நற்காதல் நெய்திடவா – 12 (2)

இருவரும் இரு சக்கர வாகனத்தில் சாய்ந்து நெருக்கமாக நிற்க, வெற்றி வேதாவின் முகத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது அழகிய புகைப்படமாகி இருந்தது.

“டேய், ஒரு தடவை சொன்னா கேட்கிறியா நீ? எங்களை ஃபோட்டோ எடுக்காத சொன்னேன் இல்ல?” என்று கத்திய வெற்றி, “இதுவரை எடுத்த ஃபோட்டோ எல்லாம் எனக்கு அனுப்பி வை” என்று சொல்லி விட்டு, திரும்பி வேதாவை பார்த்தான்.

“வேதா அன்கம்பர்ட்டபிளா ஃபீல் பண்றா டா, ஏன் டா இப்படிப் பண்ற?” வெற்றி கத்த, அங்கிருந்து மெல்ல நழுவினான் பிரபு. அவனைப் பார்த்து பிரதீப், மோனிகா சிரிக்கத் தொடங்க, “ரொம்பப் பண்றான் டா மேனேஜர்” என்று புலம்பிக் கொண்டான் அவன்.

“டேய் பிரபு” என்று வெற்றி கத்த, தலையைக் குனிந்து காதை மூடிக் கொண்டான் அவன். அது தெரியாத வெற்றி அவனை மிரட்டி கொண்டிருந்தான்.

“எங்க போட்டோவை எங்கேயும் யூஸ் பண்ணிடாத டா. உன்னோட சோஷியல் மீடியா பக்கம் எல்லாம் எங்க போட்டோ ஏதாவது போட்ட அவ்ளோதான். கொன்னுடுவேன்” என்று கத்தி மிரட்டிய வெற்றி ஏற்கனவே அவர்களது புகைப்படம் அங்கிருந்ததை அறியவில்லை.

“விடுடா வெற்றி வேந்தா. நீ ஸ்ரிக்ட் ஆபீஸர்தான். நாங்க ஒத்துக்கறோம்” மோனிகா அவனைப் பார்த்து கிண்டலாகச் சொல்ல, பிரபு காரில் ஏறி கதவை அடைத்தான்.

“இல்ல மோனி. சில நினைவுகள் நமக்கானது. நமக்கு மட்டுமானது. அதைப் பொதுவெளியில் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. ஜஸ்ட் மை ஒப்பீனியன்.” வெற்றி தோள் குலுக்கி சொல்ல, “ஓகே டா. புரிஞ்சுது” என்றாள் மோனிகா.

அந்நேரம் வெற்றியின் கைப் பிடித்து வேதா அழைக்க, “ஓகே. நாங்க கிளம்பறோம். காரை கொண்டு வந்து வீட்ல விட்டுடுங்க” என்றான் வெற்றி.

அத்தோடு நண்பர்களிடம் விடைப் பெற்று அவர்கள் வீடு திரும்பினார்கள்.

வேதாவை வீட்டில் இறக்கி விட்ட வெற்றி அவளோடு பின்னே வர, அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் வேதா.

முதல் முறை போலவே இப்போதும் வெளியே வராண்டாவில் நின்று கொண்டான் வெற்றி.

அதுவரை அவன் கையில் வைத்திருந்த பார்சலை அவளிடம் நீட்டினான்.

“எனக்கா? என்ன திடீர்னு சர்ப்ரைஸ் எல்லாம் கொடுக்கிறீங்க? எங்க வச்சுருந்தீங்க இவ்வளவு நேரமும்? நான் பார்க்கவேயில்ல” வியப்புடன் வரிசையாகக் கேள்விகளை அடுக்கினாள்.

“பிரிச்சு பாரு” மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு, சுவரில் சாய்ந்து நின்று சொன்னான் வெற்றி.

அவனையே பார்த்துக் கொண்டு பரிசை பிரித்தாள் வேதா.

இந்த முறையும் புத்தகங்கள்தான் இருந்தது. ஆனால், அது அவளுக்கு மிகப் பிடித்திருந்தது.

அவள் கண்கள் மகிழ்ச்சியிலும், வியப்பிலும் விரிய, “எப்படி வெற்றி சார்?” என்று ஆச்சரியத்துடன் வினவினாள்.

அவனோ கண் சிமிட்டி புன்னகைத்தான்.

அவள் கரங்களில் அவளின் பேராசிரியர் பர்வீன் அவர்களின் புத்தகங்கள் இருந்தது. அதிலும் சமீபமாக வெளியான இரண்டு புத்தகங்கள், அவரின் கையெழுத்தோடு இருந்ததைப் பார்க்கையில் அவளது இதழ்கள் தாமாகப் பிரிந்து புன்னகைத்தன.

“எங்க மேமை உங்களுக்கு எப்படித் தெரியும் வெற்றி? அவங்க லேட்டஸ்ட் புக், அதுவும் அவங்க சைன்டு காப்பி எப்படி வாங்க முடிஞ்சது?” அவள் வியப்புடன் வினவ, “நான் வேதாவை தெரிஞ்சுக்கப் பண்ண முயற்சியில், இதெல்லாம் நடந்தது.” கண் சிமிட்டி வசனம் பேசினான் வெற்றி.

அவள் முறைக்க, “உன்கிட்ட நீ எந்தக் காலேஜ்னு அன்னைக்குக் கேட்டேன் தானே? அது தெரிஞ்சதுக்கு அப்புறம், உங்க ரைட்டர் மேடமை கண்டுபிடிக்கிறது பெரிய விஷயமா என்ன?” விளக்கம் சொன்னான் அவன்.

“உங்க புக், உங்க ஸ்டூடண்ட் ஒருத்தருக்குக் கிஃப்ட் பண்ண வாங்குறேன் மேம்னு சொன்னேன். அவ்ளோதான். ரொம்ப ஹேப்பியா, புக்ல சைன் பண்ணி அனுப்பி வச்சாங்க அவங்க.” மேலும் அவன் விளக்கம் கொடுக்க, “அன்பு வேதவர்ஷினி..” என்று புத்தகத்தில் இருந்த வரிகளை வருடினாள் வேதா.

புத்தகங்கள் அவளுக்கு எப்போதும் மிகப் பிடித்தமான பரிசு. புத்தகங்களின் மேல் அவளுக்குத் தனிக் காதல் இருந்தது. இப்போது அதைப் பரிசாகக் கொடுத்தவன் மேலும் அந்தக் காதல் மெல்ல வேர் விட்டது.

“ஏன் எப்பவும் புக்ஸ் கொடுக்கறீங்க வெற்றி? பூ, புடவை இப்படி ஏதாவது கொடுக்கலாம் இல்ல?” அவள் கேட்க, “எம்மாடி வேதா. அதெல்லாம் காலத்துக்கும் வாங்கிக் கொடுப்பேன் செல்லமே. அது கூடவே, இப்படி நிறையப் புத்தகங்களும் கொடுப்பேன். ஏன்னா, எனக்கு வாசிக்கப் பிடிக்கும். அதோட உன்னையும் பிடிக்கும். நமக்கு ரொம்பப் பிடிச்ச ஒன்னை, நமக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச ஒருத்தருக்குப் பரிசா கொடுக்கிறதில் கிடைக்கிற சந்தோஷம், வேற எதிலயும் கிடைக்காது.” அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.

“இப்போதைக்குப் புத்தகங்களை வாசிக்கதான் எனக்கு வாய்ச்சிருக்கு. கூடிய சீக்கிரம் உன்னையும் வாசிக்க..”

“அச்சோ..” என்று அவன் வாயில் கை வைத்து மூடினாள் வேதா. அவளின் உள்ளங்கையில் சிரித்தான் வெற்றி. அவனின் மீசை உள்ளங்கையில் உரசி அவளைக் குறுகுறுப்பூட்ட, அவனை முறைத்து கையை எடுத்தாள். உடல் குலுங்கச் சிரித்தான் வெற்றி.

“ஆனாலும், அநியாயத்துக்கு நல்ல காதல் செய்யச் சொல்ற செல்லமே. ரொம்பக் கஷ்டம்” என்று கண் சிமிட்டி அவன் புலம்ப, அவன் தோளில் அடித்தாள் வேதா.

சிறிது நேரம் அவளோடு பேசிக் கொண்டிருந்து விட்டு தன் வீட்டிற்குக் கிளம்பினான் வெற்றி.

அடுத்து வந்த வாரங்கள் இருவரும் காதலை வளர்த்த அதே நேரத்தில் வங்கி வேலையையும் சிரத்தையுடன் செய்தனர்.

வேலை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் குழப்பிக் கொள்ளாமல் இருக்க இப்போது கற்றுக் கொண்டிருந்தாள் வேதா.

ஒருவித தெளிவான மனநிலைக்கு வந்திருந்தாள் அவள்.

அந்நேரம் அவளது வீட்டினர் அவளைக் காண சென்னை வந்தனர்.

“அப்பத்தா” ஓடிச் சென்று அவரை அணைத்து கொண்டாள் வேதா. அவரும் வாஞ்சையுடன் பேத்தியின் கன்னத்தில் முத்தமிட்டு தலைக் கோதி கொடுத்தார்.

“உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு அப்பத்தா? காச்சல், சளி எல்லாம் காணாம போச்சா?” வேதா நலம் விசாரிக்க, “உன் பிள்ளையைப் பார்க்காம எனக்கு ஒன்னும் ஆகாது த்தா” முதியோருக்கு உரிய பாச மொழியில் அவர் பேச, பேத்தி கடுப்பாகினாள்.

“நான் என்ன கேள்வி கேட்டா, நீ என்ன பதில் சொல்ற அப்பத்தா?” இடுப்பில் கை வைத்து வேதா பல்லைக் கடிக்க, “உங்கப்பத்தாக்கு வயசாச்சே தவிர ஒரு கூறும் இல்ல, குப்பையும் இல்ல. எப்படிப் பேசுறா பாரு” அவர் பங்குக்கு ஐய்யனாரும் மனைவியைக் கடிந்து கொள்ள, அப்பத்தாவை சோஃபாவில் அமர செய்து, அவரது அருகில் அமர்ந்தாள் வேதா.

“நீங்கெல்லாம் இருக்கும் போது எனக்கு என்னடா ஆத்தா குறை? லேசா மேலுக்கு முடியாம போச்சு. அதுக்கு உங்கம்மாதான் பயந்து போனா. நான் நல்லாத்தான் இருக்கேன். நீயே பாரு” பேத்தியின் கன்னம் பற்றிச் சொன்னார் முத்துமாரி.

“அப்புறம் ஆத்தா. நீயெப்படி இருக்க?” அவர்கள் நலம் விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்பத்தா ஒரு பக்கம் பேத்தியை கவனிக்க, அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார் அப்புச்சி.

அவளின் அப்பாவும், அண்ணனும் வேலையாக வெளியில் சென்றிருந்தார்கள்.

ஜெயலட்சுமி மகளின் வீடு வந்ததும் முதல் வேலையாகச் சமையல் அறையைத் தனதாக்கி கொண்டார். அன்பை உணவின் வழி மட்டுமே கடத்தத் தெரிந்தவர் அவர். காலையில் வந்ததும் குளித்துக் காஃபி கடையை ஆரம்பித்தவர், இப்போது காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு அசிஸ்டன்ட் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் கௌசல்யா மற்றும் காந்திமதி.

காலை ஒன்பது மணி போல அப்பா, அண்ணா இருவரும் வந்து விட, காலை உணவு உண்ண அமர்ந்தனர்.

வானமாமலை மகளை அழைத்துத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்.

“நீ என்ன ஒழுங்கா சாப்பிடுறதே இல்லையா வேதா குட்டி? ஏன் இப்படி மெலிஞ்சு போன? நான் பேசாம உங்கம்மாவை இங்க விட்டுட்டு போகவா? அவ நல்லா சமைச்சு போடுவா” அவர் கேட்க, “அப்புறம் நீங்க சாப்பாட்டுக்கு என்ன ப்பா பண்ணுவீங்க? அப்பத்தா, அப்புச்சியை யார் பார்த்துப்பா?” வேதா அப்பாவி போலக் கேட்க, சிரித்தான் விஜய்.

“அவளே நல்லா சமைப்பா. அதுவும் இல்லாம, அவளுக்கு வக்கணையா இருந்தாதான் சோறு இறங்கும். இப்போ வேலைக்குப் போறதால வெயிட் போடல. அதைப் பெருசா பேசுறீங்க ப்பா?” விஜய் அப்பாவிடம் கேட்க, “பொறாமை பிடிச்ச விஜய் ண்ணா” என்று சொல்லி உதடு சுளித்து அண்ணனை முறைத்தாள் வேதா.

“டேய் அவளைப் பேசாம, நீ சாப்பிடு டா. சின்னப் பிள்ளைகிட்ட வம்பு பண்ணிட்டு” வானமாமலை மகனை திட்ட, வேதா அண்ணனை வெறுப்பேற்ற நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“சாப்பிடுற பிள்ளையை முறைக்காத டா” அப்புச்சி பேரன் தோளில் அடித்துச் சொல்ல, வேதாவை கையில் பிடிக்க முடியவில்லை.

கௌசல்யா, காந்திமதியும் அவர்களோடு அமர, குடும்பமாகக் காலை உணவை முடித்தார்கள்.

அதற்குப் பின்னர்தான் பூதம் மெதுவாக வெளியில் வந்தது.

“உங்கத்த வீட்டுக்கு போறோம் வேதா. நீயும் வர்றியா?” வானமாமலை கேட்க, திரும்பி அம்மாவை பார்த்தாள் வேதா.

“அவ எதுக்கு ப்பா? வேணாம். அவ வீட்ல இருக்கட்டும்” என்று விஜயும், “சின்னப் பிள்ளை அவ வந்து என்ன பஞ்சாயத்து பேச போறா? அவளைப் போய்க் கூப்பிடுற?” என்று அப்புச்சியும் சொல்ல, “சரி. நீ வீட்லயே இரு மா. நாங்க போய்ட்டு மதியத்துக்கு மேல வந்துடுவோம்” என்றார் அவர்.

“என்னம்மா பிரச்சனை? அண்ணா, அண்ணி ரெண்டு பேருக்கும் சண்டையா? அண்ணி ஏன் அவங்க வீட்லயே இருக்காங்க?” காஃபி போட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டு விவரம் அறிந்து கொள்ள முயன்றாள் அவள்.

“என்ன பிரச்சனையா? உங்க அத்தைதான் பிரச்சனை. நம்பக் குடும்பத்துக்கு வேற என்ன பெரிய பிரச்சனை வந்துடப் போகுது. உங்கத்தை ஒருத்தி போதும் நம்ம மண்டையை உருட்ட. மகளை ஒத்த கால்ல நின்னு நம்ம வீட்ல கட்டிக் கொடுத்துட்டு இப்போ நம்மளை நாட்டாமை பண்ணிட்டு இருக்குது உங்க அத்தை. மக வாழணும்னு நினைக்காம.. ஆடிட்டு இருக்கு. என்னமோ போ. இந்த அழகுல மகனுக்கு உன்னை வேற கேட்டா. ம்ம். நல்ல காலமா உங்கப்பா குடுக்க மாட்டேன்னு ஒரே போடா போட்டார். இல்லனா அவ்ளோதான். உங்க ரெண்டு பேரையும் அவளுக்கு நேர்ந்து விட்டு, நான் அழுதிட்டு உட்கார்ந்து இருக்கணும்” கோபத்தோடு சொன்னவரின் கண்கள் லேசாகக் கலங்கியே இருந்தது.

“அண்ணி..” என்று வேதா ஆரம்பிக்க, “அந்த ஷாலினி, அவங்கம்மா பேச்சை கேட்டு ஆடுற வரை இப்படி அல்லாடிட்டுதான் இருக்கணும்” என்று அவர் ஆவேசமாகச் சொல்ல, அவரை வருத்தத்துடன் பார்த்தாள் வேதா.

அப்பாவுக்கான காஃபியுடன் வெளியில் சென்றார் அம்மா. அவளோ அப்படியே நின்றிருந்தாள்.

சிறிது நேரத்தில் மொத்த குடும்பமும் அத்தை வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.

வேதா மனதில் புழுதியாகக் கிளம்பிய குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள்.

வெற்றியை பற்றி வீட்டில் சொல்வதா, வேண்டாமா? என்று மனதினுள் சீட்டுப் போட்டு பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

மதியம் அவளது குடும்பத்தினர் பேச்சு வார்த்தை முடித்து மருமகளைக் கையோடு கூட்டி வந்து விட, அனைவரின் முகத்திலும் வெளிச்சம் மீண்டிருந்தது. சில மாதங்கள் கழித்து அண்ணனின் முகத்தில் பிசிரற்ற மகிழ்வை பார்க்கிறாள் அவள். அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

அந்தக் கணமே முடிவு செய்து விட்டாள். அண்ணனிடம் விஷயத்தைச் சொல்லி விடுவது என்று. குறைந்த பட்சம் அவனுக்கு வெற்றியை அறிமுகமாவது செய்திட வேண்டும் என்று நினைத்தாள் வேதா.

வீட்டினரிடம் சொல்லாமல் இருப்பது அவளது குற்ற உணர்ச்சியை அதிகரிக்கச் செய்தது முக்கியக் காரணம்.

அன்றிரவு உணவிற்குப் பின், இளையவர்கள் அனைவரும் அப்பத்தா, அப்புச்சியுடன் ஹாலில் படுத்திருந்தனர்.

விஜய்யின் மனைவி ஷாலினி மட்டும் உறங்க சென்றிட, வேதா பெரியவர்களிடம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

“அப்பத்தா, உங்க கல்யாண கதையைச் சொல்லு கேட்போம். அப்புச்சி உங்க வீட்ல அடி வாங்கி, உன்னைக் கட்டிக்கிட்ட கதையை எடுத்து விடு. தூக்கம் வர்ற வரைக்கும் கேட்போம்” வேதா கேட்க, பேத்தியின் தலைக்கு மசாஜ் செய்து கொண்டிருந்த முத்துமாரி, வெட்கப்பட்டுச் சிரித்தார்.

“எத்தனை முறை அந்தக் கதையவே சொல்றது. போத்தா” அவர் சொல்ல, “அட சொல்லுங்க அப்பத்தா” என்றாள் கௌசல்யா.

“ஐய்யயோ.. அதெல்லாம் ஒன்னும் பெரிய கதை இல்லம்மா” கணவரை பார்த்தபடி அவர் வெட்கத்துடன் சொல்ல, அங்கே ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

“சரி விடு, அப்பத்தா. நீ ரொம்பப் பிகு பண்ற. நீ சொல்ல வேணாம். விஜய் அண்ணா சொல்வான்” என்ற வேதா, “உன் காதல் கதையை எடுத்து விடு விஜய் ண்ணா. உன் காதலுக்கு மரியாதையைக் கொஞ்சம் நாங்களும் தெரிஞ்சுக்கறோம்” சொன்ன தங்கையின் காதை பிடித்து வலிக்கத் திருகினான் விஜய்.

“அண்ணன்கிட்ட பேசுற பேச்சா இது? உனக்குத் திமிர் கூடிப் போச்சு” என்றவனை முறைத்தாள் வேதா.

“வலிக்குது ண்ணா” என்ற பேத்தியின் குரலில், “ஏய் அவளை விடுயா” என்று பேத்திக்கு பரிந்து வந்தார் அப்புச்சி.

“இந்த வேதா கழுதை எதுக்கு இப்போ காதல் கதை கேட்டு கால்ல விழுது தெரியுதா?” கௌசல்யா கிசுகிசுக்க, “நாளைக்கு இவ காதல் கதையைச் சொன்னா மிதிக்காம இருப்பாங்க இல்ல. அதுக்குத்தான்” சத்தமில்லாமல் சிரித்துச் சொன்னாள் காந்திமதி.

அவர்கள் இருவரையும் முறைத்தாள் வேதா.

அத்தனை நாடகங்களுக்குப் பின்னும் மறுநாள் அண்ணனிடம் பெரும் தயக்கத்துடன் தன் காதல் விவகாரத்தைப் பகிர்ந்து கொண்டாள் அவள்.

“என்ன சொல்ற நீ? லவ்வா? உன் பேங்க் மேனேஜரையா? யாரு? முத நாளே உனக்கு எஜுகேஷன் லோன் தர்றேன்னு சொன்னவரையா? அன்னைக்கு உன்னைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டுட்டு, இப்போ அதே சின்னப் புள்ளையை அவர் கல்யாணம் பண்ணிக்க விரும்பறாரா மா?” என்று விவகாரமாகக் கேள்விக் கேட்டு வேதாவின் வாயை அடைத்தான் விஜய்.

error: Content is protected !!
Scroll to Top