வேதாவின் கோபம் வெற்றியை அதிகம் பாதித்தது. அன்று நடந்தது இருவருக்கும் மிகக் கசப்பான அனுபவம்தான். அதற்காக அதையே பிடித்துத் தொங்க விரும்பவில்லை அவன்.
வாழ்க்கை நதி போல நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அவனுக்கு.
அவளை விட அவனுக்குத்தான் அதிகப் பாதிப்பு. மிகக் கடுமையான கோபம் அவனை ஆட்டுவித்தாலும், அவள் மேலிருந்த அன்பில் அனைத்தும் மறந்து, கடந்து போக நினைக்கிறான் அவன்.
ஆனால், அவளோ? உன்னைக் கடந்து விடுவேன் தானே? என்று ஸ்டேட்டஸ் வைத்துக் கொண்டிருந்தால், அவள் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு ஒருவித அலுப்பையும், சலிப்பையும் தர, வேதாவின் இடையில் இருந்து தன் கரத்தை எடுத்து விட்டு, பின்னால் நகர்ந்து அமர்ந்தான் அவன்.
“என்ன பண்றீங்க?” என்று அதற்கும் கேள்வி கேட்டாள் வேதா.
அவளின் இந்தக் குணம் அவனுக்கு அசதியை தந்தது. எப்போதும் நெருங்கியும் வராமல், விலகியும் செல்லாமல் அவனை உள்ளங்கைகளுக்குள் வைத்துக் கொள்ள அவள் விழைவது கோபத்தை ஏற்படுத்தியது.
அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மௌனமாய்ச் சாலையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் வெற்றி.
சில நிமிடங்களில் அவர்களின் வங்கி வந்து விட, வேதா வண்டியை நிறுத்தவும் வேகமாக இறங்கி முன்னே சென்றான். அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை அவன்.
அங்கே அவனுக்காகக் காத்திருந்த காவலாளி மற்றும் கிளார்க் உடன் இணைந்து வங்கியை திறந்தான்.
வேதா ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல, வெற்றி மூன்று நாட்கள் கழித்து வங்கி வருவதால் அப்போதே வேலையைத் தொடங்கி இருந்தான்.
வேதா உள்ளே சென்று தன் அலுவலை தொடங்க ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். நாயகி, ஶ்ரீனிவாஸ், கோபால் என்று அனைவரும் அவளைச் சூழ்ந்து நின்று வாழ்த்தி விட்டு வெற்றியை பார்க்க, அவனோ வேலையில் கவனமாக இருந்தான். அவர்களின் வாழ்த்துகளை ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு, அவன் பார்த்துக் கொண்டிருந்த வேலையில் கவனமாக, மற்றவர்களும் அதையே செய்தனர்.
“தேவதர்ஷினி மேடம்” என்ற அவனது அழைப்பில் வேதா மட்டுமல்ல, மற்றவர்களும் சிரிப்பும், வியப்புமாக அவர்களைப் பார்த்தனர்.
வேதா அந்த அழைப்பில் திடுக்கிட்டு எரிச்சலுடன் புருவம் சுருக்கினாள். அவன் கோபமாக இருக்கிறான் என்று உணர்ந்து அவன் முகம் பார்க்க, அதில் எந்த உணர்ச்சிகளும் இல்லை.
“இந்த ஃபைல் எடுத்துட்டு வாங்க” என்று அவன் கேட்ட கோப்புடன் எழுந்தாள். வெற்றி அவனது அறையை நோக்கி நடக்க, வேதா அவனைப் பின் தொடர வேண்டியிருந்தது.
அவனுக்குத்தான் வங்கி என்று வந்து விட்டால், சொந்த வாழ்வு குறுக்கிடாதே. அலுவல் ரீதியான பேச்சுக்கள் மட்டுமே அங்கே. வேதாவை அன்று நிற்க, அமர நேரமில்லாமல் ஓட விட்டான் மேலாளர் வெற்றி.
அவளுக்கு அம்பத்தூர் வங்கிக் கிளைக்கு மாற்றல் வந்து ஒரு வாரத்திற்கும் மேலாகி இருக்க, அன்றே வேதாவின் பொறுப்புகள் அத்தனையும் வாங்கிக் கொண்டான் வெற்றி.
மாலை அவள் வங்கியில் இருந்து கிளம்பும் போது அவன் வேலையாக இருக்க, அவனது அறைக் கதவை தட்டி விட்டு மெல்லிய தயக்கத்துடன் உள்ளே சென்றாள் வேதா.
“நான் கிளம்பவா? நீங்க வண்டி எடுத்துட்டு வரல, எப்படி வீட்டுக்கு போவீங்க? நான் வெயிட் பண்ணட்டுமா?” என்று அவள் கேட்க, நிமிர்ந்து அவள் முகத்தை நேராகப் பாரத்தவனின் உதடுகள், “முதல்ல நான் கிளம்பவாதான் வருது” என்று முணுமுணுத்தது. அவன் சொன்னது வேதாவுக்குக் கேட்கவும் உதடு கடித்தாள் அவள்.
“நான் ஆட்டோ வரச் சொல்லிக்கறேன். நீ வீட்டுக்கு போ” என்றான் அவன்.
“இல்ல..” அவள் தயங்க, “வீட்ல அம்மா, அப்பா எல்லாம் வெயிட் பண்ணுவாங்க இல்ல? கிளம்பு” அவன் அழுத்திச் சொல்ல, அவன் கண்களைப் பார்த்து, தலையசைத்து விட்டு வெளியேறினாள் வேதா.
“அதானே. அப்பா, அம்மா தானே முக்கியம். அவங்க வெயிட் பண்ணா ஓடனும்” கோபத்தைத் தாண்டிய ஆதங்கம் அவன் குரலில் இருந்தது.
ஒரு பெருமூச்சுடன் தலையை உதறி, வேலையில் ஆழ்ந்தான் அவன்.
வேதா அம்மாவிற்கு அழைக்க, அவர்கள் அவளை நேராக வெற்றியின் வீடு வரச் சொன்னார்கள்.
அன்று முழுவதும் இரண்டு குடும்பமும் அங்குதான் இருந்தார்கள்.
வெற்றியின் வீட்டில் வைத்து பேசி, மன்னிப்பு கேட்டு, மதிய உணவை ஒன்றாக உண்டு என ஒரு வழியாகச் சமாதானமாகி நெருங்கி இருந்தார்கள் அவர்கள்.
அதன் பின் கல்யாண பத்திரிக்கை அடிப்பது, ஜவுளி எடுப்பது, குலதெய்வ வழிபாடு, உறவுகளை அழைப்பது எனப் பேச்சு நீண்டு கொண்டே போனது. இப்போது மாலை மறைந்து பின்மாலை பொழுதும் வந்திருக்க, வேதாவை நேராக அங்கு வரச் சொன்னார்கள்.
“வாம்மா வேதா” சுந்தரம் முதல் ஆளாக முன்னே வந்து வரவேற்றார்.
“வேதா, வா. வா. வெற்றி ரூம்ல போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா” ரேவதியும் வந்து சொல்ல, அவரின் பின்னேயே வந்த ஜெயலட்சுமி, “முகம் கழுவி, தலை சீவிட்டு வாடா” என்று சொல்ல, வெற்றியின் அறைக்குச் சென்றாள்.
அந்த அறைக்குள் நுழைந்ததும் அவனது பிரத்யேக வாசனை அவள் நாசியை நிறைத்தது. இதழ்கள் தானாகப் புன்னகைத்தன.
இன்று ஒருநாள் அவன் காட்டிய பாராமுகத்தையே அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அவன் கோபத்தின் காரணம் அறிய துடித்தாள். அவன் இயல்பாகப் பேச வேண்டும் என்று தவித்தாள் அவள்.
காலையில் அவன் பரிசாக வாங்கி வந்த இரு சக்கர வாகனத்தை ஏற்றுக் கொள்ளாமல் முகம் காட்டியது, அவனுக்குக் கோபம் போல என்று தானாகவே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டாள் வேதா.
அதே அறையில் வைத்து, இருவரும் ஒரே மூச்சுக் காற்றைச் சுவாசிக்கும் நெருக்கத்தில் நின்று, “வேதாவை படிக்க ஆசையா இருக்கே” மயக்கத்துடன் சொன்ன வெற்றியின் நினைவு வந்தது.
“நிச்சயத்துக்கு அப்புறம் அச்சாரம் தருவியா?” என்று அவன் கேட்டதை இப்போது நினைக்கையில், இதழ்களில் கூச்சப் புன்னகை தோன்ற, குளியல் அறைக்குள் நுழைந்தாள்.
முகம் கழுவி, தலை திருத்தி வெளியில் வந்தாள்.
வானமாமலை, விஜய், ஜெயலட்சுமி மூவரும் ரேவதியிடம் எதையோ மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
சுவேதா அவளைப் பார்த்ததும், “நான் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன் அண்ணி. வெயிட் பண்ணுங்க” என்று சொல்ல, “ஓகே” என்று திரும்பியவளின் கண்கள் அங்கே பால்கனியில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த சுந்தரத்தின் மீது படிந்தது.
அவரின் அருகில் சென்று, “மாமா” என்றழைத்தாள் அவள்.
“வாம்மா” என்று புன்னகைத்து, “செடிக்கு நீ தண்ணி விடுறியா?” என்று கேட்டு, தண்ணீர் குழாயை அவளிடம் நீட்டனார்.
“இந்த ரோஜாவையும், மல்லியையும் பறிச்சுக்கோ மா” என்றவர், “உங்க அத்தைக்கு நம்ம வீட்டுச் செடியில் இருக்கதை பறிக்க மனசு வராது. ஆனா, உனக்குன்னா ஒன்னும் சொல்ல மாட்டா” மனைவி பற்றிப் பேசும் போதே மென்மையாகி இருந்தது அவர் குரல்.
அவர் சொன்னதை மறுக்க விரும்பாமல், மல்லிக் கொடியில் இருந்த குண்டு மல்லிகை பூக்களைப் பறித்தாள் வேதா.
பன்னீர் ரோஜா ஒன்றை கிள்ளி, தலையில் சூடிக் கொண்டாள். செடிக்குத் தண்ணீர் விட்டபடி, “சாரி மாமா.” என்றாள் அவள். மேலே எதையும் சொல்லவோ, பேசவோ இயலாமல் அவள் நிற்க,
“அடடே. என்னம்மா நீ? பெரிய வார்த்தை எல்லாம் பேசுற? நம்ம பேசுற வார்த்தைக்குதான் நாம பொறுப்பு. அடுத்தவங்க பேசுறதுக்கு எல்லாம் ஆராய்ச்சி கட்டுரை எழுதக் கூடாதுனு வெற்றி சொல்வான்” என்றவர், அவள் பார்வையில் சிரித்தார்.
“என்னம்மா பார்க்கற? எல்லோருக்கும் ஒரு வீக் பாய்ண்ட் இருக்கும் இல்ல? பலவீனம்? வெற்றிக்கு அது நாங்க. என் மேல ரொம்பப் பாசம் அவனுக்கு. எங்களுக்கு ஒன்னுன்னா பொறுக்க மாட்டான். அன்னைக்கும் அதான் அப்படிக் கோபப்பட்டுட்டான். நீ அதை மனசுல வச்சுக்காத மா” என்று அவர் சொல்ல,
“அச்சோ, இல்ல மாமா” வேகமாக மறுத்தாள் வேதா.
வெற்றியின் அன்பும், சுந்தரத்தின் பாசமும் எப்போதும் போல அவளை அதீத ஆச்சரியம் கொள்ள வைத்தது.
சுவேதா அவளுக்கான காபியுடன் வர, அவர்களின் பேச்சு அத்தோடு தடைபட்டு வேறு பொதுவான விஷயங்களுக்குத் தாவியது.
“வேதாவுக்கு இப்படி டிரான்ஸ்பர் போடுவாங்கன்னு நாங்க எதிர்ப்பார்க்கல” வருத்தத்துடன் சொன்னார் ஜெயலட்சுமி.
“எங்களுக்கும் தெரியாது சம்மந்தி மா. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணலாம், பிரச்சனை இல்லைனு வெற்றிச் சொன்னதும், ஒரே பிராஞ்ச்சில்தான் இருப்பாங்க நினைச்சேன். இப்படி ஆளுக்கொரு பக்கமா போட்டா, பிள்ளைங்க எப்படி வேலைக்குப் போய்ட்டு வர்றது?” ரேவதி புலம்ப, ‘நானும்தான் எதிர்ப்பார்க்கல’ என்று மனதில் புலம்பிக் கொண்டாள் வேதா.
“அவர் புது ஸ்கூட்டி வாங்கித் தந்திருக்கார். நான் அதுல வேலைக்குப் போய்ட்டு வந்துடுவேன். அம்பத்தூர் இங்கருந்து பக்கம் தானே? அதுனால பிரச்சனை இல்ல” வேதா சொல்ல, அவளின் வீட்டினர் அவளை ஆச்சரியமாகப் பார்க்க, அவளின் உதவிக்கு வந்தார் சுந்தரம்.
“வெற்றி ஏற்கனவே ஸ்கூட்டி புக் பண்ணி வச்சிருந்தான். வேதா அவ்வளவு தூரம் டெய்லி ஆட்டோ, பஸ்னு அலைய முடியாது இல்ல? அதான், அவளுக்குன்னு ஒரு வண்டி இருந்தா, எந்நேரமானாலும் பேங்க் போக, வர ஈஸியா இருக்கும்னு வாங்கினான். நேத்து நானும், அவனும் போய் வாங்கிட்டு வந்து, வண்டிக்கு பூஜை போட்டு, சாமி எல்லாம் கும்பிட்டோம்” கடைசி வாக்கியத்தைச் சிரிப்புடன் அவர் சொல்ல, அனைவர் முகத்திலும் புன்னகை.