அந்த வாரம் வெள்ளிக்கிழமை காலையிலேயே சென்னை வந்து விட்டது வேதவர்ஷினியின் குடும்பம். அவர்களது காரில் வாடகை ஓட்டுநர் அமர்த்திக் கொண்டு அவர்கள் வந்திருக்க, வேதாவிற்கு எதிர்பார்ப்புக் கூடியது. ஆனால், வீடு வந்தவர்கள் அவர்கள் போக்கில் தங்கள் வேலையைப் பார்க்க, அவள் கடுப்புடன் வங்கி கிளம்பிச் சென்றாள்.
பல நாட்களுக்குப் பிறகு, வெற்றியிடம் வங்கியில் வைத்து சொந்த விஷயம் பேசினாள்.
“அம்மா, அப்பா திடீர்னு வந்திருக்காங்க. எதுக்குன்னு தெரியல. என்கிட்ட வர்றதா சொல்லவும் இல்ல” என்று அவள் சொல்லவும், “மகளுக்குச் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வந்திருப்பாங்க. மாப்பிள்ளை எதுவும் பார்த்துட்டாங்களோ, என்னவோ?” என்று வம்பிற்கு அவளைச் சீண்டினான்.
அவள் முறைக்க, “நான் ஈவ்னிங் உங்க வீட்டுக்கு வந்து பேசட்டுமா?” என்று கவலையில் மூழ்கியிருந்த அவளின் கண்களைப் பார்த்து கேட்டான் வெற்றி.
“ம்ம். என்ன சொல்லி எங்க வீட்டுக்கு வருவீங்க?” என்று யோசனையுடன் கேள்விக் கேட்டாள் அவள். ஆனால், அவனின் கேள்விக்கும், அவளின் தயக்கத்திற்கும் அவசியமே இல்லாமல், வேதாவை விரைவாக வீடு வரச் சொன்னது அவள் குடும்பம்.
வெற்றி கிண்டல் செய்தது போல, மாப்பிள்ளைதான் பார்த்து விட்டார்களோ என்று பயந்து அவள் அண்ணனை அழைக்க, விஜய் அவளின் அழைப்பை ஏற்காமல், “பிஸி” என்று செய்தி அனுப்பினான்.
வேதா தன் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு வீட்டுக்குச் சென்றாள்.
அவளைக் கண்டதும், “சீக்கிரம் வரச் சொன்னா, இப்போ வர்ற வேதா” என்று அதட்டினார் ஜெயலட்சுமி.
“சரி வந்தாச்சு இல்ல. வேகமா வேலையைப் பாருங்க” என்று வானமாமலை சொல்ல, அம்மா அவளை உள்ளே தள்ளிக் கொண்டு போனார்.
அவள் பதினைந்து நிமிடங்களில் குளித்து வெளியில் வர, புதிதாகப் பட்டு புடவை படுக்கையில் இருந்தது.
“ஆத்தா, சேலையை நீயே கட்டிடுவ தானே?” என்று அவளிடம் கேட்ட அப்பத்தாவை முறைத்தாள் அவள்.
“அப்பத்தா, எனக்குச் சேலை கட்டத் தெரியாமயா டெய்லி பேங்க்கு அதைக் கட்டிட்டு போறேன்?” சேலையைக் கையில் எடுத்து, பிரித்தபடி அவள் முறைக்க, “கோவிக்காத த்தா. என் மீனாட்சி. சீக்கிரம் சீலையைக் கட்டு” என்ற அப்பத்தாவின் அருகில் சென்று, “என்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்களா?” ரகசியமாகக் கேட்டாள் வேதா.
“ஆமா த்தா” பேத்தியின் கன்னம் வழித்து அவர் சொல்ல, “ஐயோ, ஆனா, நான் வேற ஒருத்தரை விரும்புறேனே” பாவம் போல அவள் சொல்ல, “திருட்டுக் கழுத. எங்ககிட்ட சொன்னியா நீ? இப்ப உங்கப்பன் பேச்சையே கேளு. அவன்கிட்ட தானே சொன்ன?” முத்துமாரி சடைக்க,
“ஏய், அப்பத்தா. நீயெல்லாம் என்ன பெரிய மனுஷி..” இங்கு அவள் வாய் பேசிக் கொண்டிருக்க, “ஆத்தா, உன் பேத்தியை கூட்டிட்டு வெளில வா. அப்புறமா அவளைப் பொறுமையா செல்லம் கொஞ்சுவ. இங்க மாப்பிள்ளை வீடு வந்துட்டாங்க.” வானமாமலை சொல்ல, வேதாவின் உள்ளுணர்வு அது வெற்றி என அடித்துச் சொல்ல, வேகமாக அலைபேசியைத் தேடி எடுத்து வெற்றிக்கு அழைத்தாள்.
“ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்..” பாடலின் இசை வடிவம், வெற்றியின் அலைபேசி அழைப்பொலியாக அவள் வீட்டினுள் இருந்து ஒலிக்க, “பொய் கோழி அப்பத்தா” என்று சத்தமாகச் சிரித்தாள் வேதா. பேத்தியின் கன்னத்தில் முத்தமிட்டு, “சீக்கிரம் சேலையைக் கட்டு” என்றார் முத்துமாரி.
“அஞ்சு நிமிஷம் கொடு அப்பத்தா.” என்று ஆர்ப்பரித்த வேதா, பரபரப்புடன் கிளம்பி நின்றாள்.
அங்கே ஒரு சம்பிரதாயப் பெண் பார்க்கும் படலம் போல, இரண்டு குடும்பங்களும் சந்தித்துப் பேசிக் கொண்டார்கள்.
வெற்றி, வேதாவிற்கு மட்டுமல்ல. இரண்டு குடும்பங்களுக்கும் ஒருவரையொருவர் பிடித்து விட ஒன்றாவது என முடிவு செய்தார்கள்.
மேற்கொண்டு நடக்க வேண்டிய சுப காரியங்களைப் பற்றியும், எப்படி, எங்கு நடத்துவது என அனைத்தையும் அவர்கள் விவாதித்து, கலந்தாலோசிக்க, வேதாவிற்கு இன்ப அதிர்ச்சிதான்.
“என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா நீ?” என்று அண்ணனை முறைத்த வேதா, “உங்களுக்கும் தெரியுமா?” என்று வெற்றியிடம் கண்களால் விசாரித்தாள். காதலுடன் கண் சிமிட்டினான் அவன்.
அவர்கள் கண் சிமிட்டும் நேரத்தில் நிகழ்வுகள் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது.
அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் விருதுநகரில் வேதாவின் வீட்டில் வைத்து பூ வைக்கும் வைபவம் வைத்துக் கொள்வது என முடிவு செய்தார்கள். இரண்டாம் மாதமே திருமணத்திற்கு நாள் குறித்தார்கள்.
இருவரும் ஒரே வங்கிக் கிளையில் உயரிய பதவியில் பணி புரிந்ததால், அவர்களால் ஒரே நேரத்தில் வெளியூர் செல்ல முடியாத நிலைமை. வெற்றி அவர்களின் வங்கி மண்டல அலுவலகத்தில் பேசி, சிறப்பு அனுமதி வாங்கினான். அவர்கள் ஊரில் இல்லாத நேரத்தில் அருகில் இருந்த பிராஞ்ச் மேனஜர், அவர்களது வங்கி பொறுப்பையும் பார்த்துக் கொள்ள அலுவலக ரீதியாகக் கேட்டு, அனுமதி பெற்றான்.
அன்றில் இருந்து இரண்டாம் வாரம் வரும் வெள்ளிக் கிழமை அரசு விடுமுறையாக இருக்க, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை இருந்தது. அது அவர்களுக்குச் சாதகமாக இருக்க, அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இரண்டு வாரங்கள் இடைவெளி இருந்ததால் வேதாவின் குடும்பத்திற்கு ஏற்பாடுகளைக் கவனிக்கவும் எளிதாக இருந்தது. இத்தனைக்கும் அவர்களின் வீட்டை ஒட்டிய காலி மனையில் பந்தல் போட்டு, நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்துப் பூ வைக்கும் வைபவத்தை நடத்த இருந்தனர். ஆனால், நெருங்கிய சொந்தங்களே இரண்டு பக்கமும் அதிகமாக இருக்க, கொஞ்சம் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்தனர்.
அதைக் கிட்டத்தட்ட நிச்சயதார்த்தம் என்று சொல்லி விடலாம்.
அன்று செவ்வாய் கிழமை வங்கி பணிகள் அனைத்தும் முடிந்து, அலுவல் பணிகளை மேற்கொண்டிருந்தார்கள் பணியாளர்கள்.
வெற்றி தன் அறையில் இருந்து எழுந்து வெளியில் வந்தான். அடையார் ஆனந்தபவன் பணியாளர் ஒருவர் வங்கிக்குள் நுழைந்து வெற்றியிடம் வந்தார். அவனிடம் பெட்டியை கொடுத்து, பணத்தை வாங்கிச் சென்றார் அவர்.
வங்கி நடுவில் வந்து நின்று, “இந்த வீகெண்ட் நான் சென்னையில் இருக்க மாட்டேன்” என்று வங்கிக்கு அறிவித்தான் வெற்றி.
அனைவரும் அவனை நிமிர்ந்து பார்க்க, “வர்ற வெள்ளிக் கிழமை எனக்கு எங்கேஜ்மென்ட்” என்று புன்னகையுடன் சொன்னான். அவன் கண்கள் வங்கியை சுற்றி வந்து வேதாவை தொட்டது.
“கங்கிராட்ஸ் சார்” என்று ஒவ்வொருவராகச் சத்தமாகப் புன்னகையுடன் வாழ்த்த, வேதா முழித்தாள்.
“பொண்ணு என்ன பண்றாங்க சார்?” நாயகி அவனிடம் கேட்க, வெற்றி மெல்ல நடந்து வேதாவின் மேஜைக்கு வந்தான்.
“அவங்க பி.ஓ…”
“எந்தப் பேங்க் சார்?” கேள்வி கேட்ட ஶ்ரீனிவாஸின் கண்கள் வேதாவின் மேல் சந்தேகமும், ஆச்சரியமுமாகப் படிந்தது.
“நம்ம பேங்க்தான்” என்று சொன்ன வெற்றி, “வேதவர்ஷினி. என் வருங்கால மனைவி.” என்று வேதாவை சுட்டிக் காட்டி சொன்னான்.
அதுவரை வங்கியில் யாருக்கும் அவர்களது விஷயம் தெரியாது. அவர்களுக்குச் சந்தேகம் வரும்படி இருவரும் நடந்து கொண்டதும் கிடையாது.
“நம்ம வேதாவா?”
“சூப்பர்”
“லவ் மேரேஜா?” கேள்விகள் அம்புகளாகப் பாய்ந்தன.
“எப்படி வேதா, நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டீங்களே?” என்று கேட்டு விட்டு நாக்கை கடித்தார் நாயகி.
“நீ கூடச் சொல்லவே இல்ல வேதா.” என்று அவர் கோபிக்க வேதாவின் முகத்தில் வெட்கச் சிரிப்பு.
“ரொம்பச் சந்தோஷமா இருக்கு. கங்கிராஜுலேஷன்ஸ்” என்று அவர் வாழ்த்த, அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் வாழ்த்தினார்கள்.
“ட்ரீட் குடுங்க சார்” கோபால் கேட்க, “முதல்ல கல்யாணம் முடியட்டும்” என்றார் நாயகி.
வெற்றி அப்போதுதான் வந்திருந்த இனிப்பு பெட்டிகளை வேதாவின் கையில் கொடுத்து, அவளோடு சேர்த்து அனைவருக்கும் அவனும் விநியோகித்தான்.
“நீங்க எல்லோரும் எங்க நிச்சயதார்த்தத்திற்குக் கண்டிப்பா வரணும்.” வெற்றி அவர்களை அழைக்க, “கண்டிப்பா வரணுமா சார்?” என்று கிண்டலாகக் கேள்விக் கேட்டார் ஶ்ரீனிவாஸ். பின்னே அவர்கள் விடுமுறை எடுத்தால், அவர் தானே வங்கி பொறுப்பை ஏற்க வேண்டும்.
“உங்க எல்லோருக்கும் விருதுநகர் கொஞ்சம் தூரம்தான். ஆனா, நீங்கல்லாம் வந்தா நாங்க ரொம்பச் சந்தோஷப்படுவோம். ஒருவேளை உங்களால வர முடியலைன்னா, அதுக்காக நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம். சென்னையில்தான் எங்க கல்யாணம் அதுக்குக் கண்டிப்பா வந்துடுங்க” புன்னகையுடன் சொன்னான் வெற்றி.
அவர்களிடம் ஆளாளுக்குப் பேச, கேள்வி கேட்க, வாழ்த்துகள் சொல்ல என்று நேரம் விரைந்து ஓடியிருந்தது.
அன்று பணி முடியும் போது இரவு எட்டு மணியாகி இருந்தது.
வெற்றி வேலை முடித்துச் செல்லும் போது வேதாவை தன்னோடு கூட்டிக் கொண்டு வீடு சென்றான். இந்த இடைப்பட்ட நாட்களில் அவன் குடும்பம் வேதாவிடம் உரிமையோடு உறவாடத் தொடங்கியிருந்தது.
வெற்றியின் அம்மாவும், தங்கையும் வேதாவிடம் மிகவும் நெருங்கியிருந்தார்கள்.
அன்றும் அவர்கள் இருவரும் ஒன்றாக வீடு போய் இறங்க, அவளை வரவேற்று, இயல்பாக உபசரித்து, ஊருக்கு செல்வது குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
வேதா சற்று நேரத்தில் வீடு செல்ல யத்தனிக்க, அவளைத் தனது அறைக்கு அழைத்துச் சென்றான் வெற்றி.
“எல்லோரும் வெளில இருக்காங்க. என்ன நினைப்பாங்க?” அவள் திணற,
“கதவு திறந்து தானே இருக்கு. ஒன்னும் நினைக்க மாட்டாங்க.” என்றவன், அவனது அறையின் ஓரமாக இருந்த மர அலமாரிக்கு முன் அவளைக் கூட்டிக் கொண்டு போய் நிறுத்தினான்.
அவள் எதிர்பாராத நேரம், அவளைத் திருப்பிப் பின்னிருந்து அவளின் கண் மூடினான்.
“வெற்றி, என்ன பண்றீங்க?” பயத்தில் அவளுக்குக் குரலே வரவில்லை.
“அப்படியே கண்ணை மூடி ஒரு புக்கை எடு பார்ப்போம்” அவள் காதில் அவன் கிசுகிசுக்க, அந்தக் குரலும், நெருக்கமும் அவளைச் சிலிர்க்க வைத்தது.
“வெற்றி..”
“புக்கை எடு” அழுத்திச் சொன்னான்.
வெடுக்கென்று அவன் கையில் திரும்பி அவன் கண்களைப் பார்த்து, “மொத்தமா எடுத்துக்கவா?” என்று புத்தகங்களைக் குறிப்பால் உணர்த்திக் கேட்டாள் வேதா.