நற்காதல் நெய்திடவா – 13 (2)

“இல்ல. அப்பா டெரர் பீஸ் எல்லாம் கிடையாது. நிறைய விஷயங்கள்ல அவங்க பார்வை, நம்பிக்கை, சித்தாந்தம் எல்லாம் வேற மாதிரி இருக்கும். நாம சொன்னாலும் அவங்களால மாற்றிக்க முடியாது. ஆனா, அதுக்காக அப்பா கெட்டவர்னு முடிவு பண்ணிட வேணாம்”

“ச்சே, ச்சே. நான் அப்படி யாரையும் ஈசியா ஜட்ஜ் பண்ண மாட்டேன்” என்ற வெற்றியை நமுட்டு சிரிப்புடன் முறைத்தாள் வேதா. அவளின் ரசனையைக் கேலி செய்தான் என்ற கோபம் அதிலிருக்க, ‘உனக்கு அப்புறம் இருக்கு’ என்று கண்களால் அவளுக்குப் பதில் சொன்னான் வெற்றி.

“ஏதோ ஐடியா சொல்றேன் சொன்னீங்களே. அதைச் சொல்லுங்க” வெற்றி நினைவுப்படுத்த, “அது வந்து, எங்க வீட்ல வேதாவுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கோம். உங்க டீட்டெயில் கொடுத்தா, நான் உள்ளே வச்சுடுவேன். நீங்க வீட்ல பார்த்த வரனா..” விஜய் முடிக்கும் முன்பே, “நோ” என்று இடையிட்டு அழுத்தமாக மறுத்தான் வெற்றி.

“வேணாம். அது சரி வராது.” தீர்க்கமாகச் சொன்னான்.

“இல்ல. ஒருவேளை அப்பா உங்க லவ் மேரேஜுக்கு நோ சொன்னா..”

“முதல்ல உங்கப்பா கிட்ட பேசுங்க விஜய். அவர் பதில் சொல்லட்டும். அதுக்கு முன்னாடி நாமளே ஒரு முடிவுக்கு வர வேணாம்.” என்ற வெற்றி, “எனக்கு இது லவ் மேரேஜ்தான். நம்ம வீட்ல, வெளிலன்னு எல்லா இடத்துலயும் அப்படித்தான் தெரியணும்னு நான் நினைக்கிறேன். ஏன்னா, எங்களுக்குக் கல்யாணமாகி நாலு மாசமோ இல்ல ஒரு வருஷமோ கழிச்சு, உங்க வீட்ல எங்கது லவ் மேரேஜ்னு வேற யார் மூலமாவது தெரிய வந்தா, எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க. உங்கப்பா அப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவார்? உங்க வீட்டு ஆளுங்களுக்கு அது எவ்வளவு ஷாக்கா இருக்கும்? நாங்க வீட்டை ஏமாத்தினது போல ஆகாதா? அது சரி வராது” வெற்றி தெளிவான காரணங்களுடன் தன் நிலையை விளக்கி சொல்ல, விஜய்க்கு அவன் சொல்வது சரியென்று பட்டது.

வெற்றியை நோக்கி கை நீட்டி புன்னகைத்தான் விஜய். அவனுக்கு வெற்றியை பிடித்தது. இருவரும் புன்னகையுடன் கைக் குலுக்க, வேதாவின் முகத்தில் சிரிப்பு மின்னியது.

“என்னோட டீட்டெயில்ஸ் உங்ககிட்ட கொடுக்கிறேன் விஜய். நீங்க உங்க வீட்ல நான் விரும்பி, உங்க தங்கையைக் கல்யாணம் பண்ண கேட்டதா சொல்லியே பேசுங்க. என் பக்கத்தை மட்டும் சொன்னா கூட எனக்கு ஓகேதான்” வெற்றி அவ்வளவு இறங்கி வந்ததற்குப் பின்பு, என்ன சொல்வான் விஜய்?

“ஓகே. எங்க வீட்ல நான் அப்படியே சொல்லிடுறேன். ஆனா, நீங்க ரெண்டு பேரும் எல்லாத்துக்கும் ரெடியா இருங்க” என்றான் விஜய்.

“ம்ம். கண்டிப்பா” என்றான் வெற்றி. வேதா முகத்தில் புன்னகை நீங்காமல் இருந்தது.

அதன் பின்னர்ச் சிறிது நேரம் இரண்டு குடும்பங்கள் குறித்தும், அவர்களின் வேலை குறித்தும் பேசினார்கள். பேச்சு அப்படியே விஜய்யின் வேலை, ஹைதராபாத் வாழ்க்கை எனத் தாவியது. அடுத்தச் செய்ய வேண்டிய பலவற்றையும் விவாதித்து, இரண்டு மணி நேர முடிவில் வெற்றியும், விஜயும் மிகவும் நெருங்கி இருந்தார்கள்.

“எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து என் தங்கச்சி கேட்டு நான் எதையும் செய்யாம இருந்தது இல்ல. இது அவளோட வாழ்க்கை முடிவு. என்னால முடிஞ்ச ஹெல்ப் நான் கண்டிப்பா பண்றேன். உங்க கல்யாணத்துக்கு நான் பொறுப்பு” வெற்றியின் கைப் பிடித்து விஜய் சொல்ல, “நம்ம கல்யாணத்தை நடத்திக் காட்ட வேண்டியது என் பொறுப்பு” என்று வேதாவை பார்த்து ரகசியமாகச் சொன்னான் வெற்றி.

அவள் முறைக்க, சிரித்தான் விஜய்.

வெற்றியிடம் விடை பெற்று மகிழ்வான மனத்துடன் வீடு திரும்பினார்கள் அவர்கள்.

விஜய் தங்கையின் காதல் விஷயத்தை முதலில் மனைவியிடம்தான் சொன்னான்.

அவளிடம் எதையும் மறைத்துச் செய்ய அவனுக்கு விருப்பமில்லை. அதனால் வேதாவின் காதல் குறித்துப் பகிர்ந்து கொண்டான் அவன்.

“எனக்கு முன்னாடியே தெரியுமே விஜய்.” என்று அவள் எந்தவித எதிர்வினையும் இல்லாது சாதாரணமாகச் சொல்ல, விஜய்தான் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

“உனக்கு முன்னாடியே தெரியுமா? எப்படி? என்கிட்டயே இன்னைக்குதான் சொன்னா வர்ஷி. அப்புறம் உனக்கு எப்படி?” அவன் குழப்பத்துடன் கேட்க, தனது அலைபேசியில் ஃபேஸ்புக் திறந்து, அதில் வேதாவின் தனிப்பட்ட பக்கத்தை எடுத்துக் கணவனிடம் காட்டினாள் ஷாலினி.

“பிரபு போட்டோகிராபி” என்ற பக்கத்தில் இருந்து நாலைந்து புகைப்படங்களைப் பதிந்து வேதாவை டேக் செய்திருந்தான் பிரபு.

“சொதப்பல் ஷாட்ஸ்” என்று பெயரிடப்பட்டிருந்த அந்தத் தொகுப்பில், மோனிகா, பிரதீப்பின் ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தது.

வெற்றியும், வேதாவும் ஒரு படத்தில் நெருக்கமாக நின்று சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

விஜய்க்குத் தங்கை தற்போது சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவது இல்லை என்று நன்றாகத் தெரியும். அதனால், இதை அவள் கவனித்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன். மேலும் அந்தப் புகைப்படங்களில் கௌசல்யா, காந்திமதி என அனைவரும் இருக்க, தங்கையைத் தவறாக நினைக்க அவனுக்குத் தோன்றவில்லை.

“இட்ஸ் அ நார்மல் ஃபோட்டோ ஷாலு. ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் கூடதான் இருக்காங்க” அவன் தங்கைக்குப் பரிந்து பேச, ஷாலினி சிரித்தாள்.

“அதான் இப்போ லவ் பண்றாங்க இல்ல?” மனைவி கேட்ட விதத்தில் சிரித்தான் விஜய்.

“ம்ம். நாம எடுக்காத போட்டோஸா ஷாலு? ஸ்கூல் ஃபைனல் இயர் படிக்கும் போதே என் ஃபோட்டோ உன்கிட்ட இருந்தது. நாம ஏதோ ஃபங்ஷன்ல ஒன்னா நின்ன ஃபோட்டோ கூட நீ வச்சிருந்த..” அவன் சொல்லிக் கொண்டே போக, “நீங்க என் மாமா பையன். ஆனா, அவங்க..” என்று அவள் இடைமறித்துச் சொல்ல, “மாமா பையன்தான். ஆனா, லவ் இருக்கப் போய்த் தானே போட்டோ வச்சு சைட்டடிச்ச?” விஜய் கேட்க, வெட்கச் சிரிப்புடன், “ஆமா. என்ன இப்போ?” என்று எகிறினாள் ஷாலினி.

“உனக்கு ஒரு நியாயம். என் தங்கச்சிக்கு ஒரு நியாயமா?” அவன் கோபமாகக் கேட்க, கணவனை மலை இறக்கும் வேலையில் இறங்கினாள் ஷாலினி.

விஜய் அன்றிரவு குடும்பத்தை விருதுநகர் பேருந்து ஏற்றி விட்டு, தான் விமான நிலையம் செல்லும் முன் தங்கையிடம் தகவலை தெரிவித்து விட்டான்.

“உன் ஃபேஸ்புக் அக்கவுண்ட் இப்போ யூஸ் பண்றியா நீ?” அவன் கேட்கவும், “அதெல்லாம் பார்க்க எனக்கு எங்கண்ணா நேரம் இருக்கு.” வேதா புலம்பலாகச் சொல்ல, விஜய் திரும்பி மனைவியை முறைத்தான்.

“ஓகே. இப்போ செக் பண்ணு” என்றவன், தங்கையின் குழப்ப முகப் பாவத்தைக் கண்டு கொள்ளாமல், அவளுக்குக் கையசைத்து விடைக் கொடுத்து, டாக்ஸியில் ஏறினான்.

அண்ணனும், அண்ணியும் கிளம்பவும் வீட்டினுள் வந்தாள் வேதா. இரண்டு நாட்களின் மகிழ்வு வீட்டில் இல்லாமல், சட்டென வெறுமை அவள் முகத்தில் அறைந்தது. விஜய்யின் பேச்சு நினைவு வர, அவளது அலைபேசி எடுத்து தன் முகநூல் பக்கத்தைத் திறக்க, வெற்றியும் அவளும் இணைந்து நின்றிருந்த புகைப்படம் முதலில் வந்து நின்றது.

பிரபு என்றோ அவளிடம் முகநூல் கணக்கை கேட்டது, நட்பு அழைப்பு விடுத்தது எல்லாம் நினைவில் வந்தது. அதன் பின் லாக் அவுட் செய்திருந்தாள் அவள். முகநூல் பக்கம் வந்திருக்கவும் இல்லை.

வெற்றியும் முகநூல் அதிகம் பயன்படுத்துவது இல்லை என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.

“எனக்குக் கிடைக்கிறதே ஒரு நாள்ல தூங்குற நேரம்தான். அதைச் சோஷியல் மீடியாவில் வேஸ்ட் பண்ணனுமா? அந்த நேரத்துல எனக்குப் பிடிச்ச புக் எடுத்து பத்துப் பக்கம் படிச்சுடுவேன்” என்று அவன் சொன்னது அவளுக்கு நினைவு வந்தது.

அவர்களின் அனுமதி இல்லாமல் புகைப்படத்தைப் பகிர்ந்து, அவர்கள் அனைவரையும் அதில் டேக் செய்திருந்த பிரபுவின் மேல் அவளுக்குக் கோபமாக வந்தது.

வெற்றிக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னாள்.

“யாரு ஃபோட்டோ, நம்மளோடதா? நான் போஸ்ட் பண்ணலயே? முதல்ல என்கிட்ட ஃபோட்டோ இருந்தா தானே?” என்ற வெற்றி, “ஓ, இந்தப் பிரபு வேலையா அது? அவனை…” என்று பல்லைக் கடித்தான்.

அவளை இணைப்பில் வைத்துக் கொண்டே தனது முகநூல் பக்கத்தைத் திறந்துப் பார்த்தான்.

மெலிதான சிரிப்புடன், “ம்ம். நல்லாதான் இருக்கு” என்று அவன் ரசித்துச் சொல்ல, “வெற்றி சார்” என்றாள் வேதா.

“எம்மாடி வேதா, செல்லமே. அதான் வீட்ல சொல்லியாச்சு இல்ல? அப்புறம் என்ன பயம்?”

“இன்னும் அப்பாகிட்ட சொல்லல. வீட்ல வேற யாருக்கும் தெரியாது.” என்றாள் வேதா.

“யூ ஹேவ் அப் பாய்ண்ட்” என்ற வெற்றி, அந்த வார இறுதியில் நண்பனை சந்திக்கும் போது அவன் மேல் பாய்ந்து விட்டான்.

“அச்சோ மச்சான். சாரி டா, சாரி டா” என்று பிரபு அலற, அடி வெளுத்து விட்டான் வெற்றி.

“உன் ஃபோட்டோகிராபி பேஜ் ஃபேமஸாக நாங்கதான் கிடைச்சமோ டா? என்னைக் கேட்காம எப்படி ஃபோட்டோ போடுவ நீ? நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்க மாதிரி ஃபோட்டோ எங்கிட்டேயே இல்ல. இதுல ஊரெல்லாம் பார்க்கிற மாதிரி ஃபோட்டோவா போடுற ஃபோட்டோ” சொல்லிச் சொல்லி அடித்தான் வெற்றி.

“இப்போ ஜோடியா நீங்க இருக்க ஃபோட்டோ, உன்கிட்ட இல்லைனு தானே நீ ஃபீல் பண்ற மச்சான்?” அந்த ரணகளத்திலும் பிரபு கேள்வி கேட்க, சிரிப்பை மறைத்து அவனை அடித்தான் வெற்றி.

“மச்சா மன்னிச்சுடு டா மச்சான். இனிமே என் கேமரா என்ன, என் கண்ணு கூட உங்க பக்கமே திரும்பாது டா. இது என் கேமரா மேல சத்தியம் டா மச்சா” என்று கதறிய பிரபு, “அம்மா, பரதேவதை என்னைக் கொஞ்சம் இவன்கிட்ட இருந்து காப்பாத்தக் கூடாதா?” வெற்றியின் காரின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்த வேதாவை பார்த்துக் கத்தினான் அவன்.

அவளோ அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்.

“அம்மாடி, நீ இவனுக்கு மேல இருப்ப போலயே” பிரபு சொல்ல, மோனிகா, பிரதீப் என அனைவரும் வெடித்துச் சிரித்தார்கள்.

வேதா அண்ணனிடம் பேசி ஒரு வாரம் ஓடியிருந்தது. அந்த வார இறுதியில் நீண்ட தூரம் பயணிக்காமல் ஆவடிக்குள்ளேயே சுற்றி வந்தார்கள் அவர்கள்.

error: Content is protected !!
Scroll to Top