41 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

எபி சென்று அரை மணி நேரத்தில் அழைப்பு மணி அடிக்க, வாயிலில் நின்றிருந்தான் பிரவீன்.

“சாரி, என்னோட புக்கையும், ரீடிங் கிளாசையும் விட்டுட்டுப் போயிட்டேன்.” வந்த காரணத்தைக் கூறியவனின் முகத்தைப் பார்க்கவே பாவமாக இருந்தது.  “உள்ள வாங்க நீங்க” என்று உள்ளே அழைத்தாள்.

“காபி குடிக்கறீங்களா?”

“வேண்டாம் அலர்விழி. திங்க்ஸ் எடுத்து கொடுத்தன்னா, நான் கிளம்பிடுவேன்” என்றவன் கண்கள் வலியில் மினுமினுத்தன.

“ரெண்டு பேரும் அடிக்கடி இல்லனாலும் பாத்துக்க வேண்டி இருக்கும் அத்தான். எத்தன நாள் ஓடி ஒளிய முடியும்? கண்டிப்பா இத தாண்டி வர டைம் ஆகும் தான். அதுக்காக இப்படி ஓடணும்ன்னு இல்ல. உங்களுக்கு மிட்-நைட் தானே ஃபிளைட். பெட்டியோட இப்போவே போய் ஏர்போர்ட்ல காத்துக் கிடக்க போறீங்களா? நைட் சாப்பிட்டுட்டு கிளம்புங்க.”

அவன் அவளையே பார்க்க, “அம்மா பேசினாங்க. உங்க வீட்டுல இருந்து வந்து தட்டு மாத்திட்டதா சொன்னாங்க. நான் மனோவ விரும்பறதா சொன்ன பிறகும் அவங்க முடிவ மாத்திக்கல. ஆனா என் முடிவு இது தான். இந்த லைஃப் டைம் என் வாழ்க்கை மனோ கூட மட்டும் தான். சோ, நீங்களே இந்த பேச்சு வார்த்தைக்கு ஒரு முடிவு கொண்டு வந்திடுங்களேன் பிளீஸ்!” என்றாள் நிதானமாக.

“ம்ம்ம்…” என்றவன் கண்களில் இருந்த ஜீவனெல்லாம் வடிந்திருந்தது.

இருவரும் இரு அறைகளில். பிரவீன் மனம் ஆறவே இல்லை. எபி மேல் நல்ல எண்ணமிருந்தாலாவது ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று நினைத்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் இவனோ ஒழுக்கம் கெட்டவன்! இவனோடான வாழ்க்கை இவளுக்கு எப்படி சுகிக்கும்? ‘தப்பு பண்ற அலர்விழி. அவன் ரொம்ப தப்பானவன்!’ என்று மனம் அவளை நோக்கிக் கதறியது.

நான்கு மணி நேரம் கழித்து சென்றால் போதும். படுத்தாலும் தூக்கம் வரவில்லை. அலர்விழி என்ற பெண் அவன் மனதைக் கிழித்திருக்க, வலித்த மனதை தேற்றத் தெரியவில்லை! மன உளைச்சலால் தலை வலித்தது! 

வாங்கி வந்திருந்த மது பாட்டிலோடு அடுக்களைக்குச் சென்றான். என்றாவது மனம் களைக்கும் வேளை ‘வாட்கா’ மட்டுமே அவன் துணை. கண்டிப்பாகக் குடிகாரன் இல்லை! ருசியோ, வாசமோ, அதற்கென்று தனியே நிறமோ இல்லாத வாட்காவை ஸ்ப்ரைட் அல்லது கோலாவோடு காக்டெயிலாக உள்ளெடுப்பது அவன் பலவருடப் பழக்கம் என்பதால் நிதானம் தவறுவது வரை வாட்காவோடு பயணிப்பதில்லை.   

குளிர்சாதனப் பெட்டியை ஆராய்ந்து ஸ்ப்ரைட்(Sprite), எலுமிச்சைப் பழம் எடுத்தான். அளவு பார்த்து ஸ்ப்ரைட்டோடு வாட்காவையும் எலுமிச்சையையும் கலந்தான். கைப்பேசி அழைத்தது. கையிலிருந்த பாட்டிலோடு அழைப்பை எடுக்க உள்ளே சென்றான். 

இரண்டு நிமிடங்களில் வந்தவன் கண்களில் காக்டெயில் கோப்பை தென்படவில்லை. எபெனேசர் குடித்திருப்பான் போலும் என்று நினைத்தவன் பாட்டிலில் மீதமிருந்ததை தொண்டையில் இறக்கினான். 

திரவம் பட்ட தொண்டை, அவன் உள்ளம் போலவே எரிந்தது. உள்ளுக்குள் எரியும் தீயை அணைக்கும் என்று நினைக்க, உள்ளே சென்ற பானமோ அதை கொழுந்து விட்டு எரியச் செய்தது. கையிலிருந்த கண்ணாடி பாட்டிலை அருகிலிருந்த ஸ்டீல் குப்பைத் தொட்டியில் விசிறியடித்தான். 

சத்தம் கேட்டு அடுக்களைக்கு வந்தவள் பிரவீனைப் பார்த்ததும், “ஏதாது வேணுமா?” என்று கேட்க, அவன் பார்வை நிலைத்ததோ மையிட்ட அவள் அழகிய விழிகளில்.

“என்ன அத்தான்?” 

“அவனப் போய்… ம்ப்ச்! எப்பிடி அலர்விழி?” கேட்டவன் முகத்தில் சலிப்பும் வேதனையும்! 

“அவர் என்னோட புருஷன் ஆகப் போறவர் அத்தான். சோ ப்ளீஸ், அவருக்கான மரியாதையைக் கொடுக்க பாருங்க. முடியாதுனா அவரப் பத்தி பேசாதீங்க” 

“அவன் சரியில்ல அலர்விழி” 

“இருக்கட்டும். உங்க பார்வையில அவர் எப்படியாது இருந்துட்டுப் போகட்டும். என்னால் எல்லாருக்கும் விளக்க முடியாது. அவர் சரியில்லாதவராகவே இருக்கட்டும். ஆனா எனக்கு அவர் தான் வேணும். என் பார்வையில அவர் எங்கேயும் எதுலயுமே குறைஞ்சு போகல.”

‘அந்த கேடு கெட்டவனைப் போய்… ச்ச! புரிந்து கொள்ளவே மாட்டாளா?’ அலர்விழியோடு வாழ தகுயில்லாத ஒருவனால், தன் நான்கரை வருட விருப்பமும், காதலும், நிராகரிக்கப்பட்டு விட்டதே! மனம் கனத்தது. 

இதற்கு மேலும் அவனால் ஓரே வீட்டில் இருக்க முடியாது! “நீ ரொம்ப டயர்டா இருக்க அலர்விழி. போய் படுத்துக்கோ. கதவ லாக் பண்ணிட்டு நான் கிளம்பறேன். ஆல் தி பெஸ்ட். ஊர்ல பார்ப்போம்” என்றவன், குளித்து கிளம்பி பெட்டியோடு வெளியே வர, அடுக்களையிலிருந்து அலர்விழியின் சத்தம் கேட்டது. 

“மனோ… ஃபோன எடுங்க மனோ. எனக்கு என்னவோ செய்யுது மனோ. அந்த மாத்திர ஒத்துக்கல போல, தல என்னமோ பண்ணுது மனோ. வீட்டுக்கு வாங்க மனோ” நிற்க முடியாமல், பேசவும் முடியாமல் அலர்விழி நா குழறியது. 

எபெனேசர் வீட்டில் இல்லை என்றால் வாட்காவை அருந்தியது? “அலர்விழி, இங்க இருந்த வாட்காவ நீ தான் குடிச்சியா?”

“இல்ல… லெமன் சோடா தான் குடிச்சேன்” குழறலாய் வார்த்தை வந்தது.

“ஏதோ மாத்திரன்னு சொன்னியே, என்ன அது?” பெண்ணை உலுக்கி பதில் வர வைத்தான். 

காலி மருந்து டப்பாவைக் காட்டினாள். மருந்து பெயரை பாத்தவனுக்குப் புரிந்தது. “அலர்விழி… ஆர் யூ ஆல்ரைட்?” அவளிடம் பதிலில்லை… சுவர்மேல் தலையை மோதி நின்றாள். ஏதோ புரியாத பாஷை பேசினாள். 

 அந்த மாத்திரையும் மதுவும் சேர்ந்தால் நினைவிழக்கலாம்! ஏன் மூச்சு கூட நின்று போகலாம். மருத்துவனுக்குப் பயம் பிடித்தது!  

“அலர்விழி என்ன பண்ணுது?” 

“மனோ…” என்றாள், தெளிவில்லாமல். 

“ஏய்… என்ன பண்ணுது?” கேட்டுக் கொண்டே தோள்கள் இரண்டையும் பின்னோடு பிடித்து அவளை நிறுத்த, மீண்டும் “மனோ…” என்றாள், நாவோடு உடலும் குழைந்தது. 

“அலர்விழி…” உலுக்கினான். 

“மனோ” என்றவள் கண்கள் சொருக, தோள்களைப் பிடித்திருந்தவன் நெஞ்சோடு சாய்ந்தாள்.   

தூக்கி சென்று படுக்க வைத்தான். மருத்துவனாய் கண்களை ஆராய்ந்தான். நாடித் துடிப்பை பரிசோதித்தான். சற்று நேரம் அருகேயே அமர்ந்து பயப்பட ஒன்றுமில்லை என்று உறுதி படுத்திக் கொண்டான். 

நினைவிழந்து படுத்திருந்தவளைப் பார்த்தான். இம்முறை பார்வை மாறியிருந்தது. மருத்துவனாய் அல்லாமல் பிரவீனாய், அலர்விழி என்ற பெண்ணை அதிகம் நேசிக்கும் சாதாரண ஆண்மகனாய் அவளைப் பார்த்தான். அழகான பெண், இவளை எப்படி விட்டுக் கொடுக்க? காதல் மனது கேட்டது! ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? என்ற பதில் கேள்வியோடு பெண்ணைப் பார்வையால் வருடினான். அவன் காதல் மனதிற்கு நங்கையவள் மிக மிக அழகாகத் தெரிந்தாள்!

மற்றவன் வாங்கிக் கொடுத்த புடவையில், மற்றவன் உரிமையோடு கழுத்திலிட்ட சங்கிலியோடு, மற்றவன் போட்ட மோதிரத்தோடு படுத்திருந்தவளைப் பார்த்தான். முழு போதையிலும்… பாதி மயக்கத்திலும்… தன்னை முற்றிலும் மறந்த நிலையிலும் அவள் வாயிலிருந்து முனகலாய் மற்றவன் பெயரைத் தவிர வேறு எதையுமே கூற முடியாதவளாகப் படுத்திருந்தவளின் தோற்றம் பார்த்தவன், அவளின் மனதைப் பார்க்கத் தவறினான். அவள் காதலின் ஆழத்தை உணரத் தவறினான்.

மாறாக, சின்னப் பெண்ணை ஏமாற்றி வசியம் செய்து வைத்திருக்கும் எபெனேசர் மேல் கோபமாக வந்தது. இவளுக்கு அவனை ஏன் பிடிக்க வேண்டுமென்றே புரியவில்லை. வேறு ஜாதி, வேறு மதம், அனைத்திற்கும் மேல்… நடத்தை கெட்டவன்! எதிலுமே பொருத்தமில்லாத வேற்றினத்தான் எப்படி இவன் மாமன் மகளுக்கு சரியானவனாக இருக்க முடியும்? அவன் தவறானவன் ஆகிற்றே! இவன் தானே இவளுக்குச் சரியானவன்! அறிவு எடுத்துக் கொடுத்தது! 

சரியானவன் எப்படி இவளைத் தன்னவள் ஆக்குவது? பிறப்பால் ஒருவரும் உயர்வதும் இல்லை தாழ்ந்து போவதுமில்லை. ஒருவன் செயல் மட்டுமே கூறும் அவன் யார் என்று!  இதை அறிந்த மேதை, அவன் வசதிக்கு ஏற்றார் போல் கலாச்சாரம் பற்றி  சிந்தித்தான்.  சினிமா கற்றுக் கொடுத்த ‘கலாச்சாரம்’ அது! அதில், தன்னை விரும்பாத பெண்ணை எப்படி மணப்பது என்ற பாடங்கள் இரண்டிருந்தது. 

ஒன்று: கதறக் கதற கோவிலில் வைத்து மஞ்சள் சரடு கட்டி, வலுக்கட்டாயமாக பெண்ணைத் தனதாக்குவது. 

மற்றது: அதை நினைக்கவும் பிரவீன் கைகள் மெல்ல நடுங்கியது. தவறு என்று தெரியாமல் இல்லை! இருந்தும், இன்றைய சூழலில் அதுவே சரி என்று பட்டது. இதை விடுத்தால், அலர்விழி என்பவள் அவனுக்கு கலையும் கனவாகி விடுவாள்! அவள் வேண்டும் என்று மனம் சண்டித்தனம் செய்தது! பூவைக் குரங்கிடம் கொடுக்க பிரவீனிற்கு விருப்பமில்லை. தனதாக்கிய பின் தாலி கட்டத் தடையேது என்ற எண்ணம் தவறு என்று தெரிந்தும் ஒத்துக் கொள்ள மறுத்தான்.

  நடுங்கிய கையோடே பாதி மயக்கத்திலிருந்த பெண்ணின் கன்னத்தை வருடினான். அதன் மென்மையால் அவன் உடல் சிலிர்த்தது. கண்டிப்பாக அலர்விழியை யாருக்காவும் விட்டுக் கொடுக்க முடியாது. அவள் அவனுக்கு தானே மனைவியாக வேண்டும்?

மயக்கத்திலும், அவள் கண்ணாளன் நாமத்தை மூச்சுக் காற்றாய் உச்சரித்துக் கொண்டிருந்தவளின் பாதி திறந்திருந்த மயக்கும் விழிகள் அவன் சித்தத்தை முற்றிலும் சிதறச் செய்தது. “மனோ…” என்றவள் இவனை பார்த்துப் புன்னகைத்தாள்.

உச்சரித்த உதட்டில், இவனைப் பார்த்து புன்னகைத்த உதட்டில் அதிக பளபளப்பில்லாத அடர் ஊதா சாயம், உதட்டின் அழகிய வரிகளை பளிச்சென்று காட்டிக் கொண்டிருந்தது. அந்த நிறமும் அதைத் தாங்கியிருந்த பட்டு உதடும் அவனை வசீகரித்தது. 

“அலர்விழி,” என்றான் இதழ் வருடி, அவள் “மனோ…” என்றாள். உச்சரித்த சத்தத்தை வெறுத்தான்.

அவன், அவள் உயிரில் கலந்தவன், அந்த அழகிய உதட்டுக்குச் சொந்தக்காரன், தன் சரி பாதியின் நிலை தெரியாமல், வீட்டிலிருந்து 100 அடி தூரத்தில், கையில் பியர் கோப்பையோடு கதைத்துக் கொண்டிருந்தான்.

  பிரவீனின் நாடித் துடிப்பும் 100-ஐ தொட்டிருக்கும் என்றது அவன் இழந்த நிதானம்! கண்களை மூடியிருந்த பெண்ணவளின் உதடும் மூடப் பட்டிருக்கவே ‘மனோ’ என்ற சத்தமும் நின்று போயிருந்தது. ‘மனோ’ என்ற நாமத்தோடு சேர்த்து பெண்ணையும் மெல்ல மெல்ல விழுங்க ஆரம்பித்தான் மிருகமாய் மாறியிருந்த பிரவீன்.

சகுந்தலா பாட்டி, இவனுக்குப் பாட்டியாக இருந்திருந்தால், “பாரம்பரியம், பண்பாடு, பழமை, எல்லாம் நமக்கு ஒழுக்கத்தைக் கத்து கொடுக்கறதுக்கு தான்! நான் ஒரு மேதை, எனக்கு எல்லாம் தெரியும்ன்னு அந்த எல்லையை மீற நினைக்கக் கூடாது. ஒரு வேகத்தில, விவேகம் இல்லாம எல்லையைக் கடக்கும் போது அது நம்ம ஒழுக்கத்தை மட்டும் இல்ல, கூடவே நம்ம சம்பாரிச்சு வச்ச நல்ல பேரையும், மதிப்பையும் அழிச்சுடும்! சில நேரம் எல்லையைக் கடக்கும் போது சாதிப்போம். சில நேரம் நம்மளை அது சுவடில்லாம அழிச்சிடும்” என்று அறிவுரை கூறி வளர்த்திருப்பார், சிங்க நாட்டாமையின் தீவிர விசிறி!

error: Content is protected !!
Scroll to Top