நற்காதல் நெய்திடவா – 5 (2)

அவனது இரு சக்கர வாகனத்தில் ஏறினாள். நேராக ஆவடியின் பிரபல பிரியாணி கடையின் முன்பு சென்று நிறுத்தினான் வெற்றி.

“இல்ல வேணாம் சார். என்னோட ரெண்டு அக்காங்க இருக்காங்க. ஏதாவது சமைச்சுருப்பாங்க. நான் வீட்டுக்கு போயிட்டு சாப்பிட்டு..” கை நீட்டி அவளது பேச்சை நிறுத்தினான் வெற்றி.

“தேவதர்ஷினி, நீங்க பிரியாணி சாப்பிட தானே காலையில வெளில போனீங்க? என்னால அது மிஸ்ஸானதா இருக்க வேணாம். வாங்க.”

அதற்கு மேல் மறுப்புச் சொல்லாமல் முன்னே நடந்தாள் வேதா. அவளின் அதிமேதாவி அத்தை மகள் வேறு அவர்கள் பிரியாணி சாப்பிடும் புகைப்படத்தைச் சிரத்தையுடன் எடுத்து அவளுக்கு அனுப்பியிருக்க, அதைப் பார்த்து கடுப்பாகி இருந்தாள் அவள். அதனால் பதிலுக்கு அவளைக் கடுப்பேற்ற என்றே பிரியாணி வாங்கினாள்.

“சர் உங்களுக்கு?”

“நான் போய் என் ஃபேமிலி கூட ஜாயின் பண்ணிப்பேன். எங்களுக்கும் லஞ்ச் இன்னைக்கு வெளிலதான்” என்று அவன் சொல்ல, சரி என்று சொல்லி அவளுக்கான உணவை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தாள்.

இரண்டே நிமிடங்களில் அவள் வசித்த தெருவில் இறக்கி விட்டான் வெற்றி.

“சாரி சார் அண்ட் தேங்க்ஸ்”

“இட்ஸ் ஓகே. மண்டே பார்க்கலாம் தேவதர்ஷினி”

“வேதவர்ஷினி” கோபமாக அவனைத் திருத்தினாள்.

“யா, ரைட் தேவதர்ஷினி தானே? வர்றேன் பை” என்றவனின் மேல் கோபம் துளிர்க்க, அவன் மேல் சற்று முன்பு துளிர்த்த பிடித்ததை, பிடிக்காமல் தவற விட்டாள் வேதா.

வெற்றி அப்பாவிற்கு அழைத்தான். அவர்கள் அவனுக்காக வீடு திரும்பியிருக்க, நேராக வீடு சென்றான் அவன்.

வண்டியை வெளியில் நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தான். அப்பாவும், தங்கையும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவனுக்கு அதைப் பார்த்ததும், “கம்பீர் மாதிரி கோபப்படாதீங்க சார்” என்ற வேதவர்ஷினியின் குரல் அவன் காதில் ஒலிக்க, தன்னை மீறி சிரித்தான்.

“வாப்பா, என்ன இவ்வளவு நேரமாகிடுச்சு? வேலை முடிஞ்சதா? வா, வந்து சாப்பிடு” உள்ளே இருந்து வந்த அம்மா சொல்ல, அப்பா, தங்கை இருவரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

“என்ன ண்ணா? ஒரே ஸ்மைலி ஃபேஸா இருக்கு? நீ போன வேகத்துக்குக் கோபமா வருவன்னு இல்ல நினைச்சோம். நீயென்ன சிரிக்கிற?” சோஃபாவில் இருந்து தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து கேட்ட தங்கையின் தலையைக் கலைத்து விட்டான் வெற்றி.

“நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா ப்பா?”

“நாங்க எப்பவோ சாப்பிட்டாச்சு. நீ வந்து உட்காரு” அப்பாவுக்குப் பதில் அம்மா அவனுக்குப் பதில் சொல்ல, “இதோ வர்றேன் மா” என்று தனது அறைக்குச் சென்றான் வெற்றி.

அவன் உடை மாற்றி உணவருந்த வர, மொத்த குடும்பத்தின் பார்வையும் அவன் மேல்தான் பதிந்திருந்தது.

உணவு மேஜையின் முன்பு இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தான். வெளியில் இருந்து வாங்கி வந்திருந்த உணவை அவனுக்குப் பரிமாறினார் அவனின் அம்மா ரேவதி.

“பேங்க்ல எதுவும் பிரச்சனையா ப்பா வெற்றி? என்னாச்சு?” அப்பா சுந்தரம் கேட்க, “இல்லப்பா. பெருசா ஒன்னுமில்ல. ஃபால்ஸ் அலாரம்தான்” என்றான்.

“ஓ சரிப்பா. பெருசா எதுவும் ஆகாதது, நல்லதா போச்சு” அவர் சொல்ல, ஆமோதித்து உணவில் கவனம் செலுத்தினான்‌.

“அதுக்கு ஏன் டா அப்படி அவசரமா பதறியடிச்சு ஓடின?” அம்மா அவன் தட்டை நிரப்பியபடி கேட்க, அவருக்குப் பதில் சொல்லும் முன்பே புன்னகைத்தான். அவன் தங்கை சுவேதா அருகில் வந்து அமர, “புது அசிஸ்டன்ட் மேனேஜர்கிட்ட சாவி இருக்குது மா. அவங்க போவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அவங்க வேலையா வெளில மாட்டிட்டாங்க. அதான் நான் போக வேண்டியதா போச்சு” என்றான்.

“ஓ. ஆனாலும் மேனஜர் நீ போய்த் தானே ஆகணும்? அதுவுமில்லாம அவங்க புதுசு வேற சொல்ற”

“ம்ம். அதை விடுங்க மா” என்று அந்தப் பேச்சை புறக்கணித்தவன், நிதானமாக உணவை முடித்து விட்டு எழுந்தான். தங்கையின் பக்கத்தில் அமர்ந்து, “அப்புறம் சுவேதா, படிப்பு முடியப் போகுது. மேல என்ன பண்றதா ஐடியா?” என்று கேட்டான்.

அவன் திடீரென்று அப்படிக் கேட்கவும் அவன் தங்கை பதிலின்றித் திருதிருத்து, “அது.. ” என்று இழுத்தாள்.

வெற்றிக்கு ஏனோ வேதாவின் தெளிவும், அவளின் பதிலும் ஞாபகம் வந்தது.

“படிப்பு முடிஞ்சா அடுத்து என்ன? வேலைக்குதான் போகணும் ண்ணா. அப்பா போல அழகழகான வீடு கட்ட ஆசைப்பட்டுத் தானே ஆர்க்கிடெக்ட் படிச்சேன். அந்த ஆசையை நிறைவேற்ற வேணாமா? நான் பண்ற ஒரு டிசைனையாவது அப்பா அப்ரூவ் பண்ணி, அதை அழகான வீடா மாத்தணும். அதுதான் இப்போதைக்கு என்னோட பெரிய ஆசை. அப்புறம் உனக்குக் கல்யாணம் ஆகுமா? அப்போ உங்களுக்காக ஒரு வீடு டிசைன் பண்ணணும்.” கையை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு தங்கையின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தான் வெற்றி.

“என்னோட டிசைனை அண்ணி அப்ரூவ் பண்ணணும். அப்புறம் அப்பாகிட்ட அதைக் கொடுத்து உங்களுக்கு ரொம்ப அழகான ஒரு வீடு கட்டிடலாம்” குரலில் இருந்த துள்ளல் அவளின் உடலிலும் வந்திருந்தது. மிகுந்த உற்சாகத்துடன் சொன்ன தங்கையைப் பார்த்து அவன் சிரிக்க, “என்ன சிரிக்கிறண்ணா” என்று அவன் தோளில் அடித்தாள் தங்கை.

“ஏன்பா வெற்றி, உன் தங்கச்சி இவ்ளோ கனவு காணுறா? அதுக்கு முதல்ல உனக்குக் கல்யாணம் ஆகணும் இல்ல? என்னப்பா, கல்யாணத்துக்குப் பார்ப்போமா?” மகனிடம் கேட்டார் ரேவதி. அவரின் கண்கள் கணவரை துணைக்கு அழைக்க, அவரும் எழுந்து மகனிடம் வந்தார்.

“ம்ம். உங்கம்மா கேட்கிறதுக்குப் பதில் சொல்லு வெற்றி” மகனின் தோளில் கைப் போட்டு அமர்ந்தார்.

வெற்றியின் கண்கள் தன்னை ஆவலாகப் பார்த்த மூன்று ஜோடி கண்களையும் ஒருமுறை வலம் வந்தது.

“என்ன திடீர்னு கல்யாண பேச்சு எடுக்கறீங்க? எல்லாம் இவளால வந்தது” என்று தங்கையை முறைத்தான் அவன்.

“நீ ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழிச்சுட்டே இருக்க வெற்றி. ஆறு மாசத்துக்கு முன்னாடி கேட்டப்போ எனக்கு இது புதுப் பிராஞ்ச். வேலை செட்டாகணும், கொஞ்ச மாசம் போகட்டும்னு சொன்ன. இப்போ என்ன காரணம் சொல்லப் போற?” அப்பா கறாராகக் கேட்க, உதவிக்கு அம்மாவை பார்த்தான் அவன். ஆனால், அவரும் கேள்வி கேட்கும் மனநிலையில்தான் இருந்தார் போலும்.

“மூனு வருஷமா விதவிதமா விளக்கம் சொல்ற டா நீ. அப்படி என்ன கல்யாணத்தின் மேல உனக்கு வெறுப்பு?” கேட்ட தாயின் குரலில் மகனின் வாழ்க்கை குறித்த கவலை இருக்க, எட்டி அம்மாவின் கையைப் பிடித்தான் வெற்றி.

“ம்மா. அப்படி எல்லாம் எதுவும் இல்ல மா. வெறுப்பெல்லாம் இல்ல. என்னமோ இதுவரை கல்யாணம் மேல இன்ட்ரஸ்ட் வரல”

“ஹான். அப்புறம் மேனேஜர் சாருக்கு வேற எது மேல இன்ட்ரஸ்ட் வருதாம்?” அம்மா நக்கலாகக் கேட்க, “அம்மா” சிரித்துச் சமாளிக்கப் பார்த்தான்.

“உனக்கு 28 வயசாகப் போகுதுப்பா. இதுக்கும் மேல உனக்குக் கல்யாண வயசு வர நாங்க காத்திட்டு இருக்கணுமா என்ன? இல்ல, நீ சரின்னு சொல்ற வரை தாத்தா, பாட்டியாகத் தவம் இருக்கணுமா?” ஆதங்கத்துடன் கேட்டார் ரேவதி.

அம்மாவை அவஸ்த்தையுடன் பார்த்தான் வெற்றி.

“ப்ச் ரேவதி. பேசாம இரு. அவனைக் கட்டாயப்படுத்தாத. கல்யாணம் எல்லாம் அவங்க சொந்த விருப்பத்தில் செய்துக்கணும். நம்ம பிள்ளைங்க தானேனு ‍அவங்க மேல விருப்பமில்லாத எதையும், நம்ம ஆசைக்காகத் திணிக்கக் கூடாது” என்று சுந்தரம் சொல்ல, அப்பாவை நன்றியுடன் பார்த்தான் வெற்றி.

ரேவதி அவர்கள் இருவரையும் கோபமாக முறைத்து விட்டு, அங்கிருந்து அகன்று சமையலறைக்குள் புகுந்து கொண்டார். எப்போதும் போல அம்மாவின் பின்னோடு சென்று அவரைச் சமாதானப்படுத்தவில்லை வெற்றி.

தங்கையுடன் சேர்ந்து கிரிக்கெட் பார்த்தான் அவன். அன்றிரவு உணவும் அமைதியிலேயே கழிந்தது.

மறுநாள் காலை உணவின் போது தன் பதிலை சொன்னான் வெற்றி. ரேவதியின் முகம் அனிச்சையாய் வெளிச்சமாகியது.

“ஏங்க, எப்படிப் பொண்ணு பார்க்கிறதுங்க?” கணவரிடம் அவர் கேட்க, “என்னைக் கேட்டா? கட்டிக்கப் போற வெற்றிகிட்ட இல்ல இதை நீ கேட்கணும்?” கிண்டலாக அவர் சொல்ல, கணவரின் தோளில் அடித்தார் ரேவதி.

அதைப் பார்த்தபடி உணவை உண்டான் வெற்றி.

“நீ சொல்லுப்பா. எப்படிப் பொண்ணு எதிர்பார்க்கிற? பொண்ணு வேலைக்குப் போகணுமா? என்ன படிச்சுருக்கணும்? நம்ம சொந்த ஊரில் பார்ப்போமா? இல்ல, சென்னையா? அப்புறம் உன்னோட மேட்ரிமோனி ப்ரொஃபைலை அப்டேட் பண்ணுவோமா?” வரிசையாகக் கேள்விகளை அடுக்கினார் அவர்.

வெற்றி பதில் சொல்வதற்கு முன் ரேவதி முந்திக் கொண்டு பதில் கொடுத்தார்.

“வேலைக்குப் போற பொண்ணா பார்ப்போம். எந்த ஊரா இருந்தா என்ன? இவன் டிரான்ஸ்ஃபர் ஆகும் போதெல்லாம், இவன் கூடவே போகச் சம்மதிக்கற பொண்ணா பார்ப்போம். அவ்வளவுதான். நான் சொல்றது சரி தானே வெற்றி?” ரேவதி கேட்க,

“வேலை பார்க்கிற பொண்ணு வேணும் சொல்றீங்க மா. ஆனா, அண்ணா ஊர் ஊரா டிரான்ஸ்ஃபரானா அண்ணி வேலை என்னாகும்?” இன்னும் வராத அண்ணிக்காகச் சுவேதா கவலைப்பட, சிரித்தான் வெற்றி.

“ஆமா. அது வேற இருக்கு இல்ல?’ என்ற கவலையுடன் கேட்டவர், “என்னடா பண்றது வெற்றி?” என்று மகனையே கேள்விக் கேட்டார்.

“முதல்ல பொண்ணு பார்க்க ஆரம்பிங்க மா. அப்புறமா இதையெல்லாம் பார்த்துக்கலாம்” அசட்டையாகச் சொன்னான்.

“அப்படியெல்லாம் விட முடியாது டா. எல்லாத்தையும் முன் கூட்டியே யோசிச்சு வைக்கணும். நாளைக்குப் பொண்ணு வீடு கேட்கும் போது, நாம பதில் சொல்ல ரெடியா இருக்கணும் இல்ல?” தெளிவாக அவர் பேச, “ம்ம். சரிதான். அப்போ மூனு பேரும் உட்கார்ந்து ஒரு முடிவுக்கு வாங்க. நான் வெளில போய்ட்டு வர்றேன்” என்றபடி எழுந்து கொண்டான் வெற்றி.

“டேய், கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு? நான் பேசிட்டு இருக்கும் போதே வெளில போனா என்னடா அர்த்தம்? ஒரு சொல்யூஷன் சொல்லிட்டு போடா” கத்தினார் ரேவதி.

வெற்றி கையைக் கழுவி விட்டு அமமாவிடம் வந்தான். “டெய்லி பேங்க்ல இந்த வேலைதான் மா பார்க்கறேன். என் மண்டை சூடாகி போய் இருக்கு. இன்னைக்கு ஒரு நாள்தான் ரெஸ்ட். அதுனால, எனக்காக நீங்க எல்லோரும் உட்கார்ந்து யோசிங்க. நான் ப்ரெண்ட் வீடு வரைக்கும் போய்ட்டு வர்றேன்” அதற்கு மேல் நிற்காமல் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பி விட்டான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top