வெற்றியின் வீட்டில் மிகத் தீவிரமாக அவனுக்குப் பெண் தேடும் படலத்தில் ஈடுப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அந்த வேலை அத்தனை எளிதாக இல்லை. இவர்களுக்குப் பெண்ணைப் பிடித்தால், பெண் வீட்டினருக்கு இவர்களைப் பிடிக்கவில்லை. பெண் வீட்டினருக்கு இவர்களைப் பிடித்து மேற்கொண்டு பேசினால், இவர்களுக்கு ஒத்து வரவில்லை. ஏதாவது ஒன்று தடையாக வந்து கொண்டேயிருந்தது. வெற்றி வரை எந்த வரனும் செல்லவில்லை. அவன் போக்கில் வங்கி வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
வேதவர்ஷினி இப்பொழுது வேலையில் நல்ல அனுபவம் பெற்றிருந்தாள். அதற்காகப் பிரச்சனைகள் வரவில்லை என்று கிடையாது. வங்கி பணிக்கு உரிய அத்தனை சவால்களையும், சங்கடங்களையும் அவளும் அன்றாடம் சந்தித்தாள்.
அன்றைக்குப் பார்த்த வெற்றியை அதன் பின்னர்ப் பார்க்கவேயில்லை அவள். அவளின் மேன்மை பொருந்திய மேலாளர் வெற்றி வேந்தனை மட்டுமே தினமும் சந்திக்க நேரிட்டது.
அவளது இருக்கைக்கு வெற்றி வருகிறான் என்றாலே, அவளுக்குப் பதற்றமும் சேர்ந்தே வந்து விடும்.
“ஆத்தாடி என்ன பண்ணேன்னு தெரியலையே.” மனதில் அலறியபடிதான் அவனை எதிர்கொள்வாள். அவனும் ஆரம்பத் தயக்கங்கள் இன்றி இப்போது அவளை வெகு இயல்பாகத் தாளிக்கப் பழகியிருந்தான்.
வேலை என்று வந்து விட்டால் வெற்றியிடம் இளக்கத்தை எதிர்ப்பார்க்க முடியாது. அதற்கு அவன் இடம் கொடுத்ததும் கிடையாது.
வேதவர்ஷினி தவறு செய்தால், அதைத் தன்னளவில் திருத்த கற்று தேர்ந்திருந்தாள். அவளால் முடியாத பட்சத்தில் தயங்காமல் வெற்றியின் முன் சென்று நின்றாள். மன்னிப்பு கேட்டு, உதவியும் கோரும் போது உதவவே செய்தான் அவன்.
இப்படியே மேலும் சில மாதங்கள் கடந்திருந்தது.
வேதா வீட்டில் முதலில் விஜயகுமாரின் திருமணத்தை முடித்து விடுவது என்ற முடிவிற்குத் தற்போது வந்திருந்தார்கள்.
வேதாவின் பிடிவாதம்தான் இறுதியில் ஜெயித்திருந்தது. மகனுக்கு மணமுடிக்க முடிவு செய்திருந்தார்கள்.
பூ முடிப்பு, நிச்சயம், திருமணம் என ஒவ்வொன்றிற்கும் அவள் இருப்பு அவசியம். அதனால் அடுத்தடுத்து வந்த மாதங்கள் அவளுக்கு அதிக அலைச்சல். அதற்கும் மேலே அதிக விடுமுறை வேறு எடுத்தாள்.
மாண்புமிகு மேலாளர் முறைத்துக் கொண்டுதான் அவளுக்கு விடுமுறை அளித்தார். அவள் இல்லாத நாட்களில் அவளின் வேலையும் அவன் தலையில் விழுந்ததுதான் காரணம்.
வேதா எதையும் பொருட்படுத்தவில்லை. அண்ணன் மனைவி, அவளின் சொந்த அத்தைப் பெண் என்பதால் அண்ணன் திருமணத்தில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு கலாட்டாக்கள் செய்து, நாத்தனர் கெத்து காண்பித்து, அப்பத்தா துணையுடன் அழகியாக வலம் வந்து, அப்புச்சியுடன் சேர்ந்து அலப்பறையைக் கூட்டி, திருமணம் நிறைவாக முடியவும், அண்ணனோடு கூட அவளும் மறுவீடு போலச் சென்னை கிளம்பி வந்தாள்.
அந்த வாரம் முழுக்க அவளுக்கு வேலையே ஓடவில்லை. மனம் வீட்டை தேடி சுணங்கியது. அவளுக்கு அண்ணன் கல்யாணத்தில் வைத்தே கல்யாணப் பேச்சு வார்த்தை தொடங்கியிருக்க, அது வேறு ஒரு பக்கம் கவலையைக் கொடுத்தது.
அது மாதத்தின் இரண்டாம் வாரம் என்பதால் அந்தச் சனிக்கிழமை விடுமுறையாக இருக்க, விட்டத்தை வெறித்தபடி வீட்டில் படுத்திருந்தாள் வேதா.
அந்நேரம் அவளை அலைபேசியில் அழைத்தான் வெற்றி வேந்தன்.
“ஹலோ சார். சொல்லுங்க”
அவள் குரலில் இருந்த சோம்பல் அவனுக்குப் புரிந்தாலும், வேலை முன்னே வந்து நிற்க அவளிடம் பேசினான் வெற்றி. “ஒரு இம்பார்ட்டெண்ட் வொர்க் கொஞ்சம் பேங்க் வரை வர முடியுமா தேவதர்ஷினி?” என்று அவன் கேட்கவும் எரிச்சலுடன் கண்ணை மூடினாள்.
இந்த ஓயாத வங்கி வேலையும், இந்த மேலாளர் தன் பெயரை கொலை செய்வதும் என்றைக்கும் மாறவே மாறாது என்று அவளுக்குத் தோன்றியது.
ஒருவித அயர்ச்சி மனதையும் உடலையும் வியாபிக்க, அலைபேசியைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.
“வேதவர்ஷினி” சத்தமாக அழைத்தான் வெற்றி.
“சார், லைனில் இருக்கேன் சொல்லுங்க” என்றவள், “ஓ, பேங்க் வர சொன்னீங்க இல்ல. வர்றேன் சார்” என்று விட்டு அலைபேசியை அணைத்து ஓரமாக வைத்தாள்.
“இப்போது என்ன வேலையோ?” புலம்பிக் கொண்டே கிளம்பிச் சென்றாள்.
சில முக்கிய வாடிக்கையாளர்களின் வங்கி ஆவணங்களைச் சரி பார்க்க அவளை அழைத்திருந்தான் வெற்றி. சில படிவங்களில் அவள் கையெழுத்து இட வேண்டியிருந்தது. எல்லா வேலைகளையும் முடித்து, சரி பார்த்துப் பணியாளர்கள் அனைவரும் கிளம்ப அவளும் கிளம்பினாள்.
அந்நேரம் அவளது அலைபேசியில் விஜய் அழைக்க, அங்கேயே நின்று அவனோடு பேசி விட்டு நிமிர்ந்தாள்.
அவளும், வெற்றியும் மட்டுமே அங்கிருந்தனர்.
“நீங்க கிளம்பதான் வெயிட் பண்ணேன்” அவள் கேளாமலே பதில் சொன்னான் வெற்றி.
மௌனமாய்த் தலையசைத்து புன்னகைத்தாள். அவள் கரம் அலைபேசியைக் கைப் பையினுள் வைத்து, வெளியே வருகையில் புத்தகத்தைச் சுமந்திருந்தது.
வெற்றியும் அச்சமயம் தன் இரு சக்கர வாகனத்தில் புத்தகத்தைதான் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவன் கையில் பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலும், எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரியும் இருக்க, அதை ஆச்சரியத்துடன் பார்த்தாள் வேதா.
அவள் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்தவனின் கண்களில் தெரிந்த வேறுபாட்டில், வெகுண்டு எழுந்தாள் வேதா.
“என்ன அப்படிப் பார்க்கறீங்க சார்?”
காரமாகக் கேட்டாள்.
“இல்ல. அதென்ன புத்தகத் தலைப்பு? பிரியம் எப்படிப் பேசும்? நீயாகிட வந்தேன்? நான் எப்படி நீயாக முடியும்?” என்று அவன் கேட்க கேட்க அவளுக்குக் கண்ணை மறைத்து அப்படியொரு கோபம் வந்தது. அவள் ஏற்கனவே இருந்த குழப்பமான மனநிலையிலும் அதற்குக் காரணம். அதை மாற்றதான் புத்தகங்களை எடுத்திருந்தாள். இப்பொழுது அவன் அதையே கேலியாகக் கேள்வி கேட்க, கடுப்பாகி இருந்தாள் வேதா.
முதல் முறையாக அவனுக்குச் சொற்பொழிவு ஆற்ற தயாரானாள் வேதவர்ஷினி.
வெற்றி வேந்தன் தலையைப் பின்னுக்கு இழுத்து, வேகமாக இரு கைகளையும் மேலே உயர்த்தி, அவள் கண்களைப் பார்த்து, “சரண்டர்” என்றான். வேதா விடவில்லை.