நற்காதல் நெய்திடவா – 17 (1)

வேதாவிடம் கோபமாகப் பேசி விட்டு இப்பொழுது மனம் வருந்தினான் வெற்றி.

எதிர்பார்ப்புகள் எப்போதும் ஏமாற்றத்தை தானே தரும்? வேதாவை அவளுக்காக நேசித்து விட்டு, இப்போது அதையே குற்றமாகச் சொல்லி, குற்றம் சாட்டி அதிகம் பேசியது, அவன் மனசாட்சியே அவனைக் கேள்வி கேட்டது.

“ஒரு ஆகச் சிறந்த பெண்ணைக் காண்கிறோம். அவளின் அன்பின் பொருட்டு எதையும் நாம் இழக்காவிட்டால், யாருக்காக எதை இழக்க? காதல் என்பது சந்தோஷமும் கூட” குமரகுருபரனின் கவிதை வரிகள் அவனது கோபத்தை, கர்வத்தை ஓங்கி அடித்துச் சுக்கலாக உடைத்தது.

அவனது காதலும், சந்தோஷமும் வேதாதான் எனும் போது தன் கர்வம் தொலைத்து காதலை காணச் சென்றான் அவன்.

வெற்றி நேராக வேதாவின் வீட்டிற்குச் சென்று விடலாம் என்ற எண்ணத்துடன் வெளியில் வந்து வண்டியில் ஏறினான்.

“இன்னைக்கு ஈவ்னிங் கொஞ்சம் சீக்கிரம் வர்றியா வெற்றி. ஈவ்னிங்னா எட்டு மணிக்கு முன்னாடி.” என்று அம்மா சொன்ன விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“எட்டு மணி நைட்டு மா.” என்று கேலியாகச் சொல்லி சிரித்து, “வர டிரை பண்றேன் மா” என்றபடி அவன் வண்டியை இயக்க, “வேதாவையும் கூட்டிட்டு வாடா. நான் அவகிட்ட போன்ல சொல்லிடுறேன். என்னமோ அவகிட்ட பேசணும் போல இருக்கு” தொடர்ந்து சொன்னார் ரேவதி.

“அன்னைக்கு அவளே வந்து பேசிட்டு போனா, அதுக்கு அப்புறம் சரியா பேசவே நேரம் அமையலை எங்க ரெண்டு பேருக்கும். புதுப் பிராஞ்ச் அவளுக்கு எப்படி இருக்குனு வேற கேட்கணும்” அவர் புலம்ப, “ரொம்பத்தான் மா” என்ற வெற்றி, “ஆமா, அதென்ன, அன்னைக்கு வந்தா சொல்றீங்க? என்னைக்கு வந்தா? அவங்கம்மா, அப்பா கூட வந்தாளே? அப்பவா?” என்று அவன் கேட்க, “இல்லடா. அதுக்கும் முன்ன. நீயும், அப்பாவும்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனது அலைபேசி அடித்தது.

“வேதாதான் மா” புன்னகையுடன் அழைப்பை ஏற்றுப் பேசத் தொடங்கினான்.

“நான் ஒரு வார்த்தை பேசிக்கிறேன் டா.” ரேவதி கேட்க, அவரை முறைத்தான் வெற்றி.

“போடா, உன் தொல்லை இல்லாம, நாங்க தனியா பேசிப்போம்” என்று முகத்தைத் தோளில் இடித்துச் சொல்லி விட்டு வீட்டினுள் சென்றார் ரேவதி.

“வேதா” வெற்றி அழைக்க,

“சொல்லுங்க. டிரைவ்விங்ல இருக்கேன். வண்டியை ஓரம் கட்டிட்டு கால் எடுக்கிறதுக்குள்ள கட் ஆகிடுச்சு. சாரி” என்றாள் வேதா.

“என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட?”

“ம்ம். பீக் அவர் ட்ராஃபிக் அதிகமா இருக்கு. மேனேஜர் கிட்ட திட்டு வாங்க விரும்பல” சொல்லி விட்டு அந்தப் பக்கம் அவள் நாக்கை கடிக்க, “ஏய்..” என்றான் வெற்றி.

“எல்லா மேனேஜரும் ஒரே தயாரிப்புதான் போல. கோபம், கடுப்பு, கத்தல் எல்லாம் ரொம்பத் தூக்கலா இருக்காங்க.” அவன் மேலிருந்த கோபத்தில் அவள் சொல்ல, சத்தமாகச் சிரித்தான் வெற்றி.

“ஐ அம் சாரி” என்றவளின் குரலை கேட்க விடாமல் செய்தது, அவளுக்குப் பின்னிருந்து ஒலித்த வாகனங்களின் இரைச்சல்.

அதே நேரத்தில், “ரொம்பத் தூரம் போய்ட்டியா?” என்று கேட்டான் வெற்றி.

“இல்ல. திருமுல்லைவாயில் என்டர் ஆகிட்டேன். எதுவும் அர்ஜண்ட்டா?” தயக்கத்துடன் அவள் கேட்க, “ம்ம். ரொம்ப அர்ஜண்ட்தான். நேத்து ரொம்பப் பேசிட்டேன். நைட்டு என் ஆளு வந்து உதைக்கிறதுக்கு முன்னாடி, நான் அவ கால்ல விழுந்துடலாம்னு நினைச்சேன்.” வெற்றி சொல்ல, வேதாவின் முகத்தில் துளிர்த்த புன்னகையை அவன் அறியவில்லை.

“ஆனா, என்னை முந்திக்கிட்டு அவ சாரி சொல்றா. நான்தான் வேலை டென்ஷன், என்னோட சொந்த கோபம்னு அவளை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்” குற்ற உணர்ச்சியுடன் சொன்னான்.

காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையின் சாலை ஓரத்தில் நின்றிருந்த வேதாவுக்கு அந்த நிமிடம் வெற்றி முன் சென்று நிற்க வேண்டும் போலிருந்தது.

“நான் லீவ் போடவா? எனக்கு உங்களைப் பார்க்கணும்”

“லீவ் போடுவோமா?” இருவரும் ஒன்று போலக் கேட்டு விட்டு சிரித்தனர்.

“அப்படியே திரும்பி வந்துடவா?” என்று வேதா மென்மையாகக் கேட்க, “இல்ல. பேங்க் போ. ஜாயின் பண்ண உடனே லீவ் போட்டா சரி வராது. நாம ஈவ்னிங் பார்க்கலாம். எதையும் யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காம, வேலையில் கவனம் பண்ணு” என்று அவன் சொல்ல, “ஓகே” என்றாள் வேதா.

இருவரும் முன் தினத்தின் தாக்கம் சற்றே குறைந்து வங்கிக்கு சென்றனர். அன்று வாடிக்கையாளர் வரவு அதிகமாக இருக்க, அலைபேசியைத் தொட இருவருக்கும் நேரம் இருக்கவில்லை.

வேதா அவ்வப்போது தலையை நிமிர்த்தும் போது, அவள் கண்கள் அனிச்சையாக மேலாளர் அறைப் பக்கம் சென்றது. முன்னர் விழி தொடும் தூரத்தில் இருந்தவனைக் காணாது தவித்தாள் அவள்.

ஒரே கிளையில் வேலைப் பார்க்கும் போதெல்லாம் அவனைத் தேடாத மனது, இப்போது விழி தொட முடியா தூரத்திற்கு வந்த பின் தேடியது.

மதிய உணவு இடைவேளையாகக் கிடைத்த பத்து நிமிடத்தில், “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டு வெற்றிக்கு செய்தி அனுப்பினாள் அவள்.

“சாரிதான் சொல்லணும்னு இல்ல. சாப்பிட்டீங்களான்னு கேட்டு கூடச் சமாதானத்தை ஆரம்பிக்கலாம்னு உங்க.. இல்லயில்ல. உங்களுக்குப் பிடிச்ச எந்தக் கவிஞரும் சொல்லல. நான்தான் சொல்றேன்” என்று எழுதி அதனுடன் நாக்கை துருத்தும், கண்ணடிக்கும் ஸ்மைலிகளைச் சேர்த்து அனுப்பினாள் வேதா. அதைப் பார்த்ததும் வெடித்துச் சிரித்தான் வெற்றி. நல்லவேளையாக அவனது அறையில் இருந்தான். இல்லையேல் வாடிக்கையாளர் அவனை வித்தியாசமாகப் பார்த்திருப்பார்கள்.

“சாப்பிடணும் செல்லமே. என் கவிதை பொண்ணு வேதா கோபமா இருக்கா. அவளுக்குக் கோபம் குறையணும்னா கிஸ் கொடுத்து, கால்ல விழணும்னு காதல் விதி சொல்லுது. சோ, என் காதல் பொண்ணுக்காக வெயிட்டிங். அவ சமாதானம் ஆகிட்டான்னு தெரிஞ்சாதான் சாப்பிடணும். அதுவரை நான் பட்டினிதான்”

அதைப் படித்ததும் சிரிப்பை மட்டுமல்ல, வாயில் இருந்த சோறையும் சிந்தி விடாமல் இருக்க, சிரமப்பட்டாள் வேதா.

“நல்லா சொல்றீங்க காதல் விதி. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? ஆனாலும், கேட்க நல்லாதான் இருக்கு. இதை என் ரூல் புக்கில் சேர்த்துக்கறேன்.‌ உங்க இந்த மெசேஜை ப்ரூஃப்பா சேவ் பண்ணி வைக்கிறேன். எனக்கு நாள பின்ன உதவும்” என்று எழுதி அதனோடு, “ஒரு நேரம் சாப்பிடலன்னா வாய்க் கொழுப்புக் கொஞ்சம் குறையும்னு எங்க அப்பத்தா சொல்வாங்க. ஐ மீன் என்னைச் சொல்லுவாங்க. நான் உங்களைச் சொல்லல. ஒழுங்கா போய்ச் சாப்பிடுங்க” என்றும் அனுப்ப, இங்கே வெற்றியின் முகத்தில் புன்னகை மறையாமல் இருந்தது.

“லஞ்ச் சாப்பிடுங்க. ஓகே? ஈவ்னிங் பார்க்கலாம். இப்போ கடமை அழைக்கிறது” கடைசிச் செய்தியாக அதை அனுப்பி விட்டு, பாதி உணவோடு எழுந்து வேலையைப் பார்க்கப் போனாள் வேதா. அவ்வப்போது அலைபேசியை எடுக்க நினைத்தாள். அவளுக்கு வேலைகள் வரிசையாக வந்த வண்ணமிருக்க, அவளால் விரலை கூட வேலைக்காக அன்றி வேறு எதற்கும் அசைக்க முடியவில்லை. அலைபேசி அழைப்புகள் வந்தால் கூட, அதைச் சாக்கிட்டு வெற்றி ஏதாவது செய்தி அனுப்பியிருக்கிறானா என்று பார்த்திருப்பாள். அன்று பார்த்து யாரும் அவளை அழைக்கவும் இல்லை.

வாடிக்கையாளர் நேரம் முடிந்து, அவள் வங்கி அலுவல்களை முடித்துக் கொண்டிருக்கும் போது கேட்டது அந்தக் குரல். சட்டெனக் கண்களை உயர்த்திப் பார்க்க, வெற்றி அவளின் வங்கியில் இருந்தான்.

பளிச்சென அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

அந்தக் கிளையின் மேனேஜரிடம் பேசிக் கொண்டே அவளைப் பார்த்தான் அவன். ஐந்தே நிமிடத்தில் வேலை முடித்து அவனோடு வெளியில் வந்தாள் வேதா.

“என்ன சர்ப்ரைஸ் எல்லாம் கொடுக்கறீங்க வெற்றி சார்? உங்க வண்டி எங்க?” அவள் கேட்க, “ஆட்டோல வந்தேன். நம்ம பிராஞ்ச் இன்னைக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சது. இங்க கால் பண்ணி கேட்டேன். நீ கிளம்பல, நேரமாகும்ன்னு உங்க மேனேஜர் சொல்லவும், வந்துட்டேன்.” என்றான் வெற்றி.

“ம்ம்” என்ற வேதா வண்டியை வெளியில் எடுக்க, அவளின் இடையில் கைப் போட்டுப் பின்னால் அமர்ந்தான் வெற்றி.

இருவரும் முன் தின சண்டையைப் பற்றிப் பேசவோ, அதன் கோபதாபங்களை முகத்தில் காண்பிக்கவோ இல்லை.

சூரியன் முழுதாக மறைந்து விட்டிருந்தான். ஆனால், காற்றில் சூடும், வெக்கையும் குறையாமல் இருந்தது. முகத்தை வருடிய காற்றில் சற்றே ஆசுவாசப்பட்டு ஆவடியை வந்தடைந்தனர்.

“அம்மா, அப்பா இன்னைக்கு ஊருக்கு கிளம்பறாங்க” வேதா சொல்ல, “ஒரு வாரம் இருப்போம்னு‌‍ சொன்னாங்க?” என்று கேட்டான் அவன்.

“ம்ம், காலையில ஊர்ல இருந்து கால் வந்தது. காரும், டிரைவரும் இருக்காங்க இல்ல. அதான் உடனே கிளம்பறாங்க. நெக்ஸ்ட் வீக் வர்றேன்னு சொல்லி இருக்காங்க.” என்று அவள் சொல்ல, “ஓகே” என்றான்.

இருவரும் நேராக வேதாவின் வீடு சென்றார்கள். வெற்றியின் குடும்பமும் அங்கிருக்க மாலை தேநீர் அருந்தி வேதாவின் குடும்பம் விருதுநகர் புறப்பட்டனர்.

வானமாமலைக்கு மனதில் ஒருவித அழுத்தமும், வருத்தமும், சங்கடமும் இருக்க, காரில் ஏறும் முன் மகளின் கைப் பிடித்துக் கொண்டார் அவர்.

“நான் நல்ல அப்பாவா இல்லாம இருக்கலாம். ஆனா, அப்பாவுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். எங்க உசுரு நீ. உன்னைய நான் வளர்க்கவே இல்ல. நீயா வளர்ந்து நின்ன. இன்னைக்கு மாப்பிள்ளை வீடு உன்னை நடத்துறதை பார்த்து அப்பாவுக்குப் பெருமையா இருக்குடா வேதா. இனிமேல் உன்னை எங்கேயும் தலை குனிய நான் விட மாட்டேன். அப்பாவை நம்பு.” உணர்ச்சிகரமாக அவர் பேச, கண்கள் கலங்க புன்னகைத்தாள் வேதா.

“நீங்க எப்பவும் பெஸ்ட் அப்பாதான் பா. உங்களுக்கு அந்தச் சந்தேகமே வேணாம்” அவள் சொல்லவும், மகளின் தலையில் கை வைத்து அழுத்திக் கொடுத்து விட்டுக் காரில் ஏறினார் வானமாமலை.

ஜெயலட்சுமிக்கு மகளிடம் சொல்ல ஆயிரம் அறிவுரைகள் இருந்தது. அதில் கால் வாசியைக் கூட இப்போது சொல்ல முடியா வருத்தத்தில், முடிந்ததை எல்லாம் மகளின் மண்டையில் ஏற்றி விட்டு சென்றார் அவர்.

அவர்கள் போன பின் வெற்றியின் குடும்பம் அவனது வீட்டிற்குக் கிளம்பியது. வேதாவின் வீட்டிலேயே நின்று விட்டான் வெற்றி.

“நான் வேதாகிட்ட கொஞ்சம் பேசணும் ம்மா” வெற்றி சொல்ல, “ஓகே” என்று வேதாவை பார்த்து புன்னகைத்து விட்டுப் போனார் ரேவதி.

அவர்கள் சென்றதும் இருவரும் வீட்டுக்குள் வந்தார்கள்.

error: Content is protected !!
Scroll to Top