என் ஜீவனில் உறைந்திடு – 31 (1)

எந்தவொரு உறவிலும் வலிந்து அன்பை திணிப்பதால் வலிகள் மட்டுமே எஞ்சும்.

இளமாறன் வாழ்வில் ரோஜா வரும் வரை அவனுக்கு உறவுகளை வெறுத்த நிலைதான். அன்பை எதிர்பார்த்த இடத்தில் கிடைக்காத ஏக்கத்துடன் வெறுப்பு முகமூடி அணிந்து விலகியே நின்றான் அவன்.

மற்றவர்கள் அனைவரும் பாசத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு கூட்டில், குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்க, தான் மட்டுமே தனித்து விடப்பட்ட உணர்வில்தான் விலகி ஓடினான் அவன்.

தாத்தா, அம்மம்மா, அப்பா என அனைவர் மேலும் அவனுக்கு மனத்தின் ஆதங்கத்தை மீறிய அன்பு உண்டு. ஆனால், அம்மாவிடம் அவை எல்லாவற்றையும் தாண்டி அன்பை மட்டுமே எதிர்பார்த்தான்.

அவன் விலகி நின்ற காரணத்தினால் மட்டுமே அம்மாவுக்கு அவப்பெயர் என்பது அவனுக்குப் புரியாமல் இல்லை. ஒருவேளை அவன் குடும்பத்துடன் இருந்திருந்தால், மருத்துவர் சுகந்தி திருமணத்திற்கு முன் குழந்தை பெற்றவர் என்ற பெயரே வெளியில் வந்திருக்காது. தெரிந்திருக்காது.

அவன் வாழ்க்கையில் குற்றம் சாட்ட வேண்டும் என்றால், நிறையப் பேரை கைக் காட்டுவான். ஆனால், முதலில் அவனை நோக்கித்தான் அவன் விரல் நீளும். அந்த மனமுதிர்ச்சியும், பக்குவமும் அவனுக்கு இப்போதுதான் வந்திருக்கிறது.

தனித்துத் தான் மட்டும் ஒட்டாமல் நிற்கும் தன் குடும்பத்தைத் தவிர்க்க வேண்டுமென்றே படிப்பு, பயிற்சி, வேலை எனப் பல வருடங்களாகப் பல மாநிலங்களில் பதுங்கிக் கொண்டான். ஆனால், உள்ளுக்குள் பாசத்தின் ஏக்கம் நிறைந்தே இருந்தான்.

ஓர் சாலை விபத்தில் அனைத்தையும் மாற்றிப் போட்டாள் அவனின் ரோஜா. அவன் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றினாள்.

அவள் விளையாட்டாகச் சொல்வது போல, அவளுக்குப் பூர்வீகம் சொர்க்கம்தான் போலும். அவனைப் பொறுத்தவரை தேவதை வம்சம் அவள்.

அவனுக்கான அனைத்தையும் அவனுக்குத் திருப்பித் தந்தவள், அவள் வந்த பிறகுதான் அவனிடம் எல்லா உறவுகளும் நெருக்கமானது.

அதுவரை தங்களின் அன்பை அவனிடம் சேர்ப்பிக்கும் வழி தெரியாமல் தத்தளித்த அவன் குடும்பம், ரோஜாவை அந்த வழியாக்கி கொண்டது.

ஆரம்பத்தில் அறியாமையால் அவனுக்குப் பல வலிகளையும் அவர்கள் தந்தது என்னவோ நிஜம்தான். ஆனால், முடிவில் எல்லாம் சுபமே.

இப்பொழுது கஸ்தூரிக்கு மகளின் மீதான கோபம் அறவே இல்லாமல் போனது போல, சங்கரனுக்குத் தன் கடந்த காலத்தின் தவறான முடிவுகளின் மேலான வருத்தம் குறைந்தது போல, சுகந்திக்கு மகனின் மீதான ஏக்கம் சற்றே மட்டுப்பட்டிருந்தது என்பதுதான் உண்மை.

காலம் என்பது எல்லாவற்றுக்கும் அருமருந்து.

ஒரு விபத்துதான் இளமாறன் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி அமைத்தது.

அன்றைக்கு அவன் முகத்தை மடியில் ஏந்தி, “உங்களுக்கு ஒன்னும் ஆகாது” என்று பதட்டத்துடன் அவனுக்கு ஆறுதல் சொன்ன ரோஜா, அவனின் ஆறுதலாகிப் போனாள்.

ரோஜா மட்டும் அவன் வாழ்வில் வந்திருக்கா விட்டால், இன்னமும் வெறுப்பையும், கசப்பையும் தூக்கி சுமந்து கொண்டே திரிந்திருப்பான்.

‍அன்று இதே சாலை முடிவில்தான் என் பெற்றோரும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு நான் முக்கியமில்லை. என் மேல் அவர்களுக்கு அன்பில்லை என்ற எண்ணம் தந்த சோகத்துடன்தான் வண்டியோட்டி விபத்தில் சிக்கினான் அவன்.

ஆனால், இன்று அதே மருத்துவமனை முன்பு மனைவிக்காகக் காத்திருந்த இளமாறன் புதிய மனிதன். உறவுகள் அவனுக்குத் தரும் பிடி பிரியத்தைப் பெரிதாகப் பார்க்க கற்றவன். இந்த வாழ்க்கைப் பாடம், அவன் வலிக்கக் கற்றது.

இதே மருத்துவமனைக்கு இரத்தக் காயத்துடன் வந்தவன், இப்போது மனக் காயமும் ஆறி நிற்கிறான். இந்த மருத்துவமனையோடு ரோஜாவிற்கு இருந்த தொடர்புதான் அவனுக்குக் குடும்பத்தினருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதோ அவனை நோக்கி நடந்து வருகிறாள். ஏழு மாத வயிறை தள்ளிக் கொண்டு, அவனைச் சுற்றி இயங்கும் மொத்த உலகத்தையும் மங்கலாக்கி, அவனை மட்டுமே பார்த்து புன்னகைத்து வரும் அந்தக் கண்களில் தெரியும் அவனுக்கான காதல் எப்போதும் அவன் ஜீவனை உறைய வைக்கும்.

அவனின் பேரன்பின் தாகம், அவளின் விழிகளைப் பார்த்ததும் தீரும் அதிசயத்திற்கு என்ன பெயர் வைக்க?

இதோ இவளுக்காக, இவளின் அன்புக்காக மாறா விட்டால், அவன் என்ன மனிதன்? இந்த இளமாறன், ரோஜாவின் இளமாறன்.

அன்புத் தருமிடங்களில் மனம் மொத்தமாய் மண்டியிடுவதைத் தவிர்க்க இயலாது தானே?

“ஹலோ செஃப். ஏன் டல்லா இருக்கீங்க?” அவனென்றால் ரோஜாவுக்கு அதீத அன்புதான். ஆனால், இப்படித் தாய்மையில் தோய்ந்து வரும் இந்தக் குரல், அவனுக்குள் இருக்கும் இளமாறன் எனும் சிறுவனின் மனதை மயிலிறகால் வருடியது.

“ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா? கேன்டீன் வந்திருக்கலாம் இல்ல? ஏன் இங்கேயே நிக்கறீங்க” கேட்டபடி அவன் அருகில் வந்து, பொது இடம் என்றும் பாராமல், அவனை நெருங்கி நின்றாள் ரோஜா.

ரோஜாவின் தலையில் கை வைத்து அழுத்தி, “உனக்காக வெயிட் பண்றதுக்குத்தான் இந்த ஜென்மம் எடுத்திருக்கேன்” உருக்கமாகச் சொன்னான்.

“இளா.. எப்படிப் பேசுறீங்க பாருங்க” என்று கிண்டலாகச் சொல்லி, ரசித்துச் சிரித்த ரோஜா, வேகமாகத் தன் இரு கைகளையும் கொண்டு வயிறை மூடினாள்.

“என்னடி?”

“நீங்க இப்படிப் பேசுறதை கேட்டு என் பையன் கோபிச்சுக்கப் போறான்” கிளுக்கி சிரித்தபடி அவள் சொல்ல, இளநகைப் புரிந்தான் இளமாறன்.

“சாப்பிட்டீங்களா இளா?”

இல்லை என்று தலையசைத்தான்.

“அப்போ உள்ள வாங்களேன். அம்மா, இன்னைக்குச் சின்ன வெங்காயம், பூண்டு போட்டு, பச்சை மணத்தக்காளி வத்தக் குழம்பு கொண்டு வந்திருக்காங்க. அத்தை ஃப்ரெஷ் மாங்காய் தொக்கும், பிடி கருணை கிழங்கு பொடி மாஸும் எடுத்துட்டு வந்திருந்தாங்க. நான் சாப்பிட்டேன், ரொம்ப நல்லா இருந்தது. நீங்களும் வாங்க, சாப்பிடலாம். நீங்க இங்க வரை வந்துட்டு சாப்பிடாம போனா, அம்மா திட்டுவாங்க இளா” ரோஜா அவனை வற்புறுத்த,

“நீ வீட்டுக்கு வந்து ஏதாவது சிம்பிளா எனக்குச் செஞ்சு கொடு. நான் சாப்பிட்டுக்கறேன்” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள் ரோஜா.

“பருப்பும், அப்பளமும் போதும்.” அவன் சொல்ல, “உங்களுக்கு இரக்கமே இல்லையா? இப்பவும் நான்தான் சமைக்கணுமா?” என்று மூச்சு வாங்க வசனம் பேசினாள் ரோஜா.

“அப்புறம் ஏன் சாப்பிடீங்களான்னு கேட்ட? சோறு போடுற ஐடியா இல்லனா எதுக்குக் கேட்ட?” அவன் கோபம் போலக் குரல் உயர்த்திக் கேட்க,

“மனசாட்சி இருக்கா உங்களுக்கு? இந்தா இருக்கு நம்ம கேன்டீன். ஒரு நிமிஷம் கூட ஆகாது. உள்ள போனா சுடசுடச் சோறு கிடைக்கும். ஆனா..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டு,

“ஆனா, எனக்கு என் ரோஜாதான் சமைக்கணும்” என்றான் இளமாறன்.

“நல்லா வக்கணையா பேசறீங்க செஃப்” என்று அவன் வயிற்றில் குத்தினாள்.

“ஆஆஆ” என்று கத்தியவன் சிரிக்க, தொற்று வியாதியாய் அவளையும் தொற்றியது அந்தச் சிரிப்பு.

“மாறா, வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா?” சுகந்தியின் குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தார் அவர்.

“ஆமாத்த.” ரோஜா சொல்ல, “அப்போ உங்களோட நானும் வரவா? எனக்கு அடுத்து ஈவ்னிங்தான் பேஷண்ட்ஸ் பார்க்கணும்” என்று அவர் சொல்ல,

“வாங்க” என்று அழைத்தான் இளமாறன்.

மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம் அல்லவா?

error: Content is protected !!
Scroll to Top