சாதகப் பட்சிகள் – 3 (3)

அங்கே சடை சடையாய் காய் பிடித்து, உயர்ந்து ஓங்கி நின்றிருந்த பலா மரத்தின் அடியில் மர பெஞ்ச் போடப்பட்டிருக்க, அதில் அமர்ந்தனர் இருவரும்.

“ராகவ், ப்ச். ஆராதனா குடும்பத்தை எனக்குத் தெரியாது. ஆனா, எனக்கு ரொம்ப நெருங்கின ஒருத்தருக்கு ஆராதனா குடும்பம் ரொம்ப க்ளோஸ். அவங்க அப்பா தமிழ் தான். அம்மா தான் மலையாளி. சென்னையில்தான் அந்தப் பொண்ணு படிச்சா…” உதய் எதிரே தெரிந்த இயற்கைக் காட்சியைக் கண்ணில் நிறைத்தபடி பேசிக் கொண்டே போக,

“மாமா. ஆராதனா ஏற்கனவே அவளைப் பத்தி என்கிட்ட சொன்னா. என் மைண்ட்ல அது ஏறலை தான். ஆனா, நானே கேட்டு தெரிஞ்சுக்கறேன் மாமா. எங்களுக்கு நடுவுல பேசவும் ஏதாவது இருக்கணும் இல்ல?” என்று ராகவன் கேட்க,

“சாரி ராகவ்” என்றான் உதய்.

குழந்தையை மடியில் போட்டு தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான் ராகவன். வெளிக் காற்று முகத்தில் பட்டதும், சிணுங்கல் குறைந்து உறங்க முயன்றான் குழந்தை.

“இட்ஸ் ஓகே மாமா. நீங்க எல்லோரும் எனக்காகத்தான் இதைச் செய்றீங்க. பட், எனக்குக் காதல், கல்யாணம் நினைச்சாலே கசக்குது மாமா. மனசு வலிக்குது. கோபமா வருது. எதையாவது தூக்கிப் போட்டு உடைக்கனும் போல இருக்கு. பார்க்கற எல்லோர் மேலேயும் எரிச்சல் வருது…” அவன் புலம்பலாகச் சொல்லிக் கொண்டே போக, ஆறுதலாக அவன் தோளில் தட்டினான் உதய்.

நன்றாகத் திரும்பி உதயை பார்த்த ராகவன், “அவ எப்படி இருக்கா? பத்திரமா இருக்காளா?” என்று கேட்க,

“டேய்…” அதிர்ச்சியுடன் கத்தினான் உதய்.

ஆனால், ராகவனிடம் அதற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

“அவங்க வீடு ரொம்பத் தாழ்வான பகுதி இல்லையா? இந்த வெள்ளத்துக்கு அவங்க வீட்டுக் கிரவுண்ட் புளோர்ல தண்ணி வந்திருக்கும் இல்ல?” அவன் கவலையுடன் கேட்க, உதய் அவன் தோளைப் பிடித்து உலுக்கினான்.

“எங்க உட்கார்ந்து என்ன பேசிட்டு இருக்க ராகவ்? ஆராதனா கேட்டா…” உதய் சொல்லி முடிக்கும் முன்பே, இடை புகுந்தான் ராகவன்.

“ஆராதனா என்ன, ஆண்டவனே வந்தாலும், என்னால அவளுக்காகக் கவலைப்படாம இருக்க முடியாது மாமா.” அழுத்தமாக ராகவன் சொல்ல, மெலிதாக அவர்கள் மேல் விழுந்த தூறலை துடைக்கக் கூடத் தோன்றாமல் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான் உதய்.

“தப்பு ராகவ். இனி ஆராதனா தான் உனக்கு…”

“நேசிச்சவங்களை எப்படி மாமா மறக்க முடியும்?” அவன் குரலில் இருந்த நடுக்கம், உதயை வருத்தமடையச் செய்தது.

“எப்படி இருக்கா மாமா?” என்று மீண்டும் அதே கேள்வியை அவன் கேட்க,

“நம்ம வீட்லதான் இருக்கா. மழை அதிகமானதும் அவளை ராகவி போய் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டா. வெள்ளம் வர்ற வரைக்கும் எல்லாம் வெயிட் பண்ணல நாங்க.” மென்மையாகச் சொன்னான் உதய்.

“தாங்க்ஸ் மாமா” என்றவன், ஒரு விரக்தியான சிரிப்புடன்,

“விதியை பாருங்க மாமா. காலம் எல்லாத்துக்கும் சரியா கணக்கு எழுதி வச்சிருக்கும் இல்ல? சரியான நேரத்துக்கு வெயிட் பண்ணும் போல.” உதய் ஒன்றும் சொல்லவில்லை.

“எந்த வீட்ல இருந்து உங்களைத் துரத்தினாளோ, இன்னைக்கு அதே வீட்ல காலம் அவளைத் தஞ்சமடைய வச்சிருக்கு பாருங்க. உங்ககிட்டயே வந்து நிற்க வச்சிருக்கு பாருங்க.”

“ப்ச், அப்படி எல்லாம் பேசாத ராகவ். எப்பவோ நடந்தது. வீட்டை விட்டுப் போனது எங்க முடிவு. அதுக்கு அவ எந்த விதத்திலும் காரணமில்ல. சும்மா எல்லாத்துக்கும் அவளை இழுக்காத. ஸ்டா ப்ளேமிங் ஹெர்”

இருவருக்கும் இடையில் மழைச் சாரலுடன், மௌனமும் வந்து அமர்ந்து கொண்டது. ராகவி ஓடி வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு போனாள். போகும் முன் உதயின் கையில் ராகவனின் அலைபேசியைத் திணித்து விட்டு சென்றாள் அவள்.

“எப்படி இருக்கா? என்ன பண்றா மாமா?” மீண்டும் ராகவன் அதையே கேட்க,

“நான் எதையும் கேட்டுக்கல ராகவ். ஆனா, ரொம்ப நல்லா இருக்கா.” என்றான் உதய்.

“ம்ம்” ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் ராகவன்.

அவன் மனது குழம்பிப் போய் இருந்தது.

ஆராதனா உடன் எதிர்காலத்தை நிச்சயித்து விட்டு, இன்னும் கடந்த காலத்திலேயே நிற்கும் மனதை எதுவும் செய்ய முடியாமல் தவித்தான் அவன்.

“ராகவ்…” என்று உதய் அவன் தோளை தொட,

“சொல்லுங்க மாமா?” என்றான் சோர்வுடன், உதய் ஒன்றும் சொல்லாமல் தன் கையில் இருந்த அலைபேசியை அவன் முன் நீட்டினான்.

அதில் ராகவனின் ஃபேஸ்புக் பக்கம் திறக்கப்பட்டிருந்தது.

கண்களில் தொக்கி நின்ற கேள்வியுடன், “நான் சோஷியல் மீடியா யூஸ் பண்றது இல்லையே மாமா. இந்த அக்கவுண்ட் பாஸ்வேர்ட் கூட எனக்கு ஞாபகம் இல்ல. இது எப்படி?” அவன் புரியாமல் கேட்க, உதய் எச்சில் கூட்டி விழுங்கி,

“ராகவி தான் உன்னோட அக்கவுண்ட்டை திரும்பவும்…” தடுமாற்றத்துடன் உதய் சொல்ல,

“ஓ, நீங்க சைபர் செல் அப்படிங்கறதை, நான் அடிக்கடி மறந்து போறேன் பாருங்க” சீறலாகச் சொன்னான் ராகவன்.

“டேய், பார்த்து பேசு. நான் தான் சொல்றேன் இல்ல. ராகவி பண்ணான்னு. அப்புறம் ஏன் என் வேலையை இழுக்கற?” கோபத்துடன் உதய் கேட்க,

“ஓகே. ஐ ஆம் சாரி மாமா.” என்று தானும் கோபத்துடன் சொன்னான் ராகவன்.

மெல்ல பார்வையை அலைபேசிக்கு கொடுத்தவன் அதிர்ச்சியுடன் திரும்பி உதயை எரித்து விடுவதைப் போலப் பார்த்தான்.

மறுப்பாகத் தலையை அசைத்தான் உதய்.

“நான் பண்ணல டா”

தன் கண்களையே நம்ப முடியாமல் மீண்டும் அலைபேசியைப் பார்த்தான் ராகவன்.

அதில் ராகவன் மற்றும் ஆராதனா மாலையும் கழுத்துமாக நின்றிருந்தனர். ராகவன் ஆராதனாவை பார்த்திருக்க, அவள் முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது. சில நிமிடங்களுக்கு முன் ராகவி எடுத்த புகைப்படம்தான் அது என்பது அவனுக்கு நன்றாக விளங்கியது.

இருவரும் மோதிரம் மாற்றும் புகைப்படம், “காட் என்கேஜ்டு” என்று குறிப்பிட்டுப் பதிவேற்றப்பட்டிருந்தது.

ராகவன் மற்றும் ஆராதனாவின் முகநூல் பக்கங்கள் டேக் செய்யப்பட்டிருந்ததைப் பார்த்தவனுக்குக் கண் மண் தெரியாத கோபம்தான் வந்தது.

“ஏன் மாமா?” ஆத்திரத்துடன் கேட்டான் ராகவன்.

“எப்படியும் உலகத்துக்குத் தெரியதான் போகுது ராகவ்” என்ற உதய்,

அதே நிதானமான குரலில்,

“அந்த ஃபோட்டோக்கு வந்திருக்கக் கமெண்ட்ஸை படி” என்றான்.

ராகவன் திரையைத் தொட வரிசையாக வந்து விழுந்தன வாழ்த்துச் செய்திகள்.

முதல் செய்தியாகச் சுஹாசினியின் கமெண்ட்தான் அவன் கண்ணில்பட்டது.

“ஹேப்பி ஃபார் யூ டா ப்ரோ. தேதியை சொல்லு. பிளைட் டிக்கெட் புக் பண்ணனும்.” என்றிருந்தாள்.

அவளைத் தொடர்ந்து பனிமலர், “இதோ பெட்டி அடுக்க ஆரம்பிச்சுட்டேன் ராகவ்” என்று விட்டு, அவளின் கணவன் வீராவை டேக் செய்து, “ராகவ் கல்யாணத்துக்கு ஷாப்பிங் போகனும். கம் ஹோம் சூன் டியர்” என்றிருக்க, ராகவனுக்கு அந்நிலையிலும் சிரிப்புதான் வந்தது.

அவர்களைத் தொடர்ந்து சிலர் வாழ்த்துகள் தெரிவித்திருக்க, ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டே போனான் அவன்.

“மேல ஸ்குரோல் பண்ணி, முதல் கமென்ட் படி” என்றான் உதய்.

உதய் சொன்னதும் கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்த ராகவன், மீண்டும் திரைக்குப் பார்வையைத் திருப்பினான்.

மதுமிதா என்ற பேரை பார்த்ததும் ஒரு வினாடி அப்படியே இமைக்காது, உறைந்து போய் அமர்ந்து விட்டான் அவன்.

“வாழ்த்துகள் ராகவன். உனது கனவுகள் அனைத்தும் நனவாகட்டும். எப்போதும் மகிழ்ந்திரு”

அதைப் பார்த்ததும் அவனுக்குச் சத்தமாகச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், தொண்டையடைத்துக் கொள்ள, கண்கள் தானாகக் கலங்கியது.

நொடியில் உடைந்து போனான் ராகவன். பட்டென்று அவனைத் தோளோடு சேர்த்து அணைத்தான் உதய்.

“என் கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்லி இருக்கா மாமா. என் கல்யாணம்…” சொல்லும் போதே குரல் உடைய, உதடு கடித்து அழுகையை அடக்க முயன்றான். ஆனாலும், அவனுடல் அழுகையில் குலுங்கியது.

“ராகவ், அழாத டா. பிளீஸ்” என்ன சொல்லி அவனைத் தேற்றுவது என்று தெரியாமல் தவிப்பு, கோபம், இயலாமை அனைத்தும் நெஞ்சை அழுத்த, ஆதரவாக ராகவனின் முதுகை தட்டிக் கொடுத்தான் உதய்.

“யாராவது வரப் போறாங்க டா. பிளீஸ். கன்ட்ரோல் யுவர்செல்ஃப்” உதய் சொல்ல, மெல்ல நேராக நிமிர்ந்து அமர்ந்தான் ராகவன்.

கண்கள் மீண்டும் அலைபேசி திரைக்கே சென்றது.

அனிச்சையாய் விரல்கள் மதுமிதாவின் பெயரைத் தொட்டது.

“வேண்டாம் ராகவ். பார்க்காத” உதய் அவ்வளவு வேகமாக அவனைத் தடுக்க முயன்றும் பலனில்லை.

அவன் குரலை விட வேகமாகச் செயல்பட்டிருந்தது ராகவனின் விரல்கள்.

அவர்களின் கண் முன்னே விரிந்திருந்தது மதுமிதாவின் முகநூல் பக்கம்.

மறுகணமே அலைபேசியைச் சுக்கு நூறாக உடைக்கக் கைகளை ஓங்கினான் ராகவன்.

“டேய், டேய், டேய்… வேண்டாம் டா” வேகமாக அலைபேசியை ராகவனின் கைகளில் இருந்து பிடுங்கினான் உதய்.

“என்ன பண்றோம் மாமா? நாங்க என்ன பண்ணிட்டு இருக்கோம்? வாட் ஆர் வீ டூயிங் டு ஈச் அதர் மாமா?” கண்களில் மின்னிய கண்ணீருடன் உதயின் முகம் பார்த்துக் கேட்டான் ராகவன்.

அவர்கள் வாழ்க்கையை அவர்களே சீட்டுக் கட்டைப் போலக் கலைத்து போட்டு விளையாடி பார்க்கும் போது உதய் மட்டும் என்ன சமாதானம் சொல்லி ராகவனைத் தேற்றுவான்?

“ஒருத்தரை ஒருத்தர் சாவடிக்க டிரை பண்றீங்கன்னு நினைக்கிறேன் டா” என்றான் உதய்.

பட்சிகள் பேசும்…

error: Content is protected !!
Scroll to Top