என் ஜீவனில் உறைந்திடு – 29 (1)

இருவருக்கும் எதார்த்தம் புரிந்தாலும் மனது பதட்டத்தில் எதையும் செய்ய விடவில்லை.

“மெடிக்கல் ஷாப் போய்ப் பிரெக்னன்சி டெஸ்ட் கிட் வாங்கிட்டு வாங்க இளா, வீட்லயே டெஸ்ட் பண்ணி பார்த்திடலாம்” ரோஜா சொல்ல, அடுத்த நொடியே வெளியில் விரைந்தான் இளமாறன்.

கர்ப்பப் பரிசோதனை கருவியை ஒன்றுக்கு இரண்டாக அவன் வாங்கி வர, புன்னகையுடன் அதை வாங்கிப் பரிசோதிக்கச் சென்றாள் ரோஜா.

இளமாறன் ஒரு நிமிடம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல், “ரோஜா, என்னாச்சு?” என்று அறையின் கதவைத் தட்டி அவளையும் பதட்டமாக்கினான்.

“இருங்க இளா..” என்று கத்திய ரோஜா, கதவைத் திறந்து அவனையும் உள்ளே இழுத்துக் கொண்டாள்.

மனைவியை அணைத்தபடி அவள் கையில் இருந்ததை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் இளமாறன்.

அவன் கண் எதிரேயே அந்த மாயம் நிகழ்ந்தது. ரோஜாவின் கையில் இருந்த கருவியில் முதலில் ஒற்றை ரோஜா நிறக் கோடு விழ, “ரோஜா..” என்று அவன் பதறிய நொடி, இரண்டாம் கோடும் பளிச்சென்று விழுந்தது.

“ஹா.. ரோஜா..” கரகரத்த குரலில் சத்தமாகக் கத்தி, உணர்ச்சி மிகுதியில் தொண்டையடைக்க, ஒன்றும் பேசாமல் மனைவியை இடையோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.

ரோஜா மெல்ல முகம் நிமிர்த்தி அவன் தாடையில் அழுத்தமாய் இதழ் பதித்தாள்.

“செஃப் இளமாறன், இனிமே அப்பா இளமாறன்” கிசுகிசுத்துக் கண் சிமிட்டினாள்.

தன் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாத ஒரு நிலையை எட்டிய மகிழ்ச்சியில் இருந்தான் இளமாறன்.

மென்மையான முத்தங்களை மனைவிக்கு மொத்தமாக அளித்தான்.

“நீங்க இப்போ ஹோட்டல் கிளம்புங்க இளா. ஈவ்னிங் ஹாஸ்பிடல் போகணும். கொஞ்சம் சீக்கிரம் வரப் பாருங்க” என்று ரோஜா சொல்ல,

“இல்லயில்ல. நாம இப்பவே ஹாஸ்பிடல் போறோம். நான் ஹோட்டல் கால் பண்ணி லீவ் சொல்றேன்” என்றான் அவன்.

ரோஜா அவனையே பார்க்க, அவளின் கைப் பிடித்து, “எதுவும் சொல்லாத, ஒழுங்கா ஹாஸ்பிடல் கிளம்பு. நான் அப்பாக்கு கால் பண்ணி நாம வர்றோம்னு சொல்லிடுறேன்” என்று திட்டங்கள் தீட்டினான்.

“சரி, வெயிட் பண்ணுங்க. நான் குளிச்சுட்டு வர்றேன்”

“இப்படியே வாடி. லேட் பண்ணாத” என்று கடுப்படித்தான்.

“அத்தை இன்னும் ஹாஸ்பிடல் வந்திருக்க மாட்டாங்க இளா. டைம் இருக்கு, டென்ஷன் ஆகாம. ரிலாக்ஸாடா இருங்க. பிளீஸ்” ரோஜா கெஞ்ச, இளமாறன் அவளை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

ரோஜா கர்ப்பமாக இருக்கிறாள். அவனுக்குக் குழந்தை வரப் போகிறது. மனதில் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தாலும் அவனால் நம்ப முடியவில்லை. அதே நேரம் உடல் முழுவதும் பரவிய பூரிப்பை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

தளும்பிய தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினான் இளமாறன்.

“எனக்குப் பத்து நிமிஷம் குடுங்க. நான் குளிச்சுட்டு வந்துடுறேன்.” அவன் பதில் சொல்லும் முன், குளியலறைக்குள் நுழைந்து கதவடைத்து விட்டாள் ரோஜா.

அவள் குளித்து, உடை மாற்றி, தயாராகி ஹாலுக்கு வர, சமையலறையில் கணவனின் முதுகு தெரிந்தது.

“வாரே வா செஃப். வீட்ல சமைக்கறீங்க? மெடிக்கல் மிராக்கிள் போங்க” என்று அவனை நெருங்கி பின்னிருந்து அணைத்துக் கொண்டாள்.

“ம்ம், இட்லி ரெடி. சாப்பிடு ரோஜா” ஆவி பறக்கும் மூன்று இட்லிகள், கார சட்னியுடன் தட்டில் இருக்க, அவளிடம் நீட்டினான்.

“எனக்குப் பசிக்கல செஃப்”

“பரவாயில்ல சாப்பிடு.” அவள் கைப் பிடித்துத் தட்டை திணித்தான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்குச் சமைச்சு தர மாட்டேன் சொன்னீங்க? கால் பண்ணி எங்கம்மாவை டிஃபன் கொண்டு வரச் சொல்றேன், சொன்னீங்க தானே? இப்போ மட்டும் எவ்ளோ அக்கறை?” என்று ரோஜா கோபமாகக் கேட்க,

“வாய் பேசாம சாப்பிடு டி” என்று மிரட்டினான் இளமாறன்.

“ம்ம், கார சட்னில காரமே இல்ல இளா. என்ன இப்படிச் சப்புனு இருக்கு?” குறை சொல்லிக் கொண்டே சாப்பிட்டாள்.

“காரம் சாப்பிட கூடாதுனு டாக்டர் சொல்லியிருக்காங்க” என்றவனை ஆச்சரியமாகப் பார்த்து, “எப்போ சொன்னாங்க?” என்று கேட்டாள்.

“இப்போ ஹாஸ்பிடல் போனதும் சொல்வாங்க. சாப்பிட்டு முடி ரோஜா. டைமாகுது” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் பேசியவனைப் பார்க்க அவளுக்குச் சுவாரசியமாக இருந்தது.

மனைவியுடன் சேர்ந்து அவனும் காலை உணவை முடித்துக் கொண்டு, இருவரும் மருத்துவமனை கிளம்பினார்கள்.

அந்நேரம் அம்மா, அப்பா இருவரும் மருத்துவமனை உணவகம் வந்திருப்பார்கள் என்று ரோஜாவிற்குத் தெரியும். கர்ப்பம் உறுதியாகும் முன் அவர்களிடம் சொல்ல அவளுக்குத் தயக்கமாக இருந்தது. அதே நேரம் அம்மாவிடம் இத்தனை முக்கியமான மகிழ்ச்சியான விஷயத்தை அவளால் பகிராமலும் இருக்க முடியவில்லை.

மருத்துவமனையை அடைந்ததும், நேராக மாமியாரின் அறையை நோக்கி நடந்தார்கள். ரோஜா பார்வையை எந்தப் பக்கமும் திருப்பாமல் நேராக நடக்க, “ஏன் ரோஜா, இப்படி மறைஞ்சு நடந்து வர்ற? அத்தை, மாமா பார்த்தாலும் ஒன்னும் ஆகாதுடி. வீ ஆர் மேரிட்.” என்று இளநகையுடன் குறும்பாக அவன் சொல்ல, “எனக்கு டென்ஷனா இருக்கு. பேசாம வாங்க” என்று வேகமாக நடந்தாள் அவள்.

அது முன் காலைப் பொழுது. சுகந்தி அவர்களுக்காக விரைவாக வந்து காத்திருந்தார்.

மகனையும், மருமகளையும் பார்த்ததும் அவசர அவசரமாக நடந்து அருகில் வந்து ரோஜாவின் கைப் பிடித்துத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

முதலில் ஒரு மகப்பேறு மருத்துவராக அவர் கேள்விகளை அடுக்க, ரோஜா ஒவ்வொன்றிற்கும் யோசித்துப் பதிலளித்தாள்.

“லாஸ்ட் பீரியட் தேதி சொல்லு ரோஜா” அவர் கேட்கவும், சொன்னாள் ரோஜா. சுகந்தி அவளை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியுடன் பார்த்தார்.

“இந்த மாச பீரியட்ஸ் மிஸ்ஸாகி அல்மோஸ்ட் ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சே ரோஜா. ஹோம் டெஸ்ட் பாஸிட்டிவ் காட்டுது. ம்ம், எதுக்கும் யூரின் டெஸ்ட்டும், பிளட் டெஸ்ட்டும் பண்ணிடுவோமா?” அவர் கேட்கவும் வேகமாகத் தலையசைத்தாள்.

சுகந்தி இரத்த, சிறுநீர் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்து, அதற்கு மாதிரிகள் கொடுக்க மருமகளுடன் கூடவே சென்றார்.

அவர்கள் பரிசோதனை முடிவிற்காகக் காத்திருந்த நேரத்தில் ரோஜா அம்மாவிற்கு அழைத்துச் சொல்லி விட்டாள்.

“ரிசல்ட் என் ரூமுக்குக் கொண்டு வந்துடுவாங்க. நீங்க வாங்க” என்று சுகந்தி அவர்களை மீண்டும் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

error: Content is protected !!
Scroll to Top