ஆராதனாவின் கண்டனப் பார்வையைச் சந்திக்க முடியாமல், தன் பார்வையைத் தழைத்தான் ராகவன்.
“உங்ககிட்ட, நான் இதை எதிர்ப்பார்க்கலை ராகவன். நீங்க உங்க நேரத்தை மட்டுமில்ல, என்னோட நேரத்தையும் சேர்த்து வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க. உங்களுக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லனா, உங்க ஃபேமிலிகிட்ட நீங்க க்ளியரா சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு என்கிட்ட வந்து முகம் காட்றீங்க. உங்க ட்டுவின் ராகவி கால் பண்ணி, உங்களுக்குக் கல்யாணத்துல முழுச் சம்மதம். எப்போ நிச்சயம் வச்சுக்கலாம்னு கேட்டாங்க. எங்க வீட்ல அதுக்கான ஏற்பாடு நடந்துட்டு இருக்கு. ஆனா, நீங்க இப்போ, இப்படி எடுத்தெறிந்து பேசிட்டு இருக்கீங்க?”
நிதானமான குரலில் ஆராதனா சொல்லிக் கொண்டே போக, ராகவன் அவளை அப்படியே விழி அகற்றாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
ராகவி இப்படிச் செய்வாள் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
“சாரி, சாரி அபர்ணா. நான் அப்படி ரூடா பேசி இருக்கக் கூடாது. வெரி சாரி” நெற்றியை தேய்த்துக் கொண்டே அவன் சொல்ல,
மெல்ல சிரித்துக் கொண்டே, “என் பேர் ஆராதனா. அபர்ணா இல்ல” என்றாள் ஆராதனா.
“ஐயோ” என்று முணுமுணுத்தவன், மீண்டும் மன்னிப்பு கேட்க, சின்னத் தலையசைப்புடன் அதை ஒதுக்கி விட்டு, பேச ஆரம்பித்தாள் அவள்.
“ராகவன், எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.” சட்டென்று அவள் முகத்தில் பார்வையைப் பதித்தான் ராகவன்.
அவன் கண்களில் இருந்த கேள்வியைப் புரிந்துக் கொண்டவளாக,
“எஸ், எனக்கு உங்களைப் பத்தி எதுவும் தெரியாது தான். ஆனா, இனி தெரிஞ்சுக்கலாம் இல்லையா? நாம, ரெண்டு நாள்ல நிச்சயம் பண்ணி, நாலு நாள்ல கல்யாணம் பண்ணிக்கப் போறோமா என்ன? இல்லைல?” என்று அவள் கேட்க, அவனிடம் பதிலில்லை.
“நாம ஒன்னும் டீன் ஏஜ் கிட்ஸ் கிடையாது டாக்டர். கண்டிப்பா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்போம். ஆனா, அதுக்கு நீங்க இடம் கொடுத்தா மட்டும் தான் முடியும். உங்க இதயத்துக்கு நிரந்தர அனஸ்தீசியா கொடுத்துட்டு அந்த மயக்கத்தில் இருந்து வெளில வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கீங்க. உங்களுக்குப் புரியுது தானே? நான் உங்களுக்காக இங்க வேலையை விட்டுட்டுச் சென்னையில் வேலை தேடிட்டு இருக்கேன். ஆனா, நீங்க?”
“என்ன சொல்றீங்க அபர்.. சாரி, ஆரா…தனா. என் சம்மதம் இல்லாம.. நான் சம்மதம் சொல்லாமலே, நீங்க ஏன் இப்படி, பெரிய முடிவு எல்லாம் எடுக்கறீங்க?” எரிச்சலுடன் கேட்டான் ராகவன்.
“இல்ல. சென்னை முன்னாடியே முடிவு பண்ணது. இப்போ நீங்களும் ஒரு காரணம். அதுவும் இல்லாம, எங்க வீட்ல, எனக்குக் கல்யாண பிரஸர் அதிகமா இருக்கு. அதான்.”
“வொய் மீ ஆராதனா? ஏன் ஒரு டிவோர்ஸிய கல்யாணம் பண்ணிக்க நினைக்கறீங்க? என்னைப் பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாது.”
“உங்களுக்கு என்ன பிரச்சினை ராகவன்?” கூர்மையாகக் கேட்கப்பட்ட அந்தக் கேள்வியில் அதிர்ந்து அவளைப் பார்த்தான் ராகவன்.
“நீங்க இப்படியே இருக்கப் போறீங்களா? இனி வாழ்க்கைக்கும் கல்யாணம் பண்ணிக்கப் போறது இல்லையா? உங்க லைஃப்ல இன்னொரு பொண்ணுக்கு இடமே இல்லையா என்ன?” அவள் அடுக்கடுக்காகக் கேள்விகளை அடுக்க, மேஜையில் இருந்த காஃபி கோப்பையை வெறித்தபடி அமர்ந்திருந்தான் ராகவன்.
“எனக்குக் காரணம் சொல்லத் தெரியல ராகவன். அன்னைக்கு எங்க வீட்ல வச்சு, உங்க குடும்பத்துக்காக நீங்க கண் கலங்கின நொடியே முடிவு பண்ணிட்டேன். நானும் உங்க குடும்பத்தில் ஒருத்தியா இருக்கணும்னு” அவள் தீர்க்கமாகச் சொல்ல, மௌனமாய் அமர்ந்திருந்தான் அவன்.
அன்றைக்கு அவன் யாருக்காகப் பதறினான் என்று அவனுக்கு மட்டும் தானே தெரியும். ஆம், குடும்பத்திற்காகத் தான் கண் கலங்கினான். ஆனால், தொலைத்த ஒன்றிற்காக என்று வெளியில் சொல்ல முடியாத நிலையை எண்ணி வருந்த மட்டுமே அவனால் முடிந்தது.
“ஐ ஆம் லாஸ்ட் ஆராதனா. நான் ரொம்பவே குழம்பி போய் இருக்கேன். இதுல உங்களையும் நான் இழுக்க விரும்பல. பிளீஸ், புரிஞ்சுக்க டிரை பண்ணுங்க.” முடிந்த வரை குரலில் எந்தவித உணர்வுகளையும் காட்டாமல் அவன் சொல்ல,
“நானும் அதையேதான் ராகவன் சொல்றேன். உங்களைப் புரிஞ்சுக்க எனக்கு டைம் அண்ட் ஸ்பேஸ் கொடுங்க. ஒரு மூனு மாசம்? போதும் தானே? அதுக்கு அப்புறமும் இது சரி வராதுன்னு தோணினா, கல்யாணத்தை…” அவன் கோபத்துடன் அவளைப் பார்க்க, சட்டென்று பேச்சை நிறுத்தினாள் ஆராதனா.
எப்படி எல்லாமே எளிதாக இருக்கிறது இவர்களுக்கு என்றுதான் அவனுக்குத் தோன்றியது.
அவனைப் பற்றித் துல்லியமாக அனைத்தையும் அறிந்து வைத்திருந்த ஒருத்தியே அவனை, வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு போனாள் எனும் போது, சில மாதங்களில் உன்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன் என்று சொல்லும் ஆராதனாவை மறைக்க முடியாத கேலி சிரிப்புடன்தான் ஏறிட்டான் ராகவன்.
“கல்யாணம் பேசுறதும், பிரியறதும்… எவ்வளவு ஈசியா சொல்றீங்க?” கடுமையாக அவன் கேட்க,
“உங்க விவாகரத்துக்கான காரணம் எனக்குத் தெரியும் ராகவன்.” அந்த ஒரு வாக்கியம் அவனைப் பட்டென்று மௌனியாக்கியது.
“நான் ரொம்ப அழுத்திக் கேட்கவும் ராகவி சொன்னாங்க. சாரி” என்றாள் ஆராதனா.
ஒரு நொடி கண்களை இறுக மூடித் திறந்தான் ராகவன்.
‘ராகவி, பாப்பா…’ அவன் மனதில் அழைத்தது அவளுக்கும் கேட்டதைப் போல, சரியாக அந்நேரம் அவனது அலைபேசி அழைப்பில் வந்தாள் ராகவி.
“ஒரு நிமிஷம்” என்று அவளிடம் சொல்லி விட்டு, அலைபேசியுடன் வெளியில் நடந்தான் ராகவன்.
எடுத்ததும் முதல் வார்த்தையாக, “சாரி ராகவ்” என்றாள் ராகவி.
“பாப்பா, என்ன பண்ணிட்டு இருக்க?” உடைந்த குரலில் கேட்டான் ராகவன்.
“என் பர்த் டேக்கு…” என்று அவள் தொடங்க,
“நம்ம பர்த் டே” என்றான் ராகவன்.
மெல்லிய சிரிப்புடன், “ஆமா, நம்ம பர்த் டேக்கு, எனக்கு என்ன கிஃப்ட் வேணும்னு நீ கேட்ட. நினைவிருக்கா?” ராகவி கேட்க,
“இருக்கு. அதுக்கென்ன இப்போ?” சந்தேகமாகக் கேட்டான் ராகவன்.
“நான் அப்புறமா எதைக் கேட்டாலும் வாங்கித் தருவேன். என்ன கேட்டாலும் செய்வேன்னு, சொல்லி இருந்த. ஞாபகம் இருக்கா?” அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை அவன்.
“ஆராதனாவை கல்யாணம் பண்ணிக்கோ ராகவ்.” அழுத்தமாகச் சொன்னாள் ராகவி.
‘ஏன்? ஏன்? ஏன் ராகவி?’ என்று கத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
ஆனால், அமைதியாக,
“நீ என்ன பண்றன்னு உனக்குத் தெரியுதா பாப்பா?” என்று கேட்டான் ராகவன்.
அவனால் அவளிடம் கோபப்படவே முடியாது. குரலில் வலியுடன் கேட்டான்.
அவளும் அதே குரலில் பதில் கொடுத்தாள்.
“பிளீஸ், ராகவ். எனக்காக..” கெஞ்சினாள் ராகவி.
அவள் சாதாரணமாகக் கேட்டாலே, அவன் எதையும் செய்வான். இப்போது அழுகுரலில், கெஞ்சலாகக் கேட்க, அந்தக் குரலுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் கண்களை மூடித் திறந்தான் ராகவன்.
“ஓகே ராகவி” என்றான் குரல் நடுங்க, அந்தப் பக்கம் ராகவி லேசாக விசும்புவது அவனுக்குக் கேட்கவே செய்தது. அவனுக்கும் மனம் கலங்கியது
“ராகவி..” என்று மெல்ல அழைத்தவன்,
“ஆராதனா என் கூடத் தான் இருக்கா. நான் அவகிட்ட பேசுறேன்” அத்துடன் முடித்துக் கொண்டு, போனை அணைத்தான் ராகவன்.
அவன் திருமணத்துக்குச் சம்மதம் சொன்னதும், ஆராதனா முகத்தில் மின்னிய மகிழ்ச்சியைப் பார்க்க அவனுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆறுதலாக இருந்தது.