54 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 54

 

‘மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன், அமிர்தம் தந்தனை

பள்ளம் வீழ்ந்தேன், சிகரம் சேர்தனை

வெள்ளம் வீழ்ந்தேன், கரையில் சேர்ந்தனை

 

பள்ளம் வீழ்ந்தேன், சிகரம் சேர்ந்தனை

வெள்ளம் வீழ்ந்தேன், கரையில் சேர்ந்தனை

 

எதனில் வீழ்ந்தால்… எதனில் வீழ்ந்தால்

உன்னிடம் சேர்ப்பாய்…’

மிதமாய் அறையை நிறைத்த சின்னக்குயிலின் குரல் அவன் செவியை வருடியது. வருடிச் சென்ற குரலோடு, பல இனிமையான, இதமான தருணங்களும் அவன் இதயத்தைக் குளிர் தென்றலாய் வருடி நின்றன.

‘எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்…’

பாடகி பாடிக்கொண்டிருந்தார்! அன்றைய நினைவில் இமைகள் மூடினான். கேட்காமலே தன்னை முழுவதும் தந்தவள் ஆயிற்றே அவன் விழி! முதல் முறை அடுக்களையில் பின்னோடு அவளை அணைத்த நிமிடம் கண்முன் தோன்ற, இன்றும் உடல் சிலிர்த்தது.

சுருள் முடிக்குள் மீண்டும் புதைந்து போக மனம் ஆசை கொண்டது. ஆசை கொண்ட மனதை நிறைத்தவளின் கழுத்து வளைவின் மணம்… உள்ளங்கை வழியே கடைசி அணுவரை இறங்கும் பட்டுக் கைகளின் வழவழப்பு… தன் விரல்களோடு பின்னிக் கொண்ட மெல்லிய நீளமான சில்லிட்ட அவள் விரல்களின் நடுக்கம்… அந்தக் குட்டி வயிற்றின் கதகதப்பு… அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் படை திரட்டிக் கொண்டு வர உடல் நடுங்கியது.

“கண்டிப்பா எங்க இருந்தாலும் சேர்ந்து தான் இருப்போம் மனோ! தனியா இருக்கவே மாட்டேன்,” கூறினாளே! இறுக்கி மூடித் திறந்தான் இமைகளை. தொண்டை ஒரு முறை ஏறி இறங்கியது அவனின் அவள் நினைவால்.

மீண்டும் பின்னோடு அணைக்க முடியும் தானே… அந்த பெருத்த ஆறு மாத வயிற்றைச் சுற்றிக் கட்டிக்கொள்ள முடியும் தானே? மனம் படபடத்தது.

நேற்று இரவு அவள் தமையன் அழைத்து வந்தான் மருத்துவமனையிலிருந்து. மாதவனைப் பார்த்தபின்னும்… மாமா என்று கழுத்தைக் கட்டிக் கொஞ்சிய அவன் சங்குப் பாப்பாவின் அணைப்பிலும் கூட அதிக நினைவு வரவில்லை. ஆனால், தொலைத்த எல்லாம் கிடைத்துவிடும் என்ற நிம்மதியோடே தான் உறங்கினான்.

விடியும் முன்பே அவள் தான்… அவன் விழி தான், ‘மனோ’ என்ற அழைப்போடு அவனை எழுப்பி விட்டாள். தொலைந்த குழந்தையின் நிலை தான் அவனுக்கும்! அவன் விழி, அவனின் சரி பாதி… எங்குப் போனாள்? ஒருவரும் அவளைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? அவளுக்குத் தன் வரவை கூறியிருப்பார்களே… ஏன் தன்னை அவள் அழைத்துப் பேசவில்லை? என்ன ஆனாள் அவன் மனைவி! “விழி…” என்றவன் குரல் நடுங்கியது. இரண்டு எழுத்துப் பெயரை மனம் உச்சரிக்கக் கண்கள் கரித்துக் கொண்டு வந்தன.

ஒரு வாரம் சென்ற பின் தான் சொந்த மண்ணை நோக்கிப் பயணிக்க முடியுமாம்! ஒரு வாரம்…! எப்படிக் கழிப்பான் அடுத்த, மிக மிக நீளமான ஏழு நாட்களை! தான் இல்லாத நான்கு மாதங்களை எப்படிக் கழித்தாளோ? ம்ப்ச்! மீண்டும், ஏக்கத்தோடு இரண்டு எழுத்து பெயரை உச்சரித்தன அவன் இதழ்கள்.

வெளியே பூத்துக் குலுங்கி நின்ற வசந்த கால மெக்னோலியாவில் பார்வை நிலைத்தது. ஜன்னலைத் திறந்தான். மூச்சை உள்ளிழுக்க அதன் வாசம் நாசியைத் தொட்டது. அதிலும் அவள் தான்.

கார்டினல் தன் வருங்கால இணைக்காக இசைத்துக் கொண்டிருந்தது. தன் நினைவடுக்குகளை மீட்டுக் கொண்டுவந்த ஒலி இவனுக்குத் தேவகானமாய் தோன்றியது. ‘இந்த பறவை நாம இருக்க இடம் கிட்ட வந்து, அத நாம பாத்தா, நம்ம மனசுக்கு நெருக்கமானவங்க நம்மள தேடி பாக்க வந்திருகாங்கன்னு அர்த்தமாம்!’ அன்று ‘போ டி’ என்றவன் இன்று மெல்ல சிரித்துக்கொண்டான்.

திறந்திருந்த சாளரம் வழி வசந்த காலக் குளிர், குளித்து இடையில் துண்டோடு நின்றிருந்தவன் மேனியைத் தழுவி குளிர்வித்தது. மனம் உஷ்ணமாய் அவளை எண்ணிப் புழுங்கியது. என்ன விந்தை சற்று முன் அவள் தானே அவனை குளிர்வித்தாள்?

“சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ?

வட்டக்கரியவிழி கண்ணம்மா வானக்கருமை கொலோ?” 

ஆம், அவன் விழியால் மட்டும் தான் அவனை ஒரே சமயம் குளிர்விக்கவும் முடியும், உஷ்ணமாக்கவும் முடியும்! அவன் விழியழகி கண்கள் சுருக்கி சிரித்தாள். ‘விழி!’ மனம் கூப்பாடு போட்டது! இதற்கு மேல் முடியாது! கைப்பேசி இல்லை! மாதவனை எழுப்பிக் கேட்டுவிட வேண்டியது தான்!

நினைத்து முடிக்கும் முன், முதுகின் பின் மூடியிருந்த கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டது. அவன் குட்டி மருமகளாயிருக்கும்! ‘மாமா’ என்று கூவிக்கொண்டே வருவாள் என்று எண்ண, அரவமில்லை! கதவைப் பக்குவமாய் அவள் மூடவும் மாட்டாளே! வருவது யார் என்று பார்க்க வேண்டாமா? அந்தக் கால்களின் அழுத்தம் ஏற்படுத்திய சத்தம் காட்டிக்கொடுத்தது!  பார்க்காமலே தெரியுமே அது யார் என்று! அவன் குட்டி இதயம் எம்பிக் குதிக்கத் தயாரானது.

விழி! என்று அவன் இதயம் அழைக்கும் முன்னே, சில நாட்கள் முன் இலக்கியா கூறிவிட்டாளே எபெனேசர் பற்றி! அவனுக்கு நினைவில்லையாம். தன்னை எப்படி மறப்பான்? மறக்கத்தான் அவனால் முடியுமா? சண்டை பிடிக்க, அடித்துப் பிடித்து பழைய நிறுவனத்தோடு பேசி, பழைய விசா கொண்டு வந்தும் விட்டாள். நழுவி விழ இருந்த இதயத்தை ஏந்திக்கொண்டு வாசல் வந்து சேரும் வரை பெண்ணவள் பட்ட அவஸ்தை தான் என்ன!

இதோ முதுகை தனக்குக் காட்டி நிற்பது அவன் தானே… அவனே தான்! மனம் ஓடிய வேகத்திற்குக் கால்கள் நகர மறுத்தன. ‘மனோ’ என்று அழைக்க நா எழவும் இல்லை.

வெற்று முதுகில் முகம் புதைத்து நின்றவள் உடலும் உள்ளமும் ஒன்றுசேர நடுங்கியது. நடுக்கம் அவளுக்கு மட்டும் தானா? கண்டிப்பாக இல்லை! மோதி நிற்பது அவளே தான்! அவன் விழியே தான் என்று தெரிந்தபின் நடுங்காமல் இருக்க அவன் என்ன ஜடமா?

“மனோ…” கேவல் வெடிக்க, முதுகில் இதழ் வருடியது. அவள் உதடு அவன் இரண்டு எழுத்துப் பெயரை உச்சரிக்க, வருடிய சின்னக் குயிலின் குரலும், கார்டினலின் தேவகானமும் ஒன்றுமே இல்லை என்றானது அவனுக்கு.

தோள்களைப் பற்றியிருந்த அவளின் இரு உள்ளங்கைகளும் அவன் முழு நீளக் கைகளை வருடிக்கொண்டே விரல்களோடு பின்னிப் பிணைய, நெஞ்சோடு கைகளை இழுத்து இறுக்கிக் கொண்டான்.

முதுகில் இதழ் தீண்ட “மனோ…” என்றாள். முன்னுக்குப் பெண்ணவளை இழுத்து முகம் பார்த்தவன் உதடு துடித்து புன்னகையைச் சிந்த, கண்கள் ஆனந்த மிகுதியால் நீரைக் கசிய விட்டன!

“ரெண்டு மணி நேரத்தில நூறு தரம் செத்து பிழைச்சேன்! நீ… ம்ப்ச்! சாரி… ரொம்ப சாரி விழி,” என்றான் நெற்றியில் இதழ் பதித்து.

“நான் ரொம்ப கரார் பேர்விகழி. ஆயிரம் முத்தம் மனோ…” என்றாள் கண்கள் ஊற்றெடுக்க… இதழ் துடிக்க.

கைகள் கன்னம் ஏந்தியிருக்க, இதழ் கொண்டே கண்ணீரைத் துடைத்தவன், “ஆயிரம் போதுமாp?” என்றான் கிசுகிசுப்பாய், கண்கள் பார்த்து.

“லட்சம்… ஆயிர லட்சம் முத்தம் கொடுத்தாலும் போதாது மனோ,” என்றவளின் சத்தமில்லா முத்தத்தில் திளைத்தவனின் நடுங்கிய கைகள் பெருத்த வயிற்றை ஆசையாய் வருடியது.

பற்றிக்கொள்ள ஒரு துளி பிடிப்பில்லாத போதும், வருவான்… காதல் கூறுவான் என்ற விழியின் நம்பிக்கையைச் சற்றும் பொய்யாக்காமல், இதயம் நிறைத்தவளை நோக்கி வந்துவிட்டவன், “காலத்துக்கும் உன் கூடத்தான்!” என்றான்.

“காலத்துக்கும்!” என்றாள் விசும்பலோடு.

எத்தனை ஈரமான நாட்கள்… கண்ணீர் துடைக்கப்படாமலே உறங்கிய நாட்கள் தான் எத்தனை! இன்று, உயிரானவனின் ஈரமான உதடு, கண்ணீர் தடத்தைத் தடமில்லாமல் அழித்தே விட்டது.

கதவு சத்தத்தோடே திறக்கப்பட, “மாமா…” தூக்கக் கலக்கம் சற்றுமில்லாது ஓடி வந்தாள் சங்கமித்திரா என்ற குட்டிப் புயல்.

“ஷேம் ஷேம் மாமா…” கைகள் கொண்டு வாய் பொத்திச் சிரிக்க, “என்ன பாத்தா சிரிக்கிற, என்ன பண்றேன் பார்,” என்றவன் மகளைத் தூக்கிப் போட்டுப் பிடிக்க அறையை நிறைத்தது சின்னச் சிட்டின் சிரிப்பு. அனைவரையும் ஒட்டிக்கொண்ட அந்த இன்பமும் சிரிப்பும் அடுத்த ஒரு வாரமும் நீண்டது.

இந்தியா கிளம்பத் தயாரானவர்களை வழி அனுப்ப அவர்கள் நண்பர் பட்டாளமே வந்துவிட்டது, கூடவே இலக்கியாவின் தமக்கையும்.

“கிளம்பறோம் மாதுண்ணா. அண்ணியும் நீயும் அடுத்த குட்டி நடக்க ஆரம்பிச்சதும், மூட்ட முடிச்சியோட ஊர் வந்து சேருங்க,” என்றவளை “கண்டிப்பா அலர்! எங்க பிரசவம் முடியட்டும், நாலு பேரும் வந்து நிப்போம் நகு கல்யாணத்துக்கு! நீயும் நல்லபடியா என் மருமகனை பெத்து எடு!” என்று பாசம் பொங்க அணைத்து விட்டான்.

‘மாதுண்ணா’ என்ற தங்கையின் செல்ல அழைப்பில் நெகிழ்ந்து தான் போனான் மாதவன். கண்ணீரோடே அவள் வாழ்க்கை முடிந்துவிடுமோ என்று எத்தனை நாள் தவித்திருப்பான். 

“மாப்பிள்ளை, என் அலர் பத்திரம், ரொம்ப தவிச்சு போயிட்டா…” என்று தலை வருடி தங்கையை அனுப்பியவனுக்கு மனம் நிறைந்து போயிருந்தது.

இலக்கியாவின் கையை இறுகப் பிடித்து “தேங்கஸ் இலக்கியா” எனக் கூறி அணைத்து விட்டவனைத் தொடர்ந்து அலர்விழியும், “என் உயிரை என் கிட்ட கொடுத்துட்ட நீ…” என ஆயிரத்து நூறாவது முறை கூறி இலக்கியாவையும் அவள் தமக்கையையும் அணைத்து விட்டாள். 

வாழ்வின் புது அத்தியாயத்தை எழுத, சொந்த மண்ணை நோக்கின பயணத்தை இருவரும் கைபிடித்தே ஆரம்பித்தனர். விடியும் முன்பே சென்னை விமான நிலையத்தில் இரு குடும்பமும் காத்திருந்தது. பெற்ற மகளின் வெளிச்ச முகத்தை அன்றுதான் மீண்டும் கண்டனர் அலர்விழியின் பெற்றவர்கள். நகுநாவை கையில் பிடிக்க முடியவில்லை. “அலர்… மாமா…” என்று வாய் நிறையப் பல்லாய் பெண் சிரித்து நின்றாள்.

“எபி கண்ணா…” என்று வந்த எஸ்தரை, “ம்மா,” என்று அணைத்தவனுக்கும் அதற்கு மேல் பேச்சே வரவில்லை.

என்றும் போல் தள்ளி நின்றாலும் மகனைப் பார்த்த பின் தான் மனிதனின் இதயம் சீராய் துடிக்க ஆரம்பித்தது. தள்ளி நின்றாலும் மகனால் மட்டுமே பால்ராஜ் இயங்கினார். “அப்பா…” என்று வந்தவனை ஆறத் தழுவிக் கொண்டவர் கன்னம் தொட்டது கண்ணீர்.

 ஒருவன் திரும்பியிருக்க, அவனால் இரு குடும்பங்கள் உயிர் பெற்றிருந்தது. பாக்கியா குடும்பத்தோடு அம்பிகா குடும்பமும் சேர்ந்துகொள்ள, அவன் வரவைத் திருவிழா போல் அன்றைய தினம் முழுவதும் கொண்டாடித் தீர்த்தனர். இருவருமே களைப்பென்று குளித்து வந்ததோடு சரி, இரவு வரை படுக்கச் செல்லவில்லை.

எபியோடு, வினோ என்று ஆரம்பித்து ஒவ்வொருவரும் பேச… அவனால் நகர முடியவில்லை. வீட்டில் கூட்டம் பொங்கி வழிய, வீடே கலகலத்தது. முகம் கொள்ளா புன்னகையோடே அனைத்தையும் பார்த்தே அமர்ந்திருந்தவன் மனம் முழுவதும் உயிர்ப்போடு சுற்றிக் கொண்டிருந்த அவன் மனைவியே. மேடிட்ட வயிற்றோடு சளைக்காமல் சுற்றித் திரிந்தவளைப் பார்க்கப் பார்க்க ஆசை பொங்கியது. அவனுக்காக… அவனை மட்டுமே நினைத்து வாழ ஒரு ஜீவன்! குட்டி கர்வம் கூட எட்டிப் பார்க்கத்தான் செய்தது எபிக்கு!

“அத சாப்பிடு பாப்பா… இத குடி பாப்பா… இவ்வளவு எல்லாம் நடக்காத பாப்பா…” என்று அவள் வால் பிடித்து, கையில் தட்டோடும் பழச்சாறோடும் நடையாய் நடந்த யமுனாவை, “க்கா… மத்தவங்கள பாப்பீங்களாம். நாளையில இருந்து என்னை படுத்துவீங்களாம். இப்போ ஆள விடுங்கக்கா…” என ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தாள் அலர்விழி.

“என்ன தியாகு, மாப்பிள்ளை வந்தாச்சு, அடுத்த மாசம் சீமந்தம் தான?” என்ற பேச்செழவும், “என்ன வேணுமோ பண்ணலாம்… ஆனா என் பொண்டாட்டியை எங்கேயும் விடுறதா இல்ல!” என்று கூறிவிட்டான் எபி. 

“என்ன டா வினோ… அடுத்த வருஷம் நீயாவது உன் பொண்டாட்டிய பிரசவத்துக்கு வீட்டுக்கு விடுவியா இல்லையா?” என்று பாக்கியம் வாய்விட,

“அண்ணா எவ்வழியோ தம்பியும் அவ்வழியே!” என்றான் குறுஞ்சிரிப்போடே.

“அதுக்கு நீ தீயா வேலை செய்யணும் தம்பி,” எபி சப்தம் எழுப்பாமல் கூற, “இப்போவே ரெடி தான்,” என்று சிரித்தவன் பார்வை, முழுவதுமாக நகுநாவை விழுங்கியிருந்தது.

சௌந்தர்யாவையும் தியாகுவையும் கையில் பிடிக்கத்தான் முடியவில்லை. இரு மக்களைப் பெற்று, ஆசை ஆசையாய் வளர்ந்து, அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாய் இருப்பதைக் கண்டவர் மனம் நிறைந்து போனது. போதாத குறைக்கு இரண்டு மாப்பிள்ளைகளும் எந்த வேறுபாடுமின்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

இரவானது அனைவரும் உண்டு உறங்கச் செல்ல.

“ரெஸ்டே இல்லாம சுத்திட்டு இருக்க நீ! போதும், நீ மேல ரூம்க்கு கிளம்பு… நல்ல சுடுதண்ணிய மேல ஊத்திட்டு படு. அவன்கிட்ட பால கொடுத்து விடறேன், படுக்கதுக்குள்ள மறக்காம குடிக்கணும்,” என்று எஸ்தர் அலர்விழியை அவள் அறைக்கு அனுப்பி வைத்தார்.

“தம்பி இத பாப்பாட்ட குடுத்துடு ராசா! பூ கட்டி வச்சத மறந்தே போயிட்டேன்!” என்று கட்டி வைத்திருந்த முல்லை சரத்தை அவனிடம் கொடுத்துச் சென்றார் யமுனா.

அரை மணி நேரம் சென்றது அவன் பாலோடும், பூவோடும் அறைக்குச் செல்ல. மனைவியோடு இன்று தானே அவன் வீட்டில் முதல் நாள்! இன்று தான் இங்கு முதல் இரவும் கூட! கையில் பாலும் பூவும்! சிரிப்பு தான் வந்தது எபிக்கு. கூடவே ஒரு எதிர்பார்ப்பும்.

‘இரவாக நீ, நிலவாக நான்

உறவாடும் நேரம் சுகம் தானடா…’ திறந்திருந்த அறையிலிருந்து பாடல் கசிந்து கொண்டிருந்தது.

சத்தம் எழுப்பாமல் உள்ளே நுழைந்தவன் பார்வையில் விழுந்தாள் அவன் நூடுல்ஸ் அழகி. அவள் பார்த்து நின்ற சுவரில் அவன் பார்வை பதிய, விழி விரித்தான். இன்று தானே அவனும் பார்க்கிறான். நெஞ்சம் துடிப்பை நிறுத்தியது நொடி நேரம். எப்படிப் பட்ட வாழ்வை நான்கு மாதங்களாக வாழ்ந்திருப்பாள் என்று அவள் கூறி அவன் அறிந்து கொள்ள வேண்டியதில்லை.  

பின்னோடு அவன் நிற்க, “வந்துட்டீங்க மனோ!” என்றாள்.

“ம்ம்ம்… சாரி பட்டு! விட்டுட்டேன் தனியா… ப்ச்!” என்றான்.

“இந்த ரூம் பூரா… நான் போர இடம் எல்லாம்… ஏன் என் சுவாச காத்துல கூட என் கூடவே தான் இருந்திங்க மனோ.” என்றாள்.

பின்னோடு அணைத்தவன் மனம் எல்லாம் தாங்கொண்ணா வேதனை. தெரிந்து விடவில்லை தான், ஆனாலும் அவள் வேதனை எவ்வளவு பெரிது. தன்னையும் மனதில் ஏந்தி, பிள்ளையையும் வயிற்றில் ஏந்தி நின்று கொண்டிருப்பவள் அவன் வாழ்வின் வரமல்லவா?

“அந்த இருட்டுல தண்ணி என்னை அடிச்சுட்டு போகும் போதும், எனக்கு நீ மட்டும் தான் விழி தெரிஞ்ச. இந்த உலத்துல உன்ன தனியா விட்டுட்டு போயிட கூடாதுன்னு மட்டும் மனசுல திடமா நினைச்சு, தண்ணிய விட்டு வெளி வர போராடினேன். என் தலை மேல ஏதோ விழுந்துது. என் சுயநினைவு என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமா போயிட்டு இருக்குன்னு நல்லா தெரிஞ்சுது. அப்பவும் நீ தான்… நீ மட்டும் தான் என் முன்ன தெரிஞ்ச விழி. ஆசையா என்னை கட்டிபிடிச்ச, நானும் ஆசையா உன் மார்புல என் கண்ணை மூடினேன். 

செத்து போயிருந்திருப்பேன்… உன் நினைவு எனக்குள்ள இல்லாம போயிருந்தா. இப்போ நான் முழுசா நிக்கிறதும் உன்னால மட்டும் தான். கண்விழிச்ச அன்னைல இருந்தே என்னக்குள்ள, ஒருத்தி உனக்காக காத்திருக்கா சீக்கிரம் அவ கிட்ட போயிடணும்ன்னு ஒரு உறுதி! இதோ வந்துட்டேன்! முழுசா உங்கிட்டயே வந்துட்டேன் விழி!” என்றவன் கண் முன் கடைசி நிமிட போராட்டம் வர, மனைவியை இறுக அணைத்துக் கொண்டான். 

“நீங்க வருவீங்கன்னு தெரியும் மனோ! ‘ஆயுசுக்கும் உன் கூட’ன்னு சொன்னீங்களே. கண்டிப்பா வருவீங்கன்னு தெரியும் மனோ,” விரல்களோடு விரல்களை பின்னிப் பிணைத்துக் கொண்டவளின் நா தழுதழுத்தது.

“வந்துட்டேனே டி… இனி உன் கூடத்தான்! அழாத டி. பிளீஸ்” என்றான்.

“இல்ல மனோ, அழல! ரொம்ப நிம்மதியா இருக்கு! நிம்மதியா தூங்குவேன்.” என்றாள் விசும்பலோடு.

“ஆறு மாசம் தூங்கினது போதலையா… இன்னைக்கும் தூங்கணுமா?” என்றவன் தொனியே காட்டிக் கொடுத்தது அவன் மீண்டுவிட்டான் என்று.

“சென்னை வானத்துல துருவ ஒளி வரதில்லையே! முழிச்சிருந்து என்ன பண்ண போறோமாம்?” கேட்டவள் இதழ் முழுவதுமாக விரிந்திருந்தது.

“நீ தான் சொல்லேன்! பால் இருக்கு, பூ இருக்கு… அத்தான் நான் இருக்கேன்… தூங்கணுமா?” என்றவன் குழைந்து தேனாய் உள்ளுக்குள் இறங்கினான்.

“ம்ம்கூம்” என்றவள் சத்தம் காற்றோடு கரைந்தது.

‘நீ நான் மட்டும்

வாழ்கின்ற உலகம் போதும்

உன் தோள் சாயும்

இடம் போதுமே

உன் பேர் சொல்லி

சிலிர்க்கின்ற இன்பம் போதும்

இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்

ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க

என் உயிரே

காதோரம் காதல் உரைக்க’

மூச்சுக் காற்றின் சத்தம் தாண்டி பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. பிடரியில் குறுகுறுப்பு ஏற்பட, “மனோ…” என்றவள் அடுத்துப் பேசத் தெரியாமல் மூச்சுத் திணறினாள்.

“ம்ம்ம்…” என்றவனுக்கு அடுத்த வார்த்தை மறந்து போனது.

“…”

“விழி…” என்றான் ஏக்கம் எல்லாம் ஒன்று திரட்டி.

‘ம்ம்ம்…’ கூடவா மறக்கும்? மறந்து போனது. அவள் வானில் அவன் மட்டுமே. அங்கு வார்த்தைக்குக் கூட இடமில்லாது போனது.

கழுத்து வளைவைத் தாண்டி, கன்னம் தாண்டி காது மடலைத்   மனோவின் இதழ்கள்.

“பட்டு…” காது மடலில் உராய்ந்த மீசையின் குறுகுறுப்போ, காதல் கொண்ட ஆண்மகனின் உதட்டின் வருடலோ… மனோவின் மேல் மொத்தமாகச் சாய்ந்துவிட்டிருந்தாள்.

“விழி…” மந்தகாசமான மனோவின் சத்தம், அவன் உஷ்ண மூச்சுக்காற்றோடு உயிரின் எல்லையைத் தொட்டது. அடுத்து என்ன? தெரியுமே அவளுக்கு. மூடிய இமைக்குள் முட்டி மோதி நின்ற நீர் மீண்டும் கசிய… அவன் காதோரம் கூறவிருக்கும் காதலை எண்ணி, இதழ்கள் முழுவதுமாக விரிய, உணர்வுகளோடு கலந்த உணர்ச்சி வெடிக்க, “மனோ” என்றாள், விழி.

எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல், பதில் தெரிந்தே, மந்தகாசம் சற்றும் குறையாமல், பெண்ணவள் மனதைச் சுண்டி இழுக்க… கிசுகிசுபாய், “மிஸ் மீ?” என்றான் விழியின் மனோ!

இதே அறையில், நரை வந்த பின்னும், ஜென்மம் முடியும் வரை ஆயிரம் கோடி ‘மிஸ் மீ?’கள் காதோரம் காதலாய் கூறப்படும் என்பதில் ஐயமில்லை.

அங்கமெங்கும் ஆயிரம் அயிரம் ‘மிஸ் மீ?’களோடு பதிக்கப்பெற்ற முத்தங்களின் சத்தம் அடங்க நேரம் எடுக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்பதால் அவர்களுக்குத் தனிமை கொடுத்து, வாழ்த்தி விடைபெறுவோம்!

தன் விழியைத் தேடி, மனோ வந்துவிட்டான்,

காதோரம் காதல் சொல்ல!

error: Content is protected !!
Scroll to Top