என் ஜீவனில் உறைந்திடு – 19 (3)

ரோஜா அவனை ஆத்திரத்துடன் முறைத்து அவன் கையைத் தட்டி விட்டாள். மெல்ல கை நீட்டி மேஜையின் மேலிருந்த வேறொரு கத்தியை எடுத்து அவனிடம் நீட்டி, “அது வெண்ணெய் வெட்டுற கத்தி. கையை வெட்டாது. இதான் பழம் நறுக்கிற கத்தி, வெட்டினா ரத்தம் வரும்” என்று சிரிக்காமல் தீவிரமாக ரோஜா சொல்ல, அதைக் கேட்டபடியே வந்து அவளுக்கு அருகில் நின்ற இளமாறன் சத்தமாகச் சிரித்து விட்டிருந்தான்.

ரோஜாவின் இடையில் கை கோர்த்து நெருக்கமாக நின்று இளமாறன் சிரிக்க, அவள் நீட்டிய கத்தியை வாங்கிக் கீழே போட்ட ரகுவரனும் சிரித்து விட்டான்.

“எனக்கு மெனு டிசைன் பண்ண முடியுமா கேட்டேன். ஒரே வார்த்தையில் முடியாது சொல்றாங்க உங்க வைஃப்”

இளமாறனிடம் புகார் படித்தான் ரகுவரன்.

“ரோஜாவோட முடிவுகள்ல அவ விருப்பம் இல்லாம, அவளே கேட்காம நான் தலையிடுறது கிடையாது ரகு” ரகுவரனின் கண்ணை நேராகப் பார்த்துச் சொன்ன இளமாறன், “என் பதிலை உங்களுக்கு ஏற்கனவே சொல்லிட்டேன். ஐ ஹோப் யூ வில் ரெஸ்பெக்ட் மை டெசிஷன்” என்று முடிக்க, மௌனமாய்த் தலையசைத்தான் ரகுவரன்.

இளமாறனுக்கு மிகப் பெரிய தொகையைத் தருவதாகச் சொல்லியிருந்தான் ரகுவரன். மனைவியைப் போலவே அவனும் மறுத்து விட்டான். பணத்தை விடத் தொழில் நேர்மை அவனுக்கு முக்கியமானதாக இருந்தது.

அவர்களின் முடிவை மதித்தாலும், மனதார ஏற்றுக் கொள்ளவில்லை ரகுவரன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள் அவர்கள்.

வீடு செல்லும் வழியில், சிவஹரியையும் அழைத்துக் கொள்ள அவர்கள் செல்ல, “மாப்பிள்ளை இந்தத் தெரு முனையில் கொஞ்சம் நிப்பாட்டுங்க. அங்க மா இஞ்சி கிடைக்கும், ஊறுகாய் போட்டு நித்யாக்கு கொடுத்து விடணும்” என்றார் சித்ரா.

“உனக்குத் தொக்கு பண்ணித் தர்றேன். எடுத்துட்டு போ ரோஜா” என்று மகளிடம் திரும்பி அவர் சொல்ல, “சரிம்மா” என்று சிரித்தாள் ரோஜா.

கணவன், மகள்கள், அவர்களின் மகிழ்ச்சி இது மட்டுமே அம்மாவின் உலகம் என்று அவளுக்குத் தோன்றியது.

எப்போதும் தங்களைக் குறித்து மட்டுமே எப்படி அவரால் யோசிக்க முடிகிறது என்ற ஆச்சரியம் அவளை நிறைத்தது. அம்மாவை நெருங்கி அவரின் தோள் சாய்ந்துக் கொண்டாள்.

அப்பாவுடன் வீடு திரும்பினார்கள். மருமகன்கள் முன்னே கணவரை திட்ட முடியாமல் அவரை முறைத்துக் கொண்டே சித்ரா சுற்ற, பேரனுக்குக் கதை சொல்லும் சாக்கில் அவரிடம் இருந்து தப்பித்துக் கொண்டார் சிவஹரி.

நித்யா தன்னுடன் ரோஜா, இளமாறனை அழைத்துக் கொண்டு பெங்களூர் திரும்பினாள்.

அக்கா வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி, ஊர் சுற்றி, ஷாப்பிங் செய்து, படம் பார்த்து, விருந்துண்டு மீண்டும் சென்னை திரும்பினார்கள் ரோஜாவும், இளமாறனும்.

அங்கிருக்கையில் சுகந்தி ரோஜாவை அலைபேசியில் அழைக்க, அக்கா வீட்டில் இருப்பதைத் தெரிவித்தாள் அவள்.

“சூப்பர். அப்புறம் நம்ம வீட்டுக்கு எப்போ வர்றீங்க ரோஜா?” என்று சுகந்தி கேட்க, “ஊருக்கு வந்ததும் வர்றோம் அத்த” என்றிருந்தாள் ரோஜா.

ஆனால், ஊர் திரும்பிய பின் அலைச்சல் தந்த சோர்வில் ஓய்வெடுத்தார்கள் இருவரும்.

இரண்டு தினங்கள் கழித்துச் சுகந்திக்கு அழைத்துப் பேசும் போது வீட்டுக்கு வந்து விட்டதை மட்டுமே சொன்னாள் ரோஜா. அவராக வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் முந்திக் கொண்டு அவளே வீடு வருகிறோம் என்று சொல்லவில்லை.

அவர்களைச் சுகந்தியும் நேரடியாக அழைக்கவில்லை.

மருத்துவமனை வேலைகள் அவரின் நேரத்தை முழுமையாக முழுங்கி கொண்டது.

ஆக, அவரால் மகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க இயலவில்லை.

இளமாறனின் விடுமுறை முடிந்திருக்க அன்று பணிக்குத் திரும்பினான் அவன்.

“ரோஜா, உன்ன ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணப் போறேன்” ரோஜாவை இறுக அணைத்து முத்தமிட்டுச் சொன்னான். கணவனின் அணைப்பில் வாகாய் பொருந்தி நின்றபடி, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் ரோஜா.

“எட்டு மணி நேர வேலைக்கு இப்படி டச்சிங்கா டயலாக் பேசாதீங்க செஃப்.” அவனிடம் நெருக்கத்தைக் கூட்டியபடி குறும்பாகச் சொன்னாள்.

இளமாறன் சிரிப்புடன், “சரி டயலாக் பேசாம ஆக்சன் பேசலாம்னா நேரமில்ல..” என்று இழுக்க, உதடு கடித்துக் கணவனைச் செல்லமாக முறைத்தாள் ரோஜா.

“இப்படிப் பார்க்காதடி” என்றவன், “அச்சோ லேட்டாகுது. நான் கிளம்பறேன். நீயும் பார்த்துப் போ. காரை பார்த்து ஓட்டு. நான் ஈவ்னிங் ஹோட்டல்ல இருந்து கிளம்பும் போது கால் பண்றேன்” என்று முடித்தான்.

“ஓகே” என்ற ரோஜா அவனுக்குக் காலை உணவைப் பரிமாறினாள்.

இருவரும் உணவை முடித்து அவரவர் வேலை இடத்துக்கு விரைந்தார்கள். ரோஜா வீடு சென்று அப்பாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றாள்.

அவரை வாயிலில் இறக்கி விட்டு, அவள் காரை பார்க்கிங்கில் சென்று நிறுத்தி இறங்கும் போது அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்றது சுகந்தியின் கார்.

அவரைப் பார்த்து அப்படியே நின்ற ரோஜாவை நெருங்கி அவளின் கைப் பிடித்துக் கொண்டார்.

தந்த நிற லினன் சேலையில் இருந்த மருமகளைப் புன்னகையுடன் பார்த்து, “ரோஜா எப்படி இருக்க? மாறன் எங்க?” என்று கேட்டார்.

“அவர் வேலைக்குப் போய் இருக்கார் அத்த.” என்றாள் ரோஜா.

“ஓ, அவனுக்கு லீவ் முடிஞ்சதா?”

“ஆமாங்க அத்த. ரெண்டு நாள் எக்ஸ்ட்ரா லீவ் எடுத்திருந்தார்” அவளின் அந்தப் பதிலில் புகார் தொனி மறைமுகமாக இருக்கவே செய்தது.

“சாரி. உன் மாமா சொல்லிட்டே இருந்தார். நான்தான் வேலைல மறந்துட்டேன். அடுத்து அவனுக்கு எப்போ ஆஃப்?” சுகந்தி குற்ற உணர்ச்சியுடன் கேட்க,

“வர்ற வெள்ளிக் கிழமை” என்றாள் ரோஜா.

“ஓகே ரோஜா. அப்போ அன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வீட்டுக்கு வரணும். ஒரு வாரம் எங்க கூடத் தங்கற மாதிரி வரணும். சரியா?” அவர் கேட்கவும் தலையசைத்தாள்.

“நான் மாறன்கிட்ட பேசுறேன்‌. அவங்கப்பாவையும் பேசச் சொல்றேன். அவன் வருவான். அவனைக் கூட்டிட்டு வீட்டுக்கு வர வேண்டியது உன் பொறுப்பு” அவளின் கையில் அழுத்தம் கூட்டிச் சொன்னார் சுகந்தி.

அந்த வேண்டுகோளை மறுக்க முடியாமல், “சரிங்க அத்த” என்றாள் ரோஜா.

அவரிடம் சொன்னது போலவே வெள்ளிக் கிழமை அவரின் வீட்டில் இருந்தார்கள்.

அன்று அம்மம்மா, தாத்தா வந்திருக்கவில்லை. வெண்பா மருத்துவமனையில் வேலையாக இருந்தாள்.

சுகந்தி, சங்கரன், வினோத் அவர்களை வரவேற்று உபசரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். ரோஜா அங்கு இயல்பாகப் பொருந்திப் போனாள்.

இளமாறன் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டான்.

மதிய உணவுக்கான நேரம் நெருங்க, “மாறா, ரோஜா, வாங்க சாப்பிடலாம்” என்று அழைத்தார் சுகந்தி.

இளமாறன் இலையில் தான் உணவுகள் அனைத்தையும் முதலில் பரிமாறினார்.

அடுத்து அவர் அனைவருக்கும் பரிமாறி முடிக்க, உண்ணத் தொடங்கினார்கள். இளமாறன் இலையில் இருந்த பால்கோவாவை ரோஜா எடுத்துக் கொள்ள, சுகந்தி அதைப் பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.

மீண்டும் மகன் இலையில் அதை வைத்தார். இம்முறை ரோஜா அதைத் தொடவில்லை.

வத்தக் குழம்பு, அவியல், சாம்பாரை தொடர்ந்து தயிரை ஊற்றினார். சட்டெனக் கையைப் பின்னுக்கு இழுத்தான் இளமாறன்.

ரோஜா கை நீட்டி அந்தச் சோறையும், தயிரையும் எடுத்து தன் இலையில் வைத்து உண்ணத் தொடங்க, அவளை முறைத்துக் கொண்டே பால் பாயாசத்தை மகன் இலையில் பரிமாறப் போனார் சுகந்தி.

“ப்ச், சுகந்தி” என்று சங்கரன் மறுப்பு சொல்லும் முன்பு, “அத்த..” என்று கை நீட்டி அவரைத் தடுக்க முனைந்தாள் ரோஜா.

“நீ உன் இலையைப் பார்த்து சாப்பிடு ரோஜா” அவரே எதிர்பாராத விதமாகச் சற்றுக் காட்டமாக வந்து விழுந்தது அவரின் வார்த்தைகள்.

ரோஜா அவரைத் திடுக்கிடலுடன் பார்க்க, “மாறனுக்குப் பால், தயிர் எல்லாம் பிடிக்காது சுகந்தி. மறந்துட்டியா?” என்று கேட்டார் சங்கரன்.

சுகந்தி வெடுக்கென நிமிர்ந்து மகனைப் பார்க்க, “ரோஜாகிட்ட இனிமே அப்படிப் பேசாதீங்க” என்று சொல்லி, இலையை மூடி விட்டு இருக்கையைப் பின்னுக்குத் தள்ளி எழுந்து கொண்டான் இளமாறன்.

நிதான நடையுடன் கைக் கழுவ செல்லும் மகனை பார்த்தபடியே, “மாறா.. சாரி” என்று சுகந்தி சொல்ல, “ஐயோ, அத்தை பிளீஸ்” என்று அவரின் கைப் பிடித்தாள் ரோஜா.

“நீ சாப்பிட்டு வா ரோஜா. உன்கிட்ட பேசணும்” என்றார் சுகந்தி.

இதைத் தவிர்க்கதான் அவள் நாள்களைத் தள்ளிப் போட்டது. ஆனால், இனிமேல் முடியாது என்று உணர்ந்து, பத்து நிமிடங்கள் கழித்து அவரின் பின்னே சென்றாள்.

இருவரும் சுகந்தியின் அறையை ஒட்டியிருந்த பால்கனியில் நின்றார்கள்.

அவளின் முகம் பார்த்து மனதார, “சாரி ரோஜா” என்றார் சுகந்தி.

“பெரியவங்க நீங்க போய் என்கிட்ட சாரி சொல்லிட்டு.. பிளீஸ் வேண்டாம் அத்த” ரோஜா சொல்லவும் புன்னகைத்தார்.

“நான் சாரி சொன்னா மாறன் சமாதானம் ஆவான். அதுக்காக மட்டும் இல்ல, நான் உன்கிட்ட அப்படிப் பேசி இருக்கக் கூடாது. அதுக்காகவும்தான் சொன்னேன்” என்றவர்,

“நான் எப்பவும் இப்படித்தான். ஒரு விஷயத்தைச் செஞ்சிட்டு அப்புறம் செய்திருக்கக் கூடாதுன்னு யோசிக்கிறவ.” என்று கசப்பான புன்னகையுடன் சொன்னார்.

“உனக்கு எங்க ஃபேமிலி பத்தி நிறையக் கேள்விகள் இருக்கும்னு எனக்குத் தெரியும். நான் முடிஞ்ச வரை அதுக்கு விடைகள் சொல்ல முயற்சி பண்றேன்.” என்றார். சற்று நேரம் மௌனமாய் வானத்தை வெறித்தார் சுகந்தி.

“அத்த, எனக்கு எதுவும் தெரிய வேணாம்” ரோஜா தயக்கத்துடன் சொல்ல, அவள் பேசியது காதில் விழாதது போலப் பேசினார் சுகந்தி.

“இளமாறன், என் முதல் பிள்ளை. எனக்கு அம்மான்ற உணர்வையும், உறவையும், பதவியையும், பட்டத்தையும் தந்தவன். ஆனா, அவன் என்னை அம்மான்னு கூப்பிட்டு பல வருஷமாச்சு” தொண்டையடைக்கக் கலங்கிய குரலில் சொன்னார் சுகந்தி.

ரோஜா அவரைப் பரிவாகப் பார்க்க, “அவன்கிட்ட என்னை அம்மான்னு கூப்பிடாதன்னு நான்தான் சொன்னேன் ரோஜா.” என்றவரை, சடாரென நிமிர்ந்துப் பார்த்தாள் ரோஜா. அதிர்ச்சியில் அவள் விழிகள் விரிந்து, அப்படியே உறைந்து சுகந்தியை பார்த்தது.

error: Content is protected !!
Scroll to Top