அவளைச் சுற்றிலும் மனித குரல்கள். அது மருத்துவமனை உணவகம் என்பதால், பேச்சில் சிரிப்பை விடக் கவலையும், வருத்தமும், பதற்றமும் அதிகம் இருந்தது.
‘ம்ம், மனிதர்களுக்கு இந்தப் பேசும் வரத்தை மட்டும் கடவுள் கொடுத்திருக்கா விட்டால் என்ன செய்திருப்பார்கள் இவர்கள்?’ என்று மனதில் அலுத்தப்படி உணவகத்தின் ஓரத்தில் நின்றிருந்தாள் ரோஜா.
அவள் அப்படி அலுத்துக் கொள்ளவும் காரணமிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் அவளிடம் மாமனார் சங்கரன் பேசியிருந்தார்.
அந்தப் பேச்சை இன்னமும் அவளால் ஜீரணிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறாள்.
வெறும் அரை மணி நேரம்தான் மாமனார் பேசியது. ஆனால், அதைக் கேட்டு அவளுக்குத் தொண்டையில் ஏதோ சிக்கிய அவஸ்தையில், நேராகச் சமையலறை வந்து சுடுநீர் வைத்துக் கூடக் குடித்து விட்டாள். ம்ஹூம், சரியாகவில்லை.
அப்பா வேறு அவளையே கவலையாக, கேள்வியாகப் பார்க்க, அவரிடமும் எதையும் பகிர முடியவில்லை. ஆனால், இன்றில்லா விட்டாலும், நாளையே அவரிடம் சொல்லித் தானாக வேண்டும். சொல்லாமல் முடியாதே.
அம்மாவிடம் சென்று விடலாம் என்றால், இத்தனை வேலைகளுக்கு மத்தியில் அப்பாவை தனியாக விட்டுச் செல்லவும் அவளுக்கு மனம் வரவில்லை.
மற்ற அனைவரையும் விட அவளுக்கு அதிமுக்கியமாக இளமாறனின் இறுகிய அணைப்பில் நிற்க ஏங்கியது மனம். ஆனால், இப்பொழுது அவனிடம் நிச்சயமாய்ப் போக முடியாது.
அவள் முகமே மனத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.
“ரோஜா, என்னம்மா பண்ணுது? ஏன் உன் முகமே சரியில்ல? இந்தக் காஃபியை குடி முதல்ல” மகளை அங்கிருந்த இருக்கையில் அமரச் செய்து அவளிடம் ஆவி பறக்கும் ஃபில்டர் காஃபியை கொடுத்தார் சிவஹரி.
ரோஜா அவசரமாகக் காஃபியை கையில் எடுக்க, “ரோஜா” என்றார் மீண்டும்.
“லேசா தலை வலிக்குற மாதிரி இருக்குப்பா. இந்தக் காஃபியை குடிச்சா சரியாகிடும்”
“இல்லம்மா, ரொம்பச் சோர்ந்து தெரியற. பேசாம நீ காஃபியை குடிச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பு. இங்க அப்பா பார்த்துக்கறேன்” அவள் மறுக்க இடம் கொடாமல் சொன்னார்.
“சரிங்கப்பா” என்ற ரோஜா, அடுத்தப் பதினைந்தாம் நிமிடம் தன் காரை வீடு நோக்கி செலுத்தினாள்.
“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…” காரில் ஒலித்த பாடல் கூட அவளுக்கு இளமாறனை நினைவுப்படுத்தியது. அவளிடம் அடிக்கடி அவன் முணுமுணுக்கும் பாடல் அது. அவளையும் அறியாமல் இதழ்கள் பிரிந்து புன்னகைத்தது.
அவர்களுக்குத் திருமணம் முடிந்து இரண்டரை மாதங்கள் கடந்து விட்டது என்பதை இப்போது நினைத்தாலும் அவளுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.
முதல் மாதம் விருந்து, உறவினர் வீடுகள் என விரைந்து ஓடியிருந்தது நாள்கள். மகள் சுகந்தி சொதப்பியது அறிந்து வீடு தேடி வந்த கஸ்தூரி, பேரனை தங்கள் வீட்டு விருந்துக்கு வந்தேயாக வேண்டும் என்று வலியுறுத்தி விட்டே சென்றார்.
அவர்களும் சென்றார்கள்.
அங்கே அவர்களுக்குப் பலமான கவனிப்பு. உரிமை, உணவு, உடைகள் என அனைத்துமே அதீதம்தான். ஆனால், அதுவும் கூட ஒட்டாத தன்மையை அவளுக்குத் தந்ததை அவள் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
மூன்று வாரங்கள் கழிந்து அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, இளமாறன் மனைவி, வீடு, வேலை, சொந்தத் தொழில் என ஒரு சுழற்சியில் ஓடிக் கொண்டிருந்தான்.
ஆனால், ரோஜாவால் அது முடியவில்லை. மாமியார் வீட்டு ஆட்களை அவளால் தவிர்க்க முடியவில்லை. அவர்களோடு வசிக்கா விட்டாலும் கூட அனுதினமும் அவர்களைச் சந்திக்க நேரிட்டது.
அவர்கள் அனைவரும் ஒரே மருத்துவமனையில் பணிபுரிய, ஒருவரையொருவர் தவிர்ப்பது அத்தனை எளிதல்லவே.
மாமியார், மாமனாரை அவ்வப்போது சந்திக்க நேரிட்டது. சங்கரன் நல விசாரிப்புடன் பெரும்பாலும் ஒதுங்கிக் கொள்வார். ஆனால், சுகந்தி அப்படியல்ல.
மகனைக் குறித்து மறக்காமல் ஒவ்வொரு முறையும் அவளிடம் விசாரிப்பார். அன்றைய தினம் நடந்ததற்காக அவளைத் தனியாக அழைத்து மன்னிப்புக் கூடக் கேட்டு விட்டார்.
அதன் பின் பல முறை அவளை வீட்டிற்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறார். ரோஜா சதா சாக்குப் போக்குகள் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
வினோத், வெண்பாவை சந்திக்கும் பொழுதுகள் நன்றாகச் சென்றது. அவளிடம் மரியாதையான நட்பை, உறவை பேணினார்கள். ரோஜா அவர்களை வீட்டுக்கு அழைத்தாள், வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
ரோஜா குடும்பத்திற்கு இப்போது அந்த மருத்துவமனையில் மரியாதை கூடியிருக்கிறது. அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவளுக்கு வாழ்க்கை மிக மிக மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது.
அவள் ஆசைப்பட்ட நாள்கள் எல்லாம் அம்மா வீடு செல்வதும், அப்பாவுடன் திருமணத்திற்கு முன்பு போல வேலைக்கு வருவதும் எனப் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாத அவள் வாழ்கையில் அனுதினமும் அமைதியாகக் காதலை நிறைத்து அவளுக்கு வேறு உலகை காண்பித்தான் இளமாறன்.
உண்மையில் விரல் சுட்டி எதையும் குற்றம், குறை சொல்ல முடியாத நிறைவான வாழ்க்கை.
ஆனால், மாமியார் குடும்பத்தை ஒன்றாகக் காண நேர்ந்த பொழுதுகளில் எல்லாம் மனதில் தோன்றிய நெருடலை, அபஸ்வரத்தை அவளால் ஒதுக்க முடியவில்லை.
பத்து நாட்களுக்கு முன் பயிற்சி மருத்துவரான வெண்பா தன் வேலை முடித்து மாலை போல மருத்துவமனை வர, யதேச்சையாக ஏதோ வேலையாக அங்கிருந்தார் சுகந்தி. மகளைப் பார்த்ததும் அவளை நெருங்கி புன்னகைத்து, அவளின் சோர்ந்த முகம் பார்த்துக் கையில் இருந்த தண்ணீரை அவளுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
இருவரும் சிரித்துப் பேசி அங்கிருந்து நகர்ந்ததைக் கண்ட ரோஜாவின் மனதில் எரிச்சல் மொட்டு வைத்தது.
இதே அன்பை இளமாறனுக்கு ஏன் இவர்கள் கொடுக்கவில்லை, என்ற கேள்வி மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இத்தனைக்கும் அப்பா, தம்பி, தங்கை என அவர்களிடம் எல்லாம் அன்பாகதான் நடந்து கொள்கிறான் அவன். தன்னால் இவர்களைப் புரிந்து கொள்ள இயலாமலே போய் விடுமோ என்று ரோஜா வருந்திக் கொண்டிருக்கையில் அவளிடம் வந்தார் சுகந்தி.
ரோஜா வேலையைக் காரணம் காண்பித்து மறுக்க வாய்ப்புத் தராமல் அவளைக் கையோடு வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனார்.
“எத்தனை முறை வீட்டுக்கு கூப்பிடுறேன். ஏன் வர மாட்டீங்கறீங்க ரோஜா” அறைக்குள் நுழைந்ததும் அந்தக் கேள்வியைதான் கேட்டார்.
“அவர் வேலையில் பிஸியா இருக்கார் அத்த” சமாளித்தாள் ரோஜா.
“ம்ம், எனக்குப் புரியுது. நாம எல்லோரும் சென்னையில்தான் இருக்கோம். நீயும், நானும் டெய்லி இதே ஹாஸ்பிட்டலுக்குதான் வேலைக்கு வர்றோம். நாம ஒரே வீட்ல இருந்தா என்ன? நீயும் மாறனும் எங்க கூட வந்துடுங்களேன், பிளீஸ்” இதை எதிர்பார்த்திருக்கவில்லை ரோஜா.
அவள் பதிலின்றி முழிக்க, “நீங்க இருக்கறது வாடகை வீடு தானே ரோஜா? அடுத்த மாசம் காலி பண்ணிட்டு எங்களோட வந்துடுங்களேன். நாங்க இத்தனை வருஷமா மாறனை பிரிஞ்சு இருந்துட்டோம். இனிமேலாவது எங்க பையன் எங்களோட இருந்தா நாங்க சந்தோஷமா, நிம்மதியா இருப்போம்” அவளின் கைப் பிடித்துக் கோரிக்கை வைத்தார்.
“நான் அவர்கிட்ட கேட்டுட்டு..”
“ப்ச் ரோஜா. அவன் வர மாட்டான். இவ்வளவு வருஷமா வராம இருந்தவன், இனியா வரப் போறான்? ஆனா, நீ மனசு வச்சா அது நடக்கும். நீ சொன்னா அவன் கேட்பான்.” என்றவர்,
“என் மகன் மாறனை என்கிட்ட பேச வையேன் ரோஜா. அவனை என்கிட்ட கூட்டிட்டு வாயேன். பிளீஸ். ஐ மிஸ் ஹிம்.” உணர்ச்சி மிகுதியில் அவருக்குக் கண்கள் கலங்கி விட்டது. ரோஜா அவரை வெறித்துப் பார்த்தாள். அந்தக் கண்ணீர் அவளை என்னவோ செய்தது. தொற்று வியாதி போல அவளுக்கும் கண் கலங்கியது.
ஒரு தாயாக அவரின் மனம் புரிந்தது. அவரின் தவிப்புப் புரிந்தது. ஆனாலும் அவளால் என்ன செய்து விட முடியும்?
கண்டிப்பாகக் கணவனை அவள் கட்டாயப்படுத்த போவதில்லை.
“ரோஜா, ஏதாவது சொல்லேன்” சுகந்தி அவளைப் பிடித்து உலுக்கினார்.
“எனக்குக் குழந்தைங்கன்னா கொள்ளை ஆசை ரோஜா. அவ்வளவு பிடிக்கும். இந்தக் கையால டெய்லி எத்தனை டெலிவரி பார்க்கறேன்? ஆனாலும், என் முதல் பிள்ளை இளமாறனை கண்ணால பார்த்த அந்த நிமிஷம் என்னால மறக்கவே முடியாது. அப்போ நாலு வயசு அவனுக்கு, என்கிட்ட ஒட்டவேயில்ல. அவனுக்கா தோனினாதான் அம்மா சொல்வான். உனக்குத் தம்பி வேணுமா? தங்கச்சி வேணுமான்னு அவன்கிட்ட கேட்டுதான் வினோத்தை நாங்க பெத்துக்கிட்டோம். தம்பி பக்கத்துலயே உட்கார்ந்துப்பான். அவனுக்காக எதையாவது எடுத்து வச்சு விளையாட்டுக் காட்டுவான். வெண்பா பிறந்தும் கூட இதையேதான் செய்தானே தவிர என்கிட்ட ஒட்டவேயில்ல. எங்கம்மா, அப்பா, ஏன் அவனோட அப்பாகிட்ட ஒட்டின அளவு கூட என்கிட்ட ஒட்டல. எனக்கு அதுல நிறைய வருத்தம் ரோஜா”
“…..”
“இப்பவாவது அவனை என்கிட்ட கூட்டிட்டு வாயேன். பிளீஸ். அவனுக்கு என் மேல நிறையக் கோபம் இருக்கலாம். அன்னைக்கு எப்படியோ, இன்னைக்கு என்னை மன்னிச்சு அம்மானு சொல்வான் தானே?”
“நீங்க வீட்டுக்கு வாங்க அத்த” ரோஜா அதை ஏன் சொன்னாள் என்று அவளுக்குத் தெரியவில்லை.
“கண்டிப்பா வர்றேன் ரோஜா. இந்த வாரம் வெள்ளிக் கிழமை வர்றேன். சரியா?” மகிழ்ச்சியுடன் கேட்டார். அவளும் சரியென்று தலையசைத்தாள்.
ஆனால், அதைக் கேட்ட இளமாறன் எதுவும் சொல்லவில்லை. அந்த வார விடுமுறைக்கு அவன் வீட்டிலும் இருக்கவில்லை.
மாமியார், மருமகளின் திட்டம் தோல்வியில்தான் முடிந்தது. அதற்கு மேல் ரோஜாவும் கணவனின் விருப்பத்திற்கு எதிராக எதுவும் செய்ய விரும்பாமல் மாமியாரை முழுக்கத் தவிர்க்க முயன்று கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள்.
அப்படியிருக்கையில்தான் இன்றைக்கு அவள் மாமனாரிடம் மாட்டியது.
“ரோஜா, உங்க மாமா உன்கிட்ட பேசணும் சொன்னார். போய் என்னனு கேட்டுட்டு வாம்மா” என்று அவளிடம் சிவஹரி வந்து சொல்ல, அப்பாவிடம் எதற்காக அழைத்தார் என்று விசாரிக்க முடியாமல் மாமனாரின் அறைக்குச் சென்றாள்.
அங்கே சங்கரனோடு இரண்டு வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்க, “வாம்மா ரோஜா” என்று அவளை வரவேற்றார் சங்கரன்.
“உட்காரு” என்று அவளுக்கு எதிர் இருக்கையைக் காட்டியவர், “இவங்க நம்ம அட்வகேட்ஸ்” என்று அவளுக்கு அறிமுகப்படுத்தினார்.
ரோஜா மாமனாரை குழப்பமாகப் பார்த்தாள். அவரோ இயல்பாக அவள் முன்னேயே வழக்கறிஞர்களிடம் தொழில் பேசி, அவர்களை வழியனுப்பி வைத்தார்.
மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்தவரிடம், “சொல்லுங்க மாமா.” என்றாள் ரோஜா.
ஒரு நிமிடம் அவளைப் பார்க்காமல் மேஜையில் இருந்த கோப்புகளைச் சீராக அடுக்கி வைத்தார் அவர். பின்னர் இளமாறனை அழைத்து அவனிடம் பொதுவாகப் பேசி விட்டு வைத்தார்.
ரோஜாவிற்கு அவரின் நடவடிக்கைப் புதிராக இருந்தது. ஆனாலும், விஷயத்தை அவரே சொல்லட்டும் எனக் கைக்கட்டி அவரைப் பார்த்திருந்தாள்.
மேஜை மீதிருந்த தொலைபேசியை எடுத்து யாரிடமோ பேசி விட்டு அவளைப் பார்த்தவர், “உங்கத்தயும் வர்றதா சொல்லியிருந்தா, அதான் வெயிட் பண்ணேன். அவ ஒரு எமர்ஜென்ஸி சிசேரியன் பார்க்கறாளாம், அது முடிய முக்கா மணி நேரமாகும் போல.” என்றவர், தயக்கத்துடன், “நாம அப்புறமா பேசுவோமா?” என்று கேட்க, ரோஜா பதட்டமானாள்.
“ஏதாவது பிராப்ளமா மாமா?” அவள் கேட்கவும்,
“ச்சே ச்சே இல்லம்மா. நீ ஏன் டென்ஷன் ஆகுற?” என்றார் தன்மையாக.
“அது உங்க அத்தையோட ஆசை. அவளோட ஐடியா. அதான் அவளே உன்கிட்ட சொல்லட்டும்ன்னு பார்த்தேன்” அவர் தயங்க,
“பரவாயில்ல நீங்க சொல்லுங்க மாமா. அத்தை வந்ததும் அவங்ககிட்ட பேசிடுறேன்” என்றாள் ரோஜா.
சங்கரன் முழுதாய் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார்.
“மாமா”
“அது நம்ம ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்டை நீ பார்க்கணும்னு…”
“நானா? நான் எதுக்கு மாமா?” அவர் முடிக்கும் முன்பே, அவர் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டு எதிர் கேள்வி கேட்டாள் ரோஜா.
“இது நம்ம ஹாஸ்பிடல். இது மாறனுக்குச் சொந்தமானது. நீ பார்க்காம வேற யார் பார்ப்பா ரோஜா?” என்று கேட்டவரை, ரோஜா அதிர்ச்சியாகப் பார்க்க,
“நம்ம ஹாஸ்பிடல் ஃபோர்ட் ஆப் டைரக்டர்ஸ்ல உன் பேரை சேர்க்கப் போறோம்.”
“உங்க மகனுக்கு இது தெரியுமா மாமா?”
“நான் அவன்கிட்ட இது பத்தி பேசினேன் ரோஜா. ஆனா, அவன் சரியான பதில் சொல்லல. இப்போ இல்ல, பல வருஷமா அவன்கிட்ட இது பத்தி பேசியாச்சு. என் பேச்சை அவன் எங்க கேட்கிறான்? மாறன் இடத்தில அவன்தான் இருக்கணுமா என்ன? நீ இருந்தாலும் சரியாதானே மா இருக்கும். அதுனாலதான் நம்ம அட்வகேட்டை வரச் சொல்லி பேசினோம். உன் பேரை சேர்க்கச் சொல்லி இருக்கோம்…”
“வேணாம் மாமா.” பட்டென மறுத்தாள்.
“என்னம்மா ரோஜா, இப்படிப் பேசுற?”
“அவர் சொல்லாம, அவர்கிட்ட கேட்காம நான் எந்த முடிவும் எடுக்க மாட்டேன். அவருக்குப் பிடிக்கலைன்னா..”
“அவனுக்கு எங்களைக் கூடத்தான் பிடிக்காது. பிடிக்காது என்ன, எங்க மேல இன்னமும் கோபமும், வெறுப்புமாதான் இருக்கான். அதுக்காக எங்களை நீயும் ஒதுக்கிடுவியா மா?” ஆதங்கத்துடன் கேட்டார் சங்கரன். ரோஜா அவரைச் சங்கடத்துடன் பார்த்தாள்.