என் ஜீவனில் உறைந்திடு – 23 (1)

ரோஜாவின் முகம் நொடியில் வாடிப் போக இளமாறன் இமைக்கும் பொழுதில் இளகினான்.

“சாரி” என்று சொல்லி, படுக்கையில் இருந்தவளை வாரி அணைத்துக் கொண்டான்.

“நீங்க இவ்வளவு ஃபீல் பண்ற மாதிரி நான் என்ன பண்ணேன்னு தெரியல இளா. ஆனா, நானும் சாரி” என்றாள் ரோஜா. அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி முறைத்தான் இளமாறன்.

“நீ ஒன்னுமே பண்ணல? ம்ம்? எதுக்கு என்னைப் பாவம் போலப் பார்த்து பாஞ்சு கட்டிப்பிடிச்ச? அதுக்குப் பதில் சொல்லு முதல்ல” கோபமாகக் கேட்டான்.

“கொஞ்சம் அப்சட்டா இருந்தேன். அதான் உங்களைப் பார்த்ததும்..”

“ம்ம், எதுனால அப்சட்? உன் அத்தையைப் பார்த்தியா?” அவன் கேட்கவும், ரோஜா எல்லாப் பக்கமும் தலையை அசைக்கக் கடுமையாக முறைத்தான் இளமாறன்.

“ரோஜா, நீ தேவையில்லாம போய் உன் மாமியாரை பார்த்து பேசிட்டு வந்திருக்க, அப்படித்தானே? அவங்க என்னைப் பத்தி ஏதாவது சொல்லவும், ஃபீல் பண்ணி என் மேல பாயுற பாரு. அதான் எனக்கு அவ்ளோ கடுப்பாகுது. அது மட்டுமா? அப்போ ஒரு பார்வை பார்க்கிற பாரு, அந்தப் பார்வைதான் எனக்குப் பிடிக்கல சொல்றேன் டி. நான் என்ன நாய் குட்டியா? நீ தடவிக் கொடுத்தா எல்லாம் சரியா போக?”

“இளா…”

“உனக்குப் புரியலையா ரோஜா? அவ்ளோ மோசமாவா என் லவ்வை உனக்குக் கடத்தறேன் நான்?” கண்களும், குரலும் கடினமுற கேட்டான்.

ரோஜா தன் வலக்கரத்தை மெல்ல உயர்த்தி அவன் கன்னத்தில் பதிக்க, அந்தத் தொடுகையைக் கண் மூடி உள்வாங்கினான்.

“ஒன்னு தெரிஞ்சுக்கோ டி. உன்னைப் பார்த்த நாள்ல இருந்து நான் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். என் வறண்ட வாழ்க்கையில் இந்த ரோஜா மலர்ந்து ஜீவனைத் தந்திருக்கு. இப்போ என் மனசுல, வாழ்க்கையில நீ மட்டும்தான் இருக்க. அதுவே நிறைவா இருக்கு எனக்கும். நான் இப்போ வேற எதையும் யோசிக்கிறதேயில்ல. நீயும் யோசிக்காத. புரிஞ்சுதா?” அவள் தலையை உலுக்கிக் கேட்டான்.

“ம்ம்” என்று அவன் தாடையைத் தடவினாள். முள்ளாய் குத்திய ரோமங்களில் சிலிர்த்து சிரித்தாள் ரோஜா.

அந்தச் சிரிப்பில் ஈர்க்கப்பட்டு அவள் முகத்தைக் கையில் ஏந்தி, அவளின் விழிகளைக் கூர்ந்தான். அவனின் நெருக்கமும் பார்வையில் இருந்த மாற்றமும் ரோஜாவை வெட்கத்தில் விழி சுருங்கச் செய்தது.

“இந்தப் பார்வைதான் டி வேணும் எனக்கு” அவளின் உதட்டில் உரசி கிசுகிசுத்தான். ரோஜா அனிச்சையாய் முகத்தை உயர்த்த ஆழமாய் முத்தமிட்டான்.

மெல்ல விலகி ரோஜாவை அணைத்து, “எழுந்திரு ரெப்ரஷ் பண்ணிட்டு வா, சாப்பிடலாம்” என்று இளமாறன் சொல்லவும்தான் நேரத்தைப் பார்த்தாள் ரோஜா.

இரவு எட்டு முப்பது ஆகியிருக்க, படக்கென்று படுக்கையில் இருந்து எழுந்துக் கொண்டாள்.

அவள் உடல் கழுவி, உடை மாற்றி, சமையல் அறைச் செல்ல இளமாறனும் குளித்து வந்தான்.

அவ்வளவு நேரமும் என்ன சமைப்பது என்றுதான் குளிர்சாதனப் பெட்டியை குடைந்துக் கொண்டிருந்தாள் ரோஜா.

இளமாறன் பொதுவாகக் காலை, இரவு இரு நேரமும் வீட்டில்தான் உண்பது. இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என ஒரே வகையாக இருக்கக் கூடாது என்று அவளும் மாற்றி மாற்றி எதையாவது சுவையாகச் செய்து கொடுத்து விடுவாள். இன்று என்ன செய்வது எனத் தெரியாது அவள் விழித்துக் கொண்டிருக்க, அவளைப் பின்னிருந்து அணைத்து வாசம் பிடித்து, கழுத்தில் முத்தமிட்டு பல் பதியாமல் கடித்து வைத்தான் இளமாறன்.

“இளா.. கிட்சன்ல வச்சு…” உடலில் ஓடிய சிலிர்ப்பு அவள் வார்த்தைகளைத் தடுமாறச் செய்தது.

“என் கிட்சன்லதான் கட்டிக்கக் கூடாது டி. உன் கிட்சன்ல கட்டிக்கலாம், காதல் பண்ணலாம்..” என்று வியாக்கியானம் பேசினான்.

அவன் அணைப்பிலேயே திரும்பி அவனை முறைத்தாள் ரோஜா.

“என்னடி முறைப்பு? நான் செம்ம கோபத்துல இருக்கேன். என்னைச் சமாதானம் பண்ணு முதல்ல” ரோஜாவின் இடையில் கைக் கோர்த்துச் சரசம் பேசினான். வேட்டியும், கையில்லா பனியனும் அணிந்திருந்தவனை உதடு கடித்து ஒரு பார்வை பார்த்தாள் ரோஜா.

அவள் இதழ்கள் தொடும் உயரத்தில் இருந்த அவன் கழுத்தில் அழுத்தமாய் ரோஜா முத்தமிட, இதழ்கள் கடத்திய ஈரத்தில் உறைந்து நின்றான் இளமாறன். அவனது உறைந்த நிலையைப் பயன்படுத்தி ரோஜா கிளுக்கி சிரித்து, அவன் கைகளில் இருந்து வெளியில் வந்து சமையல் மேடையில் சாய்ந்து நின்றாள்.

அவனின் மோகவலை அறுபட மனைவியை உறுத்து விழித்தான் இளமாறன்.

“கொஞ்ச நேரம் பேசாம இருங்களேன். நான் சமைச்சு முடிச்சுடுறேன், பிளீஸ்” முகம் சுருக்கி கெஞ்சினாள். புன்னகையுடன், “ம்ம்” என்றான் இளமாறன்.

அவன் அலைபேசியுடன் ஐக்கியமாகி வெளியில் செல்ல, “இளா என்ன சமைக்க? சொல்லிட்டு போங்களேன் பிளீஸ்” என்று அவள் கேட்க,

“சிக்கன் அல கிங் (Chicken ala king) வித் பட்டர் ரைஸ். பட் வித் அவுட் பட்டர்” என்று தீவிரமாகப் பதில் கொடுத்தான் இளமாறன்.

ரோஜா அசந்துப் போய் அவனைப் பார்த்தாள்.

“நீங்க இப்போ என்ன சொன்னீங்க?” அதிர்ச்சியாக அவள் கேட்க, “எதையாவது செய்டி. ரெண்டு பேருக்கு டின்னர் செய்ய மெனு கேட்கிறா பாரு” என்று கிண்டலாகச் சொல்லி விட்டுப் போனான் அவன்.

இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துக் கொண்டே நின்றாள் ரோஜா.

அவனுக்கு உணவகத்தில் இருந்து அழைப்பு வர, அதில் மூழ்கிப் போனான்.

“இந்தச் சமையலை எவன் கண்டுபிடிச்சான் செஃப்?” கடுப்புடன் கத்தி, குளிர்சாதனப் பெட்டியை மீண்டும் திறந்து ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.

உடனடி ரவா ஆனியன் தோசை செய்வதற்கான ஆயத்தங்களில் இறங்கினாள்.

ரவை, கொஞ்சமாக அரிசி, மைதா மாவு, மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து நீர்க்க கரைத்து வைத்து விட்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்தாள்.

காலையில் வைத்த சாம்பாரை சூடு செய்து, கூடவே கொஞ்சம் தேங்காய் சட்னியை அரைத்து தாளித்து முடித்த நேரம் உள்ளே வந்து மேடையில் சாய்ந்து நின்றான் இளமாறன்.

அவனைப் பார்த்ததும் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் முறுகலான வெங்காய ரவை தோசை ஊற்றிக் கொடுத்தாள் ரோஜா.

சட்னி, சாம்பார் பரிமாறிக் கொண்டு முதல் இரு வாய் ருசி பார்த்தவன், அடுத்த விள்ளலை சட்னி தொட்டு மனைவிக்கு ஊட்டினான்.

“நீங்க முதல்ல சூடா சாப்பிடுங்க” அவன் கொடுத்ததைச் சாப்பிட்டபடி மறுத்தாள் ரோஜா.

“ம்ம்” என்றவன், தான் உண்டபடி தொடர்ந்து மனைவிக்கும் ஊட்ட, “பேரு தான் பெரிய செஃப். ஆனா, வீட்ல சமைக்க மாட்டார் நளமகாராஜா.” என்று கணவனுக்குக் கேட்கும்படியே முணுமுணுத்தாள் ரோஜா.

“வாய் பேசாம சாப்பிடு டி” சிரிப்புடன் சொன்னான் இளமாறன்.

“ம்க்கும்” என்று அவள் உதடு சுழித்தபடி தோசை ஊற்றினாள். அவளிடம் கதை பேசியபடி அவனும் சாப்பிட்டு, அவளையும் சாப்பிட வைத்தான் இளமாறன்.

“மதியம் உன் மாமா சும்மாவே எனக்குக் கால் பண்ணி பேசிட்டு வச்சார். அப்போ நீ அவர் கூடதான் இருந்தியா ரோஜா? என்ன சொன்னார்? எதுக்காக நீ அப்சட்டான?” அவளை நோக்கி தோசையையும், கேள்வியையும் சேர்த்தே நீட்டினான்.

“உனக்குத் தலைவலி வந்து வீட்டுக்கு வர்ற அளவுக்கு என்ன சொன்னார்? நீ என்னைப் பார்த்ததும் தாவி கட்டிப்பிடிக்கிற? அவ்ளோ பாதிச்சுருக்கு உன் மனசு. ம்ம்” ரோஜா தோசையை மெல்ல, அவன் கண்கள் அவளைக் கேள்வியாக மென்றது.

“உங்க கோபத்துக்கான காரணம் சொன்னார் மாமா” அடுப்பை குறைத்து வைத்து, கணவனை நெருங்கி நின்றாள் ரோஜா.

“ம்ம். என்ன சொன்னார்? ஓ, அதுவா?”

அவனே கேள்வியும் கேட்டு, பதிலையும் முடிவு செய்திருந்தான்.

“எனக்கு யார் மேலயும் கோபமெல்லாம் கிடையாது ரோஜா. கோபம் செகண்டரி எமோஷன்னு தானே சொல்றாங்க? ம்ம்? முதல்ல என்ன வரும் வலியும், வேதனையும், காயமும் தானே? இதுல ஏதாவது ஒன்னு வந்தாதான், அதுல இருந்து நம்மைக் காப்பாத்திக்கக் கோபப்படுறோம். இல்லையா? சோ, எனக்குக் கோபம் எல்லாம் இல்ல.”

“இளா..”

“வேணாம் ரோஜா. இதைப் பத்தி நான் பேச விரும்பல. விட்டுடு” முடிவாகச் சொன்னவன், கை நீட்டி அடுப்பை அணைத்தான்.

ரோஜாவும் அதற்கு மேல் அதைப் பற்றிப் பேச முயலவில்லை. இருவரும் உணவை முடித்திருக்க, ரோஜா அடுப்பு, பாத்திரங்களைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

இளமாறன் மீதம் இருந்த உணவுகளைக் குளிர்சாதனப் பெட்டியில் எடுத்து வைத்தான்.

இரவு உணவு முடித்து இருவரும் வெளியில் வந்து, அந்த வீட்டின் குட்டித் தோட்டத்தில் காலாற நடக்க, “இளா, மாமா வேறவொரு முக்கியமான விஷயம் பேசத்தான் என்னைக் கூப்பிட்டாங்க” என்று பேச்சை ஆரம்பித்தாள் ரோஜா.

“ம்ம். என்னவாம் அவருக்கு, சொல்லு” அவளின் கைப் பிடித்து விரல் கோர்த்து நடந்தபடி கேட்டான்.

“ஹாஸ்பிட்டல் ஃபோர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்ல உங்களையும், என்னையும் சேர்க்கணும்னு‌‌ ஆசைப்படுறாங்க..” அவள் முடிக்கும் முன்பு, சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்துப் புருவம் சுருக்கினான்.

“இல்ல, ஏற்கனவே நீங்க முடியாது சொல்லிட்டீங்களாம். அதான் உங்க இடத்தில நான்..”

“அதுக்கு நீயென்ன பதில் சொன்ன?”

“நான் என்ன சொல்லுவேன் இளா? உங்களைக் கேட்காம எந்த முடிவும் எடுக்க முடியாதுனு சொல்லிட்டேன்”

“ம்ம், நீ நாளைக்கு அவரைப் பார்க்கும் போது, நமக்கு எந்தப் பதவியும் வேணாம்னு தெளிவா சொல்லிடு. அப்புறம் என்கிட்ட எதுக்கும் விளக்கம் கேட்காத பிளீஸ். ஏன்னா என்கிட்ட எந்த விளக்கமும் இல்ல. எனக்கு வேணாம். விருப்பமில்ல. அவ்ளோதான்.” அடர்த்தியான குரலில் முடிவை சொன்னான். அவனுக்கு ஒப்புதலாய் தலையசைத்தாள் ரோஜா.

அதன் பின் அன்றைய தினத்தின் நிகழ்வுகளை அவன் பகிர, இருவரின் தோள் உரச, இதமாக இரவை ரசித்தபடி காலாற காற்று வாங்கி, அரை மணி நேரம் கழித்து உறங்கச் சென்றார்கள்.

மறுநாள் இளமாறன் அதிகாலையில் எழுந்து விட்டான். ரோஜாவின் உறக்கத்தைக் கலைக்காமல் சத்தமில்லாமல் குளித்துத் தயாராகினான்.

error: Content is protected !!
Scroll to Top