சாதகப் பட்சிகள் – 3 (2)

அடுத்து வந்த இரு நாட்களின் பெரும்பாலான நேரத்தை அவன் மருத்துவமனையிலேயே கழித்தான். ஒரே நாளில் நான்கு அறுவை சிகிச்சைக்கு அவன் நிற்க வேண்டியிருந்தது. பொழுது அவன் கையிலேயே இல்லை.

மறுநாள் மாலை அவனுக்கும், ஆராதனாவுக்கும் நிச்சயதார்த்தம்.

“இதெல்லாம் செய்தே ஆக வேண்டுமா?” என்று ராகவன் பிடித்தமின்மையுடன் கேட்க,

“ஆராதனாவிற்கு இது முதல் திருமணம்” என்று சொல்லி அவன் வாயை அடைத்தான் உதய்.

ராகவன் அன்று காலை கண் விழிக்கையிலேயே எதிர்காலம் குறித்த கவலையில் மனம் தானாகச் சுணங்கியது. வாழ்க்கையில் மீண்டும் ஒருவரை தன்னோடு இணைத்துக் கொள்ள அவன், முதலில் மனதளவில் தயாராக வேண்டும். ஆனால், முடியுமா என்ற கேள்வி பூதாகரமாக எழுந்து நின்று அவனைப் பயமுறுத்தியது.

அவனது குடும்பத்தினர் காலை பத்து மணிக்கு வந்து விடுவதாகச் சொல்லி இருக்க, படுக்கையை விட்டு எழுந்து குளிக்கச் சென்றான் அவன்.

சரியாகப் பத்து முப்பதுக்கு வந்து இறங்கியது அவன் குடும்பம்.

ஆயா விசாலாட்சி, ஐயா கண்ணதாசன், அப்பா சிதம்பரம் என ஒருவர் பின் ஒருவராக வர, அவர்கள் கையை உதறி தள்ளி விட்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு அவனிடம் வந்தனர், ஆறு வயதான ராகவியின் இரட்டை குழந்தைகள் உதயதாராவும், உதய்நந்தாவும்.

“மாமா” என்று ஓடி வந்து அவன் காலை ஆளுக்கொரு பக்கமாகக் கட்டிக் கொண்டனர்.

அதுவரை அவன் மனதில் இருந்த அத்தனை கவலைகளும் குழந்தைகளின் முகத்தைப் பார்த்ததுமே மறைந்து போக, குனிந்து இருவர் கன்னங்களிலும் அழுந்த முத்தமிட்டான் ராகவன்.

அவர்களை உள்ளே அமரச் செய்து விட்டு, அவன் வெளியில் வர, வாடகை காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தாள் ராகவி.

முன் பக்கமிருந்து வேகமாக இறங்கிய உதய், இரண்டே எட்டில் மனைவியை நெருங்கி அவள் கையில் இருந்த மூன்றரை வயது மகன் உதய்மித்ரனை கைகளில் வாங்கிக் கொண்டான்.

புன்னகையுடன் கணவனை ஏறிட்டாள் ராகவி.

பயணத்திற்கு வசதியாக எளிமையான உடையை அணிந்திருந்தாள். லாவெண்டர் நிற சுடிதாரில், எந்தவித அலங்காரமும் இல்லாமல் ராகவி இருந்தாலும், முகம் நிறைத்த புன்னகையும், மகிழ்ச்சியும் அவளை அழகியாக்கி காட்டியது.

ஜீன்ஸ், டி-ஷர்ட் என்று லகுவான உடையிலும் தன் கம்பீரம் கொஞ்சமும் குறையாமல் கவர்ச்சியாகத் தெரிந்தான் உதய். வயது அவனது வசீகரத்தை கூட்டி இருந்ததே தவிர, கொஞ்சமும் குறைக்கவில்லை.

மனைவியின் துப்பட்டாவை கழுத்தை சுற்றி அணிந்து கொண்டு, ஒரு பக்கத் தோளில் குழந்தை உறங்க, மறுகரத்தை மனைவியின் தோளை சுற்றிப் போட்டு அணைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தவனைக் கண் இமைக்காமல் பார்த்தான் ராகவன்.

“சைட் அடிக்காத டா ராகவ். இன்னும் என்னையே சைட் அடிச்சுட்டு இருந்தா எப்படி உருப்பட?” என்று உதய் நக்கல் சிரிப்புடன் கேட்க, ராகவன், ராகவி இருவர் முகத்தையும் நிறைத்தது மென்நகை.

ராகவிக்குப் பிடித்தது எல்லாம் அவனுக்கும் பிடிக்கும் எனும் போது, அவள் உயிராக நேசிக்கும் உதயை ராகவனுக்கு எப்படிப் பிடிக்காமல் போகும்.

“ரொம்பப் பண்ணாதீங்க மாமா” என்று சொல்லிக் கொண்டே அவர்களுடன் இணைந்து நடந்தான் ராகவன். சிரிப்புடன் அவன் தோளில் தட்டினான் உதய்.

ராகவன் குழந்தைகளுடன் ஒன்றி விட, பெரியவர்கள் அன்று மாலை நடக்கவிருக்கும் நிச்சயம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

கண் மூடி திறப்பதற்குள் மாலையும் நெருங்கியிருந்தது.

ஆராதனாவின் வீட்டில் வைத்து, இரு வீட்டின் பெரியவர்கள் முன்னிலையில், எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி, மிக எளிமையான முறையில் மாலையும் கழுத்துமாக, மோதிரம் மாற்றிக் கொண்டனர் ராகவனும், ஆராதனாவும்.

ஆராதனாவின் அண்ணன், இருவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துக் கை குலுக்கினான். தங்கையைத் தோளோடு அணைத்து விடுவித்தான். இருவர் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகைகள் அப்பட்டமாகத் தெரிந்தது.

ராகவனுக்கு இன்னுமே தன்னைச் சுற்றி நடப்பது எதையும் நம்ப முடியவில்லை. மாலை மறைவில் கையைக் கிள்ளி கூடப் பார்த்துக் கொண்டான் அவன்.

மனம் தானாகச் சில வருடங்களுக்கு முன் ஒரு மருத்துவமனையின் அறையில் நடந்த நிச்சயத்தை நினைவுப்படுத்திக் கொண்டது. அன்று இறுக்கமாகப் பற்றியிருந்த கரத்தின் மென்மையை இன்றும் கூட அவனால் உணர முடிந்தது. அக்கரத்திற்குச் சொந்தமான முகம் கண் சிமிட்டி புன்னகைத்ததை ஆயுளுக்கும் அவனால் மறக்க முடியுமா?

“ராகவ், ராகவ்” என்ற அழைப்பில் கலைந்து திரும்பி ஆராதனாவைப் பார்த்தான் ராகவன்.

“நீங்க ஓகே தானே?” என்று அவள் அக்கறையுடன் கேட்க, அவனுக்குக் குற்ற உணர்ச்சியாக இருந்தது.

“ம்ம்” என்றான், மெலிதாகப் புன்னகைத்து.

“ஐ ஆம் ஹேப்பி. ரொம்ப, ரொம்ப” என்றவள், அவனை நெருங்கி அவன் எதிர்பாரா நொடியில் அவன் கரத்தோடு, தன் கரம் கோர்த்துக் கொண்டாள்.

“ஒரு ஃபோட்டோ?” என்று அவள், அவன் முகம் பார்த்துக் கேட்க, “ஓகே” என்று அவன் சிரிக்க முயன்ற நொடி, அதைக் கச்சிதமான புகைப்படமாகத் தனது அலைபேசியில் சிறை செய்திருந்தாள் ராகவி.

ஆராதனாவின் அலைபேசியை வாங்கி இருவரையும் சேர்த்து சில புகைப்படங்கள் எடுத்தும் கொடுத்தாள் ராகவி.

மறுபக்கம் நிகழ்ச்சியை முழுவதுமாகத் தனது கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தான் ஆராதனாவின் அண்ணன்.

குழந்தைகளோடு ஓரமாக அமர்ந்திருந்த உதயை பார்த்துக் கண் காட்டினான் ராகவன். அவனுக்கு மூச்சு முட்டுவது போலிருந்தது.

ஆராதனா ஒவ்வொரு அடியாக அவனை நெருங்கி வர வர, அவளிடம் இருந்து விலகி ஓடச் சொன்னது அவன் மனது. கழுத்தில் இருந்த மலர் மாலையும், அவன் கையில் அவள் சிறிது நேரத்திற்கு முன் அணிவித்திருந்த மோதிரமும் அவனை மிகவும் உறுத்தியது.

நிச்சயம் முடிந்து விட்டது. இனி இதில் இருந்து தப்பிக்க முடியாது என்பது அவனுக்கு நன்கு புரிந்தது. ஆனால், மூச்சடைக்க வைக்கும் இந்தச் சூழலில் இருந்து தப்பிக்க விரும்பினான் அவன்.

அவனது பார்வையைப் புரிந்து கொண்ட உதய், “ராகவ்” என்று சத்தமாக அழைத்தான்.

அவன் கையில் இருந்த உதயமித்ரனை ராகவனின் கைகளில் திணித்தான்.

ஆராதனாவின் முகம் பார்த்து, “ராகவிகிட்ட பேசிட்டு இருங்க மா. மித்ரன் சிணுங்கிட்டே இருக்கான். புது இடம், டிராவல் எல்லாம் அவனுக்கு ஏதோ போல இருக்குன்னு நினைக்கறேன். நாங்க கொஞ்ச நேரம் வெளில இருக்கோம். ப்ரஷ் ஏர் பட்டா, ஹீ வில் ஃபீல் பெட்டர்” என்று உதய் வீட்டின் பின்பக்கம் இருந்த தோட்டத்தைக் கைக் காட்டிச் சொல்ல,

“சரிங்க அண்ணா” என்றாள் ஆராதனா.

ராகவியிடம் கண் காட்டி விட்டு, ராகவனுடன் தோட்டத்தை நோக்கி நடந்தான் உதய்.

error: Content is protected !!
Scroll to Top