நற்காதல் நெய்திடவா – 14 (2)

புடவை, பூ என்று இருந்தவள் வேலைத் தினத்தினால் சோர்ந்து தெரிந்தாள். ஆனால், வெற்றியின் கண்கள் அவள் மேல் மையலாகப் படிந்தது. அனிச்சையாய் அவளை நெருங்கி நின்றான் அவன். இருவருக்கும் இடையில் நூலிழை இடைவெளி. வேதா பதட்டத்தில் அவன் புறங்கையை அழுந்த பற்றினாள். வெற்றி நிதானமாக அவள் முகத்தில் வலம் வந்தான்.

“எம்மாடி வேதா, நானும் மொத்தமா எடுத்துக்கவா?” மோகம் பாடியது அவன் குரல்.

“ஹான்..” பேச்சே வரவில்லை அவளுக்கு.

“ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லணும் செல்லமே” சீண்டிய அந்தக் குரலுக்கு, “டிஸ்டன்ஸ்” என்று அணை போட்டாள்.

“இன்னும் ரெண்டே நாள் தானே. அப்புறம் இந்த வேதா, இந்த வெற்றிக்குன்னு நிச்சயமாகிடும். அப்பவாவது அச்சாரம் கொடுப்பியா?”

“அடி வேணா, கொடுப்பேன்” என்று சொல்லி விட்டு உதடு கடித்தாள். அந்த உதட்டில் பதிந்தது அவன் கண்கள். வேதா அந்தப் பார்வையில் தடுமாறி தலையைப் பின்னிருந்த புத்தகங்களில் சாய்த்தாள்.

“இந்த நிமிஷம், புத்தகங்களை விட வேதாவை ரொம்பப் பிடிக்குதே. புத்தகத்தை விட வேதாவை பிரிச்சு படிக்க ஆசையா இருக்குதே. எம்மாடி வேதா, நான் என்ன பண்றது?” அவனது பேச்சும், நெருக்கமும் தந்த மாய உணர்வில் இருந்து வெளிவர விரும்பி, பேச்சை மாற்றினாள் வேதா.

“அதென்ன எம்மாடி? உங்களுக்கு வேற பேரே கிடைக்கலையா?” அவள் கேட்க, “ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன செல்லமே?” என்று சரசமாகச் சொன்னான் வெற்றி.

“வெற்றிகிட்ட பேசி வெற்றி பெற முடியுமா?”

“முடியுமே. ஆனா, அப்போ நீ பேசுவியா தெரியாது” என்றவனின் வாயை வேகமாக மூடினாள் வேதா. அவளின் உள்ளங்கையில் மென்மையாய் முத்தமிட்டு, மறுகரத்தால் அவளை இறுக்கமாக அணைத்து, அதே வேகத்தில் விடுவித்தான் வெற்றி.

“வா, போகலாம். இந்த ரூம்குள்ள இனியும் நாம நிக்கிறது சரியில்லை” முகம் முழுக்கப் புன்னகை, வெட்கம் பூசி பளபளத்து நின்றிருந்தவளின் கைப் பிடித்து வெளியில் அழைத்துச் சென்றான் அவன்.

ரேவதி, சுவேதா இருவரும் இரவு உணவை தயாரித்துக் கொண்டிருக்க, சுந்தரம் மட்டுமே ஹாலில் அமர்ந்திருந்தார்.

“சாப்பிட்டு போ வேதா” ரேவதி வற்புறுத்த, அவர்களிடம் இரவு உணவை மறுத்து விட்டு, விடை பெற்று வீடு திரும்பினாள் அவள்.

வெற்றியே அவளை வீட்டில் கொண்டு வந்து விட்டான்.

பூ வைக்கும் நிகழ்விற்கான ஏற்பாடுகளை இரண்டு வீட்டினரும் பார்த்துக் கொள்ள, வெற்றியும், வேதாவும் வங்கிப் பணியில் மூழ்கி இருந்தார்கள்.

சரியாக முதல் நாள் காலைதான் இருவரும் அவரவர் குடும்பத்தோடு, சொந்த ஊர் சென்று இறங்கினார்கள்.

வெற்றி தன் குடும்பத்தோடு செல்ல, வேதா அண்ணனோடு வீடு சென்றாள்.

வானமாமலை மகளை எதுவும் சொல்லவில்லை. அவருக்குச் சிற்சில கோபதாபங்கள் இருந்தாலும் கூட அதை மகளிடம் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை அவர்.

அவருக்கு மகளின் கல்யாணம் குறித்த சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது. மரும்கன், நான் பார்த்த மாப்பிள்ளை என்று மார்த் தட்டிக் கொள்ள முடியாத ஏமாற்றம் அவருக்கிருந்தது.

முதலில் வேதா, வெற்றி பற்றிய விஷயத்தை விஜய் சொன்ன போது, கண் மண் தெரியாத கோபத்தில் கத்தி தீர்த்து விட்டார் மனிதர்.

“டேய், என்ன நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். என் பேத்தியை பேசிட்டே இருக்க நீ? அடங்கு டா” அய்யனார் போட்ட ஒரே அதட்டலில் அமைதியானார் அவர்.

“நம்ம வீட்டு மீனாட்சி அவ. அவளை வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்க? உனக்கு அப்படியென்ன கோபம் வருது? அவ நீ பெத்த பிள்ளை டா” முத்துமாரி தன் பங்கிற்கு மகனை திட்ட, அவரிடம், “அம்மா..” என்று ஏறிக் கொண்டு போனார் அவர்.

“அந்தப் பையனை பத்தி விசாரிங்க மாமா” மெலிதான அழுகையுடன் வந்த மனைவியின் குரலில் அதிர்ந்து அவரைத் திரும்பிப் பார்த்தார் வானமாமலை.

“கண்ணுக்கு கண்ணா ரெண்டு பிள்ளைங்களைப் பெத்து, அவங்க ரெண்டு பேரையும் சந்தோசமா பார்க்கலன்னா, பெத்தவ நான் எதுக்கு உயிரோட இருக்கணும்” ஜெயலட்சுமி அழுகையோடு சொல்ல, “என்ன பேசுற நீ?” என்று மனைவியை அவர் கத்த,

“அவ சொல்றதிலயும் நியாயம் இருக்கு தானே டா? பெத்தவளுக்குப் பிள்ளைங்க நிம்மதியும், சந்தோஷமும் தானே என்னைக்கு இருந்தாலும் முக்கியம்.” முத்துமாரி சொல்ல, அப்படியே தொய்ந்து அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து விட்டார் வானமாமலை.

விஜய் அவரின் அருகில் சென்று அமர்ந்தான்.

“இந்தா, உன் தங்கச்சி மகளை அத்தனை ஆசையா, அருமை பெருமையா உன் மகனுக்குக் கட்டி வச்ச? என்னாச்சு? அவ சொந்த மகளையே நல்லா வாழ விடாம, ஆட்டம் காட்டிட்டு இருக்கா. என்னமோ நம்ம நிம்மதி போறதுல அவளுக்கு ஒரு அல்ப சந்தோஷம். ஆனா, மக வாழ்க்கையைக் கெடுக்கறோமேன்னு புத்தி இல்லாம பண்ணிட்டு இருக்கா. அவளை எல்லாம் நான் தானே பெத்து, வளத்தேன்? அவளுக்கு மட்டும் எப்படிப் புத்தி பிசகி போகும்?” முத்துமாரி மகளைப் பற்றிச் சொல்லி அங்கலாய்க்க, விஜய் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

அவனது ஒரு வகையில் காதல் திருமணம்தான். ஆனால், உறவு நடுவில் வந்து உபத்திரவம் செய்து கொண்டிருந்தது. அவனது மாமியாராகிய அத்தையின் வடிவில். அவன் மனைவி இப்போதும் அம்மா வீட்டில்தான் இருந்தாள்.

“உங்க வீட்டுக்கு நான் வரல” என்றவளை, அவனும் கட்டாயப்படுத்திக் கூட்டி வரவில்லை. அவளைச் சென்னைக்கு அனுப்பி விட்டு, அவன் மட்டும் ஊருக்கு வந்திருந்தான்.

மகனை பார்க்க பார்க்க ஜெயலட்சுமிக்கு ஆற்றாமையாக இருந்தது.

சொந்த அண்ணன் வீட்டில் பெண்ணைக் கட்டிக் கொடுத்து விட்டு நாத்தனார் ஆடும் ஆட்டம் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

பணம், சொத்து, சொந்த பந்தம் தாண்டி, சொந்த பிள்ளைகளின் சந்தோஷத்திற்கு எப்போதும் முன்னிலை கொடுப்பார் அவர்.

இப்போதும் அதே கவலையுடன், “இவன் வாழ்க்கைதான் இப்படிப் பேச்சும், பஞ்சாயத்துமா போய்டுச்சு. வேதா வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும். அவளை விரும்பி கேட்கிறவங்க நிச்சயமா நல்லா வச்சுப்பாங்க. அதான் விஜய் வேற விசாரிச்சுட்டேன், சொல்றான் இல்ல?” என்று கேட்டவர், “படிப்பு, வேலைன்னு எல்லாத்துக்கும் அவளைப் போராட விட்டோம். கல்யாணமாவது என் பொண்ணு நிம்மதியா, அவ விருப்பப்படி, அவ மனசுக்கு பிடிச்சவனைப் பண்ணிக்கட்டுமே. வாழப் போறது அவ தானே?” என்று ஆணித்தரமாகக் கேட்டார் ஜெயலட்சுமி.

வானமாமலை, மனைவிக்கு வளைந்து கொடுத்தார்.

அம்மா, அப்பா, மனைவி, மகன் என்று அவர்கள் மாறி மாறி பேச மனம் மாறியிருந்தார் அவர். ஆனால், அவர் சம்மதிக்க முக்கியக் காரணம் மகளின் மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்காக மட்டுமே.

காதல், அதன் மேல் பெரிதாக அவருக்கு அபிப்ராயங்கள் கிடையாது. ஆனால், திருமணம் எல்லாவற்றையும் முறையாக்கும் என்று நினைத்தார் அவர். பெரும் யோசனைக்கும், தயக்கத்திற்கும் பின்புதான் அவரது முடிவை எடுத்தார்.

இப்போதும் வீடு வந்திறங்கிய மகளை வாஞ்சையுடன் பார்த்தார் அவர். அண்ணனின் கைப் பிடித்துப் பேசிக் கொண்டே வந்த மகளைப் பார்க்கையில், எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற கவலைதான் முதலில் வந்தது அவருக்கு.

மகனை பார்க்க பார்க்க வருத்தமும், தன் மேலான கோபமும் அவரை ஆட்டுவித்தது.

“வேதா வாடா..” ஜெயலட்சுமி மகளைக் கண்டதும் வெளியில் வந்தார்.

“வா, வா. கொஞ்சம் நேரம் படுத்து எந்திரி. அப்போதான் சாயந்திரம் முகம் பார்க்கிற மாதிரி இருக்கும். ரெண்டு இட்லி சாப்பிட்டிட்டுப் போய்ப் படுக்கறியா?” அவர் கேட்க, “இரு மா. குளிச்சுட்டு வர்றேன்” என்றாள் வேதா.

“வா ஆத்தா” சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அய்யனார் அழைக்க, முத்துமாரி வேகமாக அறையில் இருந்து வெளியில் வந்தார். அதன் பின் பேத்தியை அவர் பார்த்துக் கொண்டார். வேதா குளித்து வந்ததும், இட்லி ஊட்டி விட்டார். அவள் உறங்கும் வரை உடன் அமர்ந்து உறவுகளின் கதைச் சொல்லிக் கொண்டிருந்தவர், அவள் உறங்கிய பின்னும் அருகிலேயே இருந்தார்.

“என்னவாம் உன் நாத்தனாருக்கு இப்போ?” மகளைக் குறித்து மருமகளிடம் கோபமாகக் கேட்டார் முத்துமாரி.

“நம்ம மருமக மாசமா இருக்கா இல்ல. அதைச் சொல்லி பேசிட்டு இருக்கா உங்க பொண்ணு” என்றார் ஜெயலட்சுமி.

விஜயின் மனைவி ஷாலினி கர்ப்பமாக இருக்கிறாள். இரண்டு நாட்களுக்கு முன்புதான் உறுதி செய்திருந்தார்கள். அதைப் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அதுக்கென்ன இப்போ? நல்ல விஷயம் தானே?” முத்துமாரி கேட்க, “ம்ம். அதை உங்க மகக்கிட்ட சொல்லுங்க. நம்ம வீட்டு மருமக மாசமா இருக்கும் போது பொறுப்பில்லாம் விஷேஷம் வச்சு அவளை அலைய விடுறோமாம். அவளுக்கு ஏதாவது ஒன்னு..”

“ஜெயா, என்ன பேசுற நீ. அவதான் கூறு இல்லாம பேசிட்டு இருந்தா, நல்ல நாள் அதுவும் நீயும் அந்த வார்த்தையைச் சொல்லலாமா? பேசம இரு” என்று மருமகளை அதட்டியவர், கிழக்கு பார்த்து நின்று,

“ஆத்தா, மீனாட்சி. நீதான் எல்லாத்தையும் நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்” என்று மனமுருக மதுரை மீனாட்சியிடம் வேண்டுதலை வைத்தார்.

error: Content is protected !!
Scroll to Top