அண்ணனின் கேள்வியில் வேதா அதிர்ந்து நின்றது என்னவோ ஓரிரு வினாடிகள்தான். சட்டெனச் சுதாரித்து, “நீதான் அவரை நேர்ல பார்த்திருக்கல்ல ண்ணா? வெற்றிக்கும் உன் வயசுதான். ஃபர்ஸ்ட் டே நான் வேலைக்குப் போனப்போ, அவர் பிஸியா இருந்தார். அப்போ தெரியாம ஏதோ சொல்லிட்டார். நீ இன்னமும் அதையே பிடிச்சுட்டுக் கேள்வி கேட்பியா?” என்று பதிலாகக் கேள்விக் கேட்டாள்.
விஜயின் முகபாவனை மாறவே இல்லை.
“அதை நானே மறந்துட்டேன்” என்றவளை நம்பாத பார்வை பார்த்தான் அவன்.
தங்கை என்று வந்து விட்டால் எல்லா அண்ணன்களும் வேல் கம்பு இல்லாத காவல் தெய்வங்களாக மாறி விடுகின்றனர். அதற்கு விஜயகுமாரும் விதிவிலக்கு அல்ல.
“ஆனாலும், நான் இதை எதிர்பார்க்கல..” அவன் சொல்ல, “நானும்தான்” என்று சொல்லி விட்டுத் தலையில் தட்டிக் கொண்டாள் வேதா.
இருவரும் மொட்டை மாடியில் நின்றிருந்தார்கள். பல வீடுகளில் பலருக்கு தேவையான தனிமையைத் தருவது மொட்டை மாடி தானே?
இப்போது வேதாவின் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் இருக்க, அவர்களுக்குத் தெரியாமல் பேச, அண்ணனும் தங்கையும் மாடிக்கு வந்திருந்தனர்.
வேதா அவர்கள் வீட்டில் இருந்து பார்வையில் விழுந்த சாலை போக்குவரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அண்ணனின் முகம் பார்த்து பேச அவளுக்குச் சங்கடமாக இருந்தது.
“எப்படியும் அப்பா எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் போறார் விஜய் ண்ணா. அது எனக்குப் பிடிச்சவரா இருந்தா பெட்டர் தானே? என் வேலையைப் பத்தி குறை சொல்லாம, எனக்கும், என் வேலைக்குமான முக்கியத்துவம் புரிஞ்ச ஒருத்தரா இருந்தா இன்னும் பெட்டர் தானே?” அவள் பேச பேச அமைதியாய் நின்று, “அப்போ லவ்?” என்று கேள்விக் கேட்டான் விஜய்.
“அது, அதும் இருக்குதான். அது இல்லாம எப்படி? எனக்கு இருக்கோ, இல்லையோ. அவருக்கு என் மேல நிறையப் பிரியம் இருக்கு. என்னை நேசிக்கிற ஒருத்தர் என்னை நல்லா பார்த்துப்பார் தானே? நீ வீட்ல எனக்காகப் பேசக் கூடாதா ண்ணா? அப்பாகிட்ட எனக்காகப் பேசக் கூடாதா?” அண்ணனின் முகம் பார்த்து அவள் கேட்க, எப்படி மறுப்பான் அந்த அண்ணன்.
“ம்ம். எனக்கு முதல்ல அவரை மீட் பண்ணனும்” என்றான் விஜய்.
“இப்போவே போவோமா?” தங்கையின் வேகம் பார்த்து விஜய்க்குச் சிரிப்பு வந்தது.
“இல்ல. எனக்கு உன்கிட்ட விஷயத்தைச் சொல்லிடணும்னு இருந்தது ண்ணா. அவர் கூடச் சும்மா ஒரு காஃபி குடிக்கப் போகவோ, இல்ல பத்து நிமிஷம் வாக் போகவோ கூட, எனக்கு உறுத்தலா இருந்தது. வீட்டுக்கு தெரியாம ஏதோ தப்பு பண்ற ஃபீல். நீ அவரைப் பார்த்து பேசிட்டா, எனக்கு நிம்மதியா இருக்கும்”
“அவரைப் பார்த்துட்டு நான் நோ சொன்னா என்ன பண்ணுவ?” அண்ணனின் அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு அவனைத் திரும்பி பார்த்தாள் வேதா. அவன் விளையாடவில்லை என்பது புரிந்தது.
“உனக்கு அவரைப் பிடிக்கும் ண்ணா. ஒருவேளை உனக்கு அவரைப் பிடிக்கலைன்னாலும் எனக்குக் கவலை இல்ல. ஏன்னா, எனக்குப் பிடிச்சுருக்கே. உங்க சம்மதம் கிடைச்சா ரொம்பச் சந்தோஷப்படுவேன். இல்லனா நீங்க சம்மதிக்கற வரை சண்டை போடுவேன்.” தீர்க்கமாகச் சொன்ன தங்கையைப் புன்னகையுடன் ஏறிட்டான் விஜய்.
“ம்ம். நீ எப்பவும் தெளிவுதான் வர்ஷி. உனக்கும் ஒருத்தரை பிடிச்சு, அவருக்காகப் பேசுற இல்ல? அவ்வளவு வளர்ந்துட்ட. ம்ம். உன்னையும் வெற்றிகரமா கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வச்ச அந்த வெற்றியை போய்ப் பார்த்திடுவோம், வா.” புன்னகை மாறாமல் அவன் சொல்ல, பெருமூச்சு விட்டுக் கொண்டாள் வேதா.
“தேங்க்ஸ் ண்ணா” அவள் சொல்ல, “இப்பவேவா? முதல்ல நான் அவரைப் பார்க்கணும். பேசணும். எனக்குப் பிடிக்கணும். அப்புறம் வீட்ல ஓகே சொல்லி, உங்க கல்யாணம் நடக்கணும். அதுக்கு அப்புறம் பொறுமையா அண்ணனுக்கு நன்றி சொல்லு” என்று நீட்டி முழக்கிய அண்ணனை முறைத்தாள் அவள்.
அவளின் கோபம் பார்த்து சிரிப்புடன், “சரி சரி, வா. போகலாம்” என்று அவளின் தோளில் கைப் போட்டு தள்ளிக் கொண்டு போனான்.
“நான் இதைப் பத்தி அண்ணிகிட்ட சொல்ற மாதிரி இருக்கும். உனக்கு ஓகே தானே? என்னால அவகிட்ட மறைக்க முடியாது வர்ஷி” விஜய் சொல்ல, புரிதலுடன் சம்மதமாகத் தலையசைத்தாள் வேதா.
வெற்றிக்கு உடனேயே அலைபேசியில் அழைத்தாள் வேதா. வெற்றி வீட்டில் இருந்த காரணத்தினால், “நான் ஃப்ரீயாதான் இருக்கேன் வேதா. இப்பவே வர்றேன். எங்க வரணும்னு சொல்லு” என்றான் அவன். அடுத்த அரை மணி நேரத்தில் மூவரும் வெளியில் சந்தித்துக் கொண்டார்கள்.
வேதாவிற்கு ஒரே படபடப்பு. வெற்றி, விஜய் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, தன் வாழ்க்கை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும் பரபரப்பு அவளிடம் அதிகமிருந்தது.
இருவரின் வீட்டிற்கும் இடையில் இருந்த ஒரு உணவகத்தில் வைத்துச் சந்திப்பது என முடிவாகியது.
அந்த உணவகத்திற்கு வேதா சென்று சேரும் போது, வெற்றி அவர்களுக்காக வாயிலிலேயே காத்திருந்தான்.
வெள்ளை வேட்டி, சந்தன நிற சட்டையில் பெண் பார்க்கப் போகும் மாப்பிள்ளை தோரணையில் நின்றவனைக் கண்டதும் வேதாவின் கண்களில் சிரிப்பு. அவனை ரசனையுடன் பார்த்துக் கண் சிமிட்டினாள் அவள்.
வெற்றி புன்னகை முகமாக விஜய்க்குக் கை நீட்டினான். அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகம் உண்டு. வேதா வங்கி வேலையில் சேரும் போது இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அந்த வங்கியின் மேலாளராக மட்டுமே வெற்றியை பார்த்திருந்தான் விஜய். இன்றுதான் தங்கையின் மனம் கவர்ந்தவன். நாளையே தங்கையின் கணவனாகப் போகிறவன் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தான்.
வெற்றியின் தோற்றத்தை பொறுத்தவரை விஜய்க்கு முழுத் திருப்தியே. அவனது வேலையும் வெற்றிக்கு சாதகமாகவே நின்று பேசியது. வெற்றி இயல்பாக அவர்களை வரவேற்று, பொதுவான விஷயங்கள் பேச, விஜய்க்கு அவனிடம் குறை காண முடியவில்லை.
மினி டிபன், வடை, கேசரி, காஃபி என ஒரு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தைச் சத்தமின்றி நடத்தி முடித்திருந்தார்கள். விஜய்க்கு எந்த அலட்டலும், ஆடம்பரமும் இல்லாமல் இருந்த வெற்றி வேந்தனை பிடித்தது.
அவனுக்கு வெற்றியை பற்றிய சில தகவல்கள் ஆச்சரியப்படுத்தினாலும், அதைப் பெரிதுபடுத்திக் கேள்விகள் கேட்கவில்லை அவன். காஃபியோடு சேர்த்து வேண்டாத சிந்தனைகளையும் சேர்த்தே விழுங்கினான் அவன்.
“அப்போ உங்க வீட்ல வந்து நான் பேசட்டுமா? இல்ல, அப்பா, அம்மாவை நேரா வந்து பேச சொல்லட்டுமா விஜய்? நாங்க விருதுநகர் வரை வரணுமா? இல்ல, இங்க வச்சே பேசிடலாமா?” வெற்றி கேட்க, தடுமாறினான் விஜய்.
என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவன் திரும்பி தங்கையைப் பார்க்க, அவள் கண்கள் வெற்றியின் மேல் நிலைத்திருந்தது. வெற்றியின் பார்வையோ விஜய்யிடம் இருந்தது.
கருநீல நிற லெக்கிங், சந்தன நிற குர்தி அணிந்திருந்தாள் வேதா. குட்டி கிளிப்பில் அடக்கப்பட்டிருந்த அவளின் கூந்தல் காற்றாடி நகரும் பக்கமெல்லாம் பறந்தது. வெற்றியின் கண்கள் அவ்வப்போது அவள் பக்கமாக அலை பாய்ந்தாலும், பெரும்பான்மை நேரம் விஜய்யின் கண்களைப் பார்த்தே பேசினான் அவன்.
இப்போது நிமிர்ந்து அமர்ந்திருந்தவனைப் பார்த்து, “நான் அப்பாகிட்ட பேசணும் வெற்றி சார்” தயக்கத்துடன் சொன்னான் விஜய்.
“எத்தனை முறை சொல்றது? பிளீஸ், வெற்றினு கூப்பிடுங்க” வெற்றி அழுத்திச் சொல்ல, “சட்டுனு கூப்பிட வரல. நான் அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன். எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க” என்றான் விஜய்.
“ம்ம். எவ்வளவு நாள்? ஒரு வாரம் போதுமா?” வெற்றி கேட்க, அவனை மலைப்பாகப் பார்த்தான் விஜய்.
“எனக்கு ஒரு ஐடியா இருக்கு. அது உங்களுக்குச் சரி வருமானு சொல்லுங்க” விஜய் இழுக்க, “என்னனு சொல்லுங்க” என்றான் வெற்றி. வேதாவும் அவர்களை ஆர்வமாகக் கவனித்தாள்.
“எங்கப்பாக்கு காதல் எல்லாம் பெருசா அபிப்ராயம் கிடையாது. ஊர்ல, எங்க வீடுகள்ல இந்த லவ் பஞ்சாயத்துல சில, பல ஜோடியை பிரிச்சு விட அவரும் காரணம்”
“என்ன சொல்றீங்க?” அதிர்ந்து போய்க் கேட்டான் வெற்றி. மௌனமாய்த் தலையசைத்தான் விஜய்.
வெற்றியின் கண்கள் வேதாவை ரகசியமாக முறைத்தது. ‘பாவி மகளே முதல்லயே சொன்னியா நீ?’ அவனது பார்வையைத் தானே மனதில் மொழி பெயர்த்துக் கொண்டாள் வேதா.