சாதகப் பட்சிகள் – 1 (3)

அவன் தன் வாழ்நாளில் அப்படி ஒரு மழையைப் பார்த்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன் இப்படி ஒரு பேரழிவான மழையை அவன் கண்டதும் இல்லை, வரலாற்றில் நிகழ்ந்ததாக அவன் வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டதும் இல்லை.

ஊரெங்கும் வெள்ளக் காடு. வெயிலுக்குப் பெயர் போன சென்னை, இப்போது சூரியனின் முகத்தையே காணாது, மழையை மட்டுமே தரிசித்து வெள்ளக் காடாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

வெறும் தொலைக்காட்சி திரையில் பார்க்கும் போதே அவனுக்கு உடலெல்லாம் பதறியது.

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும், மக்கள் மின்சாரம் இன்றி, அடுத்த வேளை உண்ண உணவின்றி, உறங்க இடமின்றித் தவிப்பர் என்று யாராவது கடந்த வாரம் சென்னை வாசிகளிடம் சொல்லி இருந்தால் நகைத்திருப்பார்கள்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழ். எங்கெங்கு காணினும் நீர், நீர், நீர்…. நீர் மட்டுமே நிறைந்திருந்தது.

வெயில் காலம் வந்தால் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் அதே சிங்கார சென்னை, இன்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.

பெரிய பெரிய அறுவை சிகிச்சையின் போது, வலிக்காமல் இருக்க, உடலை மரத்துப் போகச் செய்ய, மருந்து தரும் மயக்கவியல் நிபுணன் அவனுக்கே வலிக்கிறது.

கண் முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் காட்சியில், அவனே வலியால் துடித்துக் கொண்டிருக்கிறான்.

ஆனால், அவனால் ஏதும் செய்ய முடியா சூழல்.

இதுவே வேறு ஒரு நேரமாக இருந்திருந்தால் அவன் இந்த வயநாட்டின் பக்கம், தலை வைத்துக் கூடப் படுத்திருக்க மாட்டான்.

இன்று, இது தான் அவனுக்கு விதிக்கப்பட்டது.

எல்லாம் விதி, தலையெழுத்து. வேறென்ன சொல்ல?

வெளியில் செல்ல தயாராகி நின்றவனை, மேலே ஒரு அடி கூடச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது செய்தி.

ஆனாலும், அவன் போய்த் தான் ஆக வேண்டும். போயே ஆக வேண்டும். அவனுக்கு வேறு வழியில்லை.

அவன் என்றுமே சொன்ன சொல் மாறியது இல்லை. அதுவும் உடன் பிறந்தவளிடம் வாய்ப்பேயில்லை.

கடந்த சில நாட்களாக அந்தச் சந்திப்பை தவிர்த்துக் கொண்டே வந்திருந்தான். அதற்குத் தோதாக அவனது வேலையும் அமைந்து விட, அவனுக்குப் பெரிதாகக் காரணங்கள் தேவைப்படவில்லை.

இனியும் அது போலக் காரணங்களை அடுக்கி தப்பிக்க இயலாது என்று புரிந்தவன், இன்று கிளம்பி இருந்தான். ஆனால், மனமோ அவனை அறியாமலே சென்னைக்குச் செல்வதில் மும்முரமாக இருந்தது.

வீட்டை பூட்டி, அணிந்திருந்த ஜாக்கெட்டை குளிருக்கு இதமாக மேலும் உடலுடன் இறுக்கியபடி வேகமாக நடக்கத் தொடங்கினான்.

இருபதாம் நிமிடம் அவனை மலர்ந்த புன்னகையுடன் வரவேற்றாள் மிக அழகான இளம்பெண்.

“ஹலோ டாக்டர், வாங்க. வாங்க” அந்த டாக்டர் என்ற அழைப்பே அவனை அத்தனை எரிச்சல் படுத்தியது.

அவனைப் பெயர் சொல்லி அழைப்பவர்களைத் தேடியது மனது.

“நான் ஆராதனா” என்று அவள் கை நீட்ட, வேறு வழியின்றி மென்மையாய் அக்கரத்தை பற்றிக் குலுக்கினான் அவன்.

“உள்ள வாங்க” அவளைப் பின்பற்றி வீட்டிற்குள் நுழைந்தான்.

அடுத்து வரப் போகும் சில மணி நேரங்கள் கொடுமையானதாக இருக்கப் போகிறது என்று அறிவித்த மனதை அடக்கி வைத்தான்.

ஆராதனா கேட்ட கேள்விகளுக்குப் பழக்கப்பட்ட குரலில், ஏற்கனவே பல முறை பதில் சொன்ன அனுபவத்தில் பதில் கொடுத்துக் கொண்டே இருந்தான்.

அவன் கண்கள் அடிக்கடி அலைபேசியைப் பார்த்துக் கொண்டது.

ஆராதனாவின் வீட்டிலும் செய்திகள்தான் ஓடிக் கொண்டிருந்தது. அதில், சென்னையின் பெயர் போன செய்தி தொலைக்காட்சி அலுவலகக் கட்டிடத்தின் தரை தளத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். தரைத் தளம் முழுவதும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது பார்க்கையில் அவனுக்குப் பகீர் என்றது.

அலைபேசி டவர்கள் வேலை செய்யவில்லை என்றார்கள். உடனே தங்கையின் எண்ணை அழைத்துப் பார்த்தான். இணைப்பு கிடைக்கவே இல்லை.

அவனுக்கு அனிச்சையாய் உணவை எடுத்து வாய்க்கு கொடுத்துக் கொண்டிருந்தது கை. உண்டு கொண்டிருந்த உணவு தொண்டையில் அடைக்கும் உணர்வு அவனுக்கு. சட்டெனத் தண்ணீரை எடுத்து குடித்து, உணவை உள்ளே தள்ளினான்.

இப்போது தொண்டையை அடைத்துக் கொண்டு, கண்ணீர் எட்டிப் பார்த்தது. கண்ணீரை, தண்ணீர் குடித்து உள்ளே தள்ள முடியாது என்று உணர்ந்து பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.

“எக்ஸ்கியூஸ் மீ, ரெஸ்ட் ரூம்??” என்று கேட்டு, ஆராதனா கைக் காட்டிய அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.

ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டு முகத்தைக் கழுவி சீர்ப்படுத்தி வெளியில் வந்தான்.

“டாக்டர், நீங்க ஓகே தானே?” என்று ஆராதனா கவலை தோய்ந்த குரலில் கேட்க, “ஃபேமிலி” என்ற பதிலையே அவளுக்கும் கொடுத்தான்.

அவன் இங்குக் கேரளாவில் பத்திரமாக இருக்க, அங்கே சென்னையில் அவன் குடும்பம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது குறித்த அவனது மனக் கவலை புரிந்தவளாகத் தலையசைத்து,

“ஓ, ஓகே.” என்றவள்,

“உங்களைப் பத்தி சொல்லுங்க ராகவ்” என்று கேட்க,

“ஏய், வாயை மூடு. என்னை ராகவ்னு கூப்பிடாத” என்று கத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு.

எச்சில் கூட்டி விழுங்கினான்.

‘நான் இங்கு வந்திருக்கக் கூடாது’ மனதில் மீண்டும் சொல்லிக் கொண்டான்.

கண்களை உயர்த்தி ஆராதனாவை பார்த்து, “சாரி, இன்னொரு நாள் பேசலாமா?” என்று அவன் கேட்க,

“டஃப் டே டாக்டர்?” என்று கேட்டாள் அவள்.

“ஆமா, இன்னைக்கு ஒரு லிவர் டிரான்ஸ்ப்ளான்ட். கிட்டத்தட்ட 10 மணி நேரம். அதான்” என்று அவன் சொல்ல,

“ஓ, ஐ அம் சாரி” என்றாள் அவள்.

ஆராதனா, மகப்பேறு மருத்துவர். அவளால் அவனது சூழலை, தற்போதைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும் என்பதால், மேலே எதையும் சொல்லி விளக்காமல், அவளிடம் உணவிற்கு நன்றி சொல்லி, விடை பெற்றுக் கொண்டான் அவன்.

“சீக்கிரம் பார்க்கலாம் டாக்டர்” என்று அவள் விடை கொடுக்க, புன்னகைத்து விட்டு நடக்கத் தொடங்கினான்.

வீட்டை அடைந்து அலைபேசியைப் பார்த்தான்.

தங்கை கணவரிடம் இருந்து செய்தி வந்திருந்தது.

“நாங்க பத்திரமா இருக்கோம். அவளும் பத்திரமா இருக்கா. நீ எங்களைப் பத்தி பயப்படாம வேலையை முடிச்சுட்டு வா.”

அவனின் தங்கை ராகவி, தங்கை என்று சொல்ல முடியாது. அவனோடு பிறந்தவள். அவனின் இரட்டை. அவர்கள் இரட்டையர்கள்.

அவளின் கணவர் உதய் பிரகாஷ் தான் அவனுக்குத் தகவல் அனுப்பி இருந்தார். அவருக்குச் சென்னை மாநகரக் காவல் துறையில் வேலை. அதுவும் சைபர் செல் என்பதால், அலைபேசி சிக்னல் இல்லாத நேரத்திலும் ஏதோ செய்து அவனுக்குத் தகவல் அனுப்பி இருக்கிறார் எனும் போது அவனுக்கு அழுகை வரும் போலிருந்தது.

அவன் எப்போதுமே ஃபேமிலி பெர்சன் தான். அவனுக்குக் குடும்பம்தான் என்றுமே முதலிடம். அதிலும் தங்கை ராகவி என்றால் உயிர் அவனுக்கு.

அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் தந்த ஆசுவாசத்தில், மெல்ல கண்களை மூடிக் கொண்டான்.

“அவளும் பத்திரமா இருக்கா” என்ற மாமா, உதயின் வார்த்தைகள் ஏன் அவனுக்கு இத்தனை மன அமைதியை தருகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை.

படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த ஐபேடை எடுத்து பாடலை ஒலிக்க விட்டு மீண்டும் கண்களை மூடினான். ஏனோ, தனிமையும், அமைதியும் அத்தனை அச்சுறுத்துவதாக அக்கணம் அவனுக்கிருந்தது.

காதில் ஆராதனாவின் குரல் பாடலையும் மீறி எதிரொலித்தது.

“உங்களைப் பத்தி சொல்லுங்க டாக்டர்”

கடந்த ஒரு வருடமாக இந்தக் கேள்வி எத்தனை முறை அவனிடம் கேட்கப்பட்டது என்பது அவனுக்கே நினைவில்லை.

“உனக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று, அவர்கள் யாரிடமும் ஒதுக்கி தள்ளி விட முடியாத படியான கேள்வி. பதில் அளித்து, அளித்து அலுத்துப் போகிறான் அவன்.

“நான், ராகவன். சென்னையின் பிரதான அரசு மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவனாகக் கடந்த ஏழு வருடங்களாக வேலைப் பார்க்கிறேன். இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”

“திருமணம் – எஸ், ஒரு முறை ஆகி விட்டது”

“தற்போது சிங்கிள் தான். டிவோர்சி. எஸ், எனக்கு விவகாரத்து ஆகி விட்டது. விவாகரத்து வாங்கி இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது”

மூச்சை பிடித்துக் கொண்டு, இதைச் சொல்லி விடுவான். ஆனால், அதற்குப் பின் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தான் பதிலளிக்க முடியாமல் மூச்சுத் திணறிப் போகிறான்.

“விவாகரத்தா? எப்படி? ஏன்? என்ன காரணம்?” அப்படியே அதைத் தொடர்ந்து கேட்கப்படும் பலவித கேள்விகளுக்குப் பதில்தான் அவனிடம் இல்லை.

கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் காதில் இறங்கி கொண்டிருக்க, பாடல் வரிகள் அவனை இன்னும் கலங்க வைத்தது.

“மழை வந்தது போல வெயிலும் வரும் ராகவ்” என்று வண்ணதாசன் வரிகளைச் சொல்லி தேற்ற, இப்போது அவனின் மாமா உதயும் பக்கத்தில் இல்லாதிருக்க, மனம் தானாகக் கலங்கி தவித்தது.

“அழகான தென்னஞ்சிட்டே, இனி மேலும் உன்னை விட்டே… இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா?”

பாடகர் மனோ உருகிக் கொண்டிருந்தார். அந்த ஐபேட், அதில் நிறைந்திருந்த பாடல்கள், அவனின் உதய் மாமாவின் பரிசு. மனோ அவரின் பிரிய பாடகர்.

ஏனோ அந்த வரிகள் மனதை நோக செய்ய, கையில் இருந்த ஐபேடை ஓங்கி சுவரில் அடித்தான் ராகவன்.

அவன் மனதை விடப் பலமாக, சுக்கலாக நொறுங்கி சிதறியது ஐபேட்.

ஏதோ ஒரு விதத்தில் அது அவனுக்குத் திருப்தியளிக்க, கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தான் ராகவன்.

பட்சிகள் பேசும்…

error: Content is protected !!
Scroll to Top