அசௌகரியமான அமைதியுடன் அமர்ந்திருந்தாள் வேதா. அண்ணனை பார்த்தாள். அவன் கோபமாக அமர்ந்திருப்பது தெரிந்தது.
அந்த வீட்டில் நிலவிய சோகத்தின் காரணம் புரிய, அவளால் எந்த ஆறுதலும் சொல்ல முடியவில்லை. அவளை விட அனைத்தும் அறிந்தவர்கள் அவர்கள். அதனால் அமைதியாய் திரும்பி அண்ணியைப் பார்த்தாள். அவளோ, வேதாவின் முகத்தையும், அவளின் அலைபேசியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன்னை விட்டா தேவையில்லாத பேச்சுதான் பேசிட்டு இருப்ப. முதல்ல வந்து சாப்பாட்டைப் போடு.” என்று மனைவியிடம் சொல்லி, “மாப்பிள்ளை, வேதா, சாப்பிட வாங்க”. என்று மாமா அழைக்க, அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.
அரை மணி நேர தண்டனைக்குப் பின் அண்ணனின் அறைக்கு வந்தாள் வேதா.
அவளுக்கு அண்ணன், அண்ணியைப் பார்க்கப் பார்க்க வருத்தமாக இருந்தது.
அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவர்களுக்கு இடையில் அதீத பிரியம் இருந்திருக்கிறது. அது நேசம், காதல் என்று பல கட்டங்களைக் கடந்துதான் கல்யாணத்திற்கு வந்தது. ஆனால், கல்யாணம் ஆனதும் இத்தனை வருடங்களாக அவர்களுக்குள் இருந்த அந்தக் காதல் எங்கே காணாமல் போனது? எப்படித் தொலைத்தார்கள் அதை?
அவர்களுக்கு நடுவில் காதலின் தடம் மட்டுமே இருக்க, வேலை, அவளின் எதிர்காலம் எனப் பல காரணங்களுக்காக வெற்றிக்குச் சம்மதம் சொல்லி இருக்கிறாள் வேதா. நாளை, எங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று இப்போதே சிந்திக்க ஆரம்பித்தாள் அவள்.
“வர்ஷி, அத்தை பேசினதை மனசுல வச்சுக்காத” பால்கனியில் சாய்ந்து நின்றிந்த தங்கையின் தோளில் கைப் போட்டுச் சொன்னான் விஜய். அவளுக்கு அத்தையின் இந்தப் பேச்சு ஒன்றும் புதிதில்லையே.
“அத்தை பேசுறது எல்லாம் பெருசா எடுத்தா..” என்று ஆரம்பித்து, நாக்கை கடித்துப் பேச்சை நிறுத்தினாள் வேதா. விஜய் சிரித்துத் தங்கையின் தலையில் செல்லமாகக் கொட்டினான்.
“அவங்க இப்போதான் என் மாமியார். ஆனா, எப்பவும் நமக்கு அத்தைதான். உனக்கு அவங்களைப் பேச எல்லா உரிமையும் இருக்கு” அவன் சொல்ல, மறுப்பாகத் தலையை அசைத்தாள் வேதா.
“எனக்கு நைட் ஹைதராபாத் ப்ளைட். நான் ஏர்போர்ட் போகணும் வர்ஷி. எனக்குப் பத்து நிமிஷம் குடு. நான் கிளம்பி வர்றேன். உன் வீட்டுக்கு போய்ட்டு அப்படியே அங்கருந்து நான் போய்க்கிறேன்” விஜய் சொல்ல, “இல்ல ண்ணா. இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருப்போம். நீ அண்ணிகிட்ட பேசு முதல்ல” என்றாள் வேதா.
“அவளைப் பார்க்கதான் நான் சென்னை வந்தேன். அவ இப்படி மூஞ்சியைக் காட்டிட்டு இருந்தா, என்ன பேசுறதாம்?” கோபத்துடன் சொன்னவன், தங்கையின் முகம் பார்த்துச் சங்கடமாகப் புன்னகைத்தான்.
“அண்ணிக்கு எதுவும் பெரிய பிரச்சனையா ண்ணா?” அவர்களின் நடவடிக்கை அவளை அப்படிக் கேள்வி கேட்க வைத்தது.
“ச்சே ச்சே இல்லடா” என்று சிரித்த விஜய், “அவளுக்கு இங்க பிரச்சனை” என்று வேதாவின் நெற்றியை சுட்டிக் காட்டினான் விஜய்.
“நான் தனியா இருக்கேன். நீங்க ஜாலியா வேலைக்குப் போறீங்கன்னு ஆரம்பிச்சு, என் கூடப் படிச்ச அவ வேலைக்குப் போறா, இவ வேலைக்குப் போறான்னு புலம்பி, இப்போ உங்க தங்கச்சி கவர்மெண்ட் வேலைக்குப் போறா. ஆனா, என்னைப் பாருங்க வெட்டியா வீட்ல இருக்கேன்னு ஒரே புலம்பல். சரின்னு, நீயும் வேலைக்குப் போன்னு சொன்னா.. அம்மா வேணாம் சொல்றாங்க. ஆட்டுக்குட்டி வேணாம் சொல்றாங்கன்னு.. ஷப்பா முடியல” வயதில் இளையவள் என்பதால் பொதுவாக இதைப் பற்றியெல்லாம் பகிராதவன், இன்று ஏதோ ஒரு மனநிலையில் மொத்தத்தையும் அவளிடம் கொட்டினான்.
“இந்த அத்தை பண்ற தொல்லையால இப்போ அழுதுட்டு இருக்கா. இவளை.. ” என்று அவன் பல்லைக் கடிக்க, அண்ணனை கரிசனத்துடன் பார்த்தாள் அவள்.
“அதான் காலைல அப்பா பேசும் போது முடிவா சொல்லிட்டேன். உனக்கு இப்போ கல்யாணம் வேணாம்னு…”
“விஜய் ண்ணா” பளிச்சென முகம் மகிழ்ச்சியில் மலர, கிட்டத்தட்ட கத்தியிருந்தாள் அவள்.
“ம்ம். ஆமா, வர்ஷி. என்ன அவசரம் இப்போ? உன் கல்யாணத்தைப் பொறுமையா பண்ணலாம்னு அப்பாகிட்ட சொல்லிட்டேன். அப்பா அவரோட விருப்பப்படி மாப்பிள்ளை பார்க்கட்டும். ஆனா, உனக்குப் பிடிச்சு, உனக்குச் சம்மதம்னா மட்டும்தான் அடுத்தக் கட்டத்துக்குப் போறோம். அதுக்கு மாசம் என்ன, வருஷமானா கூடச் சரிதான். நீயென்ன சொல்ற?”
“எப்போல இருந்து நீ இவ்வளவு நல்ல அண்ணனா மாறின விஜய் ண்ணா?” சிரிப்புடன் அவள் கேட்க, அவள் காதைப் பிடித்துத் திருகினான் விஜய். வலிப்பது போல நடித்துக் கத்தினாள் வேதா. அவர்களையே இமைக்காமல் பார்த்தபடி அவர்களை நோக்கி நடந்து வந்தாள் அண்ணி. சட்டென அண்ணியை நிமிர்ந்து பார்த்தாள் வேதா.
“ஏதோ முக்கியமான விஷயம் உங்கண்ணாகிட்ட சொல்லணும்னு சொன்னியே வேதா, சொல்லிட்டியா?” அவள் கேட்க,
“ஆமால்ல. சொல்லு வர்ஷி” என்று விஜயும் கேட்டான். அண்ணியைப் பார்த்துக் கொண்டே, “அது, இன்னொரு நாள் சொல்லவா ண்ணா.” கண்களைச் சுருக்கி கெஞ்சலாகக் கேட்டாள் வேதா.
கண்களில் தொக்கி நின்ற கேள்வியுடன் அவளையே பார்த்திருந்தான் விஜய்.
“உன்கிட்டதான் முதல்ல சொல்வேன் ண்ணா. பிளீஸ், எனக்குக் கொஞ்சம் டைம் கொடேன்” அவள் கேட்கவும், புன்னகையுடன் தலையசைத்தான் விஜய்.
அதன் பின் அவர்கள் வீட்டிற்கு அழைத்துப் பேசினார்கள். உடல் நலம் சரியில்லாமல் இருந்த அப்பத்தாவின் நலம் விசாரித்தார்கள்.
அப்பா, அம்மா, அப்புச்சி என அனைவரிடமும் அவர்களும், அத்தை வீட்டினரும் பேசி முடிக்கையில் ஒன்றரை மணி நேரம் நழுவியிருந்தது.
வேதா அந்த நேரத்தில் தன் அலைபேசியை எடுத்து வெற்றிக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“நான் அண்ணா கூட வீட்டுக்கு வந்துடுவேன். அண்ணா ஏர்போர்ட் போற வழியில் என்னை ட்ராப் பண்றேன், சொன்னான். ஓகே சொல்லிட்டேன். சாரி. எனக்காக வெயிட் பண்ணாம நீங்க வீட்டுக்குப் போங்க. சீ யூ வெற்றி சார்” என்று செய்தி அனுப்பி அவள் நிமிர, அவளையே பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் அண்ணி.
“வர்ஷி கிளம்பலாமா?” கேட்டபடியே அவர்களுக்கு அருகில் வந்தான் விஜய்.
இருவரும் மாலை தேநீர் அருந்தி அங்கிருந்து கிளம்பினார்கள்.
விஜய் மனைவியுடன் சற்று நேரம் பேசி விட்டு வர, இருவரின் முகத்திலும் லேசான தெளிவிருந்தது.
“அப்பாடா” ஆட்டோவில் ஏறியதும் அவள் பெருமூச்சு விட்டு சொல்ல, “உனக்கு இருக்கத் திமிர் இருக்கு பாரு” என்று தங்கையை முறைத்தான் விஜய்.
“உனக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா” துடுக்குத்தனமாகச் சொல்லி விட்டு, நெற்றியில் அறைந்து, “சாரி ண்ணா” என்றாள் வேதா.
“எதுக்குச் சாரி எல்லாம் சொல்ற நீ? இன்னைக்கு நேத்தா அத்தை வீட்டை பேசுற நீ, அதுக்காக நான் வருத்தப்பட. ஃப்ரீயா விடு வர்ஷி” என்று புன்னகைத்துச் சொன்னான் விஜய்.
“ஆனாலும், சாரி. நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. இனிமே அப்படிப் பேச மாட்டேன். பிராமிஸ். அண்ணி கேட்டா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க இல்ல?” அவள் சொல்ல,
“ஃபீலா? கோபம் மூக்குக்கு மேல வரும். ஆனா, அவளுக்குதான் உன்னை நல்லா தெரியுமே. சோ பெருசா எடுத்துக்க மாட்டா” என்றான் விஜய்.
“ம்ம். இனிமே பொறுப்பா பேசணும் நான்” என்ற தங்கையை ஆச்சரியமாகப் பார்த்த விஜய், எதுவும் கேட்கவில்லை. அவனுக்கு இருந்த கவலைகள் அவனைக் கேள்விக் கேட்க விடவில்லை.
அண்ணன் தங்கை இருவரும் நேராக அவளின் வீட்டிற்குச் சென்றனர். சிறிது நேரம் தங்கையுடன் நேரம் செலவிட்டு, அவளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்து விட்டு, கிளம்பினான் விஜய்.
அவன் போன பின்பு, அண்ணனிடம் வெற்றியை பற்றி, தங்களின் காதலைப் பற்றிச் சொல்லி இருக்கலாமோ என்று யோசிக்கத் தொடங்கினாள் வேதா.
ஆனால், அதைப் பற்றி அவள் பேசாதது கூட நல்லதே என்றான் வெற்றி.