க வச்சு நம்ம வீட்டுக்கு நானே கூட்டிட்டு வர்றேன்”

“அப்பாகிட்ட இப்படியா டா சவால் விடுறது போலப் பொண்ணைப் பத்தி பேசுவாங்க?” என்ற குரலில் தோழமை இருக்க, அவரின் தோளை பிடித்து எழுந்து கொண்டான் வெற்றி.

“அம்மாகிட்ட பொண்ணு பார்க்க வேணாம் சொல்லுங்க. ஆனா, நான் சொன்ன காரணத்தைச் சொல்லக் கூடாது. சரியா?”

“அதெப்படி முடியும் வெற்றி? உங்கம்மா நிறையக் கேள்வி கேட்பா. உனக்குத் தெரியும் தானே? இப்படி என்னை மாட்டி விட்டுப் போறியே. உனக்கே நல்லாருக்கா?” அவர் அங்கலாய்க்க, “புலம்பாதீங்க பா. அம்மா நீங்க சொன்னாதான் கேட்பாங்க. சோ, சமாளிங்க.” என்றவன், “இப்போ அம்மா நம்ம ரெண்டு பேருக்கும் டீ கொண்டு வருவாங்க. என் பங்கையும் சேர்த்து நீங்களே குடிங்க. நான் வெளில கிளம்பிட்டேன்” வண்டிச் சாவியைக் கையில் சுழற்றிக் கொண்டு வீட்டின் வாயிலை நோக்கி நடந்தான் வெற்றி.

“வெற்றி..” அப்பா கத்த, அதே நேரம் தேநீருடன் வெளியில் வந்த ரேவதி,

“என்ன இப்பதான் வந்தான், அதுக்குள்ள திரும்ப வெளில போறான்? நான் உங்களுக்குதான் டீ போட்டேன். அதையும் குடிக்காம போறான் வேற?” அம்மாவின் குரலை கேட்டபடி வண்டியை இயக்கினான் வெற்றி.

அவன் மனதை இயக்கினாள் வேதவர்ஷினி. அவன் மனக்கண்ணில் வந்து நின்று சிரித்தாள், முறைத்தாள், வாடிக்கையாளரிடம் பேசினாள், புன்னகைத்தாள். சில நேரம் சிடுசிடுத்தாள், சினந்தாள்.

அவனிடம் வாக்குவாதம் செய்தாள். அவனோடு இயல்பாக நடந்தாள். பார்வை பரிமாறி பேசினாள்.

மழையைப் போலத் துளித் துளியாக இல்லாமல், வெயிலாக மொத்தமாக அவன் மனதில் இறங்கினாள் வேதவர்ஷினி.

பல மாதங்களாக அவள் மேலிருந்த ஈர்ப்புக்கு இன்று பெயர் கொடுக்க விரும்பினான் வெற்றி.

அவளைப் பிடித்ததைத் தன்னிடம் ஒப்புக் கொண்டான். அவளிடம் தன் மனதை ஒப்படைக்கத் தயாரானாலும் தயங்கினான். வங்கி அலுவலகப் பேச்சு தவிர்த்து, எப்படி அவளை அணுகுவது என்ற வழி வகை அவனுக்குச் சத்தியமாகப் புலப்படவில்லை.

இதுநாள் வரை சக அலுவலர் என்ற பார்வையில் எட்டவே நிறுத்தி பழகி விட்டு, இப்போது நெருங்க முடியாமல் ஒருவித தடுமாற்றம் அவனை நெருக்கியது.

அதையே யோசித்தபடி சென்றவன் அன்றிரவு வீடு திரும்பும் போது வேதாவிற்குப் பிடித்த ஆசிரியர்களின் புத்தகங்களோடு வீடு திரும்பினான்.

பரிசுகள் பொக்கிஷமானவை. அதுவே புத்தகமாக இருந்தால்? புத்தகப் பிரியருக்குப் பிடித்ததாக இருந்தால்? விவரித்துச் சொல்ல முடியா உணர்வு அது.

“வாவ், புதுப் புக்ஸ்.” வெற்றி நீட்டிய புத்தகங்களை வாங்கி, அனிச்சையாய் முகர்ந்து பார்த்தாள் வேதா. புதுப் புத்தகத்தின் மணம் தரும் ஆனந்தந்தை ஒரு புத்தகப் பிரியரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

“இந்தப் புக்ஸ் எனக்கா?” என்றவளின் கண்களில் மகிழ்ச்சி மின்னல்கள். அவளுக்கு மிகப் பிடித்த ஒன்றை தனதாக்கிக் கொள்ளும் ஆர்வ மிகுதியில் அவள் கேட்க, “நான் இந்தப் புக்ஸ் படிக்கிறது இல்…” என்று அவன் சொல்லும் போதே இடையிட்டு, “ஹலோ, பார்த்துப் பேசுங்க சார். அப்புறம் இன்னைக்கும் ஒரு லெக்சர் அடிச்சுடுவேன்” என்று விளையாட்டாக மிரட்டினாள்.

வெற்றி சிரிக்க, மற்ற பணியாளர்களின் பார்வை அவர்கள் மேல் படிந்து மீண்டது.

வாடிக்கையாளர் நேரம் முடிந்து, வங்கி பணிகளை மேற்கொண்டிருந்தார்கள் அனைவரும். வெற்றி மூன்று நாட்களாக ஒத்திகைப் பார்த்து இன்றுதான் தைரியம் பெற்று வேதாவிடம் வந்திருந்தான்.

“புக்ஸ் உங்களுக்குதான் வேதா. அன்னைக்கு நான் பேசினதுக்குச் சாரி எப்படிச் சொல்ல தெரியல. அதான் உங்களுக்குப் பிடிச்ச புக் வாங்கிக் கொடுத்து சரி பண்ணிடலாம் நினைச்சேன்.” அவளின் இருக்கைக்குப் பக்கத்தில் நின்று அவன் பேச, “ஆஹா.. சாரி அக்செப்டட் சர்” சிரியாமல் சொன்னாள் வேதா.

அதுவரை அவன் மேல் இருந்த எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் சற்றே மறையத் தொடங்க, அவனைக் கொஞ்சத்திற்கும் அதிகமாக அவளுக்குப் பிடித்தது.

பிரியத்தில் பிடித்தம் என்பதே நிறைவு தானே?

பருத்தி சேலையில் பாந்தமாய் இருந்தவளை பார்த்து, “ஹேப்பி ரீடிங்” என்றான் மென்மையாக.

சந்தன நிற சட்டையும், கருப்பு நிற காற்சட்டையும் அவனது பதவிக்கு உரிய கம்பீரத்தை அவனுக்குத் தந்திருந்தது.

வேதாவைப் பார்த்த வெற்றியின் முகம் இளகி இருக்க, அழகனாகத் தெரிந்தான்.

“தேங்க்யூ சார். புக்ஸ் யாரும் எனக்குக் கிஃப்ட் பண்ணதில்ல. இட்ஸ் சம்திங் ஸ்பெஷல்” அவள் மகிழ்ச்சியுடன் சொல்ல, அவர்கள் இருந்த வங்கி சூழலில் அதிகம் அளவளாவ முடியாமல், புன்னகைத்து விட்டு தன் அறைக்குச் சென்றான் வெற்றி.

வேதா அந்தப் பரிசை மிக இயல்பாக மனதில் எடுத்துக் கொண்டு, ஏற்றும் கொண்டாள். புத்தகங்களை எடுத்து தன் கைப் பையினுள் பத்திரப்படுத்தினாள்.

தன் அறையின் கண்ணாடி வழியே வேதாவை கண்காணித்துக் கொண்டிருந்த வெற்றி கொஞ்சம் கொஞ்சமாகத் தடுமாறிக் கொண்டிருந்தான்.

அந்த வாரமும், அதற்கடுத்த வாரமும் அவர்களின் வங்கி வேலைகளிலேயே ஓடி மறைந்திருந்தது. அந்த வார இறுதியில் ஊருக்குச் செல்வதாக இருந்தாள் வேதா.

அவள் பயணத்திற்குத் தேவையானதை எல்லாம் எடுத்து வைத்து, பேருந்தில் இருக்கை முன் பதிவு செய்து, வீட்டினருக்கு தகவல் தெரிவிக்க, “முன்னாடியே சொல்ல மாட்டியா வேதா?” என்று அந்தப் பக்கமிருந்து கத்தினார் அவளின் அம்மா.

“என்னம்மா? முன்னாடியே வந்தாலும் வருவேன்னு சொன்னேன் தானே? இப்போ எதுக்கும்மா இப்படிக் கத்துறீங்க? வீட்டுக்குத் தானே வரேன் சொன்னேன்? வேற என்ன சொல்லிட்டேன்” வெள்ளிக்கிழமை அலுவலகம் செல்லும் அவசரத்தில் படபடத்தாள் வேதா.

“இப்போதான் உங்க அண்ணா கால் பண்ணி எங்களை ஹைதராபாத் வரச் சொன்னான். உங்க அண்ணிக்கு முடியலையாம். நாங்க இன்னைக்கு நைட் ஹைதராபாத் போறோம். அங்கிருந்து நேரா உன்னைப் பார்க்க வரணும்னு அப்பா சொல்லிட்டு இருந்தார்” ஜெயலட்சுமி சொல்ல, “இந்த விஜய் ண்ணா என்கிட்ட எதுவுமே சொல்லல பாரேன் மா” என்று அவள் புலம்ப, “எங்களுக்கு இப்பதான் சொன்னான் வேதா. உனக்குப் பேசுவான்” அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளது அலைபேசியில் காத்திருக்கும் அழைப்பில் வந்து நின்றான் விஜய்குமார்.

“அண்ணா எனக்குக் கால் பண்றான் மா. நான் அவன்கிட்ட பேசிட்டு அப்புறம் உங்ககிட்ட பேசுறேன்.” என்றவள், “அப்புறம் வீட்ல அப்பத்தா, அப்புச்சியை விட்டுட்டுப் போகலாம் இல்ல? நான் வந்து அவங்க கூட இருந்துட்டு..” அவள் சொல்லும் போதே, “உங்க அண்ணா வீட்டுக்கு நாங்க எல்லாரும்தான் போறோம் வேதா. அங்க உன் வீட்டுக்கும் வருவோம். முதல்ல நாலு நாள் உங்கண்ணன் வீட்ல இருந்துட்டு வர்றோம். என்ன?” என்று அவர் கேட்க, அதுவரை இருந்த உற்சாகம் மொத்தமும் தொலைந்து போக, “ம்ம். சரிம்மா” என்றாள்.

அம்மா அழைப்பை துண்டிக்க, அண்ணனை அழைத்து அண்ணியின் நலம் விசாரித்து விட்டு அலைபேசியை வைத்தாள்.

அன்று வங்கிக்குச் செல்லும் போது மிக மோசமான மனநிலையில் இருந்தாள் அவள். விளைவு, வெற்றியிடம் வாங்கிக் கட்டினாள்.

“என்ன மேடம் நீங்க? ஒரு விஷயத்தைத் தினமும் சொல்லணுமா உங்களுக்கு? நீங்களே இப்படிப் பண்ணா நல்லாவா இருக்கு?” முகத்தில் எந்த உணர்ச்சிகளும் காட்டாமல் அவன் கேட்க, மானசீகமாக மண்டையில் அடித்துக் கொண்டாள் வேதா.

“என்ன வேதா? சார் நல்லா தாளிச்சார் போல இன்னைக்கு?” வங்கி நேரம் முடிந்து வெளியில் வரும் போது நாயகி, நக்கலாகக் கேட்க, அவளுக்கு எரிச்சலாக வந்தது.

“என்னமோ புதுசா நடக்கிற மாதிரி ரொம்ப ஃபீல் பண்ணாத. வீக்எண்ட் ஊருக்கு போய்ட்டு வீட்டு ஆளுங்களைப் பார்த்து, ஹாப்பியா பேங்க்கை மறந்துட்டு மண்டே ஃப்ரெஷ்ஷா வா, சரியா?” நாயகி சொல்ல,

“ம்ம். நான் இந்த வாரம் ஊருக்கு போகல மேம்” சோகமாகச் சொன்னாள்.

“அச்சோ ஏன் போகல வேதா? என் பிள்ளைக்குச் சீரணி மிட்டாயும், சீவலும் வாங்கிட்டு வர மாட்டியா அப்போ?” தன் கவலை முக்கியம் எனக் கேட்டவரை, “மேம்” என்று கோபிக்கும் பார்வை பார்த்தாள் வேதா.

“சரி சரி. நல்லா வீட்ல தூங்கி எழுந்து வேலைக்கு வா. நான் கிளம்பறேன்”

“ஓகே மேம்” என்றவள், இருபதாம் நிமிடம் வீடு வந்திருந்தாள்.

அன்றிரவு உணவு முடித்து வெற்றி வாங்கித் தந்த புத்தகங்களுடன் சோஃபாவில் விழுந்தாள். மெல்ல மெல்ல வேறொரு உலகத்திற்குள் அமிழத் தொடங்கினாள் அவள்.

“ஹேய் வேதா. ஊருக்கு போகல நீ?” அப்போதுதான் வீடு திரும்பிய கௌசல்யா, காந்திமதி இருவரும் அவளைப் பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டார்கள்.

“நீ கால் பண்ணாத போதே என்னமோ இடிக்குதுன்னு நினைச்சேன். என்னாச்சு?” அவளின் அருகில் பொத்தென்று விழுந்து, வேதாவின் முகம் பார்த்துக் கேட்டாள் கௌசல்யா.

“வீட்ல எல்லோரும் ஹைதராபாத் போறாங்க கா. என்னை வர வேணாம் சொல்லிட்டாங்க”

“அச்சோ. பாவம் புள்ள” போலி பரிதாபத்துடன் உச்சுக் கொட்டினார் காந்திமதி.

“அக்கா..” என்று வேதா கத்த, “சரி விடு. ஃபீல் பண்ணாத. நாளைக்கு நாம வெளில போகலாம்” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள் மற்ற இருவரும்.

அவர்கள் சொன்னது போல மறுநாள் அதிகாலையில் அவளை எழுப்பி, கிளம்பச் செய்து வெளியில் கூட்டிக் கொண்டு போனார்கள்.

மூவரும் கௌசல்யாவிற்குச் சொந்தமான இரு சக்கர வாகனத்தில் ஒன்றாகக் காந்திமதியின் தோழி வீடு வரை பயணித்தனர். அங்கே காந்திமதி தன் தோழியிடம் இருந்து இரு சக்கர வாகனம் வாங்கி வர, கௌசல்யா, வேதா ஒரு வண்டியிலும், காந்திமதி மற்றொன்றிலும் பயணம் செய்தார்கள்.

ஆவடியின் புறநகரில் பயணிக்கத் தொடங்கினார்கள்.

அவர்களை அடித்துச் சென்ற காற்றில் வேகமில்லை. ஆனால், இளம் காற்றைக் கிழித்தபடி முகத்தில் தென்றல் வீசிச் செல்ல கண்களை மூடி ரசித்தபடி ஒரு பயணம் மேற்கொண்டாள் வேதா.

இருபது நிமிட பயண முடிவில் நெடுஞ்சாலையைத் தொட்டிருந்தார்கள். மேலும் சில நிமிடங்கள் பயணத்திற்குப் பின், “டீ குடிப்போமா வேதா?” என்று கத்தி கேட்டாள் கௌசல்யா.

“எஸ் கா. எனக்கு நாக்கு வறண்டு போச்சு. ஒரு மாதிரி குளிருது வேற. காஃபி குடிச்சா நல்லாருக்கும்” வேதா சொல்ல, சட்டென வேகம் குறைத்துச் சாலையில் இருந்து விலகி, ஐந்தே நிமிடத்தில் சாலையோர சிறிய உணவு விடுதி முன் சென்று நின்றது அவர்களது வண்டி.

அவர்களுக்கு முன்பே சில இரு சக்கர வாகனங்களும், கார்களும் அங்கே நின்றிருந்தது.

வேதா வண்டியில் இருந்து இறங்கியதும், கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்தாள்.

“வா, உள்ள போகலாம் வேதா” கௌசல்யா அவளின் கைப் பிடித்து இழுத்தாள்.

அவளின் கையை உதறி விட்டு, உடையைச் சரி செய்தபடி பத்தடிகள் நடந்திருப்பாள் வேதவர்ஷினி.

காற்றில் காதல் கானம் பாடினார் பாடும் நிலா.

“ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்.” தன்னிச்சையாக இதழ்கள் மலர நிமிர்ந்தாள் வேதவர்ஷினி.

அங்கே கருப்பு நிற காரில் ஜீன்ஸ், ஷர்ட், கூலர்ஸ் என்று ஸ்டைலாகச் சாய்ந்து நின்றிருந்தான் வேதாவின் மாண்புமிகு மேலாளர் வெற்றி வேந்தன்.

அவன் பார்வை ஆச்சரியத்துடன் வேதாவில் படிந்தது.

“ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள். ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள். கள்ளூரும் காலை வேளையில்..” பாடல் ஒலிக்க,

அந்தக் காலை வேளையில் இருவரின் கண்களும் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்டது.

error: Content is protected !!
Scroll to Top