“டேய், உனக்கு என்ன பெருசா வயசாகிடுச்சுன்னு இப்படிப் புலம்பற? முப்பது வயசு தானே டா ஆகுது. உன் வயசில எனக்கு…”
“கல்யாணம் ஆகிடுச்சு. தெரியும். தாராவும், நந்தாவும் பொறந்துட்டாங்க. அதானே?” என்று எரிச்சலுடன் ராகவ் கேட்க, சிரித்தான் உதய்.
ராகவி, உதயின் குழந்தைகள் உதயதாரா, உதயநந்தா, உதயமித்ரனை நினைக்கையிலேயே ராகவனின் மனம் கனிந்தது. ஆனாலும், உதயின் சிரிப்பு அவனைச் சீண்டிப் பார்க்க,
“சிரிங்க. நல்லா சிரிங்க. உங்களுக்கு என்ன, ஒரே மீட்ல, ஒரே பார்வையில பொண்ணு கிடைச்சுடுச்சு. எல்லோருக்கும் அப்படியா அமையுது?”
“டேய், உனக்கு மட்டும் என்னவாம்? உன்னோடது காதல் கல்யாணம் டா. எத்தனை வருஷ லவ்…” அவனை முடிக்க விடவில்லை ராகவன்.
“அப்படியா மாமா? ரியலி? வாஸ் இட் லவ் மேரேஜ்?” என்று ராகவன் அழுத்தமாகக் கேட்க, உதயிடம் பதிலில்லை.
“எத்தனை முறை கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். கேட்டீங்களா ரெண்டு பேரும்? புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்து கட்டாயப்படுத்தி எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சு. என்ன நடந்துச்சு? ஆங்?? இப்போ, திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்கறீங்களா?” கோபத்துடன் கத்தினான் ராகவன்.
“ராகவ், நம்மோட தப்புக்கு அடுத்தவனைக் கைக் காட்டுறது ரொம்ப ரொம்ப மோசமான, கேவலமான பழக்கம். தேவையில்லாம எங்களை ப்ளேம் பண்ணாத” கோபத்தை அடக்கிக் கொண்டு பேசினான் உதய்.
“ஓ, அப்போ நான் தானே தப்பு? என் தப்புதான். எல்லாமே. இப்போ போனை வைங்க. எனக்கு உங்க யார்கிட்டயும் பேச விருப்பமில்ல. உங்க பொண்டாட்டிகிட்டயும் இதைச் சொல்லிடுங்க.”
“டேய், ராகவ்” அந்தப் பக்கம் உதய் உரக்க அழைக்க, அதைச் சிறிதும் சட்டை செய்யாமல், போனை பட்டென்று அணைத்தான் ராகவன்.
அவனுக்கு வந்த கோபத்திற்கு அலைபேசியைக் கண்ணுக்கு புலப்படாத தூரத்துக்குத் தூக்கி எறிய கையை ஓங்கினான். என்ன நினைத்தானோ, ஒரு நொடி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, சட்டைப் பையில் அலைபேசியைப் போட்டான்.
மறுநொடியே அலைபேசி மீண்டும் ஒலியெழுப்ப வேண்டுமென்றே அதை எடுக்கவில்லை அவன். ஆனால், விடாமல் அடுத்தடுத்த அழைப்புகள் வர, வேறு வழியின்றி எரிச்சலுடன் எடுத்து காதிற்குக் கொடுத்தான்.
முதல் வார்த்தையாக, “சாரி மாமா” என்றான்.
“இட்ஸ் ஓகே, ராகவ்” என்றான் உதய் அமைதியாக.
“ராகவிகிட்ட பேசுறியா?”
“பிளீஸ் வேண்டாம் மாமா. உங்ககிட்ட மாதிரி, அவகிட்ட ஹார்ஸா என்னால பேச முடியாது. அவ கேட்டா, என்னால மறுக்க முடியாது. அதனால வேண்டாம். இன்னொரு நாள் பேசுறேன். பிளீஸ்” கிட்டத்தட்ட கெஞ்சினான் ராகவன்.
“கதையளக்காத டா. அப்படியே அவ சொல்லி எல்லாத்தையும் கேட்டுட்ட பாரு.” கிண்டலாகச் சொன்னான் உதய்.
“குழந்தைங்க எல்லோரும் எப்படி இருக்காங்க மாமா? என்னைக் கேட்டாங்களா?” வாஞ்சையுடன் கேட்டான் ராகவன். பேச்சை மாற்ற விரும்பியே குழந்தைகளைப் பற்றிக் கேட்டான் அவன்.
“ம்ம், ரொம்ப ரொம்பத் தேடுறாங்க ராகவ். எங்களால சமாளிக்க முடியல. சீக்கிரம் வந்து சேரு. உன்னை ரொம்ப மிஸ் பண்றாங்க. பேசுறியா இப்போ?”
“வேண்டாம் மாமா. அப்புறம் இன்னும் தேடுவாங்க. ரெண்டு நாள்ல வந்துடுவேன் இல்ல. அப்போ பார்க்கறேன். சமாதானப்படுத்த வசதியா இருக்கும்” சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவன். குழந்தைகளை நினைத்ததும் அவன் குரலே மென்மையாக மாறி இருந்தது.
“ம்ம், சரி ராகவ். நேரத்துக்குச் சாப்பிடு. ஹாஸ்பிட்டலே கதின்னு கிடக்காத. சரியா?” உதய் அக்கறையுடன் சொல்ல,
“ம்ம். மாமா..” தயக்கத்துடன் அழைத்தான் ராகவன்.
“சொல்லு டா”
“ஐபேடை, அதை, அதை…” அவன் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கும் போதே, “அதையும் உடைச்சுட்டியா ராகவ்?” பட்டென்று கேட்டான் உதய்.
பெரும் தயக்கத்துடன், “ஆ, ஆமா மாமா” என்றான் ராகவன்.
“ஏன்டா, ஏன்? என்னாச்சு? அப்படி என்ன அடக்க முடியாத கோபம் வருது உனக்கு?”அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் உதய்.
“இல்ல மாமா. கோபம் இல்ல. பாட்டு… மனோ பாட்டு… லைன்ஸ்.. மனசை என்னமோ பண்ணுச்சு… அதான்…” குற்ற உணர்ச்சியுடன் தப்பு செய்த சிறுபிள்ளை போலத் தடுமாறினான் அவன்.
“இசையே உன்னைச் சாந்தப்படுத்தலைன்னா.. என்ன சொல்ல? எனக்குச் சத்தியமா புரியல ராகவ். இசையும், இயற்கையும் செய்யாததை வேற எதுவும் செய்ய முடியாது டா. என்னமோ பண்ணு. போ” அயர்ச்சியுடன் சொன்னான் உதய்.
“புதுசு வாங்கித் தாங்க மாமா” கெஞ்சலாகக் கேட்டான் ராகவன்.
“எதுக்கு? அதையும் ரெண்டு மாசத்துல உடைக்கவா?” எரிச்சலுடன் கேட்டான் உதய்.
“சத்தியமா உடைக்க மாட்டேன் மாமா. பிளீஸ். ஆனா, இந்த மனோ பாட்டு வேணாம்.”
“அப்புறம்? எஸ்பிபி பாட்டு ஓகே வா?” சிரிப்புடன் உதய் கேட்க,
“யோவ் மாமா. பழி வாங்க பிளான் பண்றீங்களா? அந்த ஆளு ராட்சசன். மனசை இன்னும் சுக்கு நூறா உடைச்சு போடுவார். அழ வைக்காம விட மாட்டார். குரலா அது? காதுக்குள்ள போகாம, நேரா மனசுக்குள்ள போய், என்னமோ பண்றார்.”
அதற்கும் சிரிக்கவே செய்தான் உதய்.
“சரி விடு. அவர் வேண்டாம். கேகே பாட்டு ஓகே?” மெல்லிய சிரிப்புடன் உதய் கேட்க,
“யோவ் மாமா. நீங்க ஒரு முடிவோடு தான் இருக்கீங்க போல. அன்னைக்கு ஆபரேஷன் தியேட்டரில மொபைல்ல பாட்டு போட்டா.. நினைத்து, நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன், பாட்டு வருது. எப்பா, என்னா குரல். உருகி உருகி பாடுறார். இந்தச் சிங்கர்ஸ் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்காங்க. மனுஷனை அழ வைக்கற முடிவோட.” என்றவன்,
“எனக்குப் பாட்டே வேணாம். நீங்களும், உங்க பட்டும் மட்டும் கேளுங்க” முடிவாக, தீர்க்கமாகச் சொன்னான் ராகவன்.
“சரி விடு ராகவ். அந்தப் பொண்ணு பேரு ஆராதனா. அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்குனு சொல்லிட்டா. ராகவிக்கும் அவளை ரொம்பப் பிடிச்சிருக்காம். வீட்ல எல்லோருக்கும் ஓகே. நாளைக்குச் சென்னை ஏர்போர்ட் ஓபன் ஆகும்னு நினைக்கறேன். பிளைட்ஸ் புக்கிங் ஓபன்னு காட்டுது. ரெண்டு நாள்ல, நாங்க எல்லோரும் கிளம்பி அங்க வர்றோம்.”
உதய் சொல்லிக் கொண்டே போக, சட்டென்று கேள்விக் கேட்டான் ராகவன்.
“எதுக்கு? எதுக்கு இங்க வரீங்க? அப்போ இவ்ளோ நேரம் பேசும் போது, அதை ஏன் சொல்லல?”
“நீ எங்க சொல்ல விட்ட ராகவ்?” மென்மையாகக் கேட்டான் உதய். ஆனால், அந்தக் குரல் ராகவ்வை அவ்வளவு எரிச்சல் படுத்தியது.
“அந்தப் பொண்ணு வீட்ல வச்சு, சிம்பிளா எங்கேஜ்மென்ட் வச்சுக்கலாம் ராகவ்.” என்று உதய் சொல்ல,
“இந்த முறையும் என் முடிவு உங்க ரெண்டு பேருக்கும் முக்கியமில்லைல? ஏன் ஏன் மாமா?”
“டேய், லூசு மாதிரி பேசாத.”
“லூசாவே இருந்துட்டு போறேன். ஆனா, கல்யாணம் வேண்டாம் மாமா. பிளீஸ்”
“அப்புறம் என்னத்துக்குப் பொண்ணு பார்க்க போன ராகவ்?”
“அது, உங்க பொண்டாட்டி.. அவ தொல்லை தாங்காம போனேன். அதுக்காக, கல்யாணம்…”
“கல்யாணம் பண்ணிக்கோ ராகவ்”
ராகவ் தொடங்கியதை முடித்தான் உதய்.
“என்னமோ பண்ணுங்க. நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்ல. நாளைக்கு ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா… ரெண்டு பேரும் போன முறை மாதிரியே உட்கார்ந்து நல்லா அழுங்க” மேலே பேச முடியாமல், தொண்டை அடைக்க, அலைபேசியை அணைத்தான் ராகவன்.
அவனுக்கு இப்போது திருமணம் என்ற எண்ணமே உடல் முழுவதும் கசப்பை ஏற்படுத்தியது.
முதல் முறை மிக மோசமாகத் தோற்ற ஒன்றை மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்க்க, நான் என்ன முட்டாளா? என்று தன்னையே கேள்விக் கேட்டுக் கொண்டு, கண்களை மூடி சுவரில் சாய்ந்து கொண்டான்.
இப்போதுதான் ஒரு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. அதன் காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் எவனானது, இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய ஒத்துக் கொண்டு, கத்திக்கு உடலைக் கொடுப்பானா? புத்தி உள்ள எவனும் கொடுக்க மாட்டான் எனும் போது என்னால் மட்டும் எப்படி முடியும்? என்ற யோசனைகள் மனதிலுள் வலம் வர, தன் விதியை நொந்தபடி நின்றிருந்தான் ராகவன்.