இத்தனை விரைவாக, அதுவும் இன்றைக்கே வீட்டில் கல்யாண பேச்சை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை வேதவர்ஷினி. புதிதாகச் சேர்ந்திருந்த வேலையில் அவள் பொருந்த, பணி சூழல் பழக என்று சில மாத அவகாசத்தை அவளுக்குக் கொடுப்பார்கள் என்றே நினைத்திருந்தாள் அவள்.
நினைத்தது எல்லாம் என்றைக்கு அவள் வீட்டில் நிகழ்ந்திருக்கிறது? ஒரு கோப பெருமூச்சுடன் பாதி உணவில் அவள் எழுந்து கொள்ள, சோறு பிசைந்த கையுடன் பேத்தியை பிடித்து நிறுத்தினார் முத்துமாரி.
“போ அப்பத்தா” காளி அவதாரத்தில் இருந்தவள் கண்ணை உருட்டி சொல்ல, “சோத்துல கோபத்தைக் காட்டாத, உட்காரு” அதட்டி அவளைச் சாந்தப்படுத்தினார்.
“எனக்கு வேணாம். போதும். நீங்க சாப்பிடுங்க” அவள் மறுத்து சொன்ன மறுநொடி, “இந்தா ஆரம்பிச்சுட்டா இல்ல நாடகத்தை” என்று அலுத்துக் கொண்டார் வானமாமலை.
அவளுக்குக் கோபத்தில் உதடு துடிக்க, மூக்கு விடைக்க, அப்பாவை முறைத்தாள்.
“இங்க பாரு வேதாமா. அப்பா உன் ஆசைக்கு இறங்கி வந்து வேலைக்கும் போக விட்டுட்டேன். இப்ப புதுசா ஏதாவது காரணத்தைச் சொல்லிட்டு இருக்காம, எங்க ஆசைப்படி ஒழுங்கா கல்யாணத்தைப் பண்ணிக்கோ” குரலை உயர்த்தாமல் கண்டிப்புடன் சொன்னவர், கூடத்தில் அமர்ந்திருந்த அத்தனை பேரின் மீதும் பார்வையும் வீசி விட்டு வெளியில் சென்றார்.
அவள் அசையாமல் அமர்ந்திருக்க, “என்னதான் வேதா உனக்குப் பிரச்சினை? ஏன் கல்யாணம் வேண்டாம் சொல்ற? யாரையாவது விரும்பறியா?” அவளின் தோள் தொட்டு சித்தி கேட்க, திரும்பி அம்மாவை முறைத்தாள் வேதா.
“இந்தாரு டி. என்னை என்ன பார்க்குற? உன் வயசுல எனக்கு நீ பொறந்துட்ட. தெரியுமா? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தானே சொல்றாங்க? கல்லைக் கட்டி கிணத்துல குதிக்கச் சொன்ன மாதிரி இல்ல அழுது அடம் பிடிக்கிற?” ஜெயலட்சுமி மகளின் முகம் பார்த்து சொல்ல,
“கல்யாணம் பண்ற வயசாமா எனக்கு? இதெல்லாம் குழந்தை திருமணத்தில் வராதா சித்தி?” அங்கலாய்த்து அவள் கேட்க,
“இந்தக் கேள்வியை நீ உங்க அப்புச்சியைக் கேளேன். அவர் சரியான பதில சொல்லுவார். ஏன்னா, எங்க அக்கா, அதான் உங்கம்மா, உங்கப்பாவுக்குக் கழுத்தை நீட்டும் போது அவளுக்குப் பதினாறு வயசுதான். நீ பிறக்கும் போது அவளுக்கு சரியா இருபத்திரண்டு வயசு. அன்னைக்கு 16 வயசு புள்ளையை மருமகளாக்கினார் உங்க அப்புச்சி” நீட்டி முழக்கி, நொடித்து அவர் சொல்ல,
“அது அந்தக் காலம் மா. இப்ப மாதிரியா அப்போ..” என்று ஆரம்பித்துச் சமாளிக்க முடியாமல் பேத்தியை திரும்பிப் பாவமாகப் பார்த்தார் அய்யனார். ஒரு நொடி அவரைப் பார்த்து வேதாவிற்குச் சிரிப்பாக வந்தது. அதை மறைத்து, “இப்படியே கல்யாணம், கல்யாணம் சொல்லி என்னைப் பயமுறுத்திட்டு இருங்க. ஒருநாள் அதுல இருந்து தப்பிக்கக் கல்லைக் கட்டி கிணத்துல குதிக்கத்தான் போறேன் நான்.” வெடுக்கென அவள் சொல்ல, எட்டி மகளின் கன்னத்தில் அடித்தார் ஜெயலட்சுமி.
“நல்லா ஊர் நியாயம் பேசுற அந்த வாயிலயே போடு கா” என்று அம்மாவிற்கு எடுத்துக் கொடுத்தார் அவளின் சித்தி.
அவளுக்கு இயலாமை தந்த கோபம் அழுகையாக வெளிப்படத் தயாராக இருக்க, கண்ணை உருட்டி அம்மாவை முறைத்து அதை விழுங்கினாள்.
சட்டென அவர்களிடம் இருந்து பார்வையைத் திருப்பி, “நீ சோறு ஊட்டு அப்பத்தா” என்று கடுப்புடன் சொன்னாள் வேதா.
மொத்த குடும்பத்தின் மேலிருந்த எரிச்சலை சோற்றை மெல்லுவதில் காட்டினாள். அதைப் பார்த்து அவளின் அண்ணன் விஜயகுமார் சிரிக்க, “எல்லாம் உன்னாலதான் டா அண்ணா” என்று அவன் மேல் பாய்ந்தாள் அவள்.
“இப்படியே ஒவ்வொருத்தர் மேலயா பழி சொல்லிட்டே இரு. என்ன?” அவளின் தலையில் தட்டி விட்டு அவன் நடக்க, “ஏய் விஜய்ண்ணா..” என்று கோபமாக அழைத்து, மனத்தில் மானாவாரியாகத் தோன்றிய அர்ச்சனைகளை அம்மாவின் முகத்தைப் பார்த்து அப்படியே விழுங்கினாள்.
“விடு ஆத்தா. என்னை மீறி என்ன பண்ணிடுவாங்க இவங்க. நாம பார்த்துக்கலாம்” அய்யனார் பேத்திக்கு ஆதரவாகப் பேச, “மாமா” என்று அவரை அதட்டினார் ஜெயலட்சுமி.
“பேத்திகிட்ட நான் பேசுறேன் மா. நீ ஏன் கோவப்படுற?” பட்டென அவர் கட்சித் தாவ, “அப்புச்சி” பல்லைக் கடித்துக்கொண்டு அவரை அழைத்துத் தலையைச் சிலிப்பி ஆத்திரத்தை அடக்கினாள் வேதா.
அந்தச் சூழலே அவளுக்கு மூச்சடைக்கச் செய்ய, அமைதியாய் எழுந்து, அங்கிருந்து நகர்ந்து மாடியை நோக்கிச் சென்றாள். பெரியவர்கள் மௌனமாய் அவள் செல்வதைப் பார்த்தனரே தவிரத் தடுக்க முனையவில்லை.
மொட்டை மாடியில் சென்று குட்டைச் சுவரை பிடித்தபடி நின்றாள். அங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையமும் அதன் நிரந்தரப் பரப்பரப்பும் கண்களுக்குப் பரபரப்பை கொடுக்க, கைகளைக் கட்டி, கண நேரத்தில் நகரும் காட்சிகளைப் பார்த்திருந்தாள்.
மழை சென்னைக்குக் குளிர்ச்சியைக் குத்தகைக்கு விட்டுச் சென்றிருக்க, இதமான காலநிலை நிலவியது. ஏதேதோ எண்ணங்கள் மனதில் வலம் வர, சாலையில் விரையும் வாகனங்களைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
வேதவர்ஷினியின் ஊரில் இப்போதும் இளவயது திருமணங்கள் வழக்கத்தில் இருந்தது. அதிலும் பெண் பிள்ளைகளுக்குக் கேட்கவே வேண்டாம். கல்லூரியில் காலடி எடுத்து வைத்து விட்டாலே போதும் கல்யாண பேச்சு வார்த்தை தொடங்கி விடும்.
அவளுக்கும் அதுதான் நடந்தது. அதில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு முறையும் அவளின் பிடிவாத அழுகையும், அப்பத்தா, அப்புச்சியுமே கைக் கொடுத்து அவளைக் காப்பாற்றி வந்தனர்.
கல்லூரி படிப்பை முடித்ததும் அவளால் காரணங்கள் சொல்ல முடியவில்லை. மேல் படிப்பு ஆசை, வேலைக்குச் செல்ல விருப்பம் என அவளின் கோரிக்கை எதுவும் அங்கே எடுபடவில்லை.
மகளுக்கு மணமுடித்து வைப்பது என்ற ஒரே பிடியில் நின்றார்கள் அவளின் பெற்றோர். அந்நேரம் அவளுக்கு நல்ல நேரமாக அவர்கள் வீட்டு ஆஸ்தான ஜோதிடர்தான் கைக் கொடுத்தார்.
“பாப்பாக்கு இப்போ கல்யாண யோகம் இல்லையே. இன்னும் ஒரு வருஷம் போகட்டும். அப்புறம் பார்க்க ஆரம்பிங்க.” என்ற அவரின் கணிப்பு, அவளுக்கு அப்படியொரு ஆனந்தத்தைத் தந்தது.
அம்மாவின் புலம்பலைக் கேட்டு அறைக்குள் வந்து துள்ளி, குதித்து நடனமாடினாள்.
இதற்கிடையில் கல்லூரி இறுதி ஆண்டில் இருக்கும் போதே அவள் வங்கித் தேர்வுகளுக்கும் தயாராக, அதற்கு வீட்டில் தடை விழாமல் பார்த்துக் கொண்டார் அய்யனார். படிப்பு, வேலை இவை மட்டுமே அவளது குறிக்கோளாக மனதில் இருந்ததால், தேர்வை நன்றாக எழுதி தேறியிருந்தாள். தேர்வு முடிவுகளை வீட்டில் சொல்லவே முதலில் பயந்தாள் அவள். ஆனால், அன்றைக்கு நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப் போனது.
“சென்ட்ரல் கவர்மெண்ட் வேலையா? பேங்க் பரீட்சைல பாஸ் பண்ணிட்டியா? உனக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் பதவி தருவாங்களா?” ஆச்சரியம், அதிர்ச்சி, மகிழ்ச்சி, பெருமை என ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு உணர்விருக்க, சிறகில்லாமல் பறந்தாள் வேதா.
ஆனால், ஒற்றைக் கேள்வியில் அவளின் சிறகை ஒடித்துக் கீழே விழ வைத்தார் வானமாமலை.
“உன் விருப்பப்படி வேலைக்குப் போகப் போற, அப்புறம் என்ன? கல்யாணத்துக்குப் பார்க்கவா வேதா?” அந்தக் கேள்வி புரியாதது போல அப்பாவை பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மகள்.
“உன் இஷ்டப்படி வேலைக்குப் போ. அப்பா வேணாம் சொல்லல. ஆனா, கல்யாணம் பண்ணிட்டு வேலைக்குப் போ”
“இல்லப்பா..” என்ற மகளைப் பேசவே விடவில்லை அவர்.
“ஏற்கனவே உன்னை விரும்பி கேட்டு நிறைய வரன் வருது. இப்போ உனக்குக் கவர்மெண்ட் வேலை வேற கிடைச்சிருக்கு. நாமளும் இப்பவே நாலு பேருக்குகிட்ட சொல்லி வச்சாதான்…”
“அப்பா பிளீஸ். நான் வேலைக்குப் போகணும்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க புதுசா ஒரு வீட்டுக்கு போன்னு சொல்லிட்டு இருக்கீங்க. எப்படிப்பா? என்னால எப்படி ரெண்டையும் சமாளிக்க முடியும்.?” மகள் கேட்டதும், மீசையை நீவி விட்டுக் கொண்டு அவளுக்கு அருகில் அமர்ந்தார்.
“இங்க பாரு மா” என்று ஆரம்பித்து ஒரு நீண்ட சொற்பொழிவு, மொத்த குடும்பத்துக்கும் சேர்த்து ஆற்றி விட்டுத்தான் ஓய்ந்து அமர்ந்தார் வானமாமலை.
அப்பத்தா, அப்புச்சி வேறு பேத்தி பெருமையைச் சற்று அதிகமாகவே பேசி வீட்டினரை வெறுப்பேற்றி இருக்க, எல்லாம் சேர்ந்து இப்போது அவளுக்கு எதிராகத் திரும்பி இருந்தது.