என் ஜீவனில் உறைந்திடு – 27 (2)

“எங்ககிட்ட எதையும் ஆசைப்பட்டுக் கேட்டதில்லை அவன். கல்யாணத்துக்கு உன்னைப் பொண்ணு கேட்க சொன்னதைத் தவிர.” இப்போது தன்னிச்சையாகப் புன்னகைத்தாள் ரோஜா.

“அவன் வேலைக்குப் போனதில் இருந்து எங்களுக்கு ஒரு அமௌண்ட் என் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிடுவான். மகனா அவன் கடமையை சரியா செஞ்சிட்டு வர்றான் இன்னைக்கு வரைக்கும்”

“உங்க அத்தையை அம்மான்னு சொல்லாதது மட்டும்தான் எங்களுக்குக் குறை. இருந்துட்டு போகட்டுமே. நாங்க பண்ண தப்புக்கு இவ்வளவு சின்னத் தண்டனை கூட இல்லைனா எப்படி? அதுவும் அது நாங்களே கேட்டு வாங்கின தண்டனை” அவர் கரகரத்த குரலில் சொல்ல,

“அவர் அப்படியெல்லாம் யோசிச்சிருக்க மாட்டார் மாமா. தண்டனை, உங்களை ஹர்ட் பண்ணனும்னு எல்லாம்.. அப்படி யோசிக்கிற ஆள் கிடையாது மாமா அவர்” கணவனுக்காக அவள் பரிந்து பேச அந்தத் தகப்பனின் முகத்தில் நிறைவான பூரிப்பு.

“உண்மைதான். மாறன் அப்படியெல்லாம் யோசிக்க மாட்டான்தான். ம்ம், இனி மேல் இதைப் பத்தியே நாம பேச வேண்டாம். நான் நிச்சயமா பேச போறதில்ல. நீயும் இதை மனசுல வச்சுக்காத மா. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்தா எங்களுக்கு அதுவே போதும்” என்றார் சங்கரன்.

“ரோஜா..” அவளை அழைத்தபடி இளமாறன் வர, மாமனாருடன் பேச்சை பாதியில் முடித்துக் கொண்டு கணவனை நோக்கி நடந்தாள் ரோஜா.

அனைவரையும் இரவு உணவிற்காகத் தங்கள் வீட்டிற்கு அழைத்தான் இளமாறன்.

அவர்கள் வீட்டிற்கு வந்து பல நாட்கள் ஆகியிருக்க, பெரியவர்களும் உடனே வந்தார்கள்.

வீட்டிற்கு வந்ததும் ரோஜா அவர்களை உபசரிக்கச் சமையல் அறைக்குச் செல்ல, அவளைப் பின் தொடர்ந்தார் சுகந்தி.

“ஃபர்ஸ்ட் காஃபி போடுறேன் அத்த. ஒரு எட்டு மணி போலச் சாப்பிடலாம். அதுக்குள்ள நான் டின்னர் ரெடி பண்ணிடுறேன்” என்றபடியே அவள் நடக்க, சுகந்தி பதிலேதும் சொல்லவில்லை.

அவள் திரும்பிப் பார்க்க, சுகந்தி சாப்பாட்டு மேஜையைப் பிடித்தபடி உறைந்து நின்றிருந்தார்.

அவரின் கண்கள் சுவரின் மேல் நிலைத்திருந்தது. அதிலிருந்த மகனின் கல்யாணப் புகைப்படங்களில் நிலைத்திருந்தது அவர் பார்வை.

முதலில் கண்களால் அந்தப் புகைப்படங்களைப் படமெடுத்துக் கொண்டார். பின் மெதுவாக நகர்ந்து, அப்புகைப்படங்களை அருகில் சென்று பார்த்தார்.

மகனின் புன்னகை ததும்பும் முகம் எத்தனை முறை பார்த்தாலும் அவருக்குப் போதவில்லை.

எந்த வயதிலும் அவர் தாய் தானே.

“அழகாயிருக்கு ரோஜா” என்றவரின் பார்வை அடுத்தப் பக்கத்தில் பதிந்தது.

சுகந்தி கையில் நான்கு வயது இளமாறனை தூக்கி வைத்திருந்தார். பொக்கிஷமான புகைப்படம்.

குழந்தை முகத்தில் கள்ளம் கபடமற்ற புன்சிரிப்பு, அவரை மொத்தமாக இழுத்துக் கொள்ள, கண்கள் கலங்க, நடுங்கும் கரங்களுடன் அந்தப் புகைப்படத்தை வருடினார் அவர்.

அதற்குப் பக்கத்திலேயே ரோஜாவின் புகைப்படம் இருந்தது. சித்ராவின் கைகளில் ரோஜா, ரோஜாப்பூ போலவே இருந்தாள்.

“எப்படி ரோஜா, இந்த ஃபோட்டோ எல்லாம்?” சுகந்தி ஆச்சரியத்துடன் கேட்டார்.

“அம்மம்மா காட்டின ஆல்பத்தில் இந்த ஃபோட்டோ இருந்தது அத்த. என் மொபைல்ல ஃபோட்டோ எடுத்து வச்சிருந்தேன். அதை இப்போ பிரிண்ட் போட்டேன். ஓரளவு நல்லா வந்திருக்கு இல்ல?”

“ஒரிஜினல் போலவே இருக்கு. சொல்லப் போனா அதை விடப் பெட்டரா இருக்கு ரோஜா. மாறனை நேத்துதான் கையில் வாங்கின மாதிரி இருக்கு. அதுக்குள்ள எவ்வளவோ நடந்துடுச்சு. ம்ம், காலம் எவ்வளவு வேகமா போகுது.” ஒரு பெருமூச்சுடன் சொல்லி முடித்தார்.

அந்நேரம், “ஹாய் அண்ணி” என்று உற்சாகக் குரலுடன் அங்கு வந்தார்கள் வினோத் மற்றும் வெண்பா.

ரோஜா அவர்களுக்குப் பதில் “ஹாய்” சொல்லி, நலம் விசாரித்தாள். இருவரும் வேலை முடித்து அப்போதுதான் வந்திருந்தார்கள்.

“நீங்க பேசிட்டு இருங்க. நான் எல்லோருக்கும் காஃபி போடுறேன்” என்று நகர்ந்தாள் ரோஜா.

அவள் பாலை அடுப்பில் ஏற்றி, காஃபி கோப்பைகளை எடுத்துக் கொண்டிருக்க, “ரோஜா அண்ணி, ஃபோட்டோஸ் செம்மையா இருக்கு” என்று கத்தினாள் வெண்பா.

“நம்ம வீட்ல இருக்கறதை விட இது ரொம்ப அழகாருக்கு இல்லம்மா?” என்று சுகந்தியிடம் கேட்டுக் கொண்டிருந்தான் வினோத்.

ரோஜா சட்டென அடுப்பைக் குறைத்து விட்டு வெளியில் எட்டிப் பார்த்தாள்.

“நம்ம வீட்லயா?” அவள் சந்தேகமாகக் கேட்க, “ஆமா, அண்ணி. நம்ம வீட்லதான்” என்றான் வினோத்.

அவளின் ஆச்சரியப் பார்வையைப் பார்த்து விட்டு, அவனது அலைபேசியை எடுத்து அதிலிருந்த ஒரு புகைப்படத்தைக் காண்பித்தான்.

அதில் அவனுடன் சுகந்தி, வெண்பா அமர்ந்திருக்கப் பின்னணியில் இருந்த சுவரில் வரிசையாகப் புகைப்படங்கள். அதில் பிரதானமாக இருந்த படத்தில் பதிந்தது அவள் பார்வை.

அவர்களின் திருமண மற்றும் வரவேற்பு புகைப்படங்கள். அவர்கள் குடும்பமாக நிற்கும் படங்களைப் பெரிதாக்கி காண்பித்தான் வினோத்.

“ஆல்பம் கொடுத்தப்போ சாப்ட் காப்பிக் கொடுத்தாங்க அண்ணி. அம்மா கேட்ட போட்டோஸ் அதுல இருந்து எடுத்துப் பிரிண்ட் போட்டு ப்ரேம் பண்ணேன்”

ஏனோ பட்டென மனம் லேசாக, பளிச்செனப் புன்னகைத்தாள் ரோஜா.

அவளோடு சமையல் அறைக்குள் நுழைந்தார்கள் சுகந்தி மற்றும் வெண்பா.

முதலில் அனைவர்க்கும் காஃபி கொடுத்து, சில மணி நேரங்கள் கழித்து இரவு உணவு உண்டார்கள்.

சுகந்தி இம்முறை தானே நின்று மகனுக்குப் பிடித்ததைச் சமைத்தார்.

ரோஜா தோசை, சப்பாத்தி, தேங்காய், மல்லி சட்னி, காய்கறி குருமா என்று எளிமையான இரவு உணவைத் தயாரிக்க, சுகந்தி மகனுக்காக அரிசி உப்மா செய்தார். அவரை ஆச்சரியத்துடன் பார்த்தாலும் அமைதியாக ஒதுங்கிக் கொண்டாள் அவள்.

இளமாறன், கஸ்தூரி, வைத்தியநாதன் அரிசி உப்மா, தேங்காய் சட்னியுடன் சாப்பிட, “இந்த அரிசி உப்மா உனக்கு ரொம்பப் பிடிக்கும், இல்ல மாறா?. வெண்கல உருளில செஞ்சா இன்னும் ருசியா இருக்கும். அப்போ எல்லாம் நாங்க நாள் முழுக்க எண்ணெயில் நின்னு விதவிதமா சமைச்சுட்டு வீட்டுக்கு வந்து சிம்பிளா இப்படி ஏதாவது சமைப்போம். ஆனா, அதைத்தான் நீ விரும்பி சாப்பிடுவ” என்று அந்த நாள் ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டார் கஸ்தூரி.

இளமாறன் அமைதியாக உண்ண, இளையவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள்.

“அண்ணா, உங்களோடது லவ் மேரேஜ் தானே? அண்ணியை முதல்ல எங்க பார்த்தீங்க?” வெண்பா கேட்க,

“நம்ம ஹாஸ்பிடல்ல..” என்று ரோஜாவும், “எனக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ..” என்று இளமாறனும் ஒரே நேரத்தில் வேறுவேறு பதில் சொன்னார்கள்.

இளமாறன் பட்டெனத் திரும்பி மனைவியைப் பார்த்தான்.

‘எஸ். உனக்கு என்னை முன்னாடியே தெரியும் இல்ல? ஆனா, நீ என்னை முன்னாடியே பார்த்திருக்கியா? நான் அதை உணரவேயில்ல. என் மண்டையில் அது உரைக்கவேயில்ல’ அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து, நக்கல் சிரிப்பை உதடுகளுக்குள் ஒளித்தாள் ரோஜா.

“ஹேய்.. ஆளுக்கொன்னு சொல்றீங்க. சரியா சொல்லுங்க ரெண்டு பேரும்” வெண்பா உற்சாகமாகக் கத்த, அவர்களின் பதிலை கேட்க பெரியவர்களும் சுவாரஸ்யமாகப் பார்த்திருந்தனர்.

“ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அத்தை ரூம்லதான் இவரை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்” ரோஜா சொல்ல, இளையவர்கள் இருவரும் கத்தி ஆர்ப்பரித்தார்கள்.

“அப்பவேவா அண்ணி?” என்ற வெண்பாவை ரோஜா முறைக்க,

“இல்லயில்ல. ஏன் கேட்கிறேன்னா, அம்மா உங்களைப் பத்தி நிறையச் சொன்னாங்க” என்றாள் பூடகமாக.

“உங்களுக்குத் தெரியுமா அண்ணா? அண்ணியை அம்மா ஸ்கூல் படிக்கிற பொண்ணா, யூனிஃபார்மில் பார்த்திருக்காங்க. இந்தக் குட்டிப் பொண்ணுதான் நாளைக்கு என் மருமகளா வரப் போறான்னு தெரிஞ்சிருந்தா..” அவள் முடிக்கும் முன்பே, “வெண்பா” என்று அதட்டினார் சுகந்தி.

“ஆனாலும், அண்ணி நம்ம கண் முன்னாடியே இருந்திருக்காங்க. அவங்களை இத்தனை வருஷமா பார்க்காம மிஸ் பண்ணியிருக்கீங்க அண்ணா” வெண்பா சொல்ல,

“அதான் டெஸ்டினி. இப்படித்தான் நடக்கும்னு இருக்கறதை, நாம மாத்த முடியாது.” என்றார் சுகந்தி.

அதுவரை உணவில் கவனம் பதித்திருந்த இளமாறன் இப்போது அவரை நிமிர்ந்து தீர்க்கமாகப் பார்த்தான்.

அதன் பின் பொதுவான பேச்சுக்களுடன் உணவு முடிந்தது. மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரவர் வீடு செல்ல எழுந்தார்கள்.

கஸ்தூரி, வைத்தியநாதன் இருவரையும் சங்கரன் தன் காரில் கொண்டு விடுவதாகச் சொல்ல, வெண்பா, வினோத் இருவரும் அம்மாவுடன் செல்லவிருந்தனர்.

பெரியவர்கள் காரில் ஏற இளமாறன் உள்ளே வந்தான்.

சுகந்தி நின்று ரோஜாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருந்தேன் நான். நாம இப்படி அடிக்கடி மீட் பண்ணணும். மாறன் ஃப்ரீயா இருக்கும் போது நம்ம வீட்டுக்கு வாங்க. சரியா?” என்று அவர் கேட்க, ரோஜா சம்மதமாகத் தலையசைத்தாள்.

“அப்போ நாங்க போய்ட்டு வர்றோம் ரோஜா” என்றவர், திரும்பி மகனைப் பார்த்து, “மாறா, நாங்க கிளம்பறோம்” என்று சொல்ல, அவனோ அலைபேசியுடன் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.

சுகந்தியின் முகம் சட்டென வாடி விட, “ப்ச், இளா” என்று எட்டி கணவனின் கைப் பிடித்து இழுத்தாள் ரோஜா.

அவன் திரும்ப, “அத்தை பேசிட்டு இருக்காங்க” என்று கண்டிப்புடன் சொன்னவளை கண்களைச் சுருக்கிப் பார்த்தான்.

“ஹாய்.. எஸ். குட் ஈவ்னிங் சார். கொஞ்சம் பிஸி. ஐ வில் கால் யூ பேக்” என்று தடுமாற்றத்துடன் பேசி முடித்து வைத்தவனின் கண்கள் மனைவியைக் கூறு போட்டது.

“ஹோட்டல் ஜெனரல் மேனஜர் கால். நாலு மிஸ்டு கால் பார்த்துக் கூப்பிட்டேன். நான் என்ன பண்றேன்னு கூடக் கவனிக்க மாட்டியா?” அவளின் கண்களைப் பார்த்து அமைதியாகக் கேட்டான். அந்த அமைதி அவளைப் பயமுறுத்தியது‌.

“எதுக்குக் கூப்பிட்ட சொல்லு ரோஜா?” குரலை மெல்ல உயர்த்தினான்.

“உங்கம்மா.. கிளம்பறாங்க..”

“தெரியுமே. பார்த்தேனே. அதுக்கு என்ன பண்ண சொல்ற?” என்றவன்,

“ஓ, நீ எப்பவும் சொல்வியே. நான் மரியாதை கொடுக்கலைன்னு. எனக்கு மேனர்ஸ் தெரியலைன்னு. அதுவா?” என்று புருவம் உயர்த்திக் கேட்க, அந்தக் குரலில் இருந்த கோபத்தில் சுகந்தி முன்னே வந்து, “மாறா..” என்று அழைக்க, அவ்வளவுதான். அதற்கு மேல் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“உங்களுக்கு நான் மரியாதை கொடுக்கிறது இல்லையாம்? உங்க மருமகளுக்கு அது ரொம்பப் பெரிய வருத்தமா இருக்கு. இல்ல ரோஜா?” இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

“மரியாதை பத்தி மட்டுமே கவலைப்படுறா. அவளுக்கு முக்கியத்துவம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. நீங்க என் கூட எத்தனை நாள் இருந்துருக்கீங்க? எனக்காக என்னைக்காவது உங்க வேலையை ஒதுக்கியிருக்கீங்களா? உங்க பிரையாரிட்டி எப்பவும் நான் கிடையாது. ஆனா, இன்னைக்கு என்கிட்ட மட்டும் எப்படி அதை எதிர்பார்க்கறீங்க?” சுகந்தியை தீர்க்கமாகப் பார்த்து அவன் கேட்க, அவர் கண்களில் கண்ணீர் தடம்.

“மாறா, ஐ ஆம் சாரி” என்றார் கண்ணீருடன்.

அவரையே பார்த்தபடி அவன் அசையாமல் நிற்க, “என்னடா மாறா பண்ணிட்டிருக்க?” என்று கேட்டபடி வீட்டினுள் நுழைந்தார் சங்கரன்.

வினோத்துடன் பெரியவர்களை அனுப்பி விட்டு மகளோடு, மனைவியை அழைக்க உள்ளே வந்தார் அவர்.

“சுகந்தி…” என்று மனைவியை அழைத்தார்.

“மாறா, நான் என்ன சொல்லியும் என்னை நியாயப்படுத்த முடியாதுன்னு எனக்குத் தெரியும். நீ பழசை மறக்கவே மாட்டியா?”

அவர் சொல்லி முடிக்கும் முன்பே கணவனின் கையை எட்டி அழுத்தமாகப் பிடித்தாள் ரோஜா.

அவ்வளவுதான். அவளால் இதற்கு மேல் எதையும் கேட்க முடியாது.

இந்த உறவு சிக்கலில் சிக்கி, தன் உணர்வுகளைச் சின்னா பின்னமாக்க அவள் விரும்பவில்லை. அவளால் இதையெல்லாம் தாங்கவே முடியாது. அதை விடக் கடினம் இதை ஜீரணிப்பது.

“மாறா..”

“எனக்குப் பழகிடுச்சுப்பா. என்னை இப்படியே விட்டுடுங்க, பிளீஸ்” என்று முடித்து விட்டான் இளமாறன்.

சில நேரங்களில் காயங்கள் சிறிதெனினும், அது தரும் வலி பெரிது.

சுகந்தி, சங்கரன் கேட்ட எந்த மன்னிப்பும் ரோஜாவின் காதில் ஏறவில்லை. கண்களை எட்டாத புன்னகையுடன் அவர்களுக்கு விடைக் கொடுத்தவள், தங்கள் வாழ்க்கையை வாழ தயாரானாள்.

மாற்றங்களைக் கண் கூடாகக் கண்டாலும் மனது ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் அல்லவா?.

error: Content is protected !!
Scroll to Top