சாதகப் பட்சிகள் – 2 (3)

ஏனோ, இம்முறை எதுவும் அவனது விருப்பத்திற்கு மாறாக நடக்காது என்று அவன் திடமாக நம்பினான். தங்கை மேல் அந்தளவு நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

அவனது மனதை வார்த்தைகள் இன்றியே அவளால் புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்குள் அப்படி ஒரு புரிதல் பிறப்பினால் சாத்தியமாகி இருந்தது. இரட்டையர்கள் எனும் காரணத்தால் ஒருவர் மனதை மற்றவர் எத்தனை மைல்கள் தள்ளி இருந்தாலும் உணர்ந்து கொள்வார்கள்.

கோபமோ, துக்கமோ, வருத்தமோ ஒருவர் சொல்லாமலே, மற்றவர்க்கு உணர்வுகளால் கடத்தப்பட்டு விடும். அப்படி இருக்கையில் இந்நேரம் தங்கைக்குத் தன் மனம் புரிந்திருக்கும் என்று நினைத்துத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு படுக்கைக்குச் சென்றான் ராகவன்.

அவன் ஒன்று நினைத்திருக்க, எப்போதும் போலவே வாழ்க்கை வேறு ஒன்றை அவனுக்காகத் தயாராக வைத்துக் கொண்டு காத்திருந்தது.

மறுநாள் மாலை அவன் மருத்துவமனையை விட்டு வெளியில் வரும் போது, அவன் முன்னே வந்து நின்றாள் ஆராதனா.

அவனுக்கு அவளைப் பாத்ததும் அடையாளம் கூடத் தெரியவில்லை.

அவளே அவன் முன் வந்து நின்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“ஹலோ டாக்டர், நான் ஆராதனா. அன்னைக்கு டின்னருக்கு எங்க வீட்டுக்கு வந்தீங்களே” என்று அவள் கேட்க, வந்த எரிச்சலை முகத்தில் காட்டாமல்,

“ஓ எஸ், ஆராதனா. எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தான் அவன்.

“காஃபி டாக்டர்?” என்று அவள் கேட்க, மறுத்தால் நன்றாக இருக்காது என்று ஒப்புதலாகத் தலையை அசைத்து வைத்தான் அவன். எப்போதும் இந்தத் தவறை செய்யும் தன்னையே கண்டபடி மனதினுள் திட்டியபடி நடந்தான்.

“பக்கத்துல ஒரு சின்ன ஹோட்டல் இருக்கு. அங்க காஃபி நல்லாருக்கும். வாங்க டாக்டர்” என்று அவள் முன்னே நடக்க, அவளைப் பின் தொடர்ந்து நடந்தவனின் மனது, “ராகவ்” என்று ராகம் இழுத்து அழைக்கும் குரலுக்காக ஏங்கியது.

இந்த “டாக்டர்” என்ற அழைப்பே அவனை அந்நியப்படுத்துவது போலிருந்தது.

அறுவை அரங்கின் மேஜையில் படுத்தபடி, “டாக்டர்” என்று அழைக்கும் நோயாளிகளைத் தான் நினைவுப்படுத்தியது அவனுக்கு. ஒரு நெருக்கமான உணர்வை அந்த அழைப்பு அவனுக்கு என்றுமே தந்ததே இல்லை.

ஆனால், இன்று.. இந்த ஆராதனா இப்படியே அழைக்கட்டும் என்று எண்ணியபடி நடந்தான் அவன்.

அவர்கள் ஐந்து நிமிட நடை பயணத் தூரத்தில் இருந்த அந்த உணவகத்தை அடைந்து இருக்கை தேடி அமர்ந்தனர்.

ஆராதனா இருவருக்கும் காஃபி மற்றும் சூடாக வடையும் சொல்ல, அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராகவன்.

அவனைப் புன்னகையுடன் ஏறிட்டு, “அப்புறம் டாக்டர், கல்யாணத்துக்கு..” என்று அவள் தொடங்க,

“கல்யாணம், அதுக்கு எப்படிச் சம்மதம் சொன்னீங்க அபர்ணா?, என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன். அந்தக் கல்யாணத்தைத் தோல்வியில் கொண்டு போய் முடிச்சவன். உங்களுக்கு வேற நல்ல பையன் கிடைப்பான். கல்யாணம் ஆகாதவனா…” மேலே அவனைப் பேச விடாமல் இடைப்புகுந்த ஆராதனா,

“முதல்ல நான் அபர்ணா இல்ல. ஆராதனா. அப்புறம் டாக்டர், லைஃப்ல ஃபெயிலியர்ஸ் ஆர் ஆல்வேஸ் பார்ட் ஆப் தே கேம். அதுக்காக வாழவே மாட்டேன்னு நீங்க அடம் பிடிச்சா எப்படி?” என்று தீர்க்கமாக அவன் கண்களைப் பார்த்து அவள் கேட்க,

“இல்ல, என் டிவோர்ஸ்கான காரணம் உங்களுக்குத் தெரியாது இல்லையா? அப்புறம் எதை வச்சு என்னைக் கல்யாணம் பண்ண முடிவு பண்ணீங்க” மெல்லக் கேட்டான்.

அதற்கு ஆராதனா சொன்ன பதிலில் வாயடைத்து போய் அவளைப் பார்த்தான் ராகவன்.

“விவாகரத்து, செபரேஷன் இதெல்லாம் இன்னமும் நம்ம சொசைட்டியில் அவ்ளோ ஈஸி இல்லை. இல்லையா டாக்டர்? அப்படியும் அந்த மேரேஜில் இருந்து வெளில வந்திருக்கீங்கன்னா கண்டிப்பா சரியான காரணம் இருக்கும்னு நினைக்கறேன். அதுவும் இல்லாம, ஒரு முறை அடிபட்டு இருக்கீங்க. அடுத்த முறை அதே தப்பை பண்ண மாட்டீங்க. இந்தக் கல்யாணமும் தோல்வியில் முடிய கூடாதுன்னு ரொம்பக் கேர்ஃபுல்லா இருப்பீங்க. இல்லையா? எனக்கு அது போதும்” அவள் சொல்லிக் கொண்டே போக, பதிலின்றி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் ராகவன்.

என்ன காரணம் சொல்லி இந்தத் திருமணப் பேச்சு வார்த்தையை நிறுத்துவது என்று ஓவர் டைம் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தது அவன் மூளை.

‘சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடுடா ராகவ்’ என்ற மனதின் குரலுக்குச் செவிசாய்க்க அவன் தயாராகவே இருந்தான்.

மெல்ல நிமிர்ந்து ஆராதனாவின் கண்களைப் பார்த்தான்.

“எனக்கு இப்போதைக்குக் கல்யாணம், அந்த ஐடியாவே இல்ல. பிளீஸ் தப்பா எடுத்துக்க வேண்டாம். ஐ ஆம் சாரி”

“அப்போ, ரெண்டு நாளைக்கு முன்னாடி எதுக்கு என்னைப் பார்க்க வந்தீங்க ராகவ்?”

“டோண்ட் கால் மீ ராகவ். கால் மீ டாக்டர் ஆர் ராகவன்.” அழுத்தமாகச் சொன்னான் ராகவன். ஆராதனாவின் முகம் அப்பட்டமாக அதிருப்தியைக் காட்டியது.

பட்சிகள் பேசும்…

error: Content is protected !!
Scroll to Top