வேதா சென்று இருவருக்கும் காஃபி தயாரிக்க, அவள் பின்னே வால் பிடித்துச் சமையல் அறைக்குள் நுழைந்தான் வெற்றி.
“இப்போ தானே காஃபி குடிச்சோம்?” வெற்றி கேட்க, “எ லாட் கேன் ஹப்பன் ஓவர் எக் கப் ஆஃப் காஃபி” என்று கண் சிமிட்டினாள் வேதா.
அவனுக்கான காஃபி கோப்பையை அவள் நீட்ட, அதை வாங்கிக் கொண்டு சமையல் மேடையில் சாய்ந்து நின்றான்.
“கைஸ் நாங்க வெளில போறோம்” காந்திமதி, கௌசல்யா இருவரும் அவர்களிடம் கத்தி விட்டு வெளியில் சென்றார்கள்.
வெற்றி கள்ளச் சிரிப்புடன் திரும்பி வேதாவை பார்த்தான்.
“ஒரு கப் காஃபி குடிக்கிறதில் என்ன நடந்திடப் போகுது? அட்லீஸ்ட் வெற்றியின் கோபம் போனா போதும் எனக்கு” வேதா சொல்ல, ஒரு மிடறு காஃபியை குடித்து விட்டு,
“நான் பார்க்க என்னோட ப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ்னு நிறைய லவ் மேரேஜ் தோல்வியில் முடிய என்ன காரணமா இருக்கும்னு ரொம்ப யோசிச்சுருக்கேன் வேதா. அப்போ எனக்கு என்ன தோனுச்சுன்னா, பொதுவா எல்லோரும் லவ் பண்ணும் போது எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போய்டுறது. கோபம், வருத்தத்தை எல்லாம் பெருசு பண்ணாம, கோபப்படாம கெஞ்சி, கொஞ்சி சரி பண்ணி, அந்த நேரம் சந்தோஷமா இருந்து, பிரச்சனையை அப்படியே கண்டுக்காம விட்டுடுவாங்க. ஆனா, அதே பிரச்சனை கல்யாணத்துக்கு அப்புறம் வரும் போது, என்னாகும் தெரியுமா?
நான் அன்னைக்கு இதையேதான் பண்ணேன். அப்போ நீ ஒன்னுமே சொல்லல. ஏன்னா, அப்போ நீ என்னை லவ் பண்ண. இப்போ உனக்கு என் மேல லவ் போச்சுன்னு குத்தம் சொல்லி, ஒருத்தர் கழுத்தை ஒருத்தர் பிடிக்க வேண்டியது. அதான், நேத்து என் மனசுல இருந்ததை, என் கோபத்தை, என் ஆதங்கத்தை உன்கிட்ட அப்படியே கொட்டிட்டேன் வேதா. அதை மனசுல வச்சுட்டே இருந்திருந்தா, கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்குப் பின்னாடி ஒரு நாள் பெரிய பிரச்சனையா வெடிச்சு இருக்க வாய்ப்பு அதிகம்.
நான் நேத்து உன்னை ரொம்ப ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்னு தெரியும். பட், இந்த விஷயங்கள் என்னை ஹர்ட் பண்ணுதுன்னு உனக்குத் தெரியணும்னு நினைச்சேன்.” வெற்றி நீண்ட விளக்கம் கொடுக்க, வேதா அவனை நெருங்கி நின்றாள்.
“எனக்குப் புரிஞ்சுது வெற்றி. நீங்க கோபமா பேசினதுதான் எனக்குக் கஷ்டமா இருந்தது. மத்தபடி உங்க மேல கோபமில்ல. நீங்க சொன்னது மனசில இருக்கு. இது போல இனி நடந்துக்க மாட்டேன்” அவள் மென்மையாய் சொல்ல, அவள் கண்களை ஊடுருவி, “நானும் உன்னை ஹர்ட் பண்ற மாதிரி பேச மாட்டேன் செல்லமே” என்றான் வெற்றி.
அவள் புன்னகைத்து, “கோபம் போச்சா?” என்று கேட்டாள்.
“அது என் கேள்வி செல்லம். உன் கோபம் போச்சா? தேடி தேடி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வச்சது, வைக்கிறது நீ தானே?” நமுட்டு சிரிப்புடன் அவன் கேட்க, சட்சட்டென்று அவன் மார்பில் அடித்தாள் வேதா.
“நான் ஸ்டேட்டஸ் வச்சது ஒரு குத்தமா? அந்த வரிகள் பிடிச்சது வச்சேன். அதுக்கு வேற ஒரு அர்த்தம் நீங்க கண்டுபிடிச்சா, அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும். நேத்து என்னைப் பதில் சொல்ல விடாம, அப்படிப் பேசுறீங்க” அவள் சொல்லவும், நெற்றியில் ஓங்கி அறைந்து கொண்டான் வெற்றி.
“அப்போ இன்னைக்கு நீ வச்சுருக்க ஸ்டேட்டஸ்” அவன் கேட்க, கையில் இருந்த காலி காஃபி கோப்பையை ஓரமாக வைத்து விட்டு, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள் வேதா.
“அதே பதில்தான். எனக்கு அந்த லைன்ஸ் பிடிச்சது வச்சேன். உங்களுக்குப் பிடிச்ச ரைட்டர்ஸை தேடி வாசிச்சுட்டு இருந்தேன். அதான்…” அவள் முடிக்கும் முன்பே, “ஆஹா..” என்று சொல்லி மெலிதாக விசிலடித்தான். அவனை ஓங்கி அடித்தாள் வேதா. சிரிப்புடன் அவளின் இடையை வளைத்தான் வெற்றி.
“நேத்து பிரபு நம்ம போட்டோஸ் எல்லாம் அனுப்பினார். உங்களுக்கும் மெயில் பண்ணி இருக்கதா சொன்னார். நேத்து உங்ககிட்ட சாரி சொல்லிட்டு, அப்படியே ஃபோட்டோ எல்லாம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்கலாம்னு வந்தேன். அதுல பூ வச்ச அன்னைக்கு எடுத்த ஃபோட்டோவும் இருந்தது. உங்க கூடச் சேர்ந்து பார்த்தா, அன்னைக்கு நடந்தது அவ்வளவா ஞாபகம் வராதுன்னு நினைச்சேன். அதுக்குள்ள என்னை அப்படித் திட்டிட்டீங்க” சொல்லும் போதே குரல் உடைய, அவன் மார்பில் சாய்ந்தாள் வேதா.
அனிச்சையாக அவன் கரம் உயர்ந்து அவளை அணைத்துக் கொண்டது.
“சாரி செல்லமே” மென்மையாய் அவளின் உச்சியில் தாடையைப் பதித்துச் சொன்னான்.
“ம்ம். நம்மால அந்த நாளை அவ்வளவு சீக்கிரம் மறக்கவே முடியாது இல்ல?” அவள் கேட்க, பொய் சொல்ல விரும்பவில்லை அவன்.
“மறக்க டிரை பண்ணலாம் வேதா” என்றான் அழுத்தமாக.
“நான் அத்தைகிட்ட சாரி சொன்னேன்” அவன் மார்பில் முணுமுணுத்தாள்.
அவன் அதிர்ந்து அவளை விலக்கி முகம் பார்த்தான்.
“ம்ம். அன்னைக்கு நீங்க ஊரில் இருந்து வந்ததும் மாமா கூட டிரைவ் போய் இருந்தீங்களா?, அப்போ நான் வீட்டுக்கு போய் அத்தைகிட்ட பேசினேன்” அவன் முகத்தில் குற்ற உணர்வு, புன்னகை, கோபம் எனக் கலவையான உணர்வுகள்.
“என்கிட்ட சண்டை போட்டுப் போனை கட் பண்ணிட்டு, அம்மாகிட்ட போய்ப் பேசியிருக்க நீ? அதை என்கிட்ட சொல்லவும் இல்ல?” அவன் பொய்யாக முறைக்க, “நேத்து சொன்னேன். நீங்க எங்க காதுல வாங்கினீங்க” உதடு துடிக்க அவள் சொல்ல, “ஐயோ, நான் ஒரு முழு முட்டாள்” என்றான்.
“ஆமா..” என்று அவள் ஆமோதிக்க, அவளின் நெற்றியில் முட்டிச் சிரித்தான் வெற்றி.
“என்கிட்ட சண்டை போட்டுட்டு, உங்க அத்தைகிட்ட போய்ச் சமாதானம் பேசியிருக்க? இதை எப்படிச் சொல்றது? ஆடு உறவு, குட்டி பகைன்னா??” அவன் கிண்டலாகக் கேட்க,
“நம்ம ரெண்டு பேர் டீலிங்கும் வேற. ஆனா, அத்தை. எனக்கு மனசு கேட்கல வெற்றி. எங்க வீடு அவங்களை ரொம்ப அவமானப்படுத்திருச்சு. அதான், அத்தைகிட்ட சாரி சொன்னேன்” தீவிரமாகச் சொன்னாள்.
“இட்ஸ் ஓகே வேதா.”
“நேத்து நீங்க பேசினது கூட நல்லதுதான். உங்களை எது ஹர்ட் பண்ணும். உங்களுக்கு எது பிடிக்காதுன்னு இப்போ எனக்குத் தெரியும். இனிமே அதெல்லாம் நடக்காம பார்த்துப்பேன்” அவள் உறுதியாகச் சொல்ல, அந்த அன்பில் நெகிழ்ந்தான் வெற்றி.
“நான் இன்னும் வேதாவை முழுசா படிக்கல.” என்று கண் சிமிட்டியவன், “ஆனா, அவ மனசை தினம் தினம் படிச்சுட்டு இருக்கேன். அவளுக்குப் பிடிக்காத எதையும் கண்டிப்பா செய்ய மாட்டேன். அப்படியே செஞ்சாலும் இப்படிக் கெஞ்சி, கொஞ்சி சமாதானம் பண்ணிடுவேன்” அவளை அணைத்து அவன் சொல்ல, அவன் மார்பில் சாய்ந்து அவனோடு வாகாகப் பொருந்தி நின்றாள் வேதா.
அவ்வாறாக இருவரும் தங்களின் மனக் கசப்பை பேசி சரி செய்திருந்தனர்.
வெற்றியின் கைகள் வேதாவை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தது.
“வேதா” அவன் கிசுகிசுக்க, முகம் உயர்த்தினாள் வேதா.
அவளின் கண்களை ஆழ பார்த்தான் வெற்றி. அவளின் கரு விழிகள் எல்லாப் பக்கமும் அலைபாய மென்நகையுடன் அவளை விடுவித்து, “நான் கிளம்பறேன். நாம வீக் எண்ட் பார்க்கலாம்” என்று விடை பெற்றுச் சென்றான் அவன். வேதா நிர்மலமான மனத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
வெற்றி வீடு சென்று காலணியைக் கழற்ற, காற்றில் ஆடி அவனது தலைக்கு மேலிருந்து சப்தம் எழுப்பியது வாசலில் இருந்த விண்ட் சைம்ஸ் (Wind chimes).
சின்னச் சின்ன நீண்ட கம்பிகளில் அசைந்து கொண்டிருந்தது குட்டி குட்டி சிட்டுகள். காற்றில் அவை அசைந்தாடி ஒருவித இசை எழுப்ப, அவனையும் அறியாமல் புன்னகைத்தான் வெற்றி.
மேலே அண்ணாந்து பார்த்து, ரசித்து நின்றான்.
“வேதா வாங்கிட்டு வந்து கொடுத்தா வெற்றி. வீட்ல பாஸிட்டிவ் எனர்ஜி இருக்கும்னு சொன்னா. அப்படி இல்லைனாலும், இந்தச் சத்தம் ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்லிக் கொடுத்தா. எனக்குப் பிடிச்சிருக்கு. நல்லா இருக்கில்ல?” என்று மகனின் ரசனையைப் பார்த்து ரேவதி சொல்ல, “ம்ம். இந்தச் சவுண்ட் வித்தியாசமா ஒரு மாதிரி ப்ளசண்ட்டா இருக்கு மா” என்ற வெற்றி, “ஆமா. வேதா இதை எப்போ கொடுத்தா?” என்று கேட்டான்.
“அதான் டா. அன்னைக்கு என்னைப் பார்க்க வந்தான்னு சொன்னேன் இல்ல? நீயும், உங்கப்பாவும் ட்ரைவ் போன அன்னைக்கு? அப்போ கொடுத்தா” என்று சொன்ன அம்மாவை கோபமாகப் பார்த்து, அவரின் முன்னே சென்று நிமிர்ந்து நின்றான் அவன்.
“என்னடா அடிக்கிற மாதிரி வர்ற?” ரேவதி அவனைத் தள்ளி விட முயன்று கேட்க, “என்கிட்ட ஏன் மா, முன்னாடியே அவ வந்ததைச் சொல்லல நீங்க?” என்று கோபமாகக் கேட்டான் வெற்றி.
“நான் சொன்னேன் டா. நீதான் கவனிக்காம போனை பார்த்துட்டே எழுந்து போய்ட்ட. சரி ஏதோ கோபம்னு நானும் விட்டுட்டேன்” அவர் சொல்ல சொல்ல, இப்போதுதான் அவனுக்கு எல்லாமே தெளிவாகியது.
காலையில் அம்மா வேதா வீடு வந்ததாகச் சொன்னது. வேதா அம்மாவுடன் பேசியதாகச் சொன்னது இரண்டும் ஒத்துப் போக, மண்டையை முட்டிக் கொள்ள இடம் தேடினான் அவன்.
“ஐயோ, அம்மா” என்றவன், “என்ன பேசினா?” என்று கேட்க, “அவ ஒன்னும் உன்னை மாதிரி கிடையாது டா. உனக்குப் பேங்க்ல வொர்க் பண்ற திமிரு. எனக்கு எவ்வளவு டென்ஷன் தெரியுமான்னு எப்பவும் கத்திட்டே இருப்ப. ஆனா, வேதா உன்னை மாதிரி கிடையாது. அவ சமத்து. என்கிட்ட அழுது, சாரி சொல்லி, என்னைச் சமாதானம் பண்ணா. நானும் அவளுக்கு உம்மா கொடுத்தேன்” ரேவதி சொல்ல, “அம்மா..” என்று கத்தினான் வெற்றி.
வேதாவிடம் கோபப்பட்டுக் கத்தியது, இப்போது தவறாகப் பட, தன்னையே நொந்து கொண்டான் அவன்.
“நானும்தான் உங்களைச் சமாதானம் பண்ணேன்” என்று அவன் முறைக்க, ரேவதி தீவிர முகபாவத்துடன், “வேதா ரொம்ப ஃபீல் பண்ணா டா. அவங்க அண்ணி பேர் என்ன மாலினி?” என்று அவர் கேட்க, “ஷாலினி” என்றான் வெற்றி.
“ம்ம். அந்தப் பொண்ணையும் என்கிட்ட பேச வச்சா. அந்தப் பொண்ணு என்கிட்ட பேசணும்னு சொல்லியிருக்கும் போல. அவங்கம்மா பேசினதுக்குச் சாரி சொன்னா டா. நல்ல பொண்ணுங்க தெரியுமா டா?”
“நீங்க என்கிட்ட இதைப் பத்தி ஏன் மா சொல்லல” ஆதங்கத்துடன் கேட்டான் வெற்றி. அவனின் காதல் பெண்ணின் மனத்தை உடைத்த வருத்தம் இப்போது அவனை வருத்தியது.
“நான் சொன்னேன் டா. அப்பா கூட இருந்தாரே” ரேவதி சொல்ல, அவரின் பின்னால் வந்து நின்ற சுந்தரம், “நீ அதைப் பத்தி என்கிட்டதான் சொன்ன. அப்போ வெற்றி போன் பேசிட்டு இருந்தான் ரேவதி” அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டே வந்தவர் விளக்கம் கொடுக்க, வெற்றி வாசக் கதவில் மோதி நின்றான்.
‘உங்களுக்காக அவளைக் கத்தினேன். இப்போ, என் மூஞ்சியை எங்க போய் வைக்க..’ மனதில் புலம்பியபடி அப்பாவை பார்த்தான்.
“வேதா உங்ககிட்ட சாரி சொன்னாளா பா?” அவன் கேட்டதும், அவன் எதிர்பார்த்த பதில்தான் வந்தது.
“ம்ம். ஆமா. ஏன் கேட்கிற?” அவர் பதில் கேள்வி கேட்க, “உங்களை எல்லாம் வச்சுட்டு, நாளைக்கு வேதா கிட்ட நான் டெய்லி மிதி வாங்குவேன் போல” வாய்க்குள்ளே முணுமுணுத்து, வெளியில் சத்தமாக, “ஒரு நிமிஷம் வேதா வீடு வரை போய்ட்டு வந்துடுறேன்” என்று அவசர அவசரமாகச் சொல்லி, காலணியை அணிந்து கொண்டு கிளம்பினான் அவன்.
“டேய்..” சுந்தரம் அழைக்க, “அவங்களுக்குள்ள ஏதோ சண்டை போல. அவன் போய்ச் சரி பண்ணிட்டு வரட்டும்” என்று கணவரின் கைப் பிடித்துத் தடுத்தார் ரேவதி.
வெற்றி விரைவாக வண்டியை செலுத்தி அடுத்தச் சில நிமிடங்களில் வேதாவின் வீட்டில் இருந்தான்.
அழைப்பு மணியை அழுத்தி விட்டு அவன் நிற்க, கௌசல்யா வந்து கதவைத் திறந்தாள்.
“தப்பா நினைக்காதீங்க சிஸ்டர். வேதாகிட்ட அவசரமா பேசணும். பிளீஸ்” என்றான்.
“ஓகே. உள்ள வாங்க” கிண்டலாகச் சொல்லி கதவை திறந்து விட்டாள் கௌசல்யா.
புயல் வேகத்தில் நகர்ந்து வேதாவின் அறைக் கதவை தட்டினான்.
“உள்ள வாங்க கா. எப்பப் பார்த்தாலும் கதவை தட்டிட்டு..” உள்ளிருந்து அலுப்பாகப் பதில் சொன்னாள் வேதா.
“எம்மாடி வேதா, என்கிட்ட எதையும் முழுசா சொல்ல மாட்டியா?” என்ற வெற்றியின் குரலில் படுக்கையில் இருந்து அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் வேதா. அவள் கையில் இருந்த புத்தகம் நழுவி தரையில் விழ, அதைக் குனிந்து கையில் எடுத்தான் வெற்றி.
“என்னாச்சு? இப்ப தானே பேசிட்டு போனீங்க?” அவள் கேட்க, அவளை இழுத்து இறுக்கமாக அணைத்திருந்தான்.
“வெற்றி..”
“ஷ்ஷ்ஷ். பேசாத வேதா.” என்று அவள் காதில் சொல்லியவன், “சாரின்னு கட்டிப்பிடிச்சும் சொல்லலாம் தானே?” என்று கேட்க, அவன் மார்பில் மறுப்பாக அசைந்தது அவள் தலை.
“செல்லமே, சாரி” மனதார கேட்டான்.
“இட்ஸ் ஓகே. இதையும் ஒரு அனுபவமா எடுத்துப்போம் வெற்றி.” என்று உணர்ந்து சொன்னாள் வேதா.
அவள் முகத்தை மென்மையாய் கைகளில் ஏந்தி, நெற்றியில் முத்தமிட்டான் வெற்றி.