நிழல்களால் நெய்யப்பட்டிருந்த இரவில், நிஜங்களை இருளில் தேடிக் கொண்டிருந்தான் அவன்.
உடலை ஊசியாய் ஊடுருவிய குளிர் அவனைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை. அவன் மனதே பனிப் பாறையாய் இறுகிப் போய் இருக்க, வெளியில் இருந்து தாக்கும் இந்தக் குளிர் அவனை என்ன செய்து விடப் போகிறது என நினைத்துச் சிரித்துக் கொண்டான் ராகவன்.
மனதின் வலு உடலுக்கு இல்லை போலும், கைகள் அனிச்சையாய் அணிந்திருந்த ஸ்வெட்டரை உடலோடு சேர்த்து இறுக்கியது.
படுக்கை அறையின் பால்கனியில் நின்று, இருளில் வய நாட்டின் அழகை தேடி ரசித்துக் கொண்டிருந்தவனைக் கலைத்தது அலைபேசி அழைப்பு.
கடந்த இரு நாட்களாக அவன் தவித்தபடி காத்திருந்த அழைப்பு, நொடியில் அழைப்பை ஏற்று, அலைபேசியைக் காதிற்குக் கொடுத்தான் அவன்.
“ராகவ், ராகவ் எப்படி இருக்க?” அந்தப் பக்கம் இருந்து பதட்டமாக வந்தது உதயின் குரல்.
“நான் கேட்க வேண்டிய கேள்வி இது மாமா? எனக்கு என்ன, இங்க பத்திரமா, நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? எல்லோரும் நல்லா இருக்கீங்க தானே?”
படபடவென்று கேட்டான் அவன்.
கடந்த இரு நாட்களில் சென்னையில் மழை முழுவதுமாகக் குறைந்திருந்தது. நீர் கொஞ்சம், கொஞ்சமாக வடியத் தொடங்கியிருந்தது. ஆனாலும், அங்கே பதட்டமான சூழல்தான் நிலவியது.
“நாங்க பத்திரமாதான் இருக்கோம் ராகவ். நான்தான் உனக்கு மெசேஜ் பண்ணேன் இல்ல? எங்களுக்காகப் பயந்தியா என்ன?”
“பயப்படாம எப்படி மாமா இருக்க முடியும்?” அவன் குரல் உடைந்ததோ?
“ம்ம். புரியுது. அதை விடு. அந்தப் பொண்ணைப் போய்ப் பார்த்தியா? பேர் என்ன?” உதய் கேட்க,
“நீங்க போலீஸ் தானே? அது எனக்குத் தெரியாதா என்ன? எப்போல இருந்து அதை நிரூபிக்க மாமா வேலை பார்க்க….”
“டேய்ய்ய்ய்….” மிகக் கடுமையாக வந்தது உதயின் குரல்.
“சாரி, தெரியாம… சொல்லிட்டேன்.” தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டு விட்டதை உணர்ந்து, சட்டென்று மன்னிப்பை முன் வைத்தான் ராகவன்.
“வயநாட்டில் தான் இருக்க ராகவ். வானத்தில் இல்ல. அங்க வந்து வாயை உடைப்பேன். ஞாபகத்தில் வச்சுட்டு பேசு.” கோபம் குறையாமல் பேசினான் உதய்.
“சாரி மாமா. என் பக்கத்தையும் யோசிச்சுப் பாருங்க மாமா? சும்மா, சும்மா பொண்ணு பார்க்க அனுப்பிட்டு இருக்கீங்க. அசிங்கமா இருக்கு. வீடு, ஹோட்டல், காஃபி ஷாப்னு போய் ஒவ்வொரு பொண்ணு முன்னாடியும் உட்கார்ந்து பதில் சொல்லிட்டு வர்றது. ச்சே, உங்களுக்கு என் நிலைமை புரியாது.” எரிச்சலுடன் ராகவ் சொல்ல, அந்தப் பக்கம் அமைதியாகவே இருந்தான் உதய்.
“ஒழுங்கா உங்க பொண்டாட்டிகிட்ட சொல்லி வைங்க. முதலும், கடைசியுமா சொல்றேன். இனி மேல் எந்தப் பொண்ணையும் போய் என்னால பார்க்க முடியாது. என்னைப் பார்த்தா உங்க பொண்டாட்டிக்கு எப்படித் தெரியுது? ஆங்? இத்தோட நிறுத்திக்கச் சொல்லுங்க. கேட்டுச்சா மாமா?”
“ஏன்டா கேட்காம? நல்லா கேட்டுச்சு. அவ உன்னைத் தானே செய்யச் சொன்னா? என்னை இல்லையே? சோ, அவகிட்ட நீயே முடியாதுன்னு நேரா சொல்லிடு. போனை அவக்கிட்ட கொடுக்கவா?” சன்ன சிரிப்புடன் உதய் கேட்க,
“யோவ், மாமா.” என்று பல்லைக் கடித்தவன், “பொண்டாட்டிக்கு அவ்வளவு பயமா?” என்று நக்கல் சிரிப்புடன் ராகவன் கேட்க,
“டேய், ராகவ். நான் என் பொண்டாட்டிக்கு பயப்படுவேன்னு உனக்கு மட்டுமில்ல டா. ஊருக்கே தெரியும். சோ, அடங்கு” சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் பதில் கொடுத்தான் உதய்.
“ச்சே, கல்யாணமாகி ஏழு வருஷத்துக்கு மேல ஆச்சு. இன்னமும்…” அவனை முடிக்க விடாமல், இடைப் புகுந்தான் உதய்.
“இன்னும் எத்தனை மாமாங்கம் போனாலும், நான் அவளுக்குப் பயப்படுவேன். நீ விஷயத்துக்கு வா.” என்று உதய் சொல்ல,
“என்ன விஷயம்?” கடுப்புடன் கேட்டான் ராகவன்.
“அந்தப் பொண்ணைப் போய்ப் பார்த்தியா?” மீண்டும் கேட்டான் உதய்.
“ஓ, போனேனே. ரெண்டு நாள் முன்னாடி அவங்க கூடதான் டின்னர் சாப்பிட்டேன் மாமா. வந்தனா தானே? நல்லாதான் பேசினாங்க.”
“டேய்…” கோபத்துடன் இடையிட்டான் உதய்.
“என்ன மாமா?”
“என்ன பேரு சொன்ன?” உதய் கேட்க,
“வந்தனா.. ஓ, இல்லையா மாமா?. ஆ.. அ.. அபர்ணா தானே மாமா..” என்று ராகவன் தடுமாறிய படி சொல்ல, அந்தப் பக்கம் உதய் சில நொடிகள் ஒன்றுமே பேசவில்லை.
“மாமா…”
“ப்ளடி ஹெல் ராகவ்” என்றான் உதய். அப்படி ஒரு கோபம் அவன் குரலில்.
“அந்தப் பொண்ணு பேர் கூட உனக்கு ஞாபகம் இல்ல. இந்த அழகுல… ஏன் இப்படிப் பண்ற ராகவ்? இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்கப் போற?” கவலையுடன் கேட்டான் உதய்.
அந்தக் குரலும், அதின் வழியாகக் கடத்தப்பட்ட உணர்வுகளும் ராகவனை என்னவோ செய்தது.
சில நொடிகள் அமைதியாக இருளை வெறித்தபடி நின்றிருந்தான் அவன்.
“ராகவ்…” மெல்ல அழைத்தான் உதய்.
“என்னை இப்படியே விட்டுடுங்களேன் மாமா. ஒரு கல்யாணம் வாழ்க்கைக்குப் போதும். அது கத்து கொடுத்த பாடமே இன்னும் மறக்கல. அதுக்குள்ள, இன்னொரு முறை, என்னால முடியாது மாமா.” என்றான் தீர்க்கமாக,
“ஆனா, எவ்வளவு நாளைக்குத் தனியா இருப்ப ராகவ்?”
“இந்தத் தனிமை வெறுத்து போகும் போது, எனக்குக் கல்யாணம், துணை, இணை பிளா பிளா… வேணும்னு தோணும் போது நானே கேட்கறேன் மாமா. அது வரை…”
“ராகவி தான் ரொம்பக் கவலைப்படுறா டா ராகவ். என்னை, என்ன பண்ண சொல்றா?”
“உங்க பொண்டாட்டியை அவளோட குழந்தைகளை மட்டும் பார்க்க சொல்லுங்க. அதான் மூனு பேரு இருக்காங்க இல்ல. அவளை ஓட விட, அப்புறமும் ஏன் என்னைப் போட்டுப்படுத்தி எடுக்கறா?”
“ஆனா, உன்னைத் தானே டா எல்லோருக்கும் முன்னாடி வச்சு பார்க்கறா? அவளைப் பத்தியும் யோசி டா. முதல்ல நீ அவளைப் புரிஞ்சுக்க” உதய் சொல்ல,
“எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ணாதீங்க மாமா. எரிச்சலா வருது. நான் முதல் கல்யாணத்துக்குக் கூட இப்படிப் பொண்ணு பார்க்க போகல. இந்த வயசில, இப்படி அசிங்கமா பொண்ணுங்க முன்னாடி போய் உட்கார்ந்து, போலியா சிரிச்சு, பேசி… ச்ச்சை, கடுப்பா இருக்கு” கடுப்புடன் சொன்னான் ராகவன்.