ரோஜா, இளமாறன் ஆளுக்கொரு பக்கமாக ஓடினாலும், இறுதியில் ஒன்றாக இளைப்பாறினார்கள்.
“என்ன ரோஸ் குட்டி? உன் சேவியர் காம்ப்ளக்ஸ் உனக்குச் செம்ம அடி வாங்கிக் கொடுத்துடுச்சு போல” மாலை தேநீருடன் அமர்ந்திருந்த தங்கையை அலைபேசியில் வம்பிழுத்தாள் நித்யா.
“ஏய், நித்திக்கா. அது நீ கொடுத்த ஐடியாதான். ஞாபகம் இருக்கா? நான் வாங்கின அடியை எல்லாம் பத்திரப்படுத்தி வச்சுருக்கேன். நீ ஊருக்கு வா, உன்கிட்ட எண்ணிக்கை குறையாம கொடுக்கறேன்” ரோஜா பதிலடி கொடுக்க, சிரித்தாள் நித்யா.
“இங்க பாரு ரோஜா. நாம நல்லது நினைச்சு செஞ்சோம். அது ஒன்னும் கெடுதலா முடியல இல்ல? அப்புறம் என்ன? ஃப்ரீயா விடு”
“ம்ம். நமக்கு நடக்காத வரை எல்லாமே செய்திதான். நமக்கு வலிக்காத வரை அத்தோட விபரீதம் புரியப் போறதில்லை” என்ற ரோஜா, “போதும் கா. இனி நான் எதுலயும் தலையிடுறதா இல்ல” என்று முடிவாகச் சொன்னாள்.
‘நமக்குக் கல்யாணமாகி நாலு மாசம்தான் ஆகுது. நாம இன்னமும் ஹனிமூன் பீரியடில்தான் இருக்கோம். ஞாபகம் வச்சுக்கோ’ சமீப இரவொன்றில் கணவன் சொன்னது அவள் நினைவில் வந்து, அவள் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது.
மறுபக்கம் நித்யா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
“சரியான முடிவு ரோஸ் குட்டி. பொதுவா மாமியார் வீடுன்னா ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதுல முக்கியமான சண்டையே மகனை வச்சுத்தான் இருக்கும். மருமக, எங்ககிட்ட இருந்து மகனைப் பிரிக்கப் போறான்னு பயப்படுவாங்க மாமியார். ஆனா, நீ அவங்க ரெண்டு பேரையும் சேர்க்கப் போராடிட்டு இருக்க. ம்ம், விடு ரோஸ். நீ உன்னையும், செஃப்பையும் பத்தி மட்டும் யோசி. போதும். சில நேரம் சுயநலமா இருக்கலாம். தப்பில்லை.”
“ம்ம். நாங்க அவங்க கூட இல்லைனாலும், தினமும் அவங்களைப் பார்க்கிற மாதிரி இருக்கு நித்திக்கா. ஒரு லிமிட் செட் பண்ணிக்க டிரை பண்றேன். அதான் எல்லோருக்கும் நல்லது.” ரோஜா சொல்ல,
“மத்த எல்லாத்தையும் விட நம்ம மன நிம்மதி ரொம்ப முக்கியம் ரோஸ். அதுனால நீ ஃபீல் பண்ணாத” என்றாள் நித்யா.
“ம்ம், சரிக்கா”
“நான் இதைச் சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன். ஆனா, சொல்லாம இருக்க முடியல ரோஜா”.
“என்னது கா?”
“நீயொரு முரணை கவனிச்சியா? நம்ம அம்மா, அப்பா நல்ல புரிதலுள்ள, ஆத்மார்த்தமான, ஆதர்ச ஜோடியா இல்லாம இருக்கலாம். ஆனா, நமக்கு அவங்க ரொம்ப ரொம்ப நல்ல பெற்றோர். அதே நேரம் உங்கத்தையும், மாமாவும், வாவ் சொல்ல வைக்கிற, பயங்கர அன்பும், புரிதலும் இருக்கிற தம்பதிகள். ஆனா, அவங்க பெற்றோரா? ப்ச், சாரி ரோஜா. நான் அவங்களைக் குற்றம் சொல்ல விரும்பல. என் மனசுக்குப் பட்டதைச் சொன்னேன்.” நித்யா சொல்லி விட்டு அமைதியாக, அந்த அமைதி ரோஜாவிடமும் பிரதிபலித்தது.
நித்யா சொன்னது உண்மைதான். அப்படியொரு சூழலில், அரவணைப்பான பெற்றோரின் அன்பில் வளர்ந்ததால்தான் அவள் மனம் நிறைய விஷயங்களில் முரண்டியது.
தனக்குக் கிடைத்த அதே அன்பு, கணவனுக்கும் கிடைக்க வேண்டும் என்று அவள் நினைத்ததில் தவறேதும் இல்லை. ஆனால், அவள் மட்டும் நினைத்தால் போதாதே.
“ரோஜா..”
“ம்ம். உண்மைதான் நித்திக்கா. சரி, நான் போனை வைக்கிறேன். நீ உடம்பை பார்த்துக்கோ.” என்று ரோஜா சொல்ல, மீண்டும் தங்கைக்கு அறிவுரை சொல்லி அழைப்பை துண்டித்தாள் நித்யா.
ரோஜாவின் அதீத வேலை பளுவை சமீபமாக அதிகரித்துக் கொண்டிருந்தான் ரகுவரன்.
அவனுக்குக் கொடுத்த வாக்கை காப்பதற்காக, கூடுதல் நேரம் செலவழித்து உதவினாள் ரோஜா.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தினம் தவறாமல் அவளைச் சந்திக்க வந்து விடுவான் அவன். இளமாறனின் விடுமுறை தினம் என்றால் அவனும் தன்னாலான உதவியை அவனுக்குச் செய்தான். அதற்குப் பலனிருந்தது.
இதோ இன்று உணவகத் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழுடன் வந்து விட்டான் ரகுவரன்.
“நான் உனக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது ரோஜா, உன்னாலதான் என் கனவு நனவாகியிருக்கு. செஃப் உங்களுக்கும் தேங்க்ஸ்” இளமாறனின் கைப் பற்றி அவர்கள் இருவருக்கும் நன்றி சொன்னான் ரகுவரன்.
“ஆல் த பெஸ்ட்” என்றனர் இருவரும்.
“தேங்க்ஸ். தாத்தா ரொம்ப ரொம்ப ஹேப்பித் தெரியுமா ரோஜா? நீங்க சொன்னதைக் கேட்டு நான்வெஜ் ஹோட்டல் ஆரம்பிக்காம, சுத்த சைவம் தொடங்கப் போறதில் அவருக்குப் பயங்கரச் சந்தோஷம்” என்று ரகுவரன் சொல்ல,
“அந்த ஏரியால ஏற்கனவே ரெண்டு நான்வெஜ் ஹோட்டல் இருக்கு ரகு. அங்கேயே நீங்களும் தொடங்கினா போட்டி அதிகமாகுமே தவிர, பொருள் விக்காது. மூனு சாய்ஸ் இருந்தா கஸ்டமர் உங்ககிட்ட வர மாட்டாங்க. அதுவே ரெண்டு நான்வெஜ் ஹோட்டல் இருக்கிற இடத்தில நாம சைவ ஹோட்டல் ஆரம்பிச்சா, நாம தனிக் காட்டு ராஜா. அதுவும் இல்லாம, அமிர்தா பவனுக்குன்னு ஒரு பேரும், பாரம்பரியமும் இருக்கு ரகு.” ரோஜா முடிக்கும் முன்பே இடைமறித்து,
“ஒருவேளை நான் இந்த முயற்சியில் தோத்துப் போனா அவ்வளவுதான். என் தாத்தா தலை குனியற மாதிரி ஆகிடும்.” என்று பயத்துடன் சொன்னான் ரகுவரன்.
“பயம் நல்லது ரகு. பயம் நம்மைச் சரியான பாதையில் போக வைக்கும். பயம் தோல்வியை, அவமானங்களைச் சந்திக்கிற திடத்தை நமக்குத் தரும்.” இளமாறன் சொல்ல, “நெஞ்சு நிறையப் பயம் மட்டுமே இருக்கு செஃப்” என்ற ரகுவரனின் குரலில் நிச்சயமாய்ப் பயமும், வெற்றிக்கான முதல் படியும் இருந்தது.
அவர்களிடம் பவ்வியமாகப் பத்திரிக்கையைக் கொடுத்தான் ரகுவரன். அத்தோடு கூடவே ரோஜாவின் பெயருக்கு அவன் காசோலை ஒன்றையும் தர, அதை வாங்க மறுத்தாள் ரோஜா.
“என்ன ரகு இது? நான் ஹெல்ப் பண்ணதுக்குக் காசு தர்றீங்க? நல்லால்ல சொல்லிட்டேன்” அவள் கோபிக்க,
“ரோஜா, நான் பிசினஸ்ல தாத்தாட்ட கத்துக்கிட்ட பாலபாடம் என்ன தெரியுமா? சின்னதோ, பெருசோ உழைப்பை மதிக்கணும். அதுக்கான ஊதியத்தை சரியா கொடுக்கணும். அதுனால, வேணாம்னு சொல்லாம பிளீஸ் வாங்கிக்கோ. இது உன்னோட உழைப்புக்கான பணம்” ரகுவரன் வற்புறுத்த, ரோஜா திரும்பி கணவனைப் பார்த்தாள்.
“இது பெரிய அமௌன்ட் ரகு”
“எனக்கு ரெஸ்டாரண்ட் செட் பண்ணித் தரேன்னு சொன்ன கம்பனி, இதை விட மூனு மடங்கு அதிகமா பணம் கேட்டாங்க ரோஜா. அப்படிப் பார்த்தா, நான் உனக்குக் கொடுக்கிறது ரொம்பக் கம்மி.” அப்போதும் அதை வாங்கவில்லை ரோஜா. இளமாறன் அமைதியாக நிற்க, அவனை முறைத்தாள் ரோஜா.
ரகுவரன் கட்டாயப்படுத்தி அவளிடம் காசோலையை நீட்ட, இளமாறன் சொல்லவும், விருப்பமில்லாமல் வாங்கிக் கொண்டாள் ரோஜா.
“அப்புறம் அடையார் பேலஸ் எப்படி இருக்காங்க?” ரோஜா கேட்க, சிரித்தான் ரகுவரன்.
“அமிர்தா பவனும், அடையார் பேலஸும் அடிக்கடி மீட் பண்றாங்க ரோஜா” இளமாறன் இளநகையுடன் சொல்ல, “ரகு, உங்க ஆளுக்கு, என் ஆளை சமைக்க விடாதீங்க” என்று விரல் நீட்டி அவனை மிரட்டினாள் ரோஜா.
“நம்ம ஹோட்டல்ல இல்ல ரோஜா. நான் இவங்களை வேற இடத்தில ஜோடியா பார்த்தேன்” இப்போது சீண்டலாக இளமாறன் சொல்ல,
“ஐயோ, ஆளை விடுங்கப்பா” என்று கையை உயர்த்திக் கத்திய ரகுவரன், “அடுத்த மாசம் மறக்காம திறப்பு விழாவுக்கு வந்துடுங்க. நீங்க இல்லாம ரிப்பன் வெட்ட மாட்டேன்” என்று மீண்டும் அவர்களை அழைத்து விட்டுச் சென்றான்.
மறுமாதமே சிறப்பாகத் திறப்பு விழா நடந்து, உணவகம் நன்றாக, நிறைந்த வாடிக்கையாளர்களுடன் செயல்படத் தொடங்கியது.
இளமாறனுக்கும் ஐந்து நட்சத்திர விடுதியில் வேலை சற்று குறைந்து இப்போது அவனால் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடிந்தது.
அவர்களுக்குத் திருமணம் முடிந்து முழுதாக ஆறு மாதங்கள் கழித்துத் தேனிலவு செல்ல திட்டங்கள் தீட்டினான் இளமாறன்.
“இப்பவா இளா? என்ன திடீர்னு பிளான் பண்றீங்க? நாம வெளியூர் போனா ரெஸ்டாரண்ட், கேன்டீன் எல்லாம் யார் பார்ப்பா செஃப்?” என்று கவலையுடன் கேட்ட மனைவியைக் கண்டனத்துடன் முறைத்தான் அவன்.
“இப்பத்தான் நமக்கு டைம் கிடைச்சிருக்கு. நான் என்ன வேணும்னு பிளான் பண்ணாமயா இருந்தேன்?” அவன் கேட்க, உதடு சுளித்தாள் ரோஜா.
“இட்டாலியா, டர்க்கியா?” மடிக் கணினியில் கண்களைப் பதித்தப்படி அவன் கேட்க, “பாரிஸ்” என்றாள் ரோஜா. அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்து,
“ஓகே. அப்போ செங்கன் விசா அப்ளை பண்ணுவோம். இட்டாலி மூனு நாள், பாரிஸ் நாலு நாள் பிளான் பண்ணலாம். ஓகே தானே?” அவன் கேட்க, புன்னகையுடன், “நிஜமாவா?” என்றாள்.
“என்னடி வேணும் உனக்கு?”
“இட்டாலி போகலாம். அது உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச நாடு. இல்லையா இளா?”
“ம்ம். அவங்க புஃட் பிடிக்கும். வேர்ல்ட்ஸ் பெஸ்ட் புஃட் இல்லையா?” என்று அவளிடம் கேட்டபடியே ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினான்.
மறுநாளே மனைவியை அழைத்துச் சென்று விசாவிற்கு விண்ணப்பித்தான். அது வர குறைந்த பட்சம் பத்து நாட்கள் ஆகும் என்பதால் காத்திருக்கத் தொடங்கினார்கள்.
ரோஜா மிகப் பொறுப்பாக அவர்களின் திருமணத்தின் போது நித்யா பரிசளித்த கவர்ச்சியான இரவு உடையை எடுத்து வைத்தாள்.
அதைப் பார்த்ததும், “என்னடி பண்ற? இத்தனை நாள் இதை எங்க ஒளிச்சு வச்சுருந்த? இப்போ போட்டுக் காட்டேன்” என்று கண் சிமிட்டினான்.
அவள் கவனிக்காதது போலப் பெட்டி அடுக்க, “இதுக்கெல்லாம் நேரம் காலம் பார்ப்பாங்களா ரோஜா? கல்யாணமான முதல் ஆறு மாசம் ஹனிமூன் பீரியட்தான், சொல்லியிருக்கேன் இல்ல? அதை வெளில எடுடி, பிளீஸ்” என்று மனைவியைச் சீண்டினான்.
“பேசாம இருங்க இளா” என்றவளின் குரலில் வெட்கம் கொட்டிக் கிடந்தது.
“ரொம்பப் பண்ற டி. எப்படி இருந்தாலும் எனக்குத்தான்…” எட்டி அவன் வாயை மூடி முறைத்தாள் ரோஜா. அவளின் உள்ளங்கையில் வெப்பமாய் முத்தம் வைத்தான். முத்தம் மோகம் வளர்த்து, காமம் பரிமாறச் செய்தது.
ஒரு வாரம் கழித்து ரோஜா அவசர அவசரமாகக் கணவன் வேலை பார்க்கும் ஐந்து நட்சத்திர விடுதிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
அன்றிரவு ஒரு முக்கிய விழாவில் கலந்து கொள்ள அவளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஹோட்டலின் ஜெனரல் மேனஜர் மகளுக்குத் திருமணம் முடிந்திருக்க, அன்றிரவுதான் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது.
அதற்கு ஹோட்டலின் முக்கியப் பதவியில் இருப்பவர்களின் குடும்பங்களுக்கும் சிறப்பு அழைப்பு வைத்திருந்தார் ஜெனரல் மேனஜர்.
இளமாறன் அங்கே உணவு பொறுப்பில் இருக்க, ரோஜா முன்பு அவன் பரிசளித்த டிசைனர் உடையில் தயாராகி ஹோட்டல் சென்றாள்.
அங்குச் சென்றதும் மணமக்களை வாழ்த்தி, கணவனை எதிர்பார்த்து ஒதுங்கி நின்றாள்.
“காதல் ரோஜாவே…” அப்பாடலை மெலிதாக விசிலடித்தபடி மனைவியின் இடையில் உரிமையாய் கை வைத்து, “ஹாய் ரோஜா” என்று வந்து நின்றான் இளமாறன்.
அவனை விழி விரித்துப் பார்த்து, “ஹலோ செஃப்” என்றவள், கணவனைக் கூச்சமின்றி அந்தக் கூட்டத்திலும் கண்கள் விரிய, ரசித்து நின்றாள்.
அவன் முழுச் செஃப் சீருடையில் இருந்தான். ஆனாலும் அவள் கண்களுக்குக் கவர்ச்சியாகத்தான் தெரிந்தான்.
“பசிக்குது செஃப்” என்று அப்பாவியாகச் சொன்ன மனைவியை அப்படியே கண்டு கொண்டான் இளமாறன்.
“கேவலமா பொய் சொல்லாத ரோஜா” என்றான் புன்னகையுடன்.
“வீட்ல சமைக்க மாட்டேன்னு சீன் போடுவீங்க இல்ல? இப்போ என்ன பண்ணுவீங்க? இன்னைக்கு உங்க புட் தானே?” கண்ணைச் சுருக்கி, நாக்கை நீட்டி பழிப்பு காட்டியவளை மொத்தமாகக் கட்டிக் கொள்ளச் சொன்னது அவன் மனது.
“நீ வா, நாம போய் விஷ் பண்ணிட்டு வருவோம்” என்று அவளை இழுத்துக் கொண்டு போனான் இளமாறன்.
அவன் அறைக்குச் சென்று மனைவி எடுத்து வந்திருந்த மாற்றுடையை அணிந்தான். அதன் பின்னர் இருவரும் சென்று மணமக்களை வாழ்த்தி, பரிசளித்து, கொண்டாட்டங்களில் கலந்துக் கொண்டார்கள்.
ரோஜா பல மாதங்கள் கழித்துக் கணவன் சமைத்த உணவை ரசித்து ருசித்தாள்.
“இந்த லாப்ஸ்டர் (Lobster) செம்ம டேஸ்ட் செஃப்”
ஒவ்வொரு உணவையும், சிலாகித்து, பாராட்டி அவள் உண்ண, “போதும் ரோஜா” என்று எச்சரித்தான் இளமாறன். ரோஜா கேட்பதாக இல்லை.
உணவுடன் கூடவே மாக்டெயில் அருந்தி, விருந்தினர்களோடு இணைந்து நடனமும் ஆடினார்கள்.
“இளா, வீட்டுக்குப் போகலாம்” அவளின் சோர்வான குரலில் சுதாரித்து, உடனே வீட்டிற்குக் கிளம்பி விட்டான் இளமாறன்.
அவர்கள் வீடு வருவதற்குள் இருமுறை வாந்தி எடுத்து, சோர்வுடன் காரின் இருக்கையில் கண் மூடி அமர்ந்திருந்த மனைவியைப் பார்க்கையில் அவனுக்குப் பதறியது.
“லாப்ஸ்டர் ஒத்துக்கல போல இளா. வேற ஒன்னும் இருக்காது. பயப்படாதீங்க” கண்களை மூடியபடி சொன்னவளை அவனால் கரிசனத்துடன் மட்டுமே பார்க்க முடிந்தது.
ரோஜா வீடு வந்து குளித்து, தளர்வான உடையணிந்து, காற்றோட்டமாக அமரவும், அவள் முகம் சற்றே தெளிந்தது.
ஆனால், அசதியும், சோர்வும் அவளைச் சற்று நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்த்தியது.
மறுநாள் காலை அவளை எழுப்பித் தொல்லை செய்து விடக் கூடாதென்று, சத்தமின்றி வேலைக்குக் கிளம்பினான் அவன்.
“இளா” கண்களைக் கசக்கி தூக்கத்தை விரட்டியபடி, கணவனைப் பார்த்தாள் ரோஜா.
“எழுந்துட்டியா ரோஜா? இப்போ எப்படியிருக்கு?”
“பெட்டர்”
“நீ இன்னைக்கு வீட்லயே இருந்து ரெஸ்ட் எடு. நான் மாமாக்கு கால் பண்ணி சொல்லிடுறேன். சரியா?”
“ம்ம்”
“அப்புறம் நீ எதுவும் சமைக்க வேணாம். அத்தைகிட்ட ஏதாவது லைட்டா சமைச்சு எடுத்துட்டு வரச் சொல்றேன். என்ன?”
“நீங்க செஞ்சு தாங்க” பிடிவாதமாகக் கேட்டாள்.
“நேத்து என் டீம் சமைச்சதை சாப்பிட்டுதான் இப்படிப் படுத்திருக்க, ஞாபகம் இருக்கு தானே?” என்று பல்லை கடித்துக்கொண்டு கடுப்புடன் கேட்டவன், “அத்தையைச் சீக்கிரமா சாப்பிட கொண்டு வரச் சொல்றேன். நீ அதுவரை நல்லா தூங்கு. ஓகே?” அதட்டலாக அவன் கேட்க,
“வேற வழி?” என்று முணுமுணுத்தாள் ரோஜா. அவளின் முகத்தைக் கையில் ஏந்தி, முகம் முழுவதும் இதழ் தடம் பதித்து விட்டு விலகி வேலைக்குச் சென்றான் அவன்.
ரோஜா அறையின் குளிரை கூட்டி, போர்வையை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டு கண்களை மூடினாள்.
பட்டென ஒரு கை நீண்டு போர்வையை விலக்க, “இளா..” கணவனை அதிர்வுடன் விழி விரித்துப் பார்த்தாள்.
அவன் போன வேகத்தில் திரும்பி வந்து படுக்கையில் அவளுக்கு மிக நெருக்கமாக அமர்ந்து அவளின் கைப் பிடித்துக் கொண்டான். மெல்ல அவளின் இடையில் கைக் கோர்த்து நெருக்கமாக இழுத்தான்.
“என்ன செஃப்? சட்டென மாறுது வானிலை?” அவள் குறும்பாகக் கேட்க, “நம்ம வானிலை கூட மாறிடுச்சோன்னு எனக்கு ஒரு டவுட்?” என்று ரோஜாவின் காதில் கிசுகிசுத்தான்.
“என்ன புரியாத மாதிரி பேசுறீங்க?”
ரோஜா குழப்பத்துடன் கேட்க,
“நான் ஹனிமூன் பிளான் பண்ணும் போதே யோசிச்சேன். ஆனா, அப்படியே மறந்துட்டேன் ரோஜா”
“இளா..”
“இந்த மாசம் உனக்கு இன்னும் டேட் வரலை தானே?” அவன் தயக்கத்துடன் கேட்க, திடுக்கிடலுடன் அவனைப் பார்த்தாள் ரோஜா.
“அது வந்து..” என்று அலைபேசியை எடுத்துப் பார்த்தவள்,
“இளா.. ஆமா. சாரி. சத்தியமா எனக்கு ஞாபகமே இல்ல. நான் எப்படிக் கவனிக்காம விட்டேன்..”
“அதான் கவனிக்க நான் இருக்கேன் இல்ல? அந்தத் தேதிகள் எனக்குதான் முக்கியமான..”
“அச்சோ சென்சார் போடுங்க..” எட்டி அவன் உதட்டில் அடித்தாள்.
மறுகணம் இருவரும் ஒருவரையொருவர் இமைக்காது பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
“மெடிக்கல் ஷாப்…” என்று அவளும், “ஹாஸ்பிடல்” என்று அவனும் ஒரே நேரத்தில் ஆரம்பித்து அமைதியானார்கள்.
இளமாறன் கண்களில் எதிர்பார்ப்பு தந்த பதட்டமும், படபடப்பும் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவன் கண்களில் நிறைந்திருந்த பயத்துடன், “ரோஜா, ஒருவேளை..” என்று ஆரம்பிக்க, “இளா..” என்றழைத்து, அவன் பேச்சை நிறுத்தினாள் ரோஜா. அவளை இறுக அணைத்துக் கொண்டான் இளமாறன்.