உளமார உன்னுடன் – 2 (3)

“கவிதா, கீதா. வாங்கம்மா, நல்லாயிருக்கீங்களா? ஒரே ஊருக்குள்ள இருக்கோம். ஆனா பார்த்துக்க முடியல. உங்களைப் பார்த்துக் கொள்ள நாள் ஆச்சே” என்று அவர்களைக் கண்டதும் பேச்சு கொடுத்தார் வாணி.

“நாங்க நல்லா இருக்கோம் அத்த. நீங்க எப்படி இருக்கீங்க? மாமா நல்லா இருக்காங்களா?” முகம் மலர புன்னகைத்து சொன்ன கீதாஞ்சலியின் கைப் பிடித்துக் கொண்டார் அவர்.

“எங்களுக்கு என்னம்மா..” என்று அவளிடம் இயல்பாகப் பேசினார். அப்படியே லேசாகத் திரும்பி மகனுக்குக் கண் காட்டி விட்டு முன்னே நடந்தார். அவர்கள் சாமி தரிசனம் முடித்து, ஓய்வாக அமரப் போகையில், “நான் விளக்கு போட்டுட்டு வர்றேன்த்தே” என்று கவிதாஞ்சலி சொல்ல, “சரித்தா நீயி போய்ட்டு வா. நானும், சின்னக் குட்டியும் இப்படி உக்காருறோம்” என்று கீதாஞ்சலியின் கை பிடித்து ஓரமாக அமர்ந்து விட்டார்.

அவளும் மறுக்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்திருந்தாள். அவள் விளக்கேற்றி நிமிர, அவள் முன் கைக் கட்டி நின்றிருந்தான் கார்த்திகேயன்.

அவனை அங்கு எதிர்பாராமல் திடுக்கிட்டு நிமிர்ந்து, “எதுக்கு இப்படிப் பயமுறுத்துற மாதிரி மின்ன வந்து நிக்கறீங்க?” என்று கேட்டுக் கடுமையாக முறைத்தாள்.

“அப்படியே நீ பயந்துட்டாலும்..” என்று பல்லைக் கடித்தான் அவன்.

“ஆங் என்ன சொல்றீங்க? கேட்கல?”

“இப்படி வா” என்று பாதையில் இருந்து ஒதுங்கி மரத்தின் அடியில் சாய்ந்து நின்றான்.

“என்ன?” எரிச்சலுடன் கேட்டாள்.

அவனது எரிச்சலை மறைத்து, அவளை அசையாமல் பார்த்து, “உனக்குக் கல்யாணம்னு கேள்விப்பட்டேன்? உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

அவள் முகத்தில் வெட்கச் சாயல்.

“ம்ம், தெரியுமே” என்றாள் புன்னகையுடன் முகம் உயர்த்தி.

“கல்யாணம் பண்ற வயசா உனக்கு?” பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினான்.

“நா என்ன பண்ணா.. உங்களுக்கு என்னா வந்துச்சு?” என்று துடுக்காகக் கேட்டாள். அவளை அடித்து விடாமல் இருக்க, கையை இறுக மூடினான்.

“படிக்கிற வயசுல படுக்க நினைக்கக் கூடாது” என்று கடுமையாகச் சொன்னான்.

“ஹாங்..” என்று புரியாமல் விழி விரித்தாள். அதில் அவளின் முகம் சிறுமியின் சாயலை வெளிப்படுத்த, ஓங்கி நெற்றியில் அறைந்து கொண்டான் அவன்.

“நா என்ன சொல்றேன்னு கூடப் புரியல உனக்கு. இந்த அழகுல நீ கல்யாணம் பண்ணி.. கடவுளே..”

“அது என் இஷ்டம்..”

“அடிச்சு பல்ல எல்லாம் தட்டி கையில கொடுத்துடுவேன் ராஸ்கல், வாய மூடு” என்று அவன் கண்ணை மறைத்த கோபத்துடன் கர்ஜிக்க, அவளின் கண்கள் கலங்கின. உதடு கடித்து அவனை முறைத்தாள்.

“உங்கப்பா நீ படிச்சு பெரிய ஆளா வரணும்னு எவ்வளவு ஆசைப்பட்டார் தெரியுமா? படிக்கணும் கவிதாஞ்சலி. படிப்புதான் எல்லாம்.”

“நா பெரிய படிப்பு படிச்சு என்ன பண்ண போறேன்? என் மாமாவைதானே கட்ட போறேன்? அதுக்கு இப்பவே கட்டிக்கிறேன்.” என்றாள் முகத்தை நிமிர்த்தி.

“பெரிய படிப்பு படிச்சுட்டு பெரிய வேலைக்குப் போகலாம். பெரிய பதவில உட்காரலாம். உங்கப்பா ஆசைய நீ நிறைவேத்தலாம். இப்படி எவ்வளவோ இருக்கு. அதை விட்டுட்டு…”

“இப்பவும் எங்கப்பாவுக்காகதான்..” என்று அவள் வேகமாக ஆரம்பிக்க, “உங்கப்பாவுக்காகப் பழி வாங்க போறியா? உங்க சித்தப்பா பண்ண தப்பயே நீயும் பண்ண போறியா? இதைக் கேட்டா உங்கப்பா ரொம்பப் பெருமை படுவார் கவிதாஞ்சலி” என்றான் கோபமும், நக்கலும் இணைந்து இழையோடிய குரலில்.

அவள் பல்லைக் கடித்து அவனை முறைக்க, “படி. அப்போதான் உலகம் புரியும். உன் அறிவும், மனசும் விசாலமாகும். பொன்னு, மண்ணு இதெல்லாம் முக்கியம் இல்லன்னு புரியும். உன் பழி வாங்கற வெறி இத்தோட போகாது. அடுத்தப் பத்து தலைமுறைக்குத் தொடர்ந்து வந்துட்டுதான் இருக்கும். பகையை வளர்க்க கூடாது. புத்தியை வளர்க்கணும் புரிஞ்சுதா? இந்த ஊரை விட்டு வெளில வா. உலகம் எவ்ளோ பெருசுன்னு பாரு. அப்புறமா நீ என்ன செஞ்சாலும்..”

“நான் மாமாவதான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நீங்க உங்க வேலையைப் பார்த்துட்டு போங்க. உங்களையே இன்னொருத்தர்தான் படிக்க வைக்கிறாராம். என்னையும் உங்களைப் போலப் போகச் சொல்றீங்களா? அதுக்கு ஒன்னும் அவசியம் இல்ல.” என்று ஏளனமாக அவள் சொல்ல, “கல்விக்கு உதவுறவன் கடவுளுக்குச் சமானம். அது உனக்குப் புரியாது விடு. நீதான் அறிவை அடகு வச்சுட்டு சுத்துறியே” என்றான் கேலிச் சிரிப்புடன்.

“மாமா என்னைய படிக்க வைப்பேன்னு சொல்லியிருக்கு”

கடும் கோபத்துடன், “படிக்க வச்சு கிழிப்பான், புள்ள வேணா கொடுப்பான்” என்று கடைசி வரியை அவன் கசப்புடன் முணுமுணுக்க அது பக்கத்தில் நின்றிருந்தவளின் காதில் தெளிவாக விழுந்திருந்தது. விழிகள் தெறிக்க அவனைப் பார்த்தவள் முகம் சுழித்து, “அசிங்கமா பேசாதீங்க” என்றாள்.

அவளைத் தலை முதல் கால் வரை பார்வையால் அளவிட்டு, “மாடு மாதிரி வளர்ந்து இருக்கங்கறதுக்காகக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. மனசு வளரணும் முட்டாள்.” என்றான் கோபமாக. அவள் முகம் கோபத்தில் சிவந்து விட்டது. .

“நீ ஒழுங்கு மரியாதையா இந்தக் கல்யாணத்தை நிப்பாட்டுற கேட்டதா? உங்கம்மா கிட்ட நா மாமாவை கட்டிக்கல. எனக்கு மேல பெரிய படிப்பு படிக்கணும், பெரிய வேலைக்குப் போகணும்னு சொல்ற? ஓகே?”

“முடியாது. என்ன பண்ணுவீங்க?” என்று அடமாக முகம் உயர்த்தினாள்.

“நீ நிறுத்துற. அவ்ளோதான்” என்றான் முடிவாக.

“முடியாது” என்றவளின் கண்கள் பளபளக்க, அவன் கண்கள் கோப கனலில் சிவந்தன.

“நீயே நிறுத்துவக் கவிதாஞ்சலி.” என்று உதடு வளைத்து கோணல் புன்னகையுடன் சொன்னவன், “ஒழுங்கா படி. என்ன? படிப்புல சந்தேகம்னா கேளு. நான் சொல்லித் தர்றேன். அதுக்கும் உன் மக்கு மாமா கிட்ட போய் நிக்காத. முழிக்கப் போறான் முரளி” என்று கேலி செய்து அவளைக் கடுப்பேற்றி விட்டே அங்கிருந்து நகர்ந்தான்.

பெண்கள் இருவரும் பத்திரமாக ஊருக்குள் போவதை பார்த்து விட்டே அம்மாவுடன் அங்கிருந்து கிளம்பினான்.

அவளை மிரட்டி விட்டான். ஆனால் அவளின் பேச்சும், பார்வையும் இந்தத் திருமணத்தை அவள் நிறுத்துவாள் என்ற அவனது எண்ணத்தைத் தவிடு பொடியாக்கியது.

மறுநாள் அவனது பெற்றோரின் முகம் பார்த்தவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“கொலை, கேசு, ஜெயிலுன்னு அவங்க குடும்பத்தைக் கண்டாலே ஊருக்குள்ள பயப்படுறாங்கப்பா. அவங்களைப் பகைச்சுட்டு நாம நிம்மதியா வாழ முடியாது பாரு. இப்படிப்பட்ட குடும்பத்துல பொண்ணு எடுக்கவும் எல்லாவனும் யோசிப்பானுங்க. அதேன் அவங்க என்னமும் பண்ணிட்டு போறாங்கன்னு எல்லாம் தெரிஞ்சு ஒதுங்கி போற ஊர்க்காரங்கள நாமளும் குத்தம் சொல்ல முடியாது இல்லப்பா?” என்று துரைசாமி சொல்ல, மெல்ல ஒப்புதலாக அசைந்தது அவன் தலை.

“நான் கொஞ்சம் திண்டுக்கல் வரைக்கும் போயிட்டு வர்றேன்ப்பா” என்று காலையிலேயே கிளம்பி விட்டான்.

கவிதாஞ்சலியின் திருமணத்துக்கு இன்னும் இரண்டே நாள்கள்தான் இருந்தன, அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும் என்று பரபரப்புடன் வண்டியை செலுத்தினான்.

முரளி வயதில் அவனை விடவும் பெரியவன், அது வேறு அவனை நிரம்பத் தொந்தரவு செய்தது.

அவன் பக்கத்து ஊருக்குள் நுழைகையில் பள்ளி சிறுவர், சிறுமியர் அவனைக் கடக்க, அனிச்சையாக வண்டியின் வேகத்தைக் குறைத்துப் புத்தகப் பையுடன் நடக்கும் மாணவர்களைப் பார்த்தான்.

பள்ளிச் சீருடையும், இரட்டை ஜடையும், முதுகில் புத்தக மூட்டையுமாக அவனுக்கு முன்னே நடந்து கொண்டிருந்த பெண்கள் நால்வர், அவனது வண்டிச் சத்தத்தில் ஒதுங்கி நின்று அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

அவன் கண்கள் அதில் ஓரமாக நின்றிருந்தவள் மேல் அழுத்தமாகப் பதிந்தன. நன்கு வளர்ந்த சிறுமியாகப் பள்ளிச் சீருடையில் அவன் முன்னே நின்றிருந்தாள் கவிதாஞ்சலி.

கோபமும், கசப்புமாக ஓர் உணர்வு அவனுள் பரவியது. வண்டியின் வேகத்தைக் கூட்டி மறுநொடி அவளைக் காற்றைப் போலக் கடந்திருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top