நற்காதல் நெய்திடவா – 10 (1)

வேதா சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டு பின்னர் அறைக்குள் வந்தாள். சுடுநீரில் உடல் கழுவி ஈர உடையை மாற்றி அவள் வெளியில் வர, அவளது அலைபேசி அடித்தது.

வெற்றியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவள் எட்டி அலைபேசியை எடுக்க, அவளின் அண்ணன் விஜய் அழைத்துக் கொண்டிருந்தான்.

“ஹாய் விஜய் ண்ணா, எப்படி இருக்க?” அவள் நலம் விசாரிக்க, “சென்னையில் இருக்கேன் நான்” என்று சம்பந்தமில்லா பதிலை சொன்னான் விஜய்.

ஆச்சரியத்துடன், “எப்போ வந்தண்ணா? சென்னை வரேன்னு சொல்லவே இல்ல என்கிட்ட? நேத்து கூடப் பேசினேனே” என்று கேட்டு, அவள் கோபித்துக் கொள்ள, “ம்ம். நேத்து வர்ற பிளான் இல்ல வர்ஷி. என்னவோ திடீர்னு தோனவும் கிளம்பி வந்துட்டேன். மார்னிங் ப்ளைட்லதான் வந்தேன்” என்றான் அவன். உடல் நலமில்லாத மனைவியைப் பார்க்க வந்திருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. தான் இன்னும் சென்று அண்ணியைப் பார்க்கவில்லை என்பது அவளுக்குக் குற்ற உணர்ச்சியைத் தந்தது. அதனால் அண்ணனுக்கு விளக்கம் கொடுத்தாள்.

“நான் நாளைக்கு அண்ணியைப் பார்க்க வரலாம்னு இருந்தேன் ண்ணா. இன்னைக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட வெளில போய்ட்டேன். அதான். சாரி” அவள் தயக்கத்துடன் சொல்ல, “ம்ம். பரவாயில்ல வர்ஷி” என்றான் விஜய். ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு அத்தை வீடு பிடிக்காது. இப்போது தனக்கு அது மாமியார் வீடு என்பதால் மட்டும் எதுவும் மாறி விடாது என்பது அவனுக்குப் புரிந்தது.

“உன் வீட்டுக்கு நாளைக்கு வர்றேன். ஈவ்னிங் அங்க வந்துட்டு, அப்படியே அங்கருந்து ஏர்போர்ட் போய்டுறேன்” விஜய் சொல்ல, “வேணாம் ண்ணா.” என்று உடனே மறுத்து, “எனக்கு அண்ணியைப் பார்க்கணும். நான் அவங்க வீட்டுக்கு வர்றேன்” என்றாள் வேதா.

“ம்ம் ஓகே. அப்போ எனக்குக் கால் பண்ணிட்டு வா.” அவன் சொல்ல, சரியென்றாள் வேதா.

வாழ்க்கை சட்டென அவளை முக்கியக் கட்டத்தில் கொண்டு வந்து நிறுத்திய உணர்வு அவளுக்கு. அவள் சற்றும் எதிர்பாராத வேகத்தில் அனைத்தும் நடக்க, ஒருவித தயக்கமும், குழப்பமும் அவளைச் சூழ்ந்தது.

வெற்றி தன் விருப்பத்தைத் தெரிவித்து ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. அவள் சம்மதம் சொல்லி முழுதாக ஒரு நாள் கூடச் சென்றிருக்கவில்லை.

நாளையே வெற்றியின் குடும்பத்தைச் சந்திக்கப் போகிறாள் அவள்.

அதன் பின்னர் அண்ணனை சந்திக்க வேண்டும். அவனிடம் இது குறித்துச் சொல்வதா, வேண்டாமா? என்ற தயக்கம், அவளைத் தயக்கமில்லாமல் அப்பிக் கொண்டது. சில நேரங்களில், சில விஷயங்களை உடனே கையாளாமல் தள்ளி போட போட சிக்கலாகி போகும் என்பது அவளுக்குப் புரிந்தாலும், மனம் இந்த அதீத வேகத்திற்குப் பயணிக்க முடியாமல் தடுமாறியது.

அவளுக்கு வெற்றியின் மேல் நிரம்ப ஈர்ப்பு உண்டு. அவன் மேல் பிரியம் உண்டு. அவனைப் பிடித்தது. ஆனால், காதல். அது கேள்விக்குறிதான். அதிலும் எதையும் தாங்கும் காதல்? ம்ஹூம். அந்த எல்லையைக் கூடத் தொட்டிருக்கவில்லை அவள்.

அவள் அந்தக் கட்டத்தை அடைவதற்கு இன்னும் நிறையத் தூரம் கடக்க வேண்டியிருந்தது. இப்போதைக்கு இருவரின் விருப்பு, வெறுப்பு கூட ஒருவருக்கொருவர் தெரியாது என்பதே அவளுக்குப் பயத்தைத் தந்தது.

இந்தக் காதல், அவளுக்கு முழுமையான காதலை பரிசளிக்குமா? நாளை அவர்கள் வாழ்வில் வரப் போகும் அத்தனை இடர்களையும் தாங்கி, முன்னேறும் திடத்தை, அதற்கான புரிதலை தருமா? அவளுக்குத் தெரியவில்லை.

ஆனால், அவள் வெற்றியை நம்பினாள். அவனைக் காட்டிலும் அதிகமாகத் தன்னை நம்பினாள்.

அந்த நம்பிக்கை எதிர்வரும் நாட்களைச் சந்திக்கும் திடத்தை அவளுக்குத் தந்தது.

நாளை அண்ணனை சந்திக்க வேண்டும். அதே நேரம் வெற்றியின் குடும்பத்தையும் சந்திக்க வேண்டும். இரண்டும் ஒரே நாளில் சாத்தியமா என்று அவள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம் அவளின் சிந்தனையின் நாயகனே அவளை அழைத்தான்.

அவனது அழைப்பை ஏற்று, “சொல்லுங்க சார்” என்றாள்.

“சார் இல்ல. வெற்றி” என்றான் அவன்.

“ம்ம். எனக்கு அப்படிக் கூப்பிட வரல. கொஞ்ச நாள் போகட்டுமே”

“இல்லையே. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை ஒட்டிட்டு நிக்கும் போது வெற்றின்னு கூப்பிட்டியே…” அவன் குரலில் இருந்த சிரிப்பை அவன் முகத்தைப் பார்க்காமலேயே அவளால் உணர முடிந்தது.

“அப்படியா? கூப்பிட்டேனா? எனக்கு ஞாபகம் இல்லையே?”

“எம்மாடி வேதா, உனக்கு ஞாபகம் தானே? இருக்காது. இருக்காது. நான் பக்கத்தில வந்தா ஞாபகம் தன்னால வந்திடும். பார்க்கறியா? வரட்டுமா?” குறுஞ்சிரிப்புடன் அவன் கேட்க, “ஆத்தாடி, நானில்ல” வெற்றிகரமாக வெற்றியிடம் இருந்து பின் வாங்கினாள் வேதா.

“கேடி…” செல்லமாகத் திட்டினான்.

“நானே உங்களுக்குக் கால் பண்ணனும்னு இருந்தேன். நல்லவேளை நீங்களே கூப்பிட்டுட்டீங்க” அவள் குரல் தீவிரத்திற்கு மாறியிருக்க, “என்ன விஷயம் வேதா? நான் இவ்வளவு நேரம் அங்க தானே இருந்தேன். அப்பவே சொல்லியிருக்கலாமே? வேற ஏதாவது முக்கியமான விஷயமா?” அவன் வினவ,

“எனக்கு இப்பதான் எங்கண்ணா கால் பண்ணாங்க. சென்னை வந்திருக்காங்க. அவங்க மாமியார் வீடு, அதாவது எங்க அத்தை வீட்ல இருக்காங்க. அண்ணியைப் பார்க்க வந்திருக்காங்க. நாளைக்கு நான் அவங்க வீட்டுக்குப் போகணும். அத்தை வீடு அம்பத்தூரில் இருக்கு” படபடவென்று மொத்தத்தையும் ஒப்பித்தாள்.

“ஓ, ஓகே. ரைட்டு” என்றான் வெற்றி.

“நாளைக்கு உங்க வீட்டுக்கு நான் வரணும் இல்ல?” அவள் கேட்க, “இல்ல, அம்மா, அப்பாவை உன் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்.” என்றான் அவன்.

“அது மரியாதையா இருக்காது இல்ல வெற்றி சார்? பெரியவங்களை நான் வந்து பார்க்கறது தானே சரியா இருக்கும்?”

“எம்மாடி வேதா, இவ்வளவு சின்சியர் ஆகாது” அவன் நக்கலாகச் சொல்ல, இங்கே நாக்கை கடித்தாள் வேதா.

“பொண்ணு பார்க்க முறைப்படி பையன் வீடுதான் மா வரணும்” அவன் கேலியாகச் சொல்ல, “என்னது பொண்ணு பார்க்கவா? என்னையா? எங்கப்பாக்கு தெரிஞ்சது. அவ்வளவுதான். வானமாமலை, வீம்புமாமலை ஆகிடுவார்.” அவள் குரலில் நடுக்கம் வெளிப்பட, “வேதா, இவனுக்கு ஓகே சொன்னது தப்புன்னு நினைக்கறியா?” சட்டென அவன் மனதில் தோன்றிய கேள்வியைக் கேட்டு விட்டான் வெற்றி.

“நான் எப்போ அப்படிச் சொன்னேன்?. நான் அந்த அர்த்தத்தில் சொல்லல. எங்க வீட்டுக்கு தெரியாம என்னைப் பொண்ணு பார்க்க நீங்கன்னு இல்ல, யார் வந்தாலும்.. எங்க வீட்ல எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு கொஞ்சம் யோசிச்சு பேசுங்க வெற்றி சார். சட்டுனு கோபப்படாதீங்க.” நிதானமாகச் சொன்னாள் வேதா. அந்தக் குரலில் துளி காரம் இருக்கவே செய்தது.

“நான் பொண்ணு பார்க்க வர்றோம்னு ‍உன்னை சும்மா சீண்ட சொன்னேன் வேதா. ஆனா, யோசிச்சு பார்த்தா, அது அந்த முறையில்தான் வரும். என்ன பண்ணலாம்? நீ வந்து அம்மா, அப்பாவை மீட் பண்றது கூட நல்ல ஐடியாதான். நீ நம்ம வீட்டுக்கு வாயேன். எங்கம்மா, அப்பாவை, என் தங்கையை உனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க எல்லாம் ரொம்பப் பிரெண்ட்லி. நாளைக்குக் காலைல, ரெடியா இரு. நான், உன்னை வந்து பிக் அப் பண்ணிக்கிறேன். சரியா?”

அவனது கேள்விக்குப் பதில் சொல்லாமல், “வெற்றி” என்று அழைத்தாள்.

“என்ன வேதா?”

“அண்ணா இங்க அம்பத்தூர்ல தானே இருக்கான்? நாம இப்படிப் பண்ணலாமா? அண்ணா கிட்ட பேசி, அவனை இங்க வரச் சொல்லவா? இல்லனா, நாம அவனைப் போய் மீட் பண்ணி பேசலாமா?” மனதில் ஓடிய சிந்தனைகளை அப்படியே அவனிடம் தெரிவித்தாள்.

“அது சரியா வருமான்னு தெரியலையே வேதா. உங்கண்ணா, உன்னைப் போலவே, உங்க வீட்டை பத்தி யோசிக்கலாம் இல்லையா? நாம முதல்ல அவரை வேற கன்வின்ஸ் பண்ணனும். அவர்கிட்ட முதல்ல நம்ம லவ் விஷயத்தைச் சொல்லணும். அவர் கன்வின்ஸானாதான் மேல நமக்கு ஹெல்ப் பண்ணுவார்”

“அண்ணா கன்வின்ஸாகுறது ஒரு ஓரமா இருக்கட்டும். ஃபர்ஸ்ட் நான் இந்தக் காதல் என்னனு அனுபவிச்சு பார்த்துக்கறேன். அதைப் பத்தி எவ்வளவு வாசிச்சு இருப்பேன். அதைக் கொஞ்சமாவது நானும் உணர வேண்டாமா?”

“எம்மாடி வேதா, உணரலாமே. நான் அங்க வரவா?” சிரிப்புடன் கேட்டான்.

“ஆத்தி. நீங்க கேட்கிற டோனே சரியில்ல. ஏதோ வில்லங்கம் போல இருக்கு” என்றவள், “என் காதல் அற்ப காரணங்களுக்காகப் பிறந்து, அற்ப காரணங்களுக்காக அழி…”

“நோ.. வேதா.. சொல்லாத..” அவள் முடிக்கும் முன்பே கத்தினான் வெற்றி. வெறும் வார்த்தைகளுக்காகக் கூட அவன் காதல் அழிவதைப் பற்றிப் பேச அவன் விரும்பவில்லை. அவளுக்கு அவன் மனம் புரிந்தது.

“சாரி” என்றாள்.

“இட்ஸ் ஓகே வேதா” என்றவன், “நான் முதல்ல இன்னைக்கு நைட் எங்க வீட்ல பேசிட்டு உன்கிட்ட என்னனு சொல்றேன். உங்க அண்ணாகிட்ட பேசுறது பத்தி அதுக்கு அப்புறம் முடிவு பண்ணலாம். ஒருவேளை எங்க அப்பா, அம்மா கூட நேரா வந்து உங்கண்ணாகிட்ட பேச பிரியப்படலாம்.”

“ஓ.” அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“ம்ம். நான் பேசிட்டு சொல்றேன் வேதா. ஓகே?” என்று அவன் கேட்க,

“நான் வெயிட் பண்றேன்” என்று அழைப்பை துண்டித்தாள்.

ஒரே வாரத்தில் வெற்றி தன் பதிலுக்காகக் காத்திருந்தது போய், இப்போது வேதா அவனது பதிலுக்காகக் காத்திருப்பதை நினைக்கையில் அவளுக்குச் சிரிப்பாக வந்தது.

எந்த வேலையும் இன்றித் தனியாக அமர்ந்திருப்பது பிடிக்காமல் எழுந்து கௌசல்யா, காந்திமதி அறையை நோக்கி நடந்தாள் அவள். அவர்கள் மடிக் கணினியில் ஆங்கிலத் தொடர் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்க, அவளும் அவர்களோடு இணைந்துக் கொண்டாள்.

error: Content is protected !!
Scroll to Top