அடுத்தச் சில மணி நேரங்களில் லயாவின் அறுபது சதவிகித கல்லீரல் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் வெட்டி எடுக்கப்பட்டு, அதற்கெனத் தயாராக இருந்த பையில் பாதுகாக்கப்பட்டது.
அவ்வளவுதான். இனி, அவன் பக்கத்து அறுவை அரங்குக்கு ஓட வேண்டும்.
லயாவின் கல்லீரல், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவளின் அப்பாவிற்குப் பொருத்தப்பட வேண்டும். அங்கு ஏற்கனவே சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. அவன்தான் அவருக்கும் மயக்கம் கொடுத்து விட்டு வந்தான். பக்கத்து அரங்கில், தற்போது வேறொரு மயக்கவியல் நிபுணர் கவனித்துக் கொண்டிருந்தார். ஆனாலும், உதவுவதற்காக விரைந்தான் அவன்.
முதல் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் கல்லீரல் இந்நேரம் நீக்கப்பட்டிருக்கலாம். இப்போது மகளின் கல்லீரலை பொருத்துவதின் மூலம் அவருக்குப் புற்றுநோய் இல்லா புது வாழ்வு கிடைக்கும். அதன் மூலம் இன்னும் பல வருடங்கள் அவருக்கு வரமாக வாழ கிடைக்கும்.
தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்த அந்த மகளின் முகத்தை, லயாவின் முகத்தை ஒரு முறை புன்னகையுடன் பார்த்து விட்டு, அடுத்த அரங்கை நோக்கி நடந்தான் அவன்.
மனதில் இருந்த அத்தனை கலக்கங்களையும் தூக்கி, தூர வீசி விட்டு அந்த அறுவை அரங்கிற்குள் நுழைந்தான். அடுத்து வந்த பல மணி நேரங்கள் எப்படிக் கழிந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை. அத்தனை வேகமாக நகர்ந்திருந்தது.
இரண்டு ஆபரேஷன்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருந்தது. அவர்களுக்கு மயக்கம் தெளிய மாற்று மருந்துகள் கொடுத்தான் அவன். சிறிது நேரத்தில் இருவரையும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றி இருந்தார்கள்.
அவர்கள் கண் விழிக்கும் வரை அங்கேயே இருந்து, அவர்களுக்குத் தேவையான வலி நிவாரண மருந்துகளைக் கொடுத்து விட்டு, போதுமான அறிவுறுத்தல்களை அங்கிருந்த செவிலியர்களுக்குக் கொடுத்து விட்டு அவன் நிமிரும் போது பொழுது இரவை எட்டிக் கொண்டிருந்தது.
அதற்கு மேல் அங்கே காத்திருந்த லயாவின் குடும்பத்தினரை சர்ஜன் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, அவனும் சந்திந்து பேசுகையில் அவன் உடல் ஒய்விற்குக் கெஞ்சியது.
மதிய உணவாகக் கொஞ்சமே கொஞ்சம் பழச் சாறு மட்டுமே அருந்தி இருக்க, வயிறு தன் இருப்பைக் காட்டு கத்தல் கத்தி காட்டியது. அதற்கும் மேலாக மூளை வேலை நிறுத்தம் செய்யப் போகிறேன் என்று மிரட்ட, கண்ணை மூடித் திறந்து வெகுவாகக் கவனத்தைக் குவித்து அவர்களுக்குப் பதிலை சொல்லி விட்டு மருத்துவமனையை விட்டு வெளியில் வந்தான் அவன்.
அவன் வீட்டை அடைந்து உடை கூட மாற்றத் தோன்றாமல் படுக்கையில் சரிந்தான்.
தனிமையும், அமைதியும் எப்போதும் போலக் கொடுமையானதாக இருக்க, எழுந்து சென்று தொலைக்காட்சியை ஓட விட்டு வந்து படுக்கையில் விழுந்தான்.
எதிரில் இருந்த கடிகாரம் மணி இரவு எட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றது.
‘அரை மணி நேரம் தூங்கு டா’ என்ற மனதிற்குச் செவிசாய்த்து மெதுவாக இமை மூடினான்.
அவனது உறக்கத்தைப் பொறுக்காத அலைபேசி தொடர்ந்து ஒலித்து அவனை எழுப்பி விட முயற்சித்தது.
சின்ன உச் கொட்டலுடன் புரண்டு படுத்து, கையை நீட்டி எதையோ தனக்கு நெருக்கமாக இழுக்க முயற்சித்தான். ஆனால், கைக்கு எட்டியது என்னவோ தலையணை தான்.
அத்தனை மென்மையானதை அவன் எதிர்பார்க்கவில்லை போலும், அதிலேயே ஓங்கி குத்தி, கண்களைப் பட்டென்று திறந்தான். எட்டி படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த அலைபேசியை எடுத்து, அதில் ஒலித்துக் கொண்டிருந்த அலாரத்தை நிறுத்தினான்.
“நீ, இன்று, இங்குச் செல்ல வேண்டும்”
என்று அவனுக்கு நினைவுப்படுத்த ஒலித்த அலாரத்தை வெறித்துப் பார்த்தான். அவன் தான், மறந்து விடக் கூடாது என்று அதைக் குறித்து வைத்திருந்தான். ஆனால், இபொழுது அங்குச் செல்லத்தான் வேண்டுமா என்று மனம் கேள்வி எழுப்பியது.
ஒரு நொடி மனதின் மறுப்பு குரலுக்குச் செவிசாய்க்க போனான் அவன். ஆனால், தங்கையின் முகம் கண் முன் தோன்றி அந்த எண்ணத்தைத் தகர்த்து எறிய செய்தது. படுக்கையில் இருந்து எழுந்து குளியல் அறையை நோக்கி நடந்தான். உடலை சில்லிட செய்தது நீர். அதைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் குளித்து முடித்து வெளியில் வந்தான்.
உடை மாற்றிக் கொண்டிருந்தவனை நடுங்கச் செய்தது அறையில் நிறைந்திருந்த குளிர்.
வீட்டின் அத்தனை ஜன்னல்களும், கதவுகளும் இறுக்கமாக அடைக்கப் பட்டிருந்தாலும் கூடக் குளிரில் இருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை.
பின்னே பனிரெண்டு டிகிரி செல்சியஸ் என்பது அவனுக்கு ஒன்றும் சாதாரணம் இல்லையே. அதுவும் சென்னை போன்ற வெயிலுக்குப் பெயர் போன ஊரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தவனுக்கு, இது நிச்சயம் தாக்குப் பிடிக்க முடியாத அளவிலான குளிர்தான்.
நடுங்கும் கரங்களால் உடையை அணிந்தவன், தனது நண்பன் அளித்திருந்த வண்டி சாவியைத் தேடி எடுத்தான்.
ஆனால், இந்தப் புதிய ஊரில், தான் இப்போதிருக்கும் மனநிலையில் அதை ஓட்ட மனது வராமல் சாவியைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, நடந்தே போவது என்ற முடிவுடன் அறையை மூடி விட்டு வெளியில் வந்தான்.
அலைபேசிக்கு அனுப்பப்பட்டிருந்த முகவரியை எடுத்துப் பார்த்தான். பதினைந்து நிமிட நடை தூரம் என்றது கூகிள்.
“ஓகே. யூ கேன் டூ திஸ்” தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
அவன் தற்போது இருப்பது, கடவுளின் சொந்த தேசமாம் கேரளாவின் வயநாடு. இயற்கை எழில் கொஞ்சும், கண்ணைக் குளிர்ச்சியாக நிறைக்கும், சுற்றுலாத் தளத்திற்குப் பெயர் போன வயநாடு.
முன்னொரு காலத்தில் மாயஷேத்ரா என்று அழைக்கப்பட்டு, பின்னர் அதுவே மயநாடு என்று உருமாறி, இறுதியில் வயநாடு ஆகியிருந்தது என்று சொல்லப்படும், அந்த வயநாட்டின் முக்கியப் பகுதியில் இருந்த சின்னஞ்சிறிய அடக்கமான ஒற்றைப் படுக்கையறை கொண்ட வீட்டில் தான் கடந்த பத்து நாட்களாக வசித்துக் கொண்டிருக்கிறான் அவன்.
அவனுக்கு வேலை சென்னையில்தான். இங்கு நண்பனின் அழைப்பிற்காக வந்திருக்கிறான். நண்பனின் சொந்த மருத்துவமனை. கடந்த பத்து நாட்களில் மட்டுமே இருபதிற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடத்தி விட்டார்கள். அவனை அதற்காகதான் அழைத்திருந்தான். மருத்துவர்கள் பற்றாக்குறை. வேறு ஒன்றும் இல்லை. பொதுவாகவே இங்கு மயக்கவியல் நிபுணர்கள் குறைவு தானே.
நண்பன் கேட்டதும், எதையும் யோசிக்காமல், அவனும் உடனே விடுமுறை எடுத்துக் கொண்டு வந்திருந்தான். இன்னும் சில தினங்களில் வேலை முடியவும் போகிறது.
அவசர அவசரமாக வெளியில் செல்ல கிளம்பியவன் அதே அவசரத்துடன் ஹாலிற்கு வந்தான்.
தன் போக்கில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி பெட்டியை அணைக்கப் போனான். ஆனால், திரையில் ஓடிய செய்தி அவனை அப்படியே ஸ்தம்பித்து, உறைந்து நிற்கச் செய்தது.
கடந்த ஒரு வாரமாகவே செய்திகளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான் தான். ஆனாலும், இதை அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
மழை!!!
மழை என்றால் அப்படி ஒரு மழை. சென்னை மாநகரம் முழுவதுமே மழையில் மிதந்து கொண்டிருந்தது.