நற்காதல் நெய்திடவா – 11 (1)

வேதா இதழ்களில் புன்னகை நெளிய நிமிர்ந்து அத்தை வீட்டைப் பார்த்தாள். பால்கனியில் நின்றிருந்த அவளின் அண்ணியும் அந்நேரம் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரின் பார்வையும் சந்திக்க, சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு வீட்டினுள் சென்று மறைந்தாள் அண்ணி.

“எல்லாம் இந்த விஜய் அண்ணாவால இந்த வீட்டுக்கு வர வேண்டியதா இருக்கு. இல்லனா நான் எல்லாம் இவங்க வீடு இருக்கத் திசை பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்” முணுமுணுத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.

“யாரு வேதாவா? வாம்மா.” என்று அவளின் மாமா அழைக்க, அந்தச் சத்தத்தில் அத்தை அறையினுள் இருந்து வெளியில் வந்தார்.

அவர் பேசும் முன் வேதாவே முந்திக் கொண்டு, “நல்லா இருக்கீங்களா மாமா, நீங்க எப்படி இருக்கீங்க அத்த?” என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்து நலம் விசாரித்தாள்.

“ம்ம், இருக்கோம்” என்ற அத்தையின் பதிலில் அப்படியே திரும்பி வீட்டுக்கு ஓடி விடும் உத்வேகம் அவளுக்கு எழ, அதை மறைத்து சிரித்து வைத்தாள் வேதா.

“வர்ஷி, இங்க வா” என்ற அண்ணனின் குரலில் திரும்பிப் பார்த்து புன்னகைத்து, கையில் இருந்த பழங்கள் அடங்கிய பையை அத்தையிடம் நீட்டினாள்.

“என்கிட்ட ஏன் குடுக்கிற? உங்க அண்ணிக்கு தானே வாங்கிட்டு வந்த? அவக்கிட்ட நீயே குடு” என்று அவள் நீட்டிய பையை வாங்காமல் நகர்ந்து விட்டார் அவர்.

வேதா வேறு வழியின்றிச் சமையல் அறை வாசலில் நின்றிருந்த அண்ணியிடம் சென்று பையைக் கொடுத்தாள்.

“எப்படி இருக்… இருக்கீங்க அண்ணி ஹெல்த் எப்படி இருக்கு?” அத்தை மகளாகப் பெயரிட்டு, ஒருமையில் அழைத்தே பழகியிருந்தாள். இப்போது மரியாதை விளிப்பு அத்தனை எளிதாய் வரவில்லை. பல மாதங்களாக முயல்கிறாள். ஆனாலும், முடியவில்லை.

“ம்ம்.” என்ற அண்ணியின் பதிலுக்கு மேலே என்ன பேச என்று தெரியாமல் வேதா முழிக்க, “வர்ஷி” என்று அழைத்தான் விஜய். அவளுக்கு இந்தச் சோக கீதம் வாசித்த அத்தை வீட்டினரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்றிருக்க, அண்ணனிடம் சென்றாள்.

“என்னாச்சு ண்ணா? ஏன் எல்லோரும் ஒரு மாதிரி சோகமா இருக்காங்க?” அவள் கேட்க, அவனிடம் பதிலில்லை.

“சாப்பிட்டியா?” என்று தங்கையை விசாரித்தான் அவன்.

“ம்ம். சாப்பிட்டுதான் வந்தேன் ண்ணா” அவள் வேகமாகப் பதில் கொடுக்கவும், “என்ன சாப்பிட்ட?” என்று குறுக்கு விசாரணை செய்தான் விஜய்.

வேதா மதிய உணவு உண்டிருக்கவில்லை. வெற்றியின் வீட்டில் காஃபி, சிற்றுண்டி சாப்பிட்டிருந்தாள். ஆனால், அதை அண்ணனிடம் சொல்ல முடியாதே. ஆக, “நான்தான் சாப்பிட்டேன்னு சொல்றேன் இல்ல ண்ணா. நீயென்ன நம்ப மாட்டியா?” என்று சமாளித்தாள் அவள்.

மெலிதான சிரிப்புடன் தங்கையின் முகம் பார்த்தான் விஜய்.

“சரி, என்ன சாப்பிட்ட சொல்லு. கேட்போம்”

“மறந்துப் போச்சு” என்று சிரித்தபடி கையை விரித்துச் சொன்ன வேதாவிற்கு, வெற்றியின் வீட்டில் உண்ட வடை, கேசரி, கேக் என அனைத்தும் வரிசையாக ஒன்று விடாமல் நினைவில் வந்தது.

கூடவே வெற்றியும் வந்தான். அவனது அறையைச் சுற்றிக் காட்டினான். “உன்கிட்ட முக்கியமான நிறைய விஷயங்கள் சொல்லணும் வேதா” என்று அவளின் கைப் பிடித்து அவனைப் பற்றி நிறைய, நிறையப் பகிர்ந்து கொண்டான். ஒற்றை நொடியில் ஆவடி சென்று அவள் வெற்றியுடன் நடந்து கொண்டிருக்க, “வர்ஷி, வெளில சாப்பிட போவோமா?” என்று கேட்டான் விஜய்.

அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு நிகழ்விற்கு வந்து அண்ணனை திரும்பிப் பார்த்தாள் வேதா.

“என்னாச்சு ண்ணா? வீட்ல ஏதாவது பிரச்சனையா?” அவள் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தான் விஜய். அவன் பால்கனியை நோக்கி நடக்க அவளும் பின் தொடர்ந்தாள். அங்கிருந்துப் பார்க்க, வெற்றி அவளை இறக்கி விட்ட இடம் தெளிவாகத் தெரிந்தது.

ஒரு நொடி இதயம் எகிறித் துடிக்க, எச்சில் கூட்டி விழுங்கினாள் வேதா. அண்ணி அவர்களைப் பார்த்திருப்பாளோ என்ற சந்தேகம் வர, பார்த்தால் என்ன? எப்படியும் வீட்டில் சொல்லத் தானே போகிறோம் என்று தன்னைத் தானே திடப்படுத்திச் சமாதானப்படுத்திக் கொண்டாள் அவள்.

வேதா என்றைக்குமே அத்தை வீட்டில் சாப்பிட விரும்ப மாட்டாள். அப்படியே சாப்பிடும் நிலை வந்தாலும், ஒன்று எப்படியாவது தவிர்க்க பார்ப்பாள். இல்லையேல் ஒரு அளவோடு உண்டு எழுந்து விடுவாள் என்பதை நன்றாக அறிவான் விஜய். அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவளுக்குச் சரியாக உண்ண கொடுக்கவில்லை என்றுதான் முதன்முதலில் அத்தையிடம் வாயாடினாள் தங்கை.

அதே நேரம் அவனுக்குத் தனிக் கவனிப்பு கொடுத்த அத்தையை அவளுக்கு அதிகமாகப் பிடிக்காமல் போனதில் அவனுக்கு ஆச்சரியம் ஏதுமில்லை.

“வேதா.. இந்தா.. ஜூஸ் குடி” ஒரு தட்டில் மூன்று பழச்சாறு நிரம்பிய குவளைகளுடன் அங்கே வந்தாள் அண்ணி.

“தேங்க்ஸ் அண்ணி” என்று வேதா ஒன்றை எடுத்துக் கொள்ள, விஜய் மௌனமாய் மனைவி கையில் இருந்து வாங்கி அருந்தத் தொடங்கினான்.

அண்ணா, அண்ணிக்கு நடுவில் அதிகச் சத்தமாக இருந்த மௌனம் அவள் காதில் அறைந்து தொந்தரவு செய்தது.

அவர்களுக்குத் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கூட முடியாத நிலையில், இதென்ன மௌன விரதம்? என்று கோபமாக வந்தது. ஆனால், அவரவர் பிரச்சனை அவரவருக்குப் பெரியது. அதில்தான் தலையிட முடியாது என அமைதியாய் இருவரையும் பார்த்திருந்தாள் வேதா.

அண்ணி அங்கு நிற்கும் போதே, “எனக்கு உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ண்ணா” மெல்லிய தயக்கத்துடன் சொன்னாள். அங்கு நிலவிய ஒருவித சோக சூழல், அவளின் காதலை பற்றிப் பேச சரியான நேரமில்லை என்று அவளுக்கு உணர்த்தவே செய்தது. ஆனாலும், அண்ணனிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை வேதா.

அதிலும், அண்ணி அவர்கள் ஒன்றாக வந்து இறங்கியதை பார்த்திருக்கும் வாய்ப்புகள் இருக்கும் போது, அண்ணனிடம் இப்போதே சொல்லி விடுவது உத்தமம் என்று நினைத்தாள் அவள்.

அவள் அண்ணனின் முகம் பார்க்க, “நானும் உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும் வர்ஷி” என்றான் விஜய்.

“ம்ம். சொல்லு ண்ணா” என்றாள் வேதா. மற்ற நேரமாக இருந்திருந்தால், “நான்தான் முதலில் சொல்வேன்” என்று குதித்திருப்பாள். இப்போது நிதானமாகக் கேட்க, விஜய் தங்கையை நேராகப் பார்த்து, “காலைல அப்பா பேசினார். உனக்குப் பார்த்திருக்க மாப்பிள்ளை ஃபோட்டோ எல்லாம் எனக்கு அனுப்பி இருக்கார். வீட்ல ஒரு மூனு பேரை ஓகே பண்ணியிருக்காங்க. என்னோட ஒப்பினியன் கேட்டாங்க.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அறை வாசலில் வந்து நின்று, “சாப்பிட வாங்க மாப்பிள்ளை. நீயும் வா வேதா” என்று சத்தமாக அழைத்தார் அத்தை. விஜய்யின் பேச்சு அப்படியே தடைப்பட்டுப் போனது.

வேதாவிற்கு மனம் படபடவென அடித்துக் கொண்டது. அப்பா மாப்பிள்ளை பார்த்து விட்டாரா? என்று அவள் தவித்துக் கொண்டிருக்க, “வா வேதா. சாப்பிட போகலாம்” என்று அழைத்தாள் அண்ணி.

“இப்போ தானே ஜுஸ் குடிச்சோம். எனக்கு லஞ்ச் வேண்டாம் அண்ணி. கொஞ்ச நேரம் போகட்டுமே” காரணத்தோடு மறுத்தாள் வேதா.

“இவளுக்கு லஞ்ச் வேண்டாமாம் ம்மா. நாம சாப்பிடலாம். நீங்க எடுத்து வைங்க” என்றாள் அண்ணி.

மூவரும் ஒன்றாக ஹாலுக்குச் சென்றனர்.

உணவு மேஜையில் தயாராக உணவு பாத்திரங்கள் நிறைந்திருந்தாலும், இரட்டை சோபாக்களை நிறைத்திருந்தவர்களின்‌ கண்கள் தொலைக்காட்சியின் மேலேயே பதிந்திருந்தது.

“அப்புறம் வேதா, பேங்க் வேலை எல்லாம் எப்படிப் போகுது?” மாமா பார்க்கும் போதெல்லாம் கேட்பதை போன்று இன்றும் விசாரிக்க, “நல்லா போகுது மாமா” புன்னகையுடன் பதில் சொன்னாள் வேதா.

“அசிஸ்டன்ட் மேனேஜர். சொல்லவே பெருமையாதான் இருக்கு. அப்புறம், எப்போ உன் வேலை பெர்மனன்ட் ஆகும்?” பத்தாவது முறையாகப் பாராட்டி கேட்கிறார் மாமா.

“ரெண்டு வருஷம் ஆகணும் மாமா. எனக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கு” கணக்குடன் பதில் சொன்னாள்.

“ம்ம். என்ன பெரிய பேங்க் வேலை? உனக்குப் பார்க்கிற வரன் எல்லாம் பேங்க் வேலை பார்க்கிற பொண்ணான்னு கேட்டு வேணாம்னு சொல்றானுங்களாம். உங்கம்மா புலம்பிட்டு இருந்தா” திடீரென்று அத்தை சொல்ல, வெடுக்கென்று அலைபேசியில் இருந்து நிமிர்ந்து அவரைப் பார்த்தான் விஜய்.

“சின்னப் பிள்ளைகிட்ட போய் என்ன பேசிட்டு இருக்க நீ? பொண்ணுக்கு வரன் பார்க்கும் போது ஆயிரம் நொள்ளை நொட்டை வரும்தான். அதையெல்லாம் பசங்க கிட்ட சொல்லலாமா?” அத்தையைக் கடிந்து கொண்டார் மாமா.

‘நீங்க இந்த வீட்ல வாக்கப்பட வேண்டிய ஆளே கிடையாது மாமா’ மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் வேதா.

அத்தை கணவரை முறைத்து முகத்தைக் கோபமாகத் திருப்பித் தொலைக்காட்சியைப் பார்த்தார்.

அடுத்தக் கணமே திரும்பி அவளைப் பார்த்து, “இந்த வாரம் வீட்டுக்கு போகலையா நீ?” என்று கேட்டார்.

“போகல அத்த. அம்மா என்னை வீணா அலைய வேண்டாம்னு சொன்னாங்க. அடுத்த வாரம் இல்லனா அதுக்கு அடுத்த வாரம் லீவ் இருக்கும். அப்போ வீட்டுக்கு போகணும்” வேதா சொல்ல,

“ஓஹோ?” என்று நக்கலாகச் சொல்லி, “இந்தா இருக்க விருதுநகருக்குப் போறது ரொம்பத் தூரமா? உனக்கு அது அலைச்சலா?” அவர் கோபம் போலக் கேட்க,

“இல்லத்த..” என்று தொடங்கினாள் வேதா. அவர் எங்கே அவளைப் பேச விட்டார்.

“உங்க அண்ணியை உடம்பு சரியில்லாத உங்க வீட்டு மருமகளை எப்படியும் போன்னு என் கூட இங்க அனுப்பிட்டு, அவங்க ஊருக்கு கிளம்பியாச்சு. அவ்ளோதான் உங்கம்மாக்கு மருமக மேல அக்கறை. இதுவே உனக்கு ஒன்னுன்னா இப்படி அம்போன்னு விட்டுட்டு போவாங்களா? இவ ஊருக்குப் போறது அலைச்சலாம் அலைச்சல். இங்க ஒருத்தி இரண்டு மாச பிள்ளை கலைஞ்சு அழுதுட்டு இருக்கா. அது பெருசா தெரியல. நாளைக்கு உனக்கு இப்படி ஆனா…” அத்தை ஆவேசமாகப் பேசிக் கொண்டே போக , “அத்த, என்ன பேசுறீங்க?” என்று அவரை அதட்டி அடக்கினான் விஜய்.

“அதானே. இந்த மகாராணியை எதுவும் பேசிட கூடாதே. இவளுக்கு மட்டும் எப்பவும் தனி ரூல்ஸ் உங்க வீட்ல” என்று முகத்தைத் திருப்பி மகளைப் பார்த்து புலம்பினார் அவர்.

அத்தை சொல்வது போல அவள் வீட்டில் அவளுக்கென்று தனி விதிகள் உண்டுதான். அவளை வீட்டிலேயே விலங்கு பூட்டி, கட்டிப் போட்ட விதிகள் அவை. ஒவ்வொரு முறையும் அதை உடைக்க எத்தனை போராடி இருக்கிறாள் அவள் என்பது அவளுக்கும் தெரியும். அவருக்கும் தெரியும். அதனால் அவர் பேசுவது அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தவில்லை.

error: Content is protected !!
Scroll to Top