என் ஜீவனில் உறைந்திடு – 30 (2)

அந்த இரு வாரங்களும் அவரின் இரு உணவகத்தையும் இளமாறன்தான் பார்த்துக் கொண்டான்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த திறமையும், அனுபவமும் வாய்ந்த இருவரை இரண்டு உணவகத்திலும் நிர்வாகப் பொறுப்பில் வேலைக்கு அமர்த்தினான்.

அவனது கருத்தை மாமனாரிடம் தெரிவிக்க, மருமகன் தங்களின் உடல் நலத்திற்கும், தொழில் நலத்திற்கும்தான் சொல்கிறார் என்பது புரிந்து, கேள்விகள் எதுவும் கேட்காமல் சம்மதித்தார் சிவஹரி.

இளமாறன் மருத்துவமனை வந்த இரு வாரங்களும் சுகந்தி அவர்களோடுதான் பெரும்பான்மை நேரத்தை செலவிட்டார்.

இயல்பான, பேச்சு, சிரிப்பு, கவனிப்பு என இனிமையாகச் சென்றது சந்திப்புகள்.

இப்போது ரோஜாவிற்கு ஆறாம் மாதம் நடந்து கொண்டிருந்தது. வெள்ளிக் கிழமை கணவனுக்கு விடுமுறை தினம் என்பதால் அவளும் வீட்டில் இருந்தாள்.

மாலை நேரம் அலைபேசி வழியே அக்காவிடம் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

“இந்த மித்ரனை பொய் சொல்லாத குட்டி சொல்லிட்டேன் ரோஜா. அதுக்கு அப்படியொரு அழுகை. கோபத்துல என்கிட்ட பேசாம அவங்கப்பா கூடவே சுத்துறான் வாண்டு” என்று நித்யா புலம்ப, சிரித்தாள் ரோஜா.

“அதை அப்படிச் சொல்லக் கூடாது நித்திக்கா. நம்ம சட்டசபையில் சொல்ற மாதிரி உண்மைக்குப் புறம்பாகப் பேசாதீர்கள் சொல்லணும்” என்று ரோஜா சொல்லவும்,

“சேட்டையைப் பாரு” கிளுக்கி சிரித்தபடி சொன்னாள் நித்யா.

“பொய் சொல்ற சொன்னா, யாருக்கா இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்” என்று ரோஜா சொல்லவும்,

“வேற யாருக்குக் கோபம் வந்தது?” என்று விசாரணையில் இறங்கினாள் நித்யா.

“அது…” என்று சொல்லி அவள் மழுப்ப,

“யார் பொய் சொன்னா?” அவளின் பேச்சை கேட்டபடி நடந்து வந்து அருகில் அமர்ந்து கேள்விக் கேட்டான் இளமாறன்.

“அப்புறம் பேசுறேன் நித்திக்கா” என்று அழைப்பு துண்டித்து விட்டு கணவனைத் திரும்பிப் பார்த்தாள் ரோஜா.

“ம்ம், யார் பொய் சொன்னா ரோஜா?” மீண்டும் கேட்டான் இளமாறன்.

அவன் கரம் மென்மையாக மனைவியின் மேடிட்டிருந்த வயிறை வருடியது.

ரோஜா கண் மூடி கணவன் தோள் சாய்ந்தாள். அந்தக் கணத்தின் இதத்தை ரசித்து உள்வாங்கியபடி இருவரும் அமர்ந்திருந்தனர். இளமாறனின் கை தன் வருடலை தொடர்ந்து கொண்டிருக்க, சமீப வழக்கமாக அவனது தொடுகையில் அசைந்தது குழந்தை.

“ஆ.. இளா” ரோஜா சிரிப்புடன் உடலை சிலிர்க்க, அதை உணர்ந்த இளமாறனின் கரங்களும் முதல் முறையைப் போலவே மீண்டும் மீண்டும் சிலிர்த்து அடங்கியது.

“நீங்க வயித்துல இருக்கும் போது மாரத்தான் ஓடுவீங்களாம் அத்தை சொன்னாங்க” அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

“நித்யாக்கா வயித்துல இருக்கும் போது ரொம்பச் சமத்துன்னு அம்மா சொன்னாங்க. ஆனா, நான் உதைச்சுட்டே இருப்பேனாம். அதான் நம்ம பிள்ளையும், நம்மளை மாதிரியே இருக்கு” ரோஜா சொல்ல இளமாறன் முகத்தில் இளநகை.

“சரி, பேச்சை மாத்தாம யார் பொய் சொன்னாங்க சொல்லு” ரோஜாவின் கண்களைக் கூர்ந்து அவன் கேட்க, “நீங்கதான்” என்றாள் ரோஜா.

“நானா?”

“ம்ம். உங்கம்மாவை பிடிக்காது. அவங்க மேல கோபமா இருக்கேன்னு நீங்க வெளில காட்டிக்கிறது எல்லாம் பொய்யும், நடிப்பும்தான்” ரோஜா சொல்லவும், அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான் இளமாறன்.

அவன் உடல் இறுகுவதைக் கண்ட ரோஜா, “உண்மையைச் சொல்லணும்னா, உங்களுக்கு அவங்களை ரொம்பப் பிடிக்கும்” என்று அழுத்திச் சொன்னாள்.

“ரோஜா…”

“எனக்குத் தெரியும் இளா. அவங்க உங்கம்மா. நீங்க அவங்க மேல அன்பா இருக்கிறது ரொம்ப இயல்பான விஷயம். அதை ஏன் மறைக்கப் பார்க்கறீங்க? அதுவும் என்கிட்ட?”

அவனிடம் பதிலில்லை. ஆனால், மனைவி பேச்சை மறுக்கவும் இல்லை அவன்.

“உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நாம ரெண்டாவது டைம் மீட் பண்ணப்போ, நடுரோட்ல வச்சு உங்கம்மா போனை அட்டென்ட் பண்ணீங்க. உங்கம்மா உங்களுக்கு அவ்ளோ முக்கியம், இல்லையா? உங்க போன்ல அவங்களுக்காகத் தனியா, ஸ்பெஷல் ரிங் டோன் வச்சுருக்கீங்க. அதுக்கு என்ன அர்த்தம் இளா?”

“…..”

“இதுவரை நீங்க சொன்ன எல்லாச் சாக்குப் போக்கும், உங்களை நீங்களே ஏமாத்திக்க, சமாதானம் செய்துக்க, உங்க கோபத்தை இழுத்துப் பிடிக்கச் சொல்ற பொய்கள்தான். இல்லையா?”

“சில உறவுகள் உணர்வுப் பூர்வமானது ரோஜா. பேசாம இருந்தாலும், இல்லை பிரிந்திருந்தாலும், பிரியமும், பாசமுமாதான் இருப்போம். இல்லையா?”

“அந்தப் பாசத்தை வெளிப்படையா காட்டினாதான் என்ன?”

“நான் காட்டும் பாசம் அவங்களுக்குப் புரியலைன்னா? அதுக்கு நானா பொறுப்பு?”

“Forgiveness is the final form of love. மன்னிப்பு என்பதே அன்பின் முழுமையான வடிவம் இளா, உங்கம்மாவை முழுசா மன்னிக்கலாம் இல்லையா?”

“எதுக்கு மன்னிக்கணும்? தவறினது சூழ்நிலைகள்தான். மனிதர்கள் இல்லையே. அப்புறம் அதுக்கு என்ன அவசியம்?”

“நல்லா மண்டையா பேசுங்க” அலுத்துக் கொண்டாள் ரோஜா.

“நம்மால மறக்கவே முடியாத ஒருவர், நம்மை மொத்தமா மறந்துப் போறதுதான் ரொம்பக் கொடுமையான விஷயம்” கரகரத்த குரலில் சொன்னான்.

“அப்போ, உங்கம்மாவை பழி வாங்க இப்படியெல்லாம் பண்றீங்களா?”

“ப்ச்..” அவன் கோபத்துடன் சலிக்க,

“எனக்கு உங்கம்மாவோட உங்களைப் பார்க்கும் போதெல்லாம் இன்னமும் அந்த நாலு, எட்டு வயசு குட்டி பையன் இளமாறனாதான் தெரியறீங்க. அம்மாவின் கவனம் ஈர்க்கும் குழந்தையாதான் தெரியறீங்க. அந்த அம்மான்ற ஒரு வார்த்தைக்கான ஏக்கம்தான் உங்க ரெண்டு பேரையும் நெருக்கமா வச்சிருக்கு. இல்லனா, அத்தைக்கு மூனுல நீங்களும் ஒரு பிள்ளைன்னு சாதாரணமாகியிருக்கும் இல்லையா”

அவனது மனத்தையும், உணர்வுகளையும் துல்லியமாக அவள் விவரிக்க, அதிர்ந்துப் போய் மனைவியைப் பார்த்தான் இளமாறன்.

“உங்க தாத்தா, பாட்டி, அப்பா, தம்பி, தங்கை எல்லோர்க்கிட்டயும் நார்மலா இருக்க நீங்க, உங்கம்மாகிட்ட மட்டும் அடம் பிடிக்கிற குழந்தையாவே இருக்கறீங்க. ஏதோ ஒரு வகையில் கோபத்தைக் காட்டிட்டே இருக்கீங்க”

“இல்ல ரோஜா. ஒரு காலத்துல எனக்கு அவங்க மேல கோபம் இருந்தது உண்மை. ஆனா, இன்னைக்குச் சத்தியமா கோபமெல்லாம் இல்ல”

“தெரியும். அப்போ கோபம் இல்லைனா அவங்களை உறவு சொல்லி கூப்பிட எது உங்களைத் தடுக்குது?”

“இத்தனை வருஷம் கழிச்சு எப்படிச் சொல்ல ரோஜா?”

“எப்படியா? அம்மா, வாங்கம்மா. இப்படித்தான்” என்றவளை முறைத்தான்.

“உனக்குப் புரியாது ரோஜா. அது இயற்கையா வரணும். நான் கூப்பிடும் போது இயற்கையா இருக்கணும். ஏழு கழுதை வயசுக்கு அப்புறம் நான் கூப்பிட்டா ரொம்ப ஆர்ட்டிபிஸியலா இருக்கும் ரோஜா.”

“ம்ம். ஓகே. அட்லீஸ்ட் அவங்ககிட்ட, எனக்கு உங்க மேல கோபம் இல்லன்னாவது சொல்லலாம் இல்ல?”

“அவங்க மேல நிச்சயமா கோபமில்ல ரோஜா. ஆனா, நிறைய வருத்தம், ஆதங்கம் எல்லாம் இருக்கு. அது அவ்வளவு சீக்கிரம் போகாது. நான் எவ்வளவு முயற்சி பண்ணாலும் மறையாது. அது பல வருஷ காயமும், ஏக்கமும் தந்த வலி, வேதனை, வடுக்கள். அது நிறைய நேரம் என்னை அறியாம வெளிய வந்திடும். அதான் அவங்களை விட்டு நான் ஒதுங்கியே இருக்கேன்.” முதல் முறையாக மனம் திறந்து மனைவியிடம் அனைத்தையும் பகிர்ந்தான்.

“தூரங்கள்தான் உங்களை அருகில் வச்சிருக்கு, இல்ல?” சிரிப்புடன் கேட்டாள் ரோஜா. மெல்ல குனிந்து அவள் வயிற்றில் முத்தமிட்டான் இளமாறன்.

எப்போதும் போலக் கணவன் பக்கமே நின்றாள் ரோஜா. அவனை முழுவதுமாக அறிந்து, புரிந்து கொண்டாள். அவன் நியாயங்களுக்கு நியாயம் செய்ய விழைந்தாள்.

“சரி, இளா. உங்களுக்கா தோணும் போது கூப்பிடுங்க. இல்லையா, இப்படியே இருங்க. நான் உங்களை எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டேன்” உறுதியாகச் சொன்னாள் ரோஜா. புன்னகைத்தான் இளமாறன்.

அடுத்த முறை மாமியார் வீடு செல்லும் போது அம்மா, மகனைத்தான் ஊன்றி கவனித்தாள் அவள்.

மகனை எப்போதும் போலப் பாசமும், பரிதவிப்புமாகச் சுகந்தி பார்க்க,

‘அட கடவுளே, மகனின் பாசம் இந்த அம்மாவின் கண்ணுக்கு எப்போதுதான் தெரியுமோ?’ என்று அங்கலாய்த்து கொண்டாள் ரோஜா.

“நடிகன் நீங்க” என்று கணவனைக் கிண்டலடிக்கவும் மறக்கவில்லை அவள். சிரித்தான் இளமாறன்.

மனிதர்களுக்கு ஒரு வினோத பழக்கம் இருக்கிறது. அவர்களுக்கு அன்பை பொழியும் உறவுகள் மிகச் சாதாரணமாகி விடுகிறது. அந்த அன்பை சமயங்களில் அசட்டையாக உதறி உதாசீனமும் செய்கிறார்கள்.

மாறாக அவர்களுக்கு உரிய அன்பைத் தர தயாராக இல்லாத உறவுகளைத் தூக்கி சுமந்து கொண்டு, அவர்கள் அன்புக்கு எதிர்வினை தராத உறவுகளை மனத்தில் இறுக பற்றிக் கொண்டு, ஏங்கித் தவிக்கிறார்கள்.

error: Content is protected !!
Scroll to Top