வேதவர்ஷினி பின் காலை பொழுதில் கண் விழிக்கும் போது அவளின் வீடு விழா கோலம் பூண்டிருந்தது.
வெற்றி வேந்தனின் குடும்பம் அவர்களின் சொந்த ஊரான விளாத்திக்குளம் சென்று, அங்கிருந்து கிளம்பி மாலை விழாவிற்கு விருதுநகர் வந்தனர்.
வேதாவின் வீட்டை ஓட்டிய பெரும்பகுதியில் மேடை அடைத்து, அதன் முன் இருக்கைகள் போடப்பட்டிருந்தது. மற்றொரு பக்கம் உணவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
பின் மாலை பொழுதில் குறித்த நேரத்தில் வேதாவின் வீடு வந்தது வெற்றியின் குடும்பம்.
மங்கல பொருட்கள் கொண்ட வரிசை தட்டுகள், புடவை, பூ, நகை எனச் சீரும், சிறப்புமாக வந்திருந்தார்கள் அவர்கள்.
அங்கே இரண்டு வீட்டு குடும்பங்களும் குழுமியிருக்கப் பெரியவர்கள் முன்னிலையில் விழா தொடங்கியது.
வெற்றியின் கண்கள் வேதாவையே வட்டமிட்டது.
அவன் வாங்கி வந்திருந்த புடவையை இப்போது அணிந்திருந்தாள் வேதா. மாந்தளிர் சிவப்பு வண்ண சேலையில், அளவான ஒப்பனை மற்றும் அழகான நகைகளுடன், அழகோவியமாக நின்று அவனை வசீகரித்தாள் வேதா.
“எம்மாடி வேதா. நாம பேசாம இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா? அதான் சொந்தக்காரன் எல்லாம் இங்க இருக்கானுங்க இல்ல? என்ன சொல்ற? இதுக்காக இன்னொரு நாள் வெயிட் பண்ணனுமா?” அவன் கேட்க, கண்ணை உருட்டி அவனை முறைத்தாள் வேதா.
இன்றைக்கும் அவர்களை வளைத்து, வளைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான் பிரபு.
“பேசாம இருங்க வெற்றி” கண்ணை உருட்டி அவனை மிரட்டினாள். அவன் சிரிக்க, பெரியவர்கள் மேடை ஏறினார்கள்.
வெற்றியின் பெற்றோர், வேதாவின் பெற்றோர் முன்னால் வர, அவர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். வேதாவிற்கு மோதிரம் அணிவித்து, அந்த விரலை வருடி லேசாகக் கிள்ளி வைத்தான் வெற்றி.
அவள் முறைக்க, “நிஜம் தானான்னு கிள்ளிப் பார்த்தேன்” அவன் சொல்ல, அவனுக்குப் பின்னிருந்த விஜய் சிரித்தான். வேதா அமைதியோ அமைதியாக நடித்தாள்.
வெற்றியின் அம்மாவும், தங்கையும், வேதாவிற்குத் தலை நிறையப் பூ வைத்து, நெற்றியில் திருநீர், குங்குமம் வைத்து விட்டனர். வெற்றியின் சகோதரி முறை உறவுகள் அனைவரும் வேதாவிற்குப் பூ வைத்து விட, அவளின் தலையை அசைக்க முடியாத அளவுக்குப் பூ கொண்டை போட்டிருந்தாள் வேதா.
அவர்கள் இருவரும் இணைந்து நின்று பெரியவர்கள், பெற்றோரிடம் ஆசி வாங்கிக் கொண்டனர். வேதாவிற்குப் பூ வைத்து, இனி அவள் தங்கள் வீட்டுப் பெண் என வெற்றியின் வீடு உறுதி செய்து, அவளுக்கு ஐந்து பவுனில் ஆரம் ஒன்றை போட்டு விட்டனர்.
நிகழ்ச்சி முடியவும் உறவுகள் கலைந்து உணவருந்தச் சென்றது.
பிரபு அவர்கள் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்துப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தான். அத்தோடு இருவரது வீட்டினரையும் சேர்த்து அவன் புகைப்படம் எடுக்க, வேதா தனக்குப் பக்கத்தில் நின்ற அம்மாவின் கையைச் சுரண்டினாள்.
“தலை ரொம்ப ஹெவியா இருக்கு மா. கொஞ்சம் பூவை எடுத்துடட்டுமா?” என்று அவள் வலியுடன் கேட்க, “என்ன நீ? ஒருநாள் இவ்வளவு பூ வைக்க மாட்டியா? இதெல்லாம் சடங்கு..” என்று அவர் கோபமாகப் பேச, “என்ன ஜெயா நீ? புள்ளை வலிக்குது சொல்லுது இல்ல? நீ போய்த் தலையைச் சரி பண்ணிட்டு வா ஆத்தா” என்று பேத்திக்கு பரிந்து பேசினார் முத்துமாரி.
“நீயும் கூடப் போ ஜெயா” அப்பத்தா சொல்ல, மகளை அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார் ஜெயா. வேதா மெல்ல திரும்பி வெற்றியிடம் கண்களால் செய்திச் சொல்லிச் சென்றாள்.
வேதாவின் அறை முதல் தளத்தில் இருக்க மாடி ஏறினார்கள். வீட்டின் முதல் தளம் முழுவதும் அவளது உறவினர்கள் கூடி இருந்து ஊர் கதைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
வேதா அறைக்குள் நுழைந்ததும், ஓய்வறை செல்ல, ஜெயலட்சுமி அறையின் கதவை அடைத்து விட்டு, படுக்கையில் கண் மூடி சாய்ந்து அமர்ந்தார்.
வானமாமலை பந்தி நடக்கும் இடத்தில் இருந்தார். மாமன், மச்சான் என உறவுமுறை ஆண்கள் அவரைச் சுற்றியிருக்க, அரசியல் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்.
விஜய் முதல் தளத்தில் மற்றொரு அறையில் மனைவி வாந்தி எடுத்து சோர்ந்து அமர்ந்திருக்க, அவளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
“என்னால முடியல விஜய். மயக்கமா வருது” ஷாலினி சொல்ல, “வாந்தி வராம இருக்க டேப்லெட் கொடுத்தாங்க இல்ல. அதைப் போடு” என்றான் அவன்.
“போட்டேன். ஆனாலும், மயக்கம் வருதே” என்று புலம்பிக் கொண்டிருந்தவளின் கைப் பிடித்து அருகில் அமர்ந்தான் அவன்.
ஷாலினியின் அம்மா, வனமாமலையின் தங்கை வைதேகி கீழே தன் நாட்டாமையைத் தொடங்கியிருந்தார். அங்கே கூடத்தில் வெற்றியின் உறவினர்களும் இருக்க, அவரின் பெருமையும், அலட்டலும் அதிகமாகவே இருந்தது.
விழாவின் நாயக, நாயகியின் பேச்சை எடுத்திருந்தார்கள் அவர்கள். குறிப்பாக வெற்றியை சுற்றியது பேச்சு.
அவனது வேலை, வசதி, சம்பளம் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து குடும்பத்திற்கு வந்து நின்றது.
“என்னது மேடையில் நின்ன மனுஷன் அவங்க அப்பா இல்லையா?”
“இவரு ரெண்டாவது புருஷனா?”
“அப்போ மாப்பிள்ளை எந்தப் புருஷனுக்குப் பொறந்தவர்?” அடுக்கடுக்கான கேள்விகள் அங்கிருந்த வெற்றியின் குடும்பத்தை அவமதித்தது.
அங்கிருந்த வெற்றியின் உறவினர்கள் அந்தப் பேச்சை கேட்க முடியாமல் கேள்வி கேட்டனர்.
“என்ன பேச்சு மா பேசுறீங்க? நாக்குல நரம்பில்லாமா? எந்தப் புருஷனுக்குப் பெத்தான்னு கேட்க அசிங்கமா இல்ல உங்களுக்கு?” வெற்றியின் அத்தை கொதித்து, கோபமாகக் கேட்க, “ஏய், யார் வீட்ல வந்து யாரை கேள்வி கேட்கிற?” பதிலுக்குக் குதித்துக் கொண்டு போனார் வைதேகி.
அவருக்கு யாரை பற்றியும் கவலையோ, அக்கறையோ இருக்கவில்லை. சிலர் அப்படித் தானே.
அந்தப் பேச்சினால் கூட்டத்தில் சட்டென ஒரு சலசலப்பு.
“மாப்பிள்ளை அம்மாவுக்கு, இவர் இரண்டாவது புருஷனாம். மாப்பிள்ளை, அவங்கம்மாவுக்கு முதல் புருஷனோட புள்ளையாம்” செய்தி சட்டெனப் பரவியது.
“இங்க பாருங்க மா. என்ன பேசுறீங்க? இது தெரியாமயா உங்க வீட்டுப் பொண்ணைக் கொடுக்கறீங்க” இப்போது வெற்றியின் பெரியம்மா ஆத்திரத்துடன் கேள்வி கேட்டார்.
“இதென்னடா புதுக் கதை. ஒருத்தரும் எங்களுக்குச் சொல்லவே இல்லையே” உறவு கூட்டத்தில் ஒருவர் கோபமாகச் சடைக்க, “பொண்ணு லவ் பண்ணதும் எங்கண்ணன் கண்ணை மூடிட்டு கட்டி குடுக்கச் சம்மதிச்சுடுச்சு. இல்லனா, இப்படி ரெண்டு புருஷன் கட்டுறவ குடும்பத்துல எங்க பொண்ணைக் குடுப்போமா?”
வைதேகி முகம் சுளித்துச் சொல்ல, வெற்றியின் உறவினர்கள் ஆத்திரத்துடன் எழுந்து விட்டார்கள்.
அங்கே கோபத்தில் வார்த்தைகளைச் சிதறி, ஆளுக்கொன்றை பேச, வார்த்தைகள் தடித்து, கைகலப்பாகி இருந்தது.
வானமாமலை, விஜய்குமார், வெற்றி வேந்தன், சுந்தரம் என்று இரு வீட்டு முக்கிய ஆண்களும் அங்கு வரும் போது நிலைமை கை மீறிப் போய் இருந்தது.
“வைதேகி என்ன நடக்குது இங்க?” வானமாமலை கர்ஜிக்க, “மாப்பிள்ளை அம்மாக்கு ரெண்டு புருஷன்..” அவர் சொல்லி முடிக்கும் முன்பு வானமாமலை, சுந்தரம் இருவரும் ரௌத்திரத்துடன் முன்னே வந்தார்கள்.
“நான் என்ன பொய்யா சொன்னேன். அடிக்க வர்றீங்க? எங்க அந்தம்மாவை இல்லைனு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்” வைதேகி முகத்தை நிமிர்த்திச் சொல்ல,
“வாயை மூடு” வைதேகியின் கணவர் அவரை ஓங்கி அறைந்து இழுத்துக் கொண்டு போனார்.
வைதேகி சொந்த அண்ணன் மகளின் மனதை, அண்ணனின் குடும்பத்தை, அவர்களின் மரியாதையைக் கொஞ்சமும் யோசிக்காமல், அன்றுதான் நிச்சயித்த அவளின் உறவை அன்றே தன் முறையற்ற பேச்சினால் முறித்துப் போட்டார்.
வானமாமலையை ஆளாளுக்குக் கேள்வி கேட்க, வெற்றி அவரை அற்பமாகப் பார்த்தான். அவர் மேல் இருந்த மொத்த மரியாதையும் அந்தக் கணம், கரைந்து காணாமல் போய் விட்டது.
“வெற்றி அப்பா பேங்க்ல வேலை பார்த்தார். அவரு ஒரு ஆக்சிடெண்டில் தவறிட்டார். அப்போ வெற்றிக்கு மூனு வயசு. அவனுக்கு ஆறு வயசு இருக்கும் போது, ரேவதியை விரும்பினார் எங்க தம்பி. ரேவதி உங்களை மாதிரி ஊரு, உலகத்துக்குப் பயந்து ஒத்துக்கல. முடியவே முடியாதுன்னுட்டா. ஆனா, நாங்கல்லாம் சேர்ந்து அவளைக் கட்டாயப்படுத்தி எங்க தம்பிக்குக் கல்யாணம் பண்ணி வச்சோம். இதோ, உங்க கண்ணு முன்னாடி நல்லா இருக்காங்க தானே? வெற்றி, இன்னைக்கு வரைக்கும் எங்க தம்பியை அப்பாக்கு மறுவார்த்தை சொன்னதில்லை அவன்.” வெற்றியின் பெரியம்மா அங்கே விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
“என்ன மாமா? ஊருக்கு ஒரு நியாயம்? மகளுக்கு ஒரு நியாயமா? என் லவ்வை பஞ்சாயத்து பண்ணி அத்து விட்டுட்டு, இன்னைக்கு உன் பொண்ணுக்கு லவ் மேரேஜ் பண்ற போல? அதுவும் ஊருக்கு சொல்லாம திருட்டுத்தனமா?” வேதாவின் சொந்தத்தில் இளவட்டம் ஒன்று வானமாமலையைக் கேள்விக் கேட்டது.
அவரால் பாதிக்கப்பட்டவன் அவன்.
“என்னய்யா எல்லாத்தையும் மறைச்சு என்ன கல்யாணம் பண்றீங்க?” பெரியவர் ஒருவர் கேட்க,
“எங்களுக்கு எல்லாம் தெரியும். எங்ககிட்ட சொன்னார் பெரியப்பா” வேதாவின் நெருங்கிய உறவு சொல்ல, “நீங்க ஒன்னுக்குள்ள ஒன்னு. உங்களுக்குச் சொன்னா போதுமா? எங்களுக்குச் சொல்ல வேணாமா?” என்று கோபமாகக் கேட்டார் பெரியவர்.
“எங்க வீட்டுக் கல்யாணம். எங்க விருப்பம் போலதான் செய்வோம். எல்லா விஷயத்தையும், ஊரெல்லாம் கொட்டடிச்சு சொல்லிட்டு இருக்க முடியாது. அவனவனுக்குச் செய்தி தெரிய வரும் போது தெரிஞ்சா போதும்னு நினைச்சோம். அதுல என்ன தப்பு? வந்துட்டானுங்க கேள்வி கேட்க. எல்லாம் பொத்திட்டு போங்க டா” என்று கோபமாகக் கத்தினார் அய்யனார்.
மீண்டும் ஒரு சலசலப்பு. வேதா அந்தக் கூட்டத்தில் முண்டிக் கொண்டு முன்னே வர போராடினாள்.
“தள்ளுங்க மா” ஜெயலட்சுமி மகளை இழுத்துக் கொண்டு முன்னே வந்தார்.
“மாப்பிள்ளை வீட்டை பத்தி ஒழுங்கா சொல்லல. பொண்ணு லவ் பண்ணுதை மறைக்கற…என்னடா மலை இது…” அய்யனார் வயதில் இருந்த ஒருவர் முன்னே வந்து கேட்க, வானமாமலை தங்கையை முறைத்தார்.
“நான் என்ன பொய்யா சொன்னேன். என்னை முறைக்கற… என் பொண்ணு அன்னைக்கே இவங்க ரெண்டு பேர் ஃபோட்டோ காட்டினா, இந்த வேதா.. இவனோட வண்டியில வந்து எங்க வீட்ல இறங்கினா.. தெரியுமா?” மொத்தமாகப் போட்டு உடைத்தார் வைதேகி.
வெற்றி நிதான நடையுடன் வேதாவின் முன் வந்து நின்றான்.
“என்ன நடக்குது இங்க?” கடினமான குரலில் கேட்டான்.
“அவளுக்கு எதுவும் தெரியாது மாப்பிள்ளை. எல்லாம் என் தப்புதான். நானும் எதையும் வேணும்னு மறைக்கல. நெருங்கின சொந்தத்துக்கு மட்டும் சொன்னேன். மத்தவங்களுக்குச் சொல்லத் தேவையில்லைன்னு நினைச்சு…” வானமாமலை சொல்ல, விஜயை திரும்பி முறைத்தான் வெற்றி.
“வர்ஷிக்கு எதுவும் தெரியாது மாப்பிள்ளை” விஜய் முணுமுணுக்க, அவனைக் கண்களால் எரித்தான் வெற்றி.
ரேவதி, சுவேதா மற்றும் சுந்தரம் மூவரையும் கண்களில் தேங்கி நின்ற கண்ணீருடன் ஏறிட்டாள் வேதா.
“சாரி” என்றாள். அவர்களால் மகனை மீறி எதையும் செய்ய முடியவில்லை.
சட்டென முன்னே வந்து, “எனக்கு இவங்க யாரும் முக்கியமில்ல. இவங்கல்லாம் என்னமும் பேசிட்டு போறாங்க. ஆனா, நீ? இந்தக் கூட்டத்தில்தான் இருக்கப் போறியா?” வேதாவின் கண்களைக் கூர்ந்து கேட்டான் வெற்றி.
“எப்படிப்பட்ட பொண்ணைப் பெத்து, வளர்த்து, அவ வாழ்க்கையை என்னய்யா பண்றீங்க?” விஜயை பார்த்து பல்லைக் கடித்தவன், “வா, போலாம் வேதா” என்று எட்டி அவளின் கையைப் பிடித்தான் வெற்றி.
வேதா ஒரு நொடி தயங்கி அப்பாவின் முகம் பார்த்தாள். அவரோ கண்கள் கலங்கி நின்றார்.
அவள் தயங்கிய ஒற்றை நொடியில் முடிவெடுத்து, சட்டென அவளின் கையை உதறி விட்டு ஆத்திரத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் வெற்றி.
“வெற்றி..” வேதா நடுங்கும் குரலில் அழைக்க, “நோ, நான் கூப்பிட்டப்போ நீ வரல. இப்போ என்னைக் கூப்பிடாத வர மாட்டேன் நான். உன் குடும்பமும் நீயும் எங்களுக்குக் கொடுத்த மரியாதையும், மதிப்பும் போதும். என்னால எல்லா நேரமும் உனக்காக இறங்கி வர முடியாது. இந்த நிமிஷம் எனக்கு எங்கம்மா மரியாதை ரொம்ப முக்கியம். நான் உன்னை நேசிச்சு, விரும்பி கல்யாணம் பண்ணிக்கக் கேட்டேன். அதையே மறைக்கறீங்க நீங்க. உங்களுக்கு அவ்வளவு அவமானமா இருக்க எங்க உறவு வேணாம்னா.. எனக்கும் நீ வேண்டாம்.” நின்ற இடத்தில் திரும்பி, வார்த்தைகளை அவளின் முகத்தில் எறிந்து விட்டுப் போனான் வெற்றி.
வேதா அதிர்ச்சியில் உறைந்து நிற்க, வெற்றியின் குடும்பமும், உறவுகளும் வெளியேறி இருந்தது.
வானமாமலை அவர்களின் பின்னோடு ஓடினார். வெற்றியின் கைப் பிடித்து மன்னிப்பு கேட்டு, அவனைப் போக விடாமல் தடுத்து நிறுத்த முயன்றான் விஜய்.
வெற்றி அடிபட்ட அவமான உணர்வில் அசைய மறுத்தான். அம்மாவை பேசியதை அவனால் மன்னிக்க முடியவில்லை. அம்மா, அப்பா, தங்கை என யாரின் பேச்சும் அவனை அசைக்கவில்லை.
அம்மாவை பேசி விட்ட கோபம் அவன் மனத்தில் ஆழமாகப் பதிந்து நின்றது.
இங்கே வீட்டினுள் சற்று முன் நடந்ததைக் குப்பையைப் போலக் கிளறி, அதைப் பெரிதுபடுத்திப் பேசிக் கொண்டிருந்த உறவுகளை விரட்டி விட்டார் அய்யனார்.
ஜெயலட்சுமி, முத்துமாரி இருவரும் வேதாவின் அருகில் நின்று அழுது கொண்டிருந்தார்கள்.
வைதேகி எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் சோஃபாவில் அமர்ந்திருந்தார். அவரின் கணவர் மச்சானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். அவரின் மன்னிப்பு நடந்ததை மாற்றி விடுமா என்ன?
அன்றிரவு பல்வேறு உணர்வுகளுடன் போராடி உறங்கி விட்டு, மறுநாள் முதல் முறையாக அப்பாவிடம் சொல்லிக் கொள்ளாமல், வீட்டில் இருந்து கிளம்பினாள் வேதவர்ஷினி.
அப்பத்தா, அப்புச்சி, அம்மா, அண்ணன் என யாரின் பேச்சும், சமாதானமும் அவளைத் தடுத்து நிறுத்தவில்லை.
சென்னை வந்ததும் முதல் வேலையாக வெற்றிக்கு அழைத்தாள். முன் தினம் போலவே அவளை, அவளது அழைப்பை எடுக்காமல் தவிர்த்தான் வெற்றிவேந்தன்.